என் சோலைப் பூவே 34 – 2

ஏன் இவள் இப்படிச் சொல்கிறாள்? திருமணத்துக்கு முதலே தவறிழைத்தார்கள் என்றாலும் அதை அவனும் அவளும்தானே செய்தார்கள்.

 

அவளின் பூடகப் பேச்சின் பொருள் புரியாமல், “அப்படி எதைத்தான் இழந்தாய் நீ?” என்று கேட்டான் ரஞ்சன்.

 

“சொன்னால் மட்டும் திருப்பித் தரவா போகிறீர்கள்? அல்லது உங்களால் அதை மீட்டுத்தான் தரமுடியுமா?” ஆத்திரத்துடன் அழுகையும் வந்தது அவளுக்கு.

 

என்னவென்று சொல்லாமல் ஆத்திரப்பட்டால் அவன் என்னதான் செய்ய முடியும் என்று கோபம் வந்தாலும், அவள் அழுவது மனதைப் பிசைய, “ப்ச் யாழி! இப்போது எதற்கு அழுகிறாய்? என் மீது கோபம் என்றால் என்னோடு சண்டையைப் பிடி. இரண்டு அடி வேண்டுமானாலும் அடி. அதைவிட்டுவிட்டு இப்படி அழாதே!” என்றான் மனைவியைத் தேற்றும் விதமாக.

 

“நீங்கள் ஒன்றும் பாசம் உள்ளவர்போல் நடிக்கத் தேவையில்லை.”

 

திரும்பவும் அதே பேச்சா, இதை விடவே மாட்டாளா என்றிருந்தது அவனுக்கு.

 

அவள் மனதில் ஏதோ நெருடல் இருக்கிறது என்பதை அவன் முதலே அறிவான் தான். ஆனால், இவ்வளவு விசயங்களை மனதுக்குள் வைத்துக் குடைந்திருக்கிறாள் என்பது அவன் எதிர்பாராதது.

 

இல்லறத்தின் அடிப்படையே ஒருவர் மீது மற்றவர் வைக்கும் நம்பிக்கை தானே. அந்த நம்பிக்கை இன்றி, மனதில் இவ்வளவு குமுறல்களையும் சுமந்துகொண்டு நிம்மதியற்ற வாழ்க்கையை அவனுடன் வாழ்ந்திருக்கிறாள் என்கிற எண்ணமே அவனைக் கொன்றது.

 

இனி வெளிப்படையாகப் பேசாமல் எதுவும் தீராது என்று எண்ணியவன் தன்னை மனைவிக்கு விளக்க முயன்றான்.

 

“ஆமாம்! நீ சொன்னதுபோல நம் திருமணத்துக்கு முதல் உன் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நான் நடந்து கொள்ளவில்லைதான்.” என்று ஆரம்பித்தான் ரஞ்சன்.

 

கணவன் அதை ஒத்துக்கொள்வான் என்று எதிர்பாராதவள் அதிர்ந்துபோய்ப் பார்த்தாள்.

 

அவன் முகத்தில் வருத்தமான ஒரு புன்னகை வந்துபோனது.

 

“அதேபோல சாதனாவின் முகத்தில் கரியைப் பூசவே உன்னைக் காதலிப்பதாகவும் பொய் சொன்னேன்..”

 

வலியைச் சுமந்து நின்ற விழிகளைப் பார்க்கமுடியாமல் பார்வையைத் திருப்பிக் கொண்டான் ரஞ்சன்.

 

“நீ தாங்கமாட்டாய் என்று தெரிந்துதான் இதையெல்லாம் உன்னிடம் சொல்லாமல் இருந்தேன். என் அன்பில், நான் காட்டும் பாசத்தில் நடந்தவைகளை எல்லாம் மறந்துவிடுவாய் என்று எதிர்பார்த்தேன். ஆனால்..” என்று இழுத்தவன், “எல்லாவற்றிலுமே நான் தோற்றுத்தான் போனேன்.” என்றான் வறண்ட குரலில்.

 

நான் மட்டும் எதில் வென்றேன்? எல்லாவற்றிலும்தான் தோற்றுப் போனேன் என்று எண்ணியவளின் முகத்தில் விரக்தியின் சாயல் படர்ந்தது.

 

“அவரவர்க்கு அவரவர் நியாயம். அப்படித்தான் என் விசயமும். எனக்கு என் அப்பாவும் அவர் ஆசைகளும் முக்கியமாகப் பட்டது. அவர் உயிருடன் இருந்திருந்தால் கூட அவரின் பேச்சுக்கு இவ்வளவு மதிப்புக் கொடுத்திருப்பேனா தெரியாது. அவர் இல்லாததாலேயே அவரின் ஆசைகளை எப்பாடு பட்டாவது நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தேன். அதனால் மற்றவைகளைப் பற்றி, ஏன் என் மனதைப் பற்றிக்கூட நான் யோசித்தது இல்லை. அவரைப் பற்றி உனக்குத் தெரியாது சித்ரா. அவ்வளவு அன்பான மனிதர். அன்பு மட்டுமில்லை பண்பு பாசம் என்று.. உறவுகளை உயிராய் மதிக்கும் மனிதர்.” என்றவனின் விழிகள் ஜன்னல் வழியாகத் தெரிந்த வானை வெறித்தன.

 

முதன் முறையாகத் தன்னிடம் மனம் திறக்கும் கணவனை விழி விரியப் பார்த்தாள் சித்ரா.

 

ரஞ்சனுக்கும் அதுநாள் வரை மனதில் பூட்டிவைத்திருந்த சுமைகளை, ஏக்கங்களைச் சொல்ல ஒரு இடம் கிடைத்ததுபோன்று அனைத்தையும் கொட்டத் துவங்கினான்.

 

“எல்லோருக்கும் அவர்களது அப்பாதான் முதல் ஹீரோ. எனக்கும் அப்படித்தான். அவரை அவ்வளவு பிடிக்கும். மோட்டார் வண்டி ஓட்டக் கற்றுக் கொண்டது, வைத்தியராக ஆசைப்பட்டது, ஏழைகளுக்கு உதவ நினைத்தது, அம்மா தங்கையை நல்ல நிலையில் வைக்க ஆசைப்பட்டது, அவர் சொந்தங்களை என்றும் எங்களுடனேயே வைத்திருக்க நினைத்தது, நித்தியின் திருமணம், என் திருமணம் என்று எல்லாமே அவர் விருப்பம் தான். ஆனால்.. இதில் நித்தியின் திருமணத்தைத் தவிர எதையுமே என்னால் செய்ய முடியவே இல்லை.” என்றவனின் விழிகள் பனித்திருந்தனவோ..

 

அவன் மனது புரிந்தாலும், இன்னும் சதனாவை மணக்காததை எண்ணி வருந்துகிறானோ என்று நினைத்த மாத்திரத்தில் அவள் இதயத்தை கூர் ஈட்டியொன்று சுருக்கென்று தைத்தது.

 

“உங்கள் அப்பாவின்மேல் இவ்வளவு பாசமும் மரியாதையும் வைத்திருப்பவர் என்னை விரும்புவதாகப் பொய் சொல்லியிருக்கக் கூடாது. என்னுடன் பொய்யாகப் பழகியிருக்கக் கூடாது. அதெல்லாம் நீங்கள் செய்த தவறுகள். அதனால்தான் இன்று அவர் ஆசைப்பட்ட எதையும் உங்களால் செய்யமுடியாமல் போனது.”

 

மனைவியின் பேச்சில் இருந்த நியாயத்தைப் புரிந்துகொண்டான் போலும், சிலநொடிகள் அமைதியாக இருந்தான் ரஞ்சன்.

 

“நீ சொல்வது உண்மைதான். ஆனால், மனதும் மூளையும் என்றுமே ஒன்றோடு ஒன்று பொருந்திப் போவதே இல்லை. அவையிரண்டும் மிகப் பெரிய எதிரிகள். மனம் ஒன்றைக் கேட்கும் மூளை ஒன்றைச் சொல்லும். இரண்டுக்கும் இடையில் சிக்கித் தவிப்பது இருக்கிறதே…” என்றவன் நெடிய மூச்சு ஒன்றை இழுத்துவிட்டான்.

 

அவன் மூளை சாதனாவைக் கேட்க மனம் சித்ராவைக் கேட்டதாமா என்று அவள் குழம்ப, கணவனோ விட்ட இடத்தில் இருந்து தன் பேச்சைத் தொடர்ந்தான்.

 

“அப்பா இறக்கும்வரை அவர்தான் அந்தக் குடும்பத்தையே கட்டிக் காத்துவந்தார். அதேபோல அந்தக் குடும்பத்தின் அடுத்த தலைமுறையில் முதல் பிறந்தவன் நான். அவர் காலத்துக்குப் பிறகும் உறவுகள் பிரியாமல் இருக்கவேண்டும் என்பதற்காக, ‘எனக்குப் பிறகு இந்தக் கூட்டுக் குடும்பம் குலைந்து விடாமல் நீதான் கட்டிக்காக்க வேண்டும். அது உன் பொறுப்பு…’ என்று என்னிடம் சொல்லிச் சொல்லியே வளர்த்தார். அதேபோலத்தான் எனக்கு சாதனா நித்திக்கு நவீன் என்பதும். சிறு வயதில் இருந்து அதைக் கேட்டுக்கேட்டு வளர்ந்ததாலோ என்னவோ பசுமரத்தாணியாக என் மனதில் ஆழப்பதிந்த விஷயங்கள் அவை. ஆனால் அவர் இறந்ததுமே எல்லாமே தலைகீழாகமாறிப்போனது.” என்றவன் சற்று நேரம் அமைதியானான்.

error: Alert: Content selection is disabled!!