என் சோலைப் பூவே 37 – 2

“என்னடி அவருக்குத் தெரியாது? அன்று எனக்கு எடுத்துத் தன் மகளைப் பற்றிச் சொன்ன உன் அப்பா என் பிள்ளையைப் பற்றி என்னிடம் சொல்லவில்லையே, ஏன்? அவருக்கு அவர் பிள்ளை முக்கியம் என்றால் எனக்கு என் பிள்ளை முக்கியம் இல்லையா?”

 

“அப்பா சொல்வதைக் கேட்காமல் வைத்தது நீங்கள். பிறகு உங்களைப் பார்க்க வந்தவரைப் பார்க்காமல் திருப்பி அனுப்பியதும் நீங்கள்தான் ரஞ்சன்.” மெல்லிய குரலில் என்றாலும் தந்தையின் நிலையை அவனுக்குப் புரியவைக்க முயன்றாள் சித்ரா.

 

“அப்படி நான் அவரைப் பார்க்க மறுத்தால் அப்படியே விட்டுவிடுவாரா உன் அப்பா? உன்னைக் கட்டவும் தான் மறுத்தேன். அப்பாவும் மகளுமாகச் சேர்ந்து என்னை மிரட்டி திருமணத்தையே நடத்தவில்லையா? குழந்தையைப் பற்றிச் சொல்லியிருக்க தானாகவே இந்தத் திருமணம் நடந்திருக்குமே. அதை விட்டுவிட்டு என் குழந்தையை அநியாயமாகக் கொன்றுவிட்டீர்களே.” என்றவன், மனம் வெறுத்துத் தொய்ந்துபோய் கட்டிலில் தொப்பென்று அமர்ந்தான்.

 

தலையைத் தன் இரு கைகளாலும் தாங்கியவனுக்கோ எல்லாமே வெறுத்துப் போனதுபோல் இருந்தது.

 

அவன் குழந்தை! அவன் உயிர்! அவன் பெயரைச் சொல்ல வந்த முதல் மகவு! அவனுடைய முட்டாள் தனத்தினால் இன்று இழந்து நிற்கிறான்.

 

அவன்தான் முழு முட்டாளாய் என்னென்னவோ செய்தான் என்றால் இவர்கள் அதற்கும் மேலே சென்று அவன் குழந்தையை அல்லவா அழித்துவிட்டார்கள்!

 

வேதனையில் துடித்த ரஞ்சனைப் பார்க்கப் பார்க்க சித்ராவின் விழிகளும் கண்ணீரைச் சொரிந்தன.

 

இதேயளவு வேதனையை, சொல்லப் போனால் இன்னும் அதிகமாக அதுநாள் வரை அனுபவித்தவள் அல்லவா அவள்!

 

அடங்கியிருந்த வேதனை கிளறி விடப்படவே சித்ராவும் விம்மினாள்.

 

“அது என் குழந்தையும் தான் ரஞ்சன். அதை நானே கொல்வேனா. இது இன்றுதான் உங்களுக்குத் தெரியும். ஆனால் எனக்கு? இத்தனை மாதங்களாக உங்களிடம் சொல்லமுடியாமல் மனதிலேயே போட்டு உள்ளுக்குள்ளேயே அழுதுகொண்டு இருக்கிறேன் தெரியுமா. என் முதல் குழந்தை அது.. உருவாகி இருக்கிறது என்று தெரிந்த அன்றே என்னை விட்டுப் போய்விட்டது.” என்று கதறியவளை வேதனையோடு பார்த்தான் ரஞ்சன்.

 

“நீ என்ன சொன்னாலும் நம் குழந்தை நம்மை விட்டுப் போனது போனதுதானே! என்ன சொல்லி என்னை நானே சமாதானம் செய்வேன்? எனக்காக என் பிள்ளை உயிரைக் கொடுத்தது என்றா? அல்லது நான் செய்த பிழைக்கு என் பிள்ளைக்குத் தண்டனை என்றா? ஏன், ஏன் இப்படி நடந்துகொண்டார்கள் உன் அம்மா. இதற்கு நீங்கள் என்னை வெட்டிப் போட்டிருக்கலாமே!” என்று சுயவெறுப்போடு சொன்னவனைக் கட்டிக் கொண்டு கதறினாள் சித்ரா.

 

“இப்படியெல்லாம் பேசாதீர்கள் ரஞ்சன். எனக்கு வலிக்கிறது.” என்றவள் கேவிக்கேவி அழ, அவளைப் பார்த்தவனின் மனமும் கசிந்தது.

 

அவளுக்கும் அது இழப்புத்தானே. நேற்று அவள் அவனிடம் வெடித்ததற்குக் காரணமும் இப்போது புரிந்தது.

 

அப்படிப் பார்க்கையில் அவனைவிட அவளுக்குத்தானே வேதனைகளும் வலிகளும் அதிகம். யாரை யார் தேற்றுவது என்று தெரியாமல் நெஞ்சம் ரணமாகிப் போனது அவனுக்கு.

 

ஆனாலும், வயிற்றில் இரட்டைக் குழந்தைகளைச் சுமந்தபடி கதறும் மனைவி கருத்தில் படவே, முயன்று தன்னைத் தேற்றிக் கொண்டான். தான் தேறிவிட்டதாக அவளுக்குக் காட்ட முயன்றான்!

 

“ப்ச்! விடு. எல்லாம் நான் செய்த பாவம். அதற்கு நீயேன் அழுகிறாய். அதுவும் இந்த நேரத்தில்” என்றவன், அவள் கன்னங்களைத் துடைத்துவிட்டான்.

 

விசும்பலுடன் கணவனின் மார்பில் சாய்ந்துகொண்டாள் சித்ரா.

 

அவள் தலையை ஆறுதலாக வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தவனின் மனமோ, உள்ளே வலியில் துடித்துக் கொண்டிருந்தது.

 

தன் மனவேதனைகளுக்கு மருந்தாக இருந்தவனை விழிகளை உயர்த்திப் பார்த்தாள் சித்ரா.

 

அவன் காட்டிய கோபத்தில், இதற்கு நீங்கள் என்னை வெட்டிப் போட்டிருக்கலாமே என்றவனின் அன்பில் அவளுக்குள் ஒருவித நிறைவே தோன்றியது.

 

பின்னே, அவளைப் போலவே அவனும் துடிக்கிறானே! ஆழ்ந்த நேசத்தின் வெளிப்பாடுதானே அவனது கோபமும் ஆத்திரமும்!

 

புருவங்கள் நெரித்திருக்க இலக்கின்றி விழிகளை எங்கோ பதித்திருந்தவனின் ஒருபக்கக் கன்னத்தில் தன் கரத்தை வைத்தாள் சித்ரா.

 

அவன் குனிந்து அவளைப் பார்க்கவும், “என்னை மன்னித்து..” என்று அவள் சொல்லி முடிக்க முதலே தன் கரத்தால் அவள் இதழ்களை மூடினான் ரஞ்சன்.

 

“நீ என்ன பிழை செய்தாய் என்று மன்னிப்புக் கேட்கிறாய். விடு! இதெல்லாம் நமக்கு நடக்கவேண்டும் என்று இருந்திருக்கிறது போல..” என்றவனுக்கும் அதற்கு மேலே குரல் எழும்ப மறுத்தது.

 

மனைவியின் அருகாமை உள்ளே வேதனையில் துடித்துக் கொண்டிருந்த மனதுக்கு மருந்தாக இருக்கவே அவளை இதமாக அணைத்துக்கொண்டான்.

 

அதன் பிறகு அவர்களுக்குள் அமைதி மட்டுமே ஆட்சி செய்தது.

 

அப்படியே எவ்வளவு நேரம் கடந்ததோ, “அந்தக் குழந்தையையும் சேர்த்துத்தான் கடவுள் இந்தமுறை நமக்கு இரண்டு குழந்தைகளாகத் தந்திருக்கிறார்..” என்றாள் சித்ரா ஆறுதலாக.

 

ஆச்சர்யத்தோடு மனைவியைப் பார்த்தவனுக்கும் அது உண்மைதானோ என்று மனம் கேட்டது!

 

ஆசையோடு குனிந்து மனைவியின் மணிவயிற்றில் மீண்டும் மீண்டும் முத்தமிட்டான் ரஞ்சன்.

 

இழந்த குழந்தை மீண்டும் கிடைத்துவிட்டதாக நினைத்தானோ..!

 

அங்கே முத்தமிட முத்தமிட அவன் மனதில் ஏற்பட்டிருந்த ரணம் மெல்ல மெல்ல ஆறுவது போலிருந்தது அவனுக்கு.

 

அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் விழிகளிலும் மெல்லிய நீர் படலம்.

 

இனியாவது நம் வாழ்வில் அனைத்தும் நன்றாக நடக்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டவள், அவனை அந்தத் தாக்கத்தில் இருந்து வெளியே கொண்டுவர எண்ணி, “போதும் போதும், உங்கள் குழந்தைகளைக் கொஞ்சியது! இங்கே நானும் இருக்கிறேன் ” என்றாள் பொய்க் கோபத்தோடு.

 

அதிர்ச்சியோடு மனைவியைத் திரும்பிப் பார்த்தவனுக்கு அவளின் முயற்சி புரியவே உள்ளம் கனிந்தது.

 

என்றுமே இழப்பு இழப்புத்தான்! அதை யாராலுமே மீளப் பெறமுடியாது. அதேபோல அதை என்று நினைத்தாலுமே அந்த வலியும் மாறப்போவதில்லை!

 

எனவே தாய்மை அடைந்திருக்கும் மனைவியையும் அவள் வயிற்றில் இருக்கும் குழந்தைகளையுமாவது இனி மிக மிக நன்றாகப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று முடிவை எடுத்தவன், தன் மனதின் வேதனையை தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டான்.

error: Alert: Content selection is disabled!!