ஆட்டநாயகன் 38.2

ஒருவிதமாக மரித்துப்போனான் அவன் மாமன். இந்தச் சின்ன உள்ளத்திடம் எதை எப்படிச் சொல்லி விளக்குவான்? விழிகள் பனித்துவிட, தன் உடல் நிலையைக் கூடப் பொருட்டில் கொள்ளாமல், அவனை அப்படியே அள்ளித் தூக்கி, “அப்பாதானப்பு. பிள்ளையின்ர அப்பாதான்.” என்று அழுத்திச் சொல்லி, அவன் நெற்றியில் முத்தமிட்டான்.

சின்னவன் அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை. தந்தை என்று அறிமுகப்படுத்தப்பட்டவனையே பார்த்தான். திரும்பி அன்னையைப் பார்த்தான். அவளும் வழியும் கண்ணீரும் நடுங்கும் உதடுகளுமாக அவனையே பார்த்திருக்க, எல்லாளனிடமிருந்து இறங்கி அவளிடம் ஓடினான்.

“அப்பாவா அம்மா?” அதே கேள்வி. அதுவே அந்தச் சின்ன உள்ளம் படும் பாட்டைச் சொல்லிற்று. கண்ணீர் கரகரவென்று பெருகி வழிந்தது அவளுக்கு.

அவளுக்கே இன்னும் தெளிவில்லையே. ஆனால், எல்லாளனும் ஆதினியும் சும்மா எதையும் சொல்ல மாட்டார்கள் என்கிற நம்பிக்கையோடு, “பிள்ளையின்ர அப்பாதானய்யா.” என்றாள் கரகரத்த குரலில்.

அதற்காகவே காத்திருந்தாற்போல் வேகமாகத் திரும்பித் தந்தையைப் பார்த்தான். அவன் பிறந்ததில் இருந்தே அப்புச் சாமியிடம் போய்விட்டார் என்று சொல்லி வளர்க்கப்பட்ட தந்தை. அதுவரை அவன் புகைப்படத்தில் மட்டுமே பார்த்த ஒருவன். இன்று கண் முன்னே. அவனைப் பார்க்க பார்க்கச் சின்னவனின் உதடுகள் பிதுங்க ஆரம்பித்தன. யாரிடமும் தன் முகம் காட்டப் பிடிக்காமல் அன்னையின் மார்பில் முகம் புதைத்து உடல் குலுங்க அழுதான்.

அங்கிருந்த எல்லோர் நெஞ்சிலும் அந்தப் பிஞ்சு படும் பாட்டைக் கண்டு நெஞ்சில் இரத்தம் வடிந்தது. எல்லாளன் காண்டீபனைப் பார்த்தான். இன்னுமே ஒரு வகையான உறைந்த நிலையில் தாயையும் மகனையும் பார்த்து நின்றான் அவன். அவன் அருகில் சென்று, “போய்த் தம்பிய தூக்கடா. அவன் அழுறான். பாத்துக்கொண்டு நிக்கிறாய்!” என்றான் பல்லைக் கடித்து.

அவனுக்கும் அந்த உந்துதல் இல்லாமல் இல்லை. ஏனோ கால்கள் இரண்டும் தரையில் வேரோடிவிட்டவை போன்று அசைய மறுத்தன. இப்போது எல்லாளனின் தூண்டுதலில் மெல்ல நகர்ந்து சென்று மகனைத் தொட்டுத் திருப்பினான்.

ஒரு கணம் முகத்தை நிமிர்த்திப் பார்த்த அதிரன், “அம்மா!” என்று அன்னையைப் பார்த்துப் பெருங்குரல் எடுத்து அழவும் எல்லோர் விழிகளிலும் கண்ணீர்.

அப்படி அழுகிற பிள்ளை இல்லை அவன். எதையும் தனக்குள் போட்டுப் பூட்டுகிறவன். இன்று தந்தை தூக்கவும் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு கழுத்து வளைவில் முகம் புதைத்து அழுதான். காண்டீபன் இதயம் எதற்கோ தாறுமாறாய்த் துடித்தது. வாய் வார்த்தைகள் எதுவும் வராதபோதும் அவன் முதுகை வருடிக்கொடுத்து ஆசுவாசப்படுத்த முயன்றவனின் விழிகளும் பனித்துப்போயின. அதை யாருக்கும் காட்டப் பிடிக்காமல் வெளியே முற்றத்துக்கு இறங்கினான்.

போகிறவர்களையே பார்த்திருந்துவிட்டு, “எப்பிடி?” என்றாள் மிதிலா, எழும்பவே எழும்பாத குரலில் எல்லாளன் ஆதினி இருவரையும் பார்த்து.

சிறையில் அவன் அனுபவித்த கொடுமைகளைத் தவிர்த்து அவனை எப்படிக் கண்டுபிடித்தான் என்று சுருக்கமாகப் பகிர்ந்துகொண்டான் எல்லாளன். என்னவோ ஆலைக்குள் அகப்பட்டுச் சக்கையாக வெளி வந்ததைப் போன்று மொத்தமாய்த் தன் உள்ளத்தின் தெம்பை எல்லாம் இழந்து, அப்படியே அந்தச் சோபாவிலேயே சாய்ந்துவிட்டாள் மிதிலா.

அவள் கணவன் வந்துவிட்டானா? அந்த ஒற்றைக் கேள்வியிலேயே அவள் உலகம் சுருண்டு போயிற்று. இன்னுமே கைகால்கள் நடுக்கம் நின்றபாடாக இல்லை. அப்பாவும் மகனும் திரும்பி வந்தனர். என்ன மாயமந்திரம் செய்தானோ? சின்னவன் அழுகையை நிறுத்தியிருந்தான்.

தன் வாழ்வில் பார்க்கவே முடியாது என்று எண்ணியிருந்த ஒரு காட்சி. அப்பா மகனைத் தூக்கிக்கொண்டு வருகிறான். கண்ணில் நீர் மல்க கணவனையே விடாமல் பார்த்திருந்தாள்.

காண்டீபனின் பார்வையும் அவளில்தான். வீட்டுக்குள் வந்து சோபாவில் அமரும் வரையில் அவளையேதான் பார்த்திருந்தான். எதிரெதிரில் அமர்ந்திருந்தாலும் அவர்கள் இருவரது உணர்வுகளும் பின்னிப் பிணைந்திருப்பது போலொரு மாயை.

அப்போது, சாந்தி அக்கா மூலம் முகம் கழுவி, தலை இழுத்து, முகத்துக்கு பவுடர் போட்டு, நெற்றியிலும் கன்னத்திலும் நல்ல பெரிய கறுப்புப் பொட்டு வைத்து வந்தாள் தீபனா. குடுகுடு என்று ஓடி வந்தவள் கண்டது காண்டீபனின் மடியில் அமர்ந்திருந்த அதிரனை.

ஓட்டம் நிற்க நன்றாக ஒருமுறை அவர்களை பார்த்துவிட்டு அடுத்த கணமே விறுவிறு என்று வந்து, சோபாவில் ஏறி, அப்படியே காண்டீபனின் தொடையில் ஏறி நின்றுகொண்டு, அதிரனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள். அது போதாமல் காண்டீபனின் கழுத்தைத் தன் இரு பிஞ்சுக் கரங்களாலும் வளைத்து, தன்னைப் பார்க்க வைத்து, “என்ர காந்தி மாமா!” என்றாள் அதிரனிடம்.

“ம்ஹூம்! என்ர அப்பா!” காண்டீபனின் இடுப்பைக் கட்டிக்கொண்டு அவன் மார்பில் சாய்ந்துகொண்டு சொன்னான் அதிரன்.

அவ்வளவுதான். அவ்வளவு நேரமாகக் கண்ணீரும் புன்னகையுமாக அவர்களையே பார்த்திருந்த மிதிலா முகத்தை மூடிக்கொண்டு கதறியிருந்தாள்.

இப்படி அவன் யாரையுமே உரிமை கொண்டாடியதில்லை. எல்லாவற்றையும் அமைதியாகவே எதிர்கொள்கிறவன். யார் என்ன சொன்னாலும் கேட்பான். என்ன சொன்னாலும் செய்வான். அப்படியான பிள்ளை இன்று சிறு குழந்தையிடம் போட்டிக்குப் போகிறான்.

அப்போதும் காண்டீபன் அவளையே பார்த்தபடி அமர்ந்திருக்க எல்லாளன் பல்லைக் கடித்தான். ஆதினி சின்னவளைத் தூக்கிக்கொள்ள, அவளோடு அதிரனையும் அனுப்பி வைத்துவிட்டு, “போயிருந்து அவளோட கதை காண்டீபா. இப்பிடி இருக்காத. போ மச்சான்!” என்றுவிட்டு அவர்களுக்குத் தனிமை கொடுத்துத் தானும் அங்கிருந்து அகன்றான் எல்லாளன்.

சில கணங்களுக்கு இமைக்காது அவளையே பார்த்திருந்துவிட்டு எழுந்துபோய், அவள் அமர்ந்திருந்த சோபாவிலேயே அவளைப் பார்ப்பது போன்று ஒரு காலை மடித்து வைத்துக்கொண்டு அமர்ந்தான்.

அப்படி அவன் வந்து அமர்ந்த அதிர்வில் சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள் மிதிலா.

அவனையே இமைக்காது பார்த்துவிட்டு, “நீங்க உண்மையாவே என்ர தீபன்தானா?” என்றாள் கண்ணீருடன்.

“அப்பிடித்தான் எல்லாளன் சொல்லுறான்.”

அவர் சொல்கிறான் என்றால்? புரிந்தும் புரியாத குழப்பத்தோடு பார்த்தாள்.

“எனக்குப் பழசு எதுவுமே நினைவில இல்ல.”

“என்னையுமா?” உனக்கு என்ன நடந்திருந்தாலும் உன்னால் என்னை மறக்க முடிந்ததா என்கிற தொனியில் பரிதாபமாகக் கேட்டவளை எதிர்கொள்ள இயலாமல் வாசல் பக்கம் முகத்தைத் திருப்பினான்.

“அவருக்கு எப்பிடி நீங்கதான் நீங்க எண்டு தெரிஞ்சது?”

“இந்தக் கையப் பாத்துத்தான் முதல் முறை கண்டு பிடிச்சவன்.” என்று தன் கையைக் காட்டினான்.

அதே கம்பி வைத்த அடையாளமும் அது முடியும் இடத்தில் இருந்த பொட்டு அளவிலான மச்சத்தையும் கண்டு ஆனந்தமாய் அதிர்ந்துபோனாள். அவள் கணவனின் தேகத்தை அவளுக்குத் தெரியாதா என்ன? “ஐயோ நீங்கதான். நீங்களேதான்!” என்று துள்ளியவள், “திரும்புங்க!” என்று தன்னை மறந்து அவனைத் தானே திருப்பி, டி சர்ட்டை தூக்கிப் பார்க்கப் போனாள்.

“ஏய் என்ன செய்றாய்?” என்று துள்ளி விலக்கியவனைக் கண்டுதான் என்ன செய்ய இருந்தோம் என்று உணர்ந்து முகம் சூடாகிப்போனாள்.

கூடவே அவன் எழுந்த விதம் கண்டு சிரிப்போடு வேதனையும் உண்டாயிற்று. முன்னர் எல்லாம் அவளாக இப்படி ஒரு காரியம் செய்தால் போதும். கிடைக்கும் தனிமையில் பொல்லாத சேட்டைகள் எல்லாம் செய்து, நிமிர்ந்து அவன் முகம் பார்க்க விடாமல் செய்துவிடுவான். அப்போதெல்லாம் அவனுடைய பெரும் குறையே அவளாக அவனை நெருங்குவதில்லை, உரிமை பாராட்டுவது இல்லை என்பதுதான். ஆனால் இன்று அவள் நெருக்கத்தை அவனால் ஏற்க முடியவில்லை.

அவளுக்கு விழிகள் கலங்கிக்கொண்டு வரவும், “இவ்வளவு நேரம் அழுதது போதும்.” என்றான் அவன் அவசரமாக.

அவளும் கண்களையும் முகத்தையும் கையாலேயே துடைத்துக்கொண்டு நிமிர்ந்து, ஆதினியை அழைத்தாள்.

வந்தவளிடம், “எனக்கு ஒரு ரூம் வேணும் ஆதினி.” என்று ஒரு வேகத்தில் சொல்லிவிட்டு, அவள் தவறாக எண்ணிவிடுவாளோ என்று, “அது எனக்கு ஒருக்கா இவர் என்ர தீபன்தானா எண்டு தெரியோணும்.” என்றாள் சங்கடத்தோடு.

“அக்கா, என்ன இது? எனக்கு உங்களை விளங்காதா? இந்த அறைலதான் அண்ணா இருந்தவர். அங்கேயே போங்க.” என்று அவர்களை அனுப்பி வைத்துவிட்டு விலகி வந்தாள்.

“டீ சர்ட்டை கழட்டுங்க.” அறையின் கதவை அடைத்துவிட்டுச் சொன்னாள் மிதிலா.

ஒரு கணம் அதிர்ந்துபோனான் காண்டீபன்.

“சொறி! நீங்க இல்லாத காலத்தில கூட உங்களை மட்டுமே நினைச்சு வாழ்ந்தவள் நான். எனக்குத் தெளிவு வேணும். உங்கட நண்பர் சும்மா சொல்ல மாட்டார். ஆனாலும் எனக்கும் உங்களுக்குமான உறவு சாதாரண உறவு இல்ல. ஊனும் உயருமா வாழ்ந்த உறவு. அப்பிடி இருக்க நானே பாத்துத் தெளியாம எதையும் நம்பேலாமா இருக்கு.” என்றதும் சட்டென்று மேற்சட்டையைக் கழற்றிவிட்டு நின்றான் அவன்.

பார்த்தவள் நெஞ்சைப் பற்றிக்கொண்டு நின்றுவிட்டாள். முதலும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பான்தான். ஆனால் இப்போது உடம்பை இரும்பாக்கியிருந்தான். அதைவிட தேகம் முழுக்க ஒரு இடம் இல்லாமல் அத்தனை காயப்பட்ட அடையாளங்கள். கண்ணில் நீர் சுரக்க அவனைப் பற்றிப் பின்னால் திருப்பினாள்.

அங்கே அவள் தேடிய அடையாளம் இருந்தது. சின்ன வயதில் பின் பக்கமாக விழுந்து, பெரிய கல்லு ஒன்று குத்தி, அது பெரும் காயமாகி, அந்த இடமே இலேசாகத் தோண்டியது போன்று இருக்கும். எப்போதுமே அவன் வெற்றுத் தேகத்துடன் இருந்தால் அவள் விரல்கள் அதை வருடாமல் விட்டதே இல்லை. அதே அடையாளம் அவன் தேகத்தில் அப்படியே இருந்தது. விரல்கள் நடுங்க அதை வருடியவள் அதற்குமேல் முடியாமல் நெற்றியை அவன் முதுகின் மீதே முட்டிக்கொண்டு மௌனமாய்க் கண்ணீர் உகுத்தாள்.

அவன்தான். அவள் கணவன்தான். கடவுளே கடவுளே என்று அவள் உள்ளம் அரற்றியது.

“ப்ச் அழாத மிதிலா!” ஆதினியைக் கூட பன்மையில் விழித்தவனுக்கு அவளை ஒருமையில் அழைக்க எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் அழைத்தான்.

முன்னால் வந்து நின்று, “நீங்க இல்லாம இத்தின வருசமும் நான் பட்ட பாடு உங்களுக்குத் தெரியாது தீபன்.” என்று அவனைக் கட்டிக்கொண்டு மார்பில் முகம் புதைத்தாள் மிதிலா.

அவன் தேகம் விறைத்து நிமிர்ந்தது. அந்த அனைப்பைத் தாங்கி நிற்கிறவன் போன்று சில கணங்கள் நின்றவன், “வெளில போவம் மிதிலா.” என்றபடி அவளை இலேசாக விலக்கினான்.

“மிது”

“என்ன?”

“நீங்க என்னை அப்பிடித்தான் கூப்பிடுவாங்க.”

“ஓ!” என்று கேட்டுக்கொண்டு மேற்சட்டையை எடுத்து அணிந்துகொண்டு வெளியே வந்தான் காண்டீபன்.

அவன் தன்னை அணைக்காததும், தான் அணைத்தபோது விறைத்து நின்றதும், நாசுக்காக அவளை விலகியதும் புரிந்து வருத்தம் கொண்டவள், அவன் அனைத்தையும் மறந்து நிற்கிறான் என்று தன்னையே தேற்றிக்கொண்டு தானும் வெளியில் வந்தாள்.

error: Alert: Content selection is disabled!!