என் சோலைப் பூவே 32 – 2

பச்சை நிறக்கரையுடன் கூடிய சிவப்பு நிறச் சேலையில், அதே பச்சையில் ப்ளவுஸ் அணிந்து தலைக்குக் குளித்ததன் அடையாளமாக சின்னத் துவாலையால் கூந்தலைச் சுற்றியபடி வெளியே வந்தவளை, கட்டிலில் படுத்திருந்த ரஞ்சனின் விழிகள் ரசனையுடன் தழுவின.

 

அவன் பார்ப்பது அவளது பார்வை வட்டத்தில் விழுந்தாலும், அவன் விழிகளைச் சந்திக்க வெட்கி கண்ணாடியின் முன் சென்று நின்றவள் தலையைத் துவட்டத் தொடங்கினாள்.

 

கைகளோ காரணமின்றி நடுங்கின. மனதில் ஒருவிதப் படபடப்பும் எதிர்பார்ப்பும்! அவளின் நடுக்கம் சரியே என்பதுபோல் பின்னால் இருந்து அவளைக் கட்டிக்கொண்டான் ரஞ்சன்.

 

அவளின் பின்கழுத்தில் தன் இதழ்களைப் பொருத்தியபடி, “குளித்துவிட்டாயா?” என்று கிசுகிசுப்பாகக் கேட்டான்.

 

வெற்றிடையில் பதிந்த கரமும், பின்கழுத்தில் ஊர்வலம் நடத்தத் தொடங்கிய இதழ்களும் அவளை வேறு உலகத்துக்கு அழைத்துச் செல்ல முயல, “அ..ப்பா அம்மா நமக்காகக் காத்திருப்பார்கள்..” என்றாள் திக்கித் திணறி.

 

“ஓ..! ஆமாமில்லை.” என்று மனமின்றிச் சொன்னவன், பின்னிருந்தபடியே அவள் முகத்தைத் திருப்பி இதழ் முத்தம் ஒன்றை வழங்கிவிட்டே குளியல் அறைக்குள் புகுந்தான்.

 

முகம் சிவக்க அப்படியே நின்றவள், சற்று நேரம் கழித்தே அவன் பதித்த முத்தத்தின் தாக்கத்தில் இருந்து தன்னை மீட்டுக்கொண்டாள்.

 

குளித்துவிட்டு சாரமும் மேலே வெற்றுடம்புமாக வந்தவனை நிமிர்ந்து பார்க்கமுடியாமல் வெட்கம் தடுக்க, குனிந்த தலையுடன் அவன் கொண்டுவந்திருந்த பையிலிருந்து அவனுக்கான உடைகளை எடுத்து நீட்டினாள் சித்ரா.

 

அவனைக் கவனித்துக்கொள்ளவும் ஒருத்தி! அவனுக்கே அவனுக்காய்..! ரஞ்சனின் மனம் கர்வம் கொண்டது!

 

சில வினாடிகள் கழிந்தும் அவள் நீட்டிய உடைகளை அவன் வாங்காததில் ‘என்ன செய்கிறான்?’ என்று எண்ணியபடி நிமிர்ந்து பார்த்தாள் சித்ரா.

 

அவள் பார்க்கும்வரைக் காத்திருந்தவன், “போட்டுவிடுகிறாயா?” என்று விசமக் குரலில் கண்களைச் சிமிட்டியபடி குறும்போடு கேட்டான்.

 

செங்கொழுந்தெனச் சிவந்துவிட்ட முகத்தை அவனுக்குக் காட்டாது தலையைக் குனிந்துகொண்டவளை அவன் விழிகள் ஆசையோடு விழுங்கின.

 

அவள் கையிலிருந்த உடைகளை வாங்கியவன், அவளைப் பார்த்தபடியே மாற்றத் தொடங்கவும் வேகமாகத் திரும்பிக் கொண்டாள் சித்ரா.

 

உரக்க நகைத்தான் ரஞ்சன். உடைகளை அணிந்துகொண்டு, “இப்போது திரும்பலாம்..” என்றான் அப்போதும் குரலில் நகை இலங்க.

 

அவன் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் அவளை எப்படி வெட்க வைத்ததோ அதேபோல் ஆச்சர்யப்படவும் வைத்தது.

 

அதுநாள் வரை சிடுமூஞ்சியாக இருந்தவன் எப்படி இப்படி சிரிப்பு மன்னனாக மாறினான் என்கிற அதிசயம் அவளுக்குப் புரியவே இல்லை.

 

ஆனாலும், இந்த ரஞ்சனை அவளுக்கு இன்னமுமே பிடித்திருந்தது.

 

ஒருவழியாக தம்பதியர் வெளியே செல்லத் தயாராகி கீழே இறங்கினர்.

 

சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருந்து பத்திரிக்கை படித்துக் கொண்டிருந்த சந்தானமும் அவருக்குக் காபியைக் கலந்து கொடுத்தபடி நின்ற லக்ஷ்மியும் மகளும் மருமகனும் வருவதைக் கண்டுவிட்டு நிமிர்ந்து பார்த்தனர்.

 

கண்களில் கனிவும் மலர்ந்த முகமுமாக படியிறங்கிய ரஞ்சனோடு, விழிகளில் நாணமும், கன்னங்களில் சிவப்பும், இதழ்களில் புன்னகையுமாக இறங்கிவந்த மகளைப் பார்த்த பெற்றவர்களின் மனமும் வயிறும் ஒருங்கே குளிர்ந்தது.

 

மகளும் மருமகனும் இணைந்துவிட்டது புரிய அதுநாள் வரை அவர்களது மனதை அழுத்திய பாரம் மாயமாய் மறைந்தது.

 

அவர்களின் வாழ்க்கைத் தவமே மகளை இப்படி ஒரு கோலத்தில் காணவேண்டும் என்பதுதானே!

 

சந்தானத்தின் முகம் பெருமிதத்தில் மின்னியது என்றால் லக்ஷ்மியின் விழிகள் சந்தோசத்தில் கலங்கின.

 

“வா ரஞ்சன். வாடா சித்து..” என்று பாசத்தோடு அவர்களை வரவேற்ற சந்தானம், “ரஞ்சனுக்கும் சித்துக்கும் டீயைக் கொடு லக்ஷ்மி.” என்று மனைவியையும் ஏவினார்.

 

லக்ஷ்மியோ, கணவன் சொன்னதைச் செய்யாது, “சித்து வாம்மா..” என்றபடி சுவாமி அறைக்கு விரைந்தார்.

 

அங்கே சுவாமிப் படங்களின் முன்னால் நின்று ஆனந்தத்தோடு கைகூப்பி வணங்கியவர், ‘என் மகளின் வாழ்க்கையை மலரச் செய்ததற்கு நன்றி ஆண்டவா..’ என்று அந்தக் கோணேஸ்வரப் பெருமானுக்கு மனமுருகி நன்றியைச் சொல்லி விளக்கை ஏற்றினார்.

 

தாயைப் பின்பற்றி சித்ராவும் கைகூப்ப, தாரத்தைப் பின்பற்றி வந்த ரஞ்சனும் கரங்களைக் கூப்பி மனமாரக் கும்பிட்டான்.

 

மகளினதும் மருமகனினதும் நெற்றியில் திருநீறு, சந்தானம், குங்குமம் பூசிவிட்ட லக்ஷ்மிக்கு உள்ளம் நெகிழ்ந்து நிறைந்து கிடந்தது.

 

சித்ராவுக்கும் அந்த நொடி மனம் நிறைந்திருந்ததில் உணர்ச்சி வசப்பட்டவள் தாயின் காலில் விழப் போகவும், “பொறு பொறு அப்பாவும் வரட்டும்..” என்று தடுத்தவர், கணவரையும் அருகழைத்துக்கொள்ள, இப்போது கணவனும் மனைவியுமாக அவர்களது பாதம் பணிந்து எழுந்தனர்.

 

மனம் முழுவதும் வியாப்பித்த பரவசத்துடன், அவர்கள் இருவரினதும் தோள்களைப் பற்றி எழுப்பி விட்ட பெற்றவர்களின் விழிகள் ஆனந்தத்தில் மெலிதாகக் கலங்கியிருந்தன.

 

“எல்லா சுகமும் பெற்று தீர்க்க ஆயுசுடன் நலமாக வாழவேண்டும்!” என்று வாழ்த்தினர் நிறைந்துவிட்ட மனதோடு.

 

“உன்னை இப்படிப் பார்க்கத்தான் ஆசைப்பட்டோம் கண்ணம்மா..” என்று மகளை உச்சிமுகந்தார் சந்தானம்.

 

அவளும் சலுகையுடன் தந்தையின் தோளில் சாய்ந்துகொள்ள, “இனி யாழியை நினைத்து நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் மாமா. அவளை நிச்சயம் நான் நன்றாகப் பார்த்துக்கொள்வேன்!” என்று, அவனுக்கே உரிய ஆழ்ந்த குரலில் ரஞ்சன் சொன்னபோது, அங்கிருந்த மூவருமே கலங்கிவிட்ட விழிகளோடு அவனைப் பார்த்தனர்.

 

லக்ஷ்மியின் விழிகளில் கண்ணீர் ஆறாகவே பெருகி வழிந்தது.

 

“என்ன மாமி, அவளை நன்றாகப் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னதற்கா இந்த அழுகை?” வேண்டுமென்றே கேட்டான் ரஞ்சன்.

 

மருமகன் முன் இப்படி அழுதுவிட்டோமே என்று வெட்கி, சட்டெனப் பூத்த புன்னகையுடன் சேலை முந்தானையால் கண்களைத் துடைத்தபடி, “இல்லை.. இது ஆனந்தக் கண்ணீர்..” என்றார் அவன் மாமியார்.

 

அதன்பிறகான அந்தக் குடும்பத்தின் நேரம் மிக மிக மகிழ்ச்சியோடு கடந்தது.

 

உணவு வேளை முடிந்ததும் அவர்களிடம் சொல்லிக்கொண்டு ரஞ்சனின் வண்டியில் தங்கள் கடைக்குப் புறப்பட்டனர் இருவரும்.

 

அங்கே கடையில் மேல் தளத்துக்கு அழைத்துச் சென்று காட்டினான் ரஞ்சன். அங்கிருந்த வீட்டு உபயோகப் பொருட்களைப் பார்த்துவிட்டு வியப்போடு புருவங்களை உயர்த்தினாள் சித்ரா.

 

அவளின் தோள் மேல் கையைப் போட்டபடி, “எப்படி இருக்கிறது நம் வீடு?” என்று ரஞ்சன் கேட்டபோது, “நம் வீடா? இனி நாம் இங்கேயா இருக்கப் போகிறோம்?” என்று வியப்போடு கேட்டாள் மனையாள்.

 

“ஏன் பிடிக்கவில்லையா?”

 

“இல்லை, அப்படியில்லை. எனக்குத் தெரியாதே. அதுதான் கேட்டேன்.”

 

“ம்ம்.. இரவுதான் எல்லாம் ஒழுங்கு செய்தேன். அதுதான் அங்கு வரவும் பிந்திவிட்டது..” என்றவனின் விழிகள், அவளைச் சீண்டிச் சிரித்தன.

 

அவன் பார்வையின் வேகம் தாங்கமுடியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டவள், அவர்களின் வீடாகிப்போன அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தாள்.

 

இரண்டு அறைகளைப் போன்று இருந்த அந்தத் தளத்தில் ‘ஹால்’ ஆகப் பயன்படுத்தப் போகும் அறையில் மூன்று பிரிவுகளாக இருந்த சோபா செட் வீற்றிருந்தது.

 

“இன்று போய் டிவி வாங்குவோம்..” என்றான் அவன்.

 

அடுத்ததாக இருந்த அறையைப் எட்டிப் பார்த்தவளுக்கு மெல்லிய குறுகுறுப்புடன் வெட்கமும் வந்தது.

 

அது படுக்கை அறை.

 

அங்கே மட்டும் எந்தக் குறையும் இன்றி, இருவர் மட்டுமே படுக்கக் கூடிய அளவிலான ஒரு கட்டிலும், அதன் ஒருபக்கத்தில் கப்போர்ட்டும் மற்றப் பக்கத்தில் முகம் பார்க்கும் கண்ணாடியும் வீற்றிருந்தது.

 

ஏன், கட்டிலுக்குத் தலையணை முதல் போர்வை வரை அத்தனையுமே கச்சிதமாக இருந்தது.

 

“உள்ளே போய்ப் பார்க்கவில்லையா?” என்று கன அக்கறையுடன் விசாரித்தான் கணவன்.

 

அவன் கேள்வியில் வந்த சிரிப்பை அடக்கியபடி, “இல்லையில்லை பரவாயில்லை! இங்கிருந்தே எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது..” என்று அவசரமாகச் சொன்னாள் சித்ரா.

 

கண்களில் கேலியுடன் அவன் பார்க்க, “எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது..” என்றாள் கணவனிடம்.

 

“எது? அந்த அறையா?”

 

கன்னங்களில் கதகதப்பு ஏற, “இந்த வீடு.” என்றாள் சித்ரா.

 

“ம்ம்.. கொஞ்ச நாட்களுக்கு இங்கே இருப்போம் யாழி. மிகுதியைப் பிறகு பார்க்கலாம். அதில் உனக்குக் கவலை இல்லையே?”

 

இப்படியான இடத்தில் வாழ்ந்து பழகாதவள் ஆயிற்றே அவள்.

 

“எனக்குத்தான் இந்த இடம் மிகவும் பிடித்திருக்கிறதே..” அவன் கேட்ட கேள்வியே அர்த்தமற்றது என்பதுபோல் சொன்னாள் சித்ரா.

error: Alert: Content selection is disabled!!