ஆட்டநாயகன் 40.1

அத்தியாயம் 40

காண்டீபன் மனைவி மகனோடு அவன் வீட்டுக்கு அன்றே புறப்பட்டிருந்தான். சியாமளாவிடம் பிள்ளைகளை விட்டுவிட்டு அவர்கள் மூவரோடும் எல்லாளனும் ஆதினியும் சேர்ந்து வந்தார்கள்.

அந்த வீதியைக் கண்டதும் ஆதினியின் பார்வை தன்னாலே காண்டீபனிடம் ஓடிற்று. இன்று அன்றுபோல் வலிக்கவில்லை. ஓராயிரம் துன்பங்களைக் கடந்து வந்திருந்தாலும் அவளின் சகோதரன் வந்துவிட்டான் என்கிற மகிழ்ச்சி மட்டுமே மேலோங்கிற்று. அந்தத் துள்ளலோடு முதலாவது ஆளாக வீட்டினுள் சென்று, ஆரத்தி கரைத்து வந்து ஆலம் சுற்றி அவர்களை வரவேற்றாள்.

அந்த வளவுக்குள் காலை வைத்த கணத்திலிருந்து காண்டீபனின் உள்ளத்தில் பெரும் போராட்டம். இன்னதுதான் என்று அவனால் இனம் பிரிக்க முடியாது போனாலும், வருகிற வழியில் அவன் யாழ் பல்கலையில் பேராசிரியனாக இருந்ததை, அங்கே சத்தியநாதனின் மனைவி தமயந்தி அவன் மாணவியாக வந்ததை, அவளுக்கு அவன் போதையைப் பழக்கியதை, அந்த வீட்டில் தகப்பன், மாமியார், மனைவி என்று அவன் வாழ்ந்த வாழ்க்கையை மற்ற மூவரும் சொல்லிக்கொண்டே வந்தாலோ என்னவோ, அவர்கள் சொன்ன விடயங்களின் ஆதிக்கம் அவனுள் அதிகமாக இருந்ததில் அந்த வளவையும் வீட்டையும் அவன் விழிகள் சுற்றி சுற்றி வந்துகொண்டேயிருந்தன.

அந்தக் காண்டீபன் அமைதியான நிம்மதியான வாழ்க்கை ஒன்றை வாழ்ந்திருக்கிறான். தன்னைச் சுற்றி இருக்கிறவர்களிடம் அன்பை மட்டுமே காட்டியிருக்கிறேன். இல்லாமல் ஆதினி போன்ற ஒரு பெண், இரத்த சொந்தம் இல்லாதபோதிலும் இப்படித் துடிப்பாளா?

அவற்றை எல்லாம் யோசிக்க யோசிக்க அவனுக்குத் தேகமெல்லாம் புல்லரித்தது. அந்தக் காண்டீபனைக் கற்பனையில் இந்த வீட்டோடு பொருத்திப் பார்த்தான்.

“இதுலதான் நீ முந்தி கிளாஸ் எடுத்த கொட்டில் இருந்தது. அதை எடுத்துப்போட்டு வீடாக்கி ஆக்களை இருத்தி இருக்கிறம்.” என்று எல்லாளன் சொல்லும்போதே பேச்சுக் குரல் கேட்டு வெளியே வந்தான் மாதவன்.

முதலில் காண்டீபனை அவனால் சட்டென்று இனம் காண முடியவில்லை. இனம் கண்ட நொடியில் அதிர்ச்சியைத் தாங்கி விரிந்த அவன் விழிகள் வேகமாய் எல்லாளனை நோக்கின.

அதற்குள், “மாதவன் மாமா. இவர் என்ர அப்பா. அவர் சாகேல்லையாம். உயிரோடதான் இருந்தவராம். இப்ப வந்திட்டார்.” என்று அதிரன் உற்சாகமாய்ச் சொன்னான்.

நொடியில் வியப்புற்று, “உண்மையாவா?” என்று ஆச்சரியமாய் கேட்டாலும் அவன் உள்ளத்தில் பல கேள்விகளும் குழப்பங்களும்.

இவன் காண்டீபன் என்றால், இவனைத்தான் அவன் மனைவி நன்றாகத் தெரிந்த முகம் என்றாளா? அப்படியானால் இவன்தான் அவர்களைக் கொன்றவனா என்று ஓடிற்று.

அவன் முகம் மாறுவதை வைத்தே அவனுக்குள் என்ன ஓடுகிறது என்று கணித்த எல்லாளன், “இவன் அந்த இடத்தில இருந்திருக்கிறானே தவிர இவன் காரணம் இல்ல மாதவன்.” என்று அவசரமாய்ச் சொன்னான்.

“உண்மையாவா சேர்? இல்ல உங்கட நண்பர் எண்டு மறைக்கிறீங்களா?” என்றதும், அன்று காண்டீபன் பின் பக்கம் மட்டுமே தெரியும் கிளிப்பை காட்டியிருந்தவன் இன்று முழு கிளிப்பையும் அவனுக்குக் காட்டினான்.

“சிவநாதர்தான் எல்லாத்துக்கும் காரணம் மாதவன். அவன் இவனைத்தான் செய்யச் சொல்லி இருக்கிறான். வேற வேலை வந்ததால இவன் செய்யேல்ல. ஆனா வேணுமெண்டு இவனை அங்க அனுப்பி, இவனும் அந்த இடத்தில இருக்கிற மாதிரிச் செய்து…” என்று மாதவனுக்கு விளக்கம் சொல்லிக்கொண்டு வந்த எல்லாளன் சட்டென்று நிறுத்தி காண்டீபன் புறம் திரும்பினான்.

“நான் நினைக்கிறது சரியெண்டா இப்ப கிழவன் உன்னை போலீஸ்ல மாட்டிவிடுவான் பார்.” என்றான் பரபரப்புற்று.

புருவம் சுருக்கிக் கேள்வியாக நோக்கினான் காண்டீபன்.

“யோசிச்சுப் பார். சும்மா உன்னை அந்த இடத்துக்கு அனுப்பி வச்சுப்போட்டு அந்தக் கிழவன் பேசாம இருந்திருக்க மாட்டான். நீ அங்க வந்ததை, மாமாவை நீ பாத்ததை எல்லாம் கட்டாயம் வீடியோவா எடுத்திருப்பார். அத வச்சு என்ர டிப்பார்ட்மெண்ட்ல எனக்கும் மேல இருக்கிற ஆக்களிட்ட இந்த கேஸ கொண்டுபோய், திரும்ப உன்னை அரெஸ்ட் பண்ணுறதுக்கு அத்தனை வேலையும் பார்ப்பான். அப்பிடியே எனக்கு ஏதாவது ரெட் மார்க் வாங்கித் தரவும் பிளான் பண்ணுவான்.” என்றதும் காண்டீபனின் முகம் பயங்கரமாக மாறிற்று.

“வேந்தன் எங்க இருக்கிறான்?” என்று உறுமினான்.

“டேய்! நீ அமைதியா இரு!”

“கேட்ட கேள்விக்குப் பதிலச் சொல்லு எல்லாளன்!”

இவன் எப்போதும் அவன் சொல்வதைக் கேட்கும் காண்டீபன் இல்லை. இயல்பு கெட்டு நிற்கும் இன்றைய அந்த முரட்டுக் காண்டீபன். மனதில் ஓடியதைக் காட்டிக்கொள்ளாமல், “மனுசி பிள்ளையல பக்கத்தில வச்சுக்கொண்டு இப்பிடித்தான் கதைப்பியா நீ!” என்று அவனுக்கு மேலால் அதட்டினான்.

அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு விலகி நடந்தான் காண்டீபன்.

பின்னாலேயே வந்த எல்லாளன், அவன் கைப்பேசியை எடுத்து யாருக்கோ அழைக்க முயல்வதைக் கண்டு, கைப்பேசியைப் பறித்துத் தன்னிடம் வைத்துக்கொண்டான்.

“ஃபோனை தா!”

“மச்சான், சொல்லுறதை கேளு ப்ளீஸ்.”

“என்ன கேக்கோணும்? பெத்த தகப்பனையே என் மூலம் கொல்ல வச்சு, என்னை உன்ர கண்ணில காட்டி, நீ என்னை அரெஸ்ட் பண்ணி பழைய மாதிரி ஜெயில் எண்டு போனாலும் சரிதான், இல்ல, இப்ப நீ சொன்ன மாதிரி என்னையும் உன்னையும் சேர்த்து மாட்டி விடுறது எண்டாலும் ஓகே எண்டு எங்க ரெண்டு போரையும் வச்சு அவன் விளையாடி இருக்கிறான். அதப் பாத்துக்கொண்டு இருக்கச் சொல்லுறியா?” என்று அடக்கப்பட்ட சினத்துடன் சீறினான்.

“அவசரப்படாத எண்டு சொல்லுறன். இது என்ர ஊகம் மட்டும்தான். கிழவன்ர பிளான் என்ன எண்டு தெரிய வரட்டும். அது வரைக்கும் பொறுமையா இரு.”

“எத்தின நாளைக்கு?”

“நிறைய நாளைக்கு கிழவன் அமைதியா இருக்க மாட்டான்டா. அவனுக்கு சொந்தப் பிள்ளைகள்தான் முக்கியம் எண்டாலும் வேந்தனில பாசம் இல்லாம இல்ல. அவனை அப்பிடியே விட மாட்டான். எப்பிடியாவது வெளில எடுக்கத்தான் பாப்பான். அதுக்கு பொய்யான ஆதாரங்களை திரட்டுற ஒருத்தனா என்னைக் காட்ட பாப்பான். இல்லையா உண்மையான குற்றவாளியான உன்னை மறைச்சு பொய்யான ஒருத்தன குற்றவாளியாக்கிறன் எண்டு மாமான்ர கேஸ் மூலம் சொல்லி, அப்பிடித்தான் தயாநிதி கேஸ்ல வேந்தனை பிடிச்சு போட்டிருக்கிறன் எண்டு சொல்லுவான். என்ர அம்மா அப்பாவை அவன்ர பிள்ளைகள் கொலை செய்த கோபத்தை மனதில வச்சுத்தான் இப்பிடி எல்லாம் நடக்கிறன் எண்டு காரணமும் சொல்லுவான்.” என்றவனையே இமைக்காது பார்த்தான் காண்டீபன்.

“உனக்கு விளங்குதா நான் சொல்லுறது? அந்த இடத்தில இருந்த உன்னை நான் இன்னும் அரெஸ்ட் பண்ணேல்ல. அத வச்சு என்ர நேர்மைய கேள்விக்குறியாக்கி, வேந்தனுக்கு எதிரா நான் திரட்டினது எல்லாம் பொய் எண்டு சொல்லி, தயாநிதி கேஸையும் சோடிக்க பாப்பான். அதுக்கு முதல் எனக்கு கொஞ்ச வேலை இருக்கு. அதுவரை நீ அமைதியா இரு.”

அதை மறுக்கிறவன் போன்று முகத்தைத் திருப்பிக்கொண்டு புசு புசு என்று மூச்சுவிட்டான் காண்டீபன்.

அவன் முகத்தைப் பற்றித் தன்னைப் பார்க்க வைத்து, “உனக்கான பிரச்சினைகள் இன்னும் முடியேல்ல காண்டீபா. நாங்க கொஞ்சம் நிதானமா போவம். திரும்ப திரும்ப சொல்ல வைக்காத!” என்றான் இலேசான கெஞ்சல் தொனியில்.

அவன் கையைத் தட்டி விட்டுவிட்டு, “பழைய காண்டீபன் எப்பிடியானவன் எண்டு எனக்குத் தெரியாது. ஆனா அவன்ர நல்ல குணங்களை என்னட்ட எதிர்பாக்காத. நிறைய நாளைக்கு நான் பொறுமையா இருக்கவும் மாட்டன்.” என்று எச்சரிப்பது போன்று சொல்லிவிட்டு நடந்தவன் நின்று, “இவன் ஆர்?” என்றான் மாதவனைக் காட்டி.

ஒரு கணம் தயங்கினாலும், “மாமாக்கு நீ போட்ட பிளான்ல அநியாயமா அவன்ர மனுசியும் மாட்டிட்டா. இப்ப பிறந்த குழந்தை தாயில்லாம நிக்குது.” என்றதும் அப்படியே நின்றுவிட்டான் காண்டீபன்.

“இன்னும் எத்தின பேரின்ர உயிரை வாங்கி இருக்கிறன் நான்?” வெறுத்த குரலில் கேட்டவனிடம் அதில் என் குழந்தையும் அடக்கம் என்று எப்படிச் சொல்லுவான்? நொடி நேரமானாலும் எல்லாளனும் நிலைகுலைந்துபோனான்.

வேகமாக அவன் பார்வை ஆதினியிடம் ஓடிற்று. இன்னுமே அவள் உடல் நிலையும் முழுவதுமாகச் சரியாகவில்லை. ஆனாலும் எதையும் காட்டிக்கொள்ளாமல் அவளும் கூட நிற்கிறாள்.

அத்தனையும் இவனுக்காக. அமைதியான வாழ்க்கை ஒன்றை இந்த முறையாவது அவனுக்கு அமைத்துக் கொடுத்துவிட வேண்டும் என்பதற்காக. அதில் தன்னைத் தேற்றிக்கொண்டு, “இதுவும் நீ தெரிஞ்சு செய்ய இல்ல காண்டீபா. அது அந்தப் பிள்ளைக்கு அப்பிடித்தான் உயிர் போகோணும் எண்டு இருந்திருக்குப் போல. விடு.” என்று சமாளித்தான்.

error: Alert: Content selection is disabled!!