விழிகளில் ஆவலைத் தேக்கி, மனம் படபடக்க, ‘கடவுளே குழந்தை என்றுதான் லதாக்கா சொல்ல வேண்டும்’ என்று நெஞ்சம் வேண்ட லதாவின் பதிலுக்காகக் காத்திருந்தாள் சித்ரா.
சித்ராவை மகிழ்ச்சியோடு அணைத்துக்கொண்ட லதாவும், “நீ நினைத்தது சரிதான். இப்போது உன் வயிற்றில் பத்துவாரக் கரு. வாழ்த்துக்கள் சித்து.” என்றார் அவளை ஏமாற்றாது.
அதைக் கேட்டதுமே ஆனந்தத்தில் சித்ராவின் விழிகள் கண்ணீரை வடித்தன.
“நன்றிக்கா..” என்றவள் உணர்ச்சிவசப்பட்டு தானும் அவரை அணைத்துக்கொண்டாள்.
திடீரெனத் தோன்றிய சந்தேகத்துடன், “லதாக்கா, உறுதியாகத்தானே சொல்கிறீர்கள். நன்றாகப் பார்த்தீர்கள் தானே. எதுவும் மாறாதே..” என்று தவிப்புடன் கேட்டாள் சித்ரா.
என் மீதே உனக்குச் சந்தேகமா என்று லதாவால் கோபப்பட முடியவில்லை. அவளைப் பற்றிய முழு விபரமும் அறிந்தவர் அல்லவா. முதல் குழந்தையை இழந்தபோது அவள் துடித்த துடிப்பையும் அழுத அழுகையையும் நேரடியாகப் பார்த்தவர் தானே!
“உனக்கு எதற்கு இந்தச் சந்தேகம். வா ஸ்கான் பண்ணியே பார்த்துவிடலாம்..” என்றவர், அவளை அதற்கான அறைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கிருந்த கட்டிலில் சித்ரா படுக்க, ஸ்கான் செய்து பார்த்த லதாவின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தன.
லதாவையும் அங்கே முன்னே தெரிந்த ஸ்க்ரீனையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்த சித்ரா, “என்னக்கா.. என்ன? ஏதும் பிரச்சினையா?” என்று கேட்டாள் கலவரமான குரலில்.
“பிரச்சினையா?” என்று கேட்டுச் சிரித்தவர், மகிழ்ச்சியோடு அவள் வயிற்றைத் தொட்டுக் காட்டி, “இந்த வயிற்றுக்குள் ஒன்றல்ல இரண்டு குட்டிகள் இருக்கிறார்கள்..” என்றார்.
“அக்கா உண்மையாகவா!?!” வியப்பு, மகிழ்ச்சி, அதிசயம் என்று அனைத்துமாகக் கூவினாள் சித்ரா.
“எங்கே.. எனக்கும் காட்டுங்கள். நானும் பார்க்கவேண்டும்.” என்று பரபரத்தவளுக்கு, அவள் வயிற்ருக்குள் கருக்களாக இருந்த இரண்டு சிசுக்களையும் சுட்டிக் காட்டினார் லதா.
ஆசையோடும் ஆவலோடும் தன் மணிவயிற்றுக்குள் பத்திரமாக இருந்த சிசுக்களை விழியகற்றாது பார்த்துப் பார்த்து ரசித்தாள் சித்ரா. கண்கள் வழியாக வயிற்றுக்குள் இருந்த மகவுகளை நெஞ்சுக்குள் நிறைத்துக் கொண்டவளின் விழிகளில் ஆனந்தக் கண்ணீர் அளவின்றி வழிந்துகொண்டே இருந்தது. சின்ன விம்மல் கூட வெடித்தது.
முதன் முதலாய் உதித்த முத்தைப் பறிகொடுத்து விட்டேனே என்று துடித்துக் கொண்டிருந்தவளுக்குப் பரிசாக இப்போது இரண்டு முத்துக்கள்!
நினைக்க நினைக்க மனம் விம்மிப் புடைத்தது!
“ஆசை தீரப் பார்த்துவிட்டாயா? போதுமா? இப்போது உன் சந்தேகம் தீர்ந்ததா? ஆனாலும், உன் கணவரின் வேகத்துக்கு அளவே இல்லை.” என்று கேலி பேசவும் மறக்கவில்லை லதா.
கண்களில் இருந்து வழிந்த கண்ணீரோடு கன்னங்கள் சிவக்க மலர்ந்து சிரித்தாள் சித்ரா.
லதாவிடம் ஆயிரம் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு படுத்திக்கொண்டவள், “லதாக்கா, இந்த முறை நீங்கள் யாரிடமும் மூச்சே விடக் கூடாது. நானே எல்லோரிடமும் சொல்லவேண்டும். அப்படி ஏதாவது உங்கள் வாயால் வெளிவந்தது என்று தெரிந்தது அண்ணாவிடம் உங்களைப் போட்டுக் கொடுத்துவிடுவேன்!” என்று செல்லமாக அவரை மிரட்டிவிட்டே அங்கிருந்து வெளியேறினாள்.
கணவனை அப்போதே அந்த நிமிடமே பார்த்துவிட மனம் பரபரத்தது. அவனைக் கட்டிக்கொண்டு, அவன் நெஞ்சில் சாய்ந்தபடி, அவன் வழங்கும் முத்தங்களைப் பரிசாகப் பெற்றபடி இந்த மகிழ்ச்சியான விஷயத்தை பகிர்ந்துகொள்ளத் துடித்தவள், அவனுக்கு அழைத்தாள்.
“என்ன, என் திருமதிக்கு என்னை விட்டுவிட்டு இருக்க முடியவில்லையோ?” சரசமாகக் கேட்டான் ரஞ்சன்.
அவனிடம் என்னென்னவோ சொல்லத் துடித்தவளுக்கு ஓராயிரம் வார்த்தைகளைக் கொண்ட தமிழில் ஒருவார்த்தை கூட வாயில் வர மறுத்ததில், “இதயன்..” என்று அவன் பெயரையே வார்த்தையாக்கி, உயிர்நேசத்தையே அதில் தேக்கி அழைத்தாள் சித்ரா.
அந்தப் பக்கம் இருந்தவனின் நாடி நரம்பெங்கும் ஊடுருவி அவன் தேகம் முழுவதையுமே சிலிர்க்க வைத்தது அந்த அழைப்பு. விழிகளை மூடி அவன் செவியில் வந்து மோதிய அழைப்பை அணுவணுவாக ரசித்தான்!
இந்த மூன்று மாதத்தில் இதயன் என்று அழைக்கமாட்டாளா என்று எத்தனை நாட்கள் ஏங்கியிருப்பான். அதை அவளிடம் வாய் விட்டுக் கேட்கமுடியாமல் மனதுக்குள்ளேயே தவித்துக் கொண்டிருந்தவன், இன்று அவள் அழைத்ததில், அதில் தெரிந்த காதலில், பரவசத்தில் உருகியே போனான்.
“இதயன்…” மீண்டும் அவள் அழைக்க தன்னுணர்வு பெற்றவன், “உன் இதயன் தான்டி. இப்போதுதான் என்னை இப்படிக் கூப்பிட வேண்டும் என்று உனக்குத் தோன்றியதா? எத்தனை நாட்களாக இதற்கு ஏங்கியிருக்கிறேன் தெரியுமா..” என்றான்.
அவனின் ஏக்கமும் மனத்தாங்கலும் அவளுக்கு மிக நன்றாகவே புரிந்தது.
அவன் கையால் தாலியை வாங்கி, தனிவீட்டில் அவனோடு வாழத் தொடங்கிவிட்டவளுக்கு அந்தப் பெயரைச் சொல்லி அழைப்பதில் பெரிதாக ஒன்றும் இல்லைதான். ஆனாலும், அவளது தூய உள்ளத்தில் இருந்து வெள்ளமெனப் பாய்ந்த நேசத்தின் வெளிப்பாடாக, அவளது இதயன் என்று நினைத்து அழைத்தவளால் ஏனோ அதன்பிறகு அப்படிக் கூப்பிடவே முடிந்ததில்லை.
ஆனால் இன்றோ.. மீண்டும் தான் தாய்மை அடைந்திருப்பதை அறிந்துகொண்டவளுக்கு அதை அவளுக்குப் பரிசளித்த கணவனின் மேல் காதல் பொங்கி வழிந்தது.
தாய்மை அடைந்திருக்கிறாள் என்பதை விட ஒன்றுக்கு இரண்டாகக் குழந்தைகள் கிடைத்ததில், கணவனோடு மனம் திறந்து பேசிய பிறகும் அவள் மனதில் கொஞ்சமாக ஒட்டிக்கொண்டிருந்த உறுத்தல்கள், சஞ்சலங்கள், மனக்குமுறல்கள் அனைத்துமே இருந்த இடம் தெரியாமல் மாயமாக மறைந்து போயின!
அந்த நிமிடத்தில் அவள் நெஞ்சில் முற்றாக நிறைந்தவர்கள் அவளது இரு குழந்தைகளும் அதைப் பரிசளித்த கணவனுமே!!
இதையெல்லாம் கைபேசி வாயிலாகச் சொல்லமுடியாமல், “நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் இதயன்? நம் கடையில் தானே..” என்று கேட்டாள் சித்ரா.
“ஆமாம், ஏன் கேட்கிறாய்?”
“அங்கேயே நில்லுங்கள். இதோ வருகிறேன்..” என்றவள், அவன் பதிலை எதிர்பாராது கைபேசியை அணைத்தாள்.
இவளுக்கு என்னதான் ஆயிற்று? நேற்று மாலையில் இருந்தே புதிராகவே நடந்து கொள்கிறாளே என்று சிந்தித்தபடி, வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் முன்னால் சிறிது நேரத்திலேயே வந்து நின்றாள் சித்ரா.
மலர்ந்து பிரகாசித்த விழிகளில் காதல் மின்ன, அவள் இதழ்கள் அழகாய் வளைந்து எழில்கொஞ்சும் புன்னகையைச் சிந்த, “இதயன்..” என்று பரவசத்தோடு அழைத்தவளின் அழைப்பில் மீண்டும் மீண்டும் உருகிப்போனான் ரஞ்சன்.
“மேலே வாருங்கள்.” என்றவளிடம்,
“நீ போ. இதை முடித்துவிட்டு வருகிறேன்..” என்றான் ரஞ்சன், கையிலிருந்த ஏதோ பேப்பர்களை அடுக்கிக்கொண்டே.
“ப்ச்! வரச்சொன்னால் வாருங்கள்!” என்றவள், நாற்காலியில் அமர்ந்திருந்தவனின் அருகில் சென்று அவன் கரத்தைப் பற்றி இழுத்தாள்.
மலர்ந்த புன்சிரிப்புடன், “அடம் பிடிக்க என்றே பிறந்தாயாடி..” என்று கேட்டவனும் அவள் இழுப்புக்குச் செல்லத் தவறவில்லை.
“நான் ஒன்று சொன்னால் செய்யவேண்டும். இல்லையானால் இப்படித்தான்!” என்றவள் அவனோடு மாடியேறினாள்.
வீட்டுக்குள் சென்றதும் கதவை அடைத்தவள் பாய்ந்து கணவனைக் கட்டிக்கொண்டு அவன் முகம் முழுவதும் ஒருவித ஆவேசத்தோடு முத்தமழை பொழியத் தொடங்கினாள்.
முதலில் திகைத்தவனுக்குப் பிறகு சிரிப்புத்தான் வந்தது. உள்ளம் நெகிழ்ந்த சிரிப்பு.
அவளது முத்தமழையில் நனைந்தபடி “என் யாழிம்மாக்கு என்ன நடந்தது? இவ்வளவு சந்தோசமாக இருக்கிறாளே?” என்று கேட்டவன், அவளது இடையைத் தன்னோடு சேர்த்து வளைத்தான்.
அவன் இதழ்களில் தன்னால் முடிந்தவரையில் ஒரு அழுத்தமான முத்தத்தைப் பதித்தவள், இடையில் பதிந்திருந்த அவன் கரத்தைப் பற்றித் தன் வயிற்றில் வைத்தாள்.
முதலில் ஒன்றும் புரியாமல் புருவங்களைச் சுருக்கியவனுக்கு விஷயம் மெல்லப் புரியவே, “யாழி!! உண்மையாகவா?” என்று கூவியவன், அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான்.
அவனால் நம்பவே முடியவில்லை.
அப்பா!
அந்த உன்னதமான பதவி அவனுக்குக் கிடைத்திருக்கிறது!
அதைத் தந்த மனைவியை நேசத்தோடு கட்டிக்கொண்டவனின் நெஞ்சமோ கர்வம் கொண்டு விம்மியது!

