என் சோலைப் பூவே 35 – 1

அத்தியாயம்-35

 

“தெ..தெரியுமா..? எப்படி..? பிறகு ஏன் நீ அதைப்பற்றி ஒன்றும் என்னிடமோ உன் அப்பாவிடமோ சொல்லவில்லை..”

 

“அது தெரியவந்தபோது முதலில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அப்பாவிடம் சொல்வதா வேண்டாமா என்ன செய்வது என்று ஒன்றுமே புரியவில்லை. இதைச் செய்வது நீங்கள் தானா என்கிற சந்தேகம் வேறு. உங்களைப் பார்த்தால் என்னால் அதைக் கேட்காமல் இருக்க முடியாது. அதுதான் அப்போது கொஞ்ச நாட்களாக கடைப்பக்கமே நான் வரவில்லை. பிறகு பார்த்தால், பணத்தை நீங்கள் திருப்பிப் போட்டிருந்தீர்கள். ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று குழம்பி, கண்ணன் அண்ணாவிடம் சும்மா உங்களைப் பற்றி விசாரிப்பதுபோல் தோண்டித் துருவினேன். அவர்தான் நீங்கள் கடை திறக்கப் போவதாகவும் இப்போதைக்கு யாரிடமும் அதைச் சொல்லாதே என்றும் சொன்னார். அப்படித்தான் உங்களின் முதல் கடைத் திறப்புவிழாவுக்கும் வந்தேன். பிறகு என்ன, இரண்டும் இரண்டும் நான்கு என்பதுபோல் கடைக்காத்தான் பணத்தை எடுத்தீர்கள் என்று விளங்கியது. இப்படிச் செய்கிறீர்களே என்று மனதில் வருத்தம் இருந்தாலும், உங்களை நேசித்த என்னால் கோபப்படவோ அல்லது அப்பாவிடம் காட்டிக் கொடுக்கவோ முடியவில்லை. அதனால்தான், அப்பாவுக்கு உடம்பு முடியாமல் போனதைப் பயன்படுத்தி கணக்கு வழக்குகளை நானே பார்த்துக்கொண்டேன். எடுத்த பணத்தைத் திருப்பிப் போடுகிறீர்கள்தானே என்று என்னையே தேற்றிக்கொண்டேன்.” என்று சொன்னவளை வேகமாக நெருங்கி எலும்புகள் நொறுங்கி விடுமோ எனுமளவுக்கு இறுக்கிக் கட்டிக் கொண்டான் ரஞ்சன்.

 

அவள் அன்று தந்தையிடம் காட்டிக் கொடுத்திருந்தாளோ அல்லது எல்லோர் முன்னிலையிலும் அவமானப் படுத்தியிருந்தாளோ அவன் நிலை என்ன? இன்று இந்த நிலையை அவன் அடைந்துதான் இருக்க முடியுமா அல்லது தங்கையின் திருமணம் தான் நடந்திருக்குமா?

 

அவன் வாழ்வின் முன்னேற்றப் பாதையில் அவள்தான் முதல் படியாக இருந்திருக்கிறாள். இதுதெரியாமல் அவன் செய்தவைகள் எத்தனை? அவளைப் போட்டுப் படுத்திய பாடுதான் என்ன?

 

அவை நினைவு வந்ததும் வேகமாக அவளிடமிருந்து விலகியவன், எல்லாவற்றையும் இன்றே சொல்லி முடித்துவிட வேண்டும் என்கிற பிடிவாதத்துடன் பேச்சை மீண்டும் தொடர்ந்தான்.

 

“அன்று சாதானாவுக்காக உன் காதலுக்குச் சம்மதம் சொன்னபோதும், நான் பணம் எடுக்கும் விஷயம் மாமாவுக்குத் தெரியவந்தால் உன்னை வைத்துச் சமாளிக்கலாம் என்று நினைத்துத்தான் உன்னை வெட்டி விடாமல் பழகினேன்..” என்றான் உணர்ச்சிகளைக் காட்டாத மரத்த குரலில்.

 

அதைக்கேட்டு மனைவி எந்தளவுக்குத் துடித்துப்போவாள் என்பதை அறிந்தவனின் விழிகள் என்னை மன்னித்துவிடு என்று அவளிடம் இறைஞ்சி யாசித்தன.

 

அவன் அவளை உண்மையாக விரும்பவில்லை என்பதே அவளுக்கு வலிதான். அப்படி இருக்கையில் பணத்துக்காகத் தன்னைப் பகடைக்காயாகப் பயன்படுத்தியிருக்கிறான் என்பதை ஊகித்தாள் தான் என்றாலும், அதை அவன் வாயாலேயே கேட்கையில், கத்தியின் கூர்முனையால் இதயத்தை யாரோ குத்திக் கிழித்தது போன்று துடித்தாள் சித்ரா!

 

ஆத்திரத்தையும் அழுகையையும் அடக்க முடியாமல், வேகமாக அவனை நெருங்கி அவன் நெஞ்சிலே குத்தத் தொடங்கினாள். “ஏன்.. ஏன் அப்படியெல்லாம் செய்தீர்கள். ஏன் இப்படி எப்போது பார்த்தாலும் என்னைக் கேவலப் படுத்துகிறீர்கள். நான் அப்படி உங்களுக்கு என்ன செய்தேன். பைத்தியம்போல் உங்கள் மீது பாசம் வைத்தேனே.. இதற்கு நீங்கள் என்னைக் கொன்றே போட்டிருக்கலாம்.” என்று கதறியவளை வேகமாக அணைத்துக்கொண்டான் ரஞ்சன்.

 

“யாழிம்மா.. ப்ளீஸ்டா அப்படியெல்லாம் சொல்லாதே!” என்று அவளைக் கட்டிக்கொண்டு பரிதவித்தான் அவன்.

 

“விடுங்கள்! என்னை விடுங்கள்.. நீங்கள் மனிதனே இல்லை. மோசக்காரன்.. என் நேசத்தை நாசமாக்கிய மோசக்காரன்.. என்னைப் பழிவாங்க நினைத்த உங்களைப் போயும் போயும் காதலித்தேனே.” அவனிடமிருந்து விடுபடப் போராடிக்கொண்டே கதறினாள் சித்ரா.

 

“இல்லம்மா. அப்படிச் சொல்லாதே! உன்னைப் பழிவாங்க வேண்டும் என்று நினைத்தாலும் என்னால் அதைச் செய்ய முடியவில்லை. திருமணம் ஆனதும் உன்னைக் கஷ்டப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். உன் அம்மா அப்பாவுடனான தொடர்பைத் துண்டிக்கவேண்டும் என்றும் நினைத்தேன். ஆனால் எதையும் செயலாற்ற என்னால் முடிந்ததே இல்லை. எதையுமே திட்டம் போட்டுக் கொஞ்சமும் பிசகாது செய்த நான் உன்னிடம் மட்டும் தோற்றுத்தான் போனேன்..” என்றவனை, சொல்லொனா வேதனையை விழிகளில் தேக்கி, கன்னங்களில் வழிந்த கண்ணீரோடு நிமிர்ந்து பார்த்தாள் சித்ரா.

 

“என்னைப் பழிவாங்க என் காதல்தான் கிடைத்ததா உங்களுக்கு?” என்று அவள் கேட்டபோது, நொறுங்கியே போனான் ரஞ்சன்.

 

“ஐயோ அப்படி இல்லடி. நான் சொல்வதைக் கொஞ்சம் கேளேன் சித்தும்மா. ஆரம்பத்தில் உன்னை விரும்பாமல் சம்மதம் சொன்னாலும், பிறகு என்னை அறியாமலேயே நானும் உன்னைக் காதலிக்கத் தொடங்கிவிட்டேன். நீதான்டி என் உயிர். நம்புடி..” என்று கெஞ்சியவனை வெறி பிடித்தவள் போல் தள்ளிவிட்டாள்.

 

அதை எதிர்பராததில் பின்னால் நகர்ந்தவன்,“யாழி..” என்றபடி அவளை நோக்கி ஒரு எட்டு எடுத்து வைக்கவும், “அங்கேயே நில்லுங்கள்!” என்று, கையை நீட்டி ஆத்திரத்தோடு சொன்னாள் சித்ரா.

 

அவன் தயங்கி நிற்க, “அதுதான் நீங்கள் ஆசைப்பட்டது போலவே என்னைப் பழிவாங்கி விட்டீர்களே. பிறகும் ஏன் பொய்யைச் சொல்கிறீர்கள். நான் உங்கள் கன்னத்தில்தான் அடித்தேன். ஆனால் நீங்கள்? என்னால் மீளவே முடியாத அளவுக்கு மரண அடி அடித்துவிட்டீர்கள்.” என்றவளை வேதனையோடு பார்த்தான் ரஞ்சன்.

 

இதற்காகத்தானே, அவள் இப்படியெல்லாம் நினைத்துத் தன்னைத்தானே நோகடித்துக் கொள்வாள் என்று எண்ணித்தானே அவ்வளவு நாளும் அவளிடம் ஒன்றுமே சொல்லாமல் மறைத்தான்.

 

ஆனால் இன்றோ..

 

இனி மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்று நினைத்தவன் ஒரு பெருமூச்சினை இழுத்து விட்டுவிட்டு, “நானும் உன்னைக் காதலிக்கத் தொடங்கியதும்..” என்றவனை சரக்கென்று நிமிர்ந்து பார்த்துத் தீவிழி விழித்தாள் சித்ரா.

 

“திரும்பத் திரும்ப எதற்குப் பொய்யையே சொல்கிறீர்கள்?”

 

“நிஜம் யாழி. நான் சொல்வதெல்லாம் உண்மை. உன்னை மனமார விரும்பினாலும் என்னால் உன்னைக் கைப்பிடிக்க முடியாது என்பதால்தான் உன்னிடமிருந்து விலகியிருந்தேன். ஆனால், மனம் முழுவதும் காதலை வைத்துக்கொண்டு, உன்னை அணைக்க, ஆசையாகக் கொஞ்ச துடிக்கும் மனதை அடக்கிக்கொண்டு உன்னிடம் இருந்து தள்ளி இருப்பது இருக்கிறதே.. அது நரகம் யாழி. ஆனாலும் அவ்வப்போது நானுமே என் கட்டுப்பாட்டை இழந்து விடுவேன். அ..அப்படித்தான் அன்று.. இங்கே கடையில் வைத்து நடந்ததும்..” என்றவன் தயக்கத்தோடு மனைவியைப் பார்த்தான்.

 

அவளோ அவமானத்தில் கன்றிய முகத்தோடு இறுகிப்போய் நின்றாள். அவளை இழுத்து அணைக்கத் துடித்த மனதைப் பெரும் பிரயத்தனம் செய்து அடக்கிக்கொண்டு தொடர்ந்தான் ரஞ்சன்.

 

“ஒருமாதப் பிரிவு, நீ தந்த முத்தங்கள் என்று என்னை மறந்துதான் அன்று அப்படி நடந்துகொண்டேன். எல்லாம் முடிந்தபிறகோ, இப்படிச் செய்துவிட்டோமே என்று நான் குறுகிப்போய் நிற்க நீயானால் அதெல்லாம் ஒன்றுமே இல்லை என்கிறாய். எனக்கு வெறுத்தே போய்விட்டது. இதெல்லாம் உனக்குச் சாதரணமா என்று உன்மேல் அவ்வளவு கோபம் வந்தது. உனக்கே ஒன்றுமில்லை என்கையில் எனக்கு என்ன என்றும் அலட்சியமாக நினைத்தேன். அன்று நீ அப்படிச் சொன்னதால்தான், அந்தச் சம்பவம் நடந்தபிறகும் உன்னை ஒதுக்குகையில் நான் எதையும் பெரிதாக நினைக்கவில்லை.” என்றவனின் பேச்சில் அவள் இதழ்களில் விரக்தியான புன்னகை ஒன்று வந்துபோனது.

 

“நான் கவலைப்பட்டால் நீங்கள் இன்னும் வேதனைப் படுவீர்களே என்று நினைத்துத்தான் அப்படிச் சொன்னேன்.. ஆனால்.. அதற்காக எனக்குக் கிடைத்த பரிசு.. ம்!” என்றாள் வரட்சியான குரலில்.

error: Alert: Content selection is disabled!!