அத்தியாயம் 16 – 3

‘அப்பிடி நான் என்ன செய்திட்டன்?’ குழப்பியது பிரணவ் உள்ளம்.

“என்ர கலியாணம் பற்றி உங்களுக்கு நான் எப்பவோ பதில் சொல்லிப் போட்டன் எண்டு நினைக்கிறன். இனி அதப் பத்திக் கதைச்சுக்கொண்டு வர வேணாம். எனக்கே சொல்லாமல் கொள்ளாமல் என்ர வாழ்க்கை பத்தி முடிவெடுக்க நீங்களும்  உங்கட வீட்டாக்களும் ஆர்? இல்ல ஆர் எண்டு கேக்கிறன்?” 

காயுவின் மறைவின் பின்னர் தீராத துக்கம் சூழ்ந்திருந்தாலும் இந்த இரண்டு கிழமையாக ஓரளவேனும் அமைதியாகவிருந்த வீடு, கணத்தில் மாறிவிட்ட விதம்; இதயத்தைப் பிசைய வைக்கும் தாயில்லாக் குழந்தைகளின் அழுகை; ‘வெளியே போயிரு! இனி இங்கு வரவே வராதே’ என்று, பிள்ளைகளைப் பறித்த பூபாலன் செய்கை, எல்லாம் சேர்ந்துருவாக்கிய கோபம் மொத்தமாக பிரணவ் மீது பாய்ந்தது.

இருந்தபோதும், வார்த்தைகளைக் கொட்டிவிட்ட பின்னரே தான் என்ன சொன்னோமென அவளுக்குப் புரிந்தது. திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள். 

“பிரணவ்…”

அந்தப் பிரணவுக்கோ, அவள் தொடர்வதைக் கேட்கும் மனநிலை சுத்தமாகவே அற்றிருந்தது. இவளைக் கண்ட நாளில் இருந்தே ஒன்று ஒன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்கிறானே! தான், தன் அலுவல்கள் என்று எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு இவளை மையமாக வைத்தே எல்லாவற்றையும் செய்வது எதற்காக? பூபாலன் குடும்பம் உற்ற நட்பு என்றதையும் தாண்டி இவளுக்காக, இவள் ஒரு கரைச்சலும் பட்டுவிடக் கூடாது, விரும்பியவளுக்கு தன்னை உணர்த்திக் கைப்பிடிக்க வேண்டும் என்ற அவாவில் தானே.

அவளானால்…

விழிகள் இடுங்க வெறித்தான், பிரணவ். “இப்ப என்ன சொல்ல வாறீர்?” கேட்டவன் குரலில் இரும்பின் கடினம். இந்தக் குரலும் பிரணவ்வும் கயல்விழிக்கு முற்றிலும் புதிது. 

‘ஆனால், எப்பிடி இப்பிடிக் கோபம் வரலாம். நான் என்ன பிழையாச் சொல்லிட்டன்?’  என்றுதான் அவள் உள்ளம் எண்ணிற்று! 

முறைப்பாகப் பார்த்தாள். அந்த முறைப்பிலிருந்த உரிமை பிரணவ் கண்களையோ கருத்தையோ எட்டவில்லை. எவ்வளவுக்கெவ்வளவு பொறுமையாக அவள் விசயத்தைக் கையாண்டானோ எல்லாவற்றுக்கும் சேர்த்துக் கொந்தளித்துப் போனான். அழும் குழந்தைகளில் தெரிந்த காயு தான் அவன் கோபத்தை அப்படியே கொப்பளித்துவிடுவதிலிருந்து தடுத்துவிட்டாள் என்று சொல்லலாம்.

மனதுள் போராடி நின்றவன் நிலையறியாது தொடர்ந்தாள், கயல்விழி.

“அதென்ன எனக்கே தெரியாமல் ரெஜிஸ்ட்ரேசன் வரை நீங்களாவே  முடிவெடுக்கிறது? எனக்கு இப்ப உடனடியாக் கலியாணம் செய்யிற எந்த ஐடியாவும் இல்ல பிரணவ்.” என்றவள், அவன் விழிகளில் தெறித்த ரௌத்திரத்தில், “ப்ளீஸ் பிரணவ்..” என்றவளுக்கு நெஞ்சம் நடுங்கியது. அப்படியே குழந்தைகளோடு அவன் நெஞ்சில் சாய்ந்து அழ வேண்டும் போலிருந்தது.

இத்தனை நாட்கள் சொல்லாமலே எல்லாவற்றையும் புரிந்து நடப்பவன் இன்று இந்த வீடு இருக்கும் நிலையறிந்து நடப்பதில்லையா? ‘காயு காயு எண்டு பாசமழை பொழியிறவர் அவா போய் ஒரு மாதம் முடிஞ்ச நிலையில கலியாணக் கதை எடுக்கிறது  சரியா என்ன? கொஞ்சக் காலம் போகட்டுமே!’ மனதின் அரட்டல் வார்த்தை வடிவம் பெறவில்லை.

“இதுதான் உன்ர முடிவோ!” அடிக்குரலில் பிரணவ் கேட்டது அவள் செவிகளை அடைய முன்னர், வலுத்த பிள்ளைகளின் அழுகையொலி நுழைந்து கொண்டது. இருவரையும் பார்த்த பூபாலன் எழுந்து வந்தான். 

“கயல்விழி அவன என்னட்டத் தாரும்; அங்கால போயிருந்து இரண்டு பேரும் கதையுங்கோ. ப்ளீஸ்!” தன்மையாகத்தான் சொல்லிக்கொண்டு குழந்தையை வாங்க முயன்றான். 

“விடுங்க அவன! இங்க பாருங்க, இங்க இருக்கிற வரைக்கு அதாவது நான் வேலை முடிஞ்சு இலங்கை போகும் மட்டுக்கும் இந்த வீட்டில தான் இருக்கப் போறன். வெளில போ எண்டு சொல்லுற வேலை இனி வச்சுக்கொள்ள வேணாம் சரியா? உங்களுக்கு இருக்க விருப்பம் இல்லாட்டி நீங்க வெளில போங்கோ! நான் இலங்கை போன பிறகு வாங்க.” என்றவள், “வா லாதி!” விசுக்கென்று திரும்பியவள், “இலங்கை போகேக்க பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு போயிருவன்.” நின்று சொல்லிவிட்டு விடுவிடுவென்று சென்று மறைந்தாள்.

கயல் வெடுக் வெடுக்கென்று கதைப்பதொன்றும் புதில்லைதான். இருந்தாலும் இப்போது சொன்னவிதத்தில் பூபாலன் தலை தன்பாட்டில் பிரணவ் நோக்கித் திரும்பியது. அவனுள் எக்கச்சக்கமாகச் சங்கடம். பிரணவ் அமைதியும் பொறுமையும் கொண்டவன் தான். அதே, எல்லை கடந்தால் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விடுவான். எப்போதாவது அவன் கொள்ளும் கோபம் மிகுந்த சூடாகவே இருக்கும். அதை இத்தனை நாட்களில் கண்டறிந்தவனாச்சே!

பிரணவ் பார்வையோ கயலைத்தான் தொடர்ந்து கொண்டிருந்தது. தான் கேட்டதைக் காதிலும் வாங்கவில்லையே! உன்னோடு கதை முடிந்தது என்றவகையில் போகிறாளே!

முகத்தில் எள்ளும் கொள்ளும் பொரிந்தன. என்னதான் என்றாலும் பூபாலனும் அவன் தமக்கையும் அவனுக்கு மூன்றாம் நபர்கள் தானே? அவர்கள் முன்னால், தான் மிகவும் விரும்பியவள் அவமரியாதை செய்து விட்டாளே !

எவ்வளவு பொறுமையாக தன்னை அவளுக்கு உணர்த்தினான். அதை நிச்சயம் அவளும் உணர்ந்திருந்தாள். இருந்த போதும் இப்படிப் பட்டென்று தூக்கி எறியக் கூடியவகையிலா அவன் அவளுக்கு?

நிதானமாகவே நண்பனிடம் திரும்பினான்.

“தேடி அலைஞ்சு திரியாமல் எந்தவிதமான கரைச்சலும் படாமல் வலு ஈசியாக் கிடைக்கிற எதுக்குமே அது ஒரு உறவா இருக்கட்டும் பொருளா இருக்கட்டும் பெறுமதி இல்ல எண்டு அம்மம்மா நெடுகிலும் சொல்லுறவா பூபாலன். இப்பத்தான் அதிண்ட ஆழமான கருத்து எனக்கு விளங்கிச்சு!” 

சத்தமாகவே தான் சொன்னான். உதறிச் சென்றவள் காதுகளில் விழ வேண்டும். தூக்கி எறிவது அவளால் மட்டுமா முடிந்த ஒன்று!

“இல்ல இல்ல பிரணவ், கொஞ்சம் பொறு.  நான் போகச் சொல்ல பயந்திட்டா பிரணவ். கயல்விழிக்கு பிள்ளைகளில எந்தளவு விருப்பம் எண்டு நான் சொல்லவா வேணும். நானும் அம்மா கதைக்க… ச்செக்!” நெற்றியில் அறைந்தபடி அவன் கரங்களைப் பற்றி ஆறுதல் படுத்த முயன்றான். வெடுக்கென்று உதறினான் பிரணவ்.

 

அவனுக்கு அக்கணம் பூபாலனிலும் மிகுந்த கோபம் உண்டாயிற்று!

அவன் தாய் ஏதேதோ சொன்னார் என்றால் அதை நம்பிக்கொண்டு  இங்க கத்துவானா? மனம் எரிந்தது.

எதிரே சட்டத்தினுள் அடங்கியிருந்து நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும் காயு தான் அவன் கோபத்தை வெளியே கசிய அனுமதிக்கவில்லை. கண்களை இறுக மூடித் திறந்தான்.

“சரி வராது எண்டு எப்பவோ நான் ஒதுங்கி இருக்க வேணும். இல்லை எண்டு பிடிவாதமா வந்தன் பார், அதுக்கு இந்த அவமரியாத எனக்குத் தேவைதான்.” 

“என்ன பிரணவ் நீ? கயல்…” அழைத்தான் பூபாலன்.

“வேணாம் பூபாலன், இப்பவரைக்கும் அவவோட நான் கதைச்சது, அவா எனக்குத் திருப்பித் தந்த மரியாதை எல்லாமே போதும். மனம் நிறைஞ்சு போயிற்று! இந்த இடத்தில ஒரு சின்னப் பிரச்சினை வந்தபோதே நான் அவாவுக்கு செல்லாகாசு, அப்பிடி இருக்கேக்க  வாழ்க்கையில் எப்படி? எந்த நம்பிக்கையில…” உதட்டைப் பிதுக்கியவன் முகத்தில் கோபத்தை மீறிய வருத்தம். தோற்றுவிட்ட  வேதனை!

“நான் கிளம்புறன் பூபாலன்.” விருட்டென்று தான் தங்கியிருந்த அறை நோக்கித் திரும்பினான்.

அக்கணம், பூபாலனுக்குத் தன் வேதனை எல்லாமே மறந்திட்டு.

 

‘இது என்ன புதுப் பிரச்சினை? இத்தனை மாதங்களா ரெண்டு பேரும்  விரும்பிச் சேர்வார்கள், அந்த நாள் எப்ப வரும் எண்டு  காத்திருக்க…” ஓரமாக ஒதுங்கி நின்ற தமக்கையிடம் சொன்னபடி பிரணவ் பின்னால் விரைந்தான்.

“பிரணவ்…கொஞ்சம் பொறு, கயல் இங்க வாரும்.” என்றபடி நகர்ந்தவன் திரும்பிய பிரணவ்வின் பார்வையில் தரித்து நின்றான்.

“இங்க பார் பூபாலன், என்னைப் பற்றி உனக்கு நல்லாவே தெரியும் எண்டு நினைக்கிறன். இனி இது பற்றி ஒருக்காலும் நான் கதைக்க விரும்பேல்ல. முடிஞ்சிட்டு! எல்லாம் முடிஞ்சிட்டு! சில மாசங்களுக்கு முதலே முடிஞ்சிருக்க வேண்டியது… இப்பிடி அவமானப்பட வேணும் எண்டு எனக்கு எழுதி இருக்கே!” நெற்றியில் கோடிழுத்துக் காட்டியவன், அடுத்த ஐந்தாவது நிமிடம் தன் பொருட்களோடு அறையை விட்டு வெளியில் வந்தான்.

error: Alert: Content selection is disabled!!