இன்னுமே சிலபல குழப்பங்களும் தெளிவற்ற நிலையும் இருந்தாலும் எல்லாளன் மிதிலா, அவர்களோடு அவன் வாழ்ந்த அழகான இளமைக்கால வாழ்க்கை, எல்லாளனின் ஈர்ப்பு, அவன் காவல்துறையில் இணைய ஆசைப்பட்டது, எல்லாளனின் பெற்றோர் கொடூரமாகக் கொல்லப்பட்டது, அதிலிருந்து அவர்கள் வாழ்க்கை மாறிப்போனது என்று எல்லாம் நினைவில் வந்திருந்தன.
என்னவோ அங்கே இருக்க முடியவில்லை. யாரிடமும் எதையும் மனம் திறக்கும் நிலையிலும் இல்லை. எங்காவது ஓடிவிடத் துடித்தான். அதனால்தான் எல்லாளனை அழைத்தான்.
காக்கி உடையில், கம்பீரமாக வந்தவனைக் கண்டு அவனால் விழிகளை அசைக்கவே முடியாமல் போயிற்று. அவனும் நல்ல நிலையில் இருந்திருக்க கதிரவனின் இடத்தில் அவன் இருந்திருப்பான். இருவரும் தோள்கள் உரச இதேபோல் நடந்து வந்திருப்பார்கள்.
இளமைக்காலத்துக் கனவுகள் அத்தனையும் கண்முன்னே வந்து நின்று அவன் இழந்தவை எத்தனை என்று சொல்லிக்கொண்டிருந்தன.
அப்படி என்ன பாவம் செய்தான்? தமயந்தி என்கிற ஒரு பெண்ணுக்கு அவன் இழைத்தது பெரும் குற்றம்தான். அதற்கே பலமுறை அவன் நெருப்பில் குளித்து வரவேண்டுமென்றால் சத்தியநாதனைப் போன்றவர்கள்? சிவநாதர்?
அத்தனையும் நினைவில் வந்துவிட்ட இன்றைய நிலையில் நண்பனைக் கண்டதும் ஓடிப்போய்க் கட்டிக்கொண்டு அழ நினைத்தான். ஆனால் முடியவில்லை. அப்படிச் செய்தால் தன் மேலிருக்கும் அழுக்கும் அசிங்கமும் அவனிலும் பட்டுவிடுமோ என்றொரு பயம். அவன் அருகில் செல்லும் தகுதியே தனக்கில்லையோ என்றெண்ணி உள்ளுக்குள் அழுதான்.
எதையும் யாரிடமும் சொல்லும் எண்ணம் அவனுக்கில்லை. ஆனால், நண்பனின் கருவையும் சேர்த்து அளித்திருக்கிறோம் என்பது அவனை முற்றிலுமாகப் பிரட்டிப் போட்டிருந்தது. அப்போது கூடத் தன்னை மீறித்தான், “அப்ப என்ன மச்சான், நானும் எனக்கு எதுவுமே நினைவு வராத மாதிரி நடிக்கவா?” என்று கசப்பும் வெறுப்புமாய்க் கேட்டிருந்தான்.
கேட்டவன் தன் பாட்டுக்கு நடக்க அதைச் செவிமடுத்தவன் அப்படியே நின்றுவிட்டான். அவன் இதயம் பந்தயக்குதிரையாய்த் துடித்தது. “டேய் மச்சான்!” என்றான் உச்ச பட்ச அதிர்வோடு.
அதிலேயே அவன் தன்னைக் கண்டுகொண்டான் என்று புரிந்துகொண்டான் காண்டீபன். அவனால் நண்பனை எதிர்கொள்ள இயலாது. அனுபவித்த சித்திரவதைகளையும் கொடுமைகளையும் தாண்டிக்கொண்டு மிக மிகக் கேவலமாய்த் தன்னை உணர்ந்தவன் எல்லாளனின் பார்வையில் இருந்து தப்பி ஓடுகிறவன் போன்று இன்னும் வேகமாய் நடந்தான்.
எல்லாளன் திகைத்து நின்றது கண நேரம்தான். இந்த நொடி அவன் இதயம் என்ன பாடுபடும் என்று தெரிந்தவன் தன் நிலை மறந்து ஓடிப்போய் அவனை இறுக்கிக் கட்டிக்கொண்டான்.
விறைத்து நிமிர்ந்தான் காண்டீபன். அதுவரை தனக்குள்ளேயே போட்டு அடைத்து வைத்திருந்த அழுத்தங்கள் எல்லாம் நண்பனின் கையணைப்பில் வெடித்துக்கொண்டு கிளம்ப, மொத்தமாய் உடைந்து ஆக்ரோசமாய்க் கத்திவிடுவோமோ என்று பயந்துபோனான். கை முஸ்டிகள் இறுக, விழிகளை இறுக்கி மூடிக்கொண்டு இன்னும் இறுக்கமாய் நின்றவனின் தொண்டைக்குழி ஏறி இறங்கிற்று.
தவித்துப்போனான் எல்லாளன். இந்த இறுக்கத்தின் பின்னிருப்பது அவன் கடந்துவந்த நன்றாக வேதனையாயிற்றே. “மச்சான்! இன்ற பார், உனக்கு ஒண்டும் இல்லையடா. இண்டைக்கு நீ நல்லா இருக்கிறாய்.” தவிப்புடன் சொன்னபடி அவன் கன்னத்தில் தட்டியவனைப் பிடித்துத் தள்ளிவிட்டான்.
“டேய் என்னடா? முதல்தான் எல்லாத்தையும் மறந்திருந்தாய். இப்ப என்ன?” அவனும் தொலைந்துபோன தன் நண்பனை ஆத்மார்த்தமாய்த் தேடிக்கொண்டுதானே இருந்தான். விடாமல் திரும்பவும் இறுக்கிக் கட்டிக்கொண்டான்.
“விடு என்னை!” மூர்க்கத்தனமாக அவனைத் தன்னிலிருந்து பிரித்து எறிய முயன்றபடி பற்களுக்குள் சீறினான்.
“ஏன் விடோணும்?”
“விடு!”
“ஏன் எண்டு சொல்லு!”
“விர்றா!” என்று ஆக்ரோஷமாய் அவனைத் தள்ளிவிட்டு விடுவிடு என்று வைத்தியசாலையை விட்டு வெளியே நடந்தான்.
இன்னும் கதிரவன் வந்திருக்கவில்லை. வேகமாக அங்கே பார்க்கிங்கில் நின்ற ஆட்டோவை அழைத்து அதற்குள் அவனையும் இழுத்துப் போட்டுக்கொண்டு புறப்பட்டான் எல்லாளன்.
“எனக்கு எங்கயும் வர விருப்பம் இல்ல!” அவனைப் பாராமல் இறுக்கமான குரலில் அறிவித்தான்.
அதற்கு ஒன்றும் சொல்லாமல் அவன் மனநிலையை ஆராய்கிறவன் போன்று அவன் முகத்தையே சில கணங்களுக்குப் பார்த்துவிட்டு, அவன் ஆரம்ப காலத்தில் இருந்த அவர்களின் குவார்டாஸ் வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.
உள்ளே வந்ததுதான் தாமதம் பளார் பளார் என்று தன் கன்னத்திலே அறைந்துகொண்டவனைக் கண்டு நொடி திடுக்குற்றாலும், “உனக்கு என்ன விசராடா?” என்று ஓடிவந்து அவனை அடக்க முயன்றான் எல்லாளன்.
அவனுக்குள் இருந்த யார் மீதென்றில்லாத சினமும் சீற்றமும் அப்படியே எல்லாளன் புறம் திரும்ப, “என்னை என்னத்துக்கு காப்பாத்தினனி? என்னை என்னத்துக்கடா காப்பாத்தினனி? சொல்லு! என்னை என்னத்துக்கு காப்பாத்தினனி?” என்று அவன் சட்டையைப் பற்றி இழுத்தான்.
அவனால் தான் பட்ட துன்பங்களை வெளியில் சொல்லவும் முடியவில்லை. அதைச் சொல்லாமல் தனக்குள் மட்டுமே அதை வைத்துக்கொள்ளவும் முடியவில்லை.
எல்லாளன் அவனையே சில கணங்களுக்குப் பார்த்துவிட்டு, “சிறைல உனக்கு நடந்த அநியாயங்களை நினைச்சா மச்சான் இப்பிடித் துடிக்கிறாய்?” என்றான் நிதானமாக.
துடித்து நிமிர்ந்தான் காண்டீபன். அவனுக்குள் பெரும் போராட்டம் ஒன்று ஆரம்பமாயிற்று. இவனுக்கு எல்லாம் தெரியுமா? என்ன தெரியும்? எந்தளவில் தெரியும் என்பதுபோல் அவனையே பார்த்தவனின் கழுத்து நரம்புகள் புடைத்தன. உதட்டோரம் அழுத்தம் கூட்டிப்போய் வெளுக்க ஆரம்பித்தது. தன் உணர்வுகளை அடக்க அவன் போராடிய போராட்டத்தில் கன்னத்துத் தசைகள் எல்லாம் துடித்தன.
அவனை அப்படிப் பார்க்க பார்க்கத் தான் உடைந்துவிடுவோமோ என்று பயந்துபோனான் எல்லாளன். ஆனால் அவன் உடைந்தால் இவன் முற்றிலுமாக நொறுங்கிய போவானே.
“ஒரு பொம்பிளைப் பிள்ளையை எவனாவது கேடு கேட்ட நாய் வன்புணர்வு செய்திருந்தா அந்தப் பிள்ளை வாழவே கூடாதா மச்சான்?” என்றவனின் கேள்வியில் இன்னுமே விறைத்து நிமிர்ந்தான் அவன்.
“நீ ஒரு ஆசிரியன். உனக்கு நான் சொல்லித் தெரியத் தேவை இல்ல. இதே நிலைமை ஆதினிக்கு…” என்றவன் சொல்லி முடிக்க கூட இல்லை.
கடித்த பற்களுக்குள் கெட்ட வார்த்தைகள் சர்வ சாதாரணமாய் வந்து விழ எல்லாளனின் கழுத்தைப் பற்றிச் சுவரோடு சுவராகச் சாய்த்து, “அவளைப் பற்றி ஒரு வார்த்தை கதைச்சாய் எண்டு வை, சத்தியமா உன்னை விடமாட்டன்!” என்றவனைப் பார்த்து அரும்பிவிட்ட கண்ணீர்ப் படலத்துடன் பார்த்துச் சிரித்தான் அவன் உயிர் நண்பன்.
“உனக்கு மட்டும் வேற நியாயமாடா?”
எல்லாளனை விட்டுவிட்டு அவனுக்கு முதுகு காட்டி நின்றவனின் மனப்போராட்டம் இன்னும் ஒரு நிலைக்கு வந்து சேரவே இல்லை.
“உன்ர தங்கச்சி கிரிமினல் லோயர். ஆனாலும் உன்ர நினைவா அத்தனை கம்பஸ்லயும் கிளாஸ் எடுக்கிறாள். அஜய் நினைவிருக்கா, நீ காட்டின வழியில போய் இண்டைக்கு அவனும் ஒரு பேராசிரியன். சாகித்தியன தெரியும் எல்லா உனக்கு? அஜய்க்கு நீ ஹெல்ப் பண்ணினாய் எண்டு உன்னில கோவமா இருந்தவன்தான் நீ கம்பஸ்லயும் போதை மருந்து வச்சு பிள்ளைகளுக்கு கொடுத்தாய் எண்டு போட்ட பொய் கேஸ இல்லாம ஆக்க, கம்பஸ்ல இருந்து அத்தனை வீடியோக்களையும் கலெக்ட் பண்ணித் தந்தவன். அஞ்சலி, மிதிலா எண்டு சொல்லிக்கொண்டே போகலாம். அப்பிடியான நீ எல்லாத்தையும் விபத்தா நினைச்சுக்க கடந்து வா மச்சான்.” உடைந்த குரலில் நிதானமாய் சொல்லிக்கொண்டு வந்தவன் நண்பனின் முன்னே சென்று நின்றான்.
தன்னைத் தானே ஏதும் செய்துகொண்டுவிடுவானோ என்று மிகவுமே பயந்தான்.
“உனக்கு என்ன நடந்திருந்தாலும் நீ எங்களுக்குத் திரும்ப கிடைச்சிருக்கிறாய். எங்களுக்கு நீ வேணும். ப்ளீஸ் மச்சான்,நீ இல்லாம எங்கட வாழ்க்கை முழுமை அடையவே இல்ல. யோசிக்காம எதையாவது செய்து திரும்பவும் எங்களை உயிரோட கொன்றிடாத.” என்றவன் அவனை அணைத்துக்கொள்ளவும் அவன் இறுகி நின்றது ஒரு கணம்தான்.
அடுத்த நொடியே மொத்தமாய் உடைந்து, “டேய் மச்சான்!” என்று அவன் எலும்புகள் அத்தனையும் நொறுங்கி விடுமோ என்னுமளவில் இறுக்கிக் கட்டிக்கொண்டவனின் மொத்தத் தேகமும் அழுகையில் குலுங்க ஆரம்பித்தது.
தொடரும்…

