அத்தியாயம் 42
தன்னைக் கட்டிக்கொண்டு அழுகையில் குலுங்கும் காண்டீபனை எல்லாளன் தடுக்கவில்லை. கடைசியும் முதலுமாக அழுது முடிக்கட்டும் என்று எண்ணிக்கொண்டு அவன் முதுகை வருடிக்கொடுத்தான்.
கதிரவனிடம் இருந்து அழைப்பு வந்தபோதுதான் காண்டீபன் தன்னைச் சமாளித்துக்கொண்டு விலகினான். இவன் அழைப்பை ஏற்றுப் பேசி, அவனை இங்கே வரச் சொல்லிவிட்டு வைத்தான்.
“பாத்ரூம் அங்க இருக்கு. போய் முகம் கழுவிக்கொண்டு வா!” என்று குளியலறையைக் காட்டிவிட்டுப் போய் இருவருக்கும் தேநீர் ஊற்றிக்கொண்டு வந்தான் எல்லாளன்.
இருவரும் அமைதியாகவே பருகினர். அது முடியும் தருவாயில், “டொக்டர் கூட கண்டு பிடிக்கேல்லையேடா.” என்றான் எல்லாளன்.
“அவர் கண்டு பிடிக்கிறதுக்கு நான் காட்டிக்குடுக்கோணுமே.”
ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தான் எல்லாளன்.
“உன்னட்டயும் சொல்லக்கூடாது எண்டுதான் நினைச்சனான். எங்க…” என்று சலித்தான் காண்டீபன்.
இதுதானே அவன். சிறு முறுவல் அரும்பிற்று எல்லாளனுக்கு.
“எல்லாமே நினைவு வந்திட்டா?”
“ம்”
இதற்குள் கதிரவன் வந்திருந்தான்.
“எங்க போவம்?” என்ற எல்லாளனின் கேள்வியில் இலேசாக அவன் முகம் மாறிற்று.
“என்னையும் கதிரவனையும் தவிர வேற ஆருக்கும் எதுவும் தெரியாது மச்சான்.”
ஆனாலும் ஒருவித இறுக்கத்தோடு அமர்ந்திருந்தான் காண்டீபன்.
“உன்ர தொங்கச்சி எவ்வளவு பெரிய கிரிமினல் லோயர் தெரியுமா? அவளை நீ பாக்க வேணாமா?” என்றவனின் கேள்வியில் கதிரவன் குழம்பிவிட்டான்.
அதுதான் ஏற்கனவே பார்த்துவிட்டார்களே. திரும்பவும் என்ன பார்ப்பது?
அவன் பார்வையில் தெரிந்த குழப்பத்தைக் கவனித்துவிட்டு, “இவன்ல ஏதாவது மாற்றம் தெரியுதா கதிரவன்?” என்றான் எல்லாளன்.
“இல்லையே சேர்.” என்று அவனை ஊன்றிப் பார்த்த கதிரவன், அவன் உதட்டோரத்தில் அழுத்தத்துடன் கூடிய சிறு முறுவலைக் கண்டுவிட்டு, “சேர்!” என்றான் பிரமிப்புடன் சற்றுச் சத்தமாக.
“நினைவு வந்திட்டுதா?” என்றான் அதே பிரமிப்பும் ஆச்சரியமும் சற்றும் குறையாமல்.
முற்றிலும் தளராத இறுக்கமும் சிறு சிரிப்புமாக தலையசைத்தான் காண்டீபன்.
“உண்மையாவா? அப்ப என்னைத் தெரியுமா?”
“ஏன் தெரியாம? ஆதினின்ர சிலுக்கையும் உங்களையும் மறக்கேலுமா?” என்றதும் ஆனந்தத்தில் வந்து அவனைக் கட்டிக்கொண்டான் கதிரவன்.
“உண்மையாவே சந்தோசமா இருக்கு சேர். நீங்க சொன்ன மாதிரி இப்ப மேம் எனக்கு நல்ல ஃபிரெண்ட்.” என்றவனின் குரலில் மகிழ்ச்சியில் இலேசாய்க் கரகரத்தது.
மூவருமாகப் புறப்பட்டு எல்லாளன் வீட்டுக்கு வந்தார்கள். அங்கே ஆதினி அவளின் அலுவலக அறையில் அமர்ந்திருந்தாள். அவளையே பார்த்த காண்டீபனின் உள்ளத்தில் பழைய நினைவுகள். அவன் கால்கள் தன்னாலே அங்கு நடந்தன.
அவளைச் சுற்றி இருந்த சுவர்களில் அடிக்கப்பட்டிருந்த ஷெஃல்புகளில் சட்டக் கோப்புகளும் புத்தகங்களும் நிறைந்திருக்க, ஒரு பக்கம் இருந்த ஸ்டாண்ட் ஒன்றில் அவளின் கறுப்பு அங்கி தொங்கிக்கொண்டிருந்தது. நடுநாயகமாக போடப்பட்டிருந்த மேசையில் இரண்டு கோப்புகளை விரித்து வைத்துக்கொண்டு எதையோ மிகத் தீவிரமாகப் படித்துக்கொண்டிருந்தாள் அவள்.
கைகளைக் கட்டிக்கொண்டு அந்த அறையின் கதவு நிலையில் சாய்ந்து நின்று அவளையே பார்த்து ரசித்தான் காண்டீபன்.
அன்று விளையாட்டுப் பிள்ளையாகப் பார்த்தவளை இன்று முதிர்ச்சியடைந்த பெண்ணாக, திருமணமான ஒருத்தியாக, பொறுப்புள்ளவளாகப் பார்க்கிறான். எல்லாளன் அருகில் இருக்க முடியாத தாகத்தைத் தீர்க்கத்தான் அவளைத் தேடிப் போய்ப் பழகினான். ஆனால் அவள் அதற்குப் பிரதியாக எவ்வளவு பெரிய காரியம் செய்திருக்கிறாள்?
பிள்ளைகளும் இருப்பதால் ஆதினி எப்போதும் அலுவலக அறையைப் பூட்ட மாட்டாள். ஏதாவது முக்கியமான மீட்டிங், அல்லது தொலைபேசி அழைப்பு இருந்தால் மாத்திரம் சியாமளாவிடமும் சாந்தி அக்காவிடமும் சொல்லிவிட்டுப் பூட்டுவாள். இப்போது வாசலில் நிழலாடியதில் நிமிர்ந்த ஆதினி, காண்டீபனைக் கண்டுவிட்டு மலர்ந்து புன்னகைத்தாள்.
“வாங்கண்ணா! நீங்க வருவீங்க எண்டு இவர்…” என்றவள் பேச்சு இமைக்கவும் விரும்பாதவன் போன்ற அவன் பார்வையில் அப்படியே நின்றுபோயிற்று.
இந்தக் காண்டீபனின் விழிகள் எந்த பாவத்தையும் காட்டாது. அவனைக் கண்டுவிட்டு அவர்கள்தான் உணர்வுக் குவியலுக்குள் விழுந்து எழுப்புவார்கள். அவன் அது எதுவும் பாதிக்காதவன் போல் சிலையென பார்த்திருப்பான். ஆனால் இவன், இவன் பார்வை… அதுவும் தவிப்பு, துடிப்பு, மகிழ்ச்சி என்று அந்தப் பார்வையில் தெரிந்த கலவையான உணர்வுப் போராட்டத்தில் ஏதோ புரிந்தும் புரியாத படபடப்போடு, “அண்ணா!” என்றாள் தவிப்புடன்.
சிறு முறுவலுடன் அவளை நெருங்கினான் அவன். அவள் பார்வை இம்மியும் அவனை விட்டு அசையவேயில்லை.
“இந்தக் குட்டிப் பிள்ளை இவ்வளவு பெரிய லோயரா இருக்கிறதப் பாக்க பெருமையை இருக்கு.” என்று அவள் தலையைப் பற்றி அவன் ஆட்டிவிடவும், முற்றிலுமாக நிலைகுலைந்துபோனாள் அவள்.
கண்ணீரும் ஆனந்தப் பரபரப்புமாக அவள் விழிகள் அங்கே வாசலில் வந்து நின்ற கணவனையும் அவனையும் மாறி மாறி நோக்கின.
ஆம் என்று சிறிதாய்த் தலையசைத்து அவள் ஊகித்ததை ஊர்ஜிதப்படுத்தினான் அவள் கணவன். சட்டென்று துள்ளி எழுந்து, “நினைவு திரும்பிற்றா அண்ணா?” என்றவளுக்கு அவனைக் கட்டிக்கொண்டு ஆனந்தத்தில் துள்ளி குதிக்க வேண்டும் போலாயிற்று.
அவளை ஒற்றைக் கரத்தால் அணைத்துக்கொண்டு ஆம் என்று தலையசைத்தான் அவன். ஆனந்தத்தில் கண்ணீர் பெருகிற்று அவளுக்கு. “உங்களை இப்பிடித் திரும்பப் பாக்கக் கிடைக்கும் எண்டு நினைச்சுக்கூட பாக்கேல்லை அண்ணா.” என்றவள் சலுகையுடன் அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.

