ஆட்டநாயகன் 44.1

“வாசு!” அடித்தொண்டையில் இருந்து கத்தினார் சிவநாதர்.

அதற்காகவே காத்திருந்தாற்போல் அவருக்கு அழைத்தான் காண்டீபன். அழைப்பை ஏற்ற கணமே காதால் கேட்கவே முடியாத கெட்ட வார்த்தைகளை அனாயாசமாகக் கடித்துத் துப்பிவிட்டு, “உன்னை விடமாட்டடனா. உன்னை விடவே மாட்டன்!” என்று சூளுரைத்தார்.

அவரின் அந்தக் கோபம், கொதிப்பு, ஆக்ரோசம், வீசிய கெட்ட வார்த்தைகள், மிரட்டல் அத்தனையும் காண்டீபன் காதில் தேனாகப் பாய்ந்தன. கடகடவென்று சிரித்தான். “என்னடா நெஞ்சு பதறுதா? கைகால் எல்லாம் நடுங்குதா? நீயும் உன்ர மகனும் எனக்கும் இதத்தானேடா செய்தனீங்க?” என்றவனின் கேள்வியில் அப்படியே நின்றுவிட்டார் மனிதர்.

“வாசு?” என்றார் வேறு வார்த்தைகளே வராமல்.

“வாசுவா? காண்டீபன்! காண்டீபன் சம்மந்தன்!” கொடூரமாய் ஒலித்தது அவன் குரல்.

“வாசு, அவனை விட்டுடு. இல்லையோ உன்ர குடும்பம் இருக்கு. எல்லாளன்ர குடும்பம் இருக்கு. ஒருத்தரையும் விடமாட்டன்.”

“எப்பிடி? என்ர அப்பாவை என்ன வச்சே காரியம் முடிச்சியே. அப்பிடியா?” நிதானமாய் ஒலித்த அவன் குரலில் அவருக்குச் சில்லிட்டது.

“எல்லா நேரமும் காத்து உன்ர பக்கமே வீசிக்கொண்டு இருக்காது சிவநாதா! அதுக்கிடைல உன்ர பேரனையும் மகனையும் நான் பாடைல அனுப்பிடுவன். பரவாயில்லையா?”

அவன் அப்படிக் கேட்டு முடிக்க முதலே, “வாசு!” ஆங்காரமாய் அதட்டினாலும் அவர் குரல் நடுங்கிற்று. பேரனைத்தான் கவனமாக மறைத்து வைத்துவிட்டாரே. எல்லாளனிடமிருந்து அவன் விடுபட்டதும் அவர் செய்த முதல் காரியம் அதுதான். அப்படியிருக்க எப்படி இவன் திரும்ப அவனை இழுக்கிறான்?

அவன் சிரித்தான். சின்னதாய், சிக்கனமாய்ச் சிரித்த அந்தச் சிரிப்பில் அவருக்குச் சர்வமும் ஆடியது. “பயமா இருக்கா சிவநாதா? நெஞ்சு நடுங்குதா? நல்லா நடுங்கட்டும்! நல்லா பதறட்டும்! முடிஞ்சா நெஞ்சு வெடிச்சு நீயே செத்துப்போ! அதுதான் உனக்கு நல்ல சாவு. இல்லையோ நரகவேதனை அனுபவிச்சுச் சாவாய்.” என்றவனின் பேச்சில் அவரின் நாடி நரம்பெல்லாம் சில்லிட்டுக்கொண்டு போயிற்று.

“என்ன கிழவா சத்தத்தைக் காணேல்ல. ஒளிச்சு வச்ச பேரனை இவன் எப்பிடிப் பிடிப்பான் எண்டு நினைக்கிறியோ? உன்னை மாதிரி நச்சுப் பாம்புன்ர பேரனைச் சும்மா விட அவன் என்ன மண்டைக்க ஒண்டுமே இல்லாதவனா? எல்லாளன்டா! என்ர நண்பன். வச்சான் பார் ஆப்பு!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டான்.

கைகள் நடுங்க நெஞ்சு பதறப் பேரனுக்கு அழைத்தார். போகவே இல்லை. நெஞ்சு தொண்டை எல்லாம் உலர்ந்து போயிற்று. ஆத்திரமும் அவசரமும் உந்த எல்லாளனுக்கு அழைத்தார். பார்த்தவன் பல்லைக் கடித்தான். அப்படியே அழைப்பையும் துண்டித்தான்.

அவர் விடவில்லை. பேரனுக்கும் அவனுக்கும் மாறி மாறி அழைத்துக்கொண்டேயிருந்தார். அவரால் அடுத்து என்ன என்று யோசிக்க முடியவில்லை. பேரனுக்கு அழைப்புப் போகவில்லை என்றால் எல்லாளன் விடாமல் துண்டித்துக்கொண்டேயிருந்தான்.

அந்தளவில் ஆவேசமும் ஆக்ரோசமும் அவனுள் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தன. முடிந்தால் இந்த நிமிடமே கிழவனின் தலையைத் திருகி எறிந்துவிடுவான். அந்தளவில் பெரும் அனல் அவன் நெஞ்சில் எரிந்தது. ஒருவனை எந்தளவுக்கு அடிப்பது என்றே இல்லையா? ஒரு குழந்தையின் தகப்பனை இன்னொரு முறை கொல்வதற்கு ஏற்பாடு செய்துகொண்டே தன் பேரனைக் காணவில்லை என்று துடிப்பானா? துடிக்கட்டும். துடித்தே சாகட்டும் என்று விட்டுவிட்டான்.

*****

காவல்துறையினால் கைது செய்யப்படுகிறவர்கள் பெரும்பாலும் காவல் நிலையத்தில் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்படுவார்கள். அதுவே சிஐடி வசம் ஒப்படைக்கப்படுகையில், அதுவும் ஒரு குடும்பத்தையே எரித்துக் கொன்ற வழக்கு என்கையில் தப்பித்துவிடாதபடிக்குக் காவல் காக்கப்பட வேண்டியவர்கள் என்று விசாரணைக் கைதிகளாகச் சிறையில் அடைக்கப்படுவார்கள். அதைக் கேட்டுத்தான் காண்டீபன் அப்படிச் சிரித்தான்.

அது அவன் ஏரியா. அங்கே அவனால் எதையும் செய்துகொள்ள இயலும். அதற்குச் சிறைக்காவல் அதிகாரிகளின் அனுசரணை அவனுக்கு வேண்டியதே இல்லை. அங்கே பல வருடங்களாக இருந்து செல்வாக்குச் செலுத்துகிறவர்களின் செல்வாக்கே போதுமானது. அவன் அவர்களைத் தூண்டிவிட்டான். அவர்கள் காரியத்தைக் கச்சிதமாக முடித்துவிட்டார்கள்.

அதைக் குறித்தெல்லாம் சிறிதும் அவன் கவலைகொள்ளவேயில்லை. தயாநிதியைக் கூட ஏதோ ஒரு வகையில் விட்டாலும் அந்த வீட்டில் இருந்த பெண்கள், சிறு குழந்தைகள், விடிந்தால் பதினெட்டாவது பிறந்தநாள் விழாவைக் கொண்டாட இருந்த பெண் பிள்ளை என்று யார் மீதும் சிறு கருணையும் காட்டாமல், பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியவன் மீது ஈவிரக்கம் காட்டுகிற அளவிற்கு இன்று அவன் நல்லவன் இல்லை.

அதை அறிந்த எல்லாளன் கூட அரண்டுபோனான். “டேய் மச்சான், இதெல்லாம் வேண்டாமடா. ஆதினி அவனை வெளில வர விடமாட்டாள். நீ விடு!” என்று சொன்னான்

“உள்ளுக்கு இருக்கிறதே அவங்களுக்கு சுகபோக வாழ்க்கை மச்சான். இன்னும் பாதுகாப்பா இருப்பாங்கள்.” என்றான் அவன் சுருக்கமாய்.

அது என்னவோ உண்மைதான். அவனாலும் ஆதினியாலும் அவனுக்குத் தண்டனை மட்டும்தான் வாங்கிக் கொடுக்க முடியும். அந்தத் தண்டனையையே சுகமான வாழ்க்கையாக மாற்ற அவர்களால் முடியும்.

“இண்டைக்கு நான் இரும்பா இருக்கலாம் மச்சான். ஆனா அண்டைக்கு…” என்றவனுக்குப் பேச்சு நின்றுபோயிற்று

“நீ வந்து காப்பாத்த மாட்டியா எண்டு தவிச்சிருக்கிறன். எனக்குப் பதிலா வாசு செத்தது, அவனை நான் எண்டு நினைச்சு நீ அந்த கேஸுக்காக அலஞ்சது எல்லாம் எனக்குத் தெரியாது மச்சான். இன்னும் என்னைத் தேடாம என்னடா செய்றாய் எண்டு அழுதிருக்கிறன். ‘மச்சான் வாடா. என்னால ஏலாம இருக்கு. வந்து என்னை கொன்றுபோட்டாவது போ’ எண்டு மனசால உன்னை நொடி விடாம கூப்பிட்டிருக்கிறன்.” என்றவனின் பேச்சில் தன் கண்ணீரைச் சுண்டி எறிந்தான் எல்லாளன்.

“நீ கூட ஆரோ ஒருத்தர் வாயால சொன்னதைக் கேட்டவன். அத்தனையையும் அனுபவிச்சவன் நான். ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல. கிட்டத்தட்ட ரெண்டு வருசம். அவனுக்கு எப்ப எல்லாம் வெறி வருதோ அப்ப எல்லாம் வந்து சித்திரவதை செய்வான். நான் அலறுற அலறலக் கேட்டுச் சந்தோசமா சிரிப்பான். நீ அவனுக்குக் குடுத்த சாவெல்லாம் ஒண்டுமே இல்ல. மிஞ்சி மிஞ்சிப் போனா ஒரு மணி நேர வலி. ஆனா நான்… எனக்கு… இந்தக் கிழவன் கூட என்னை விடேல்லையடா. மகனை நீ போட்டுத் தள்ளின ஆத்திரத்தில என்னவெல்லாமோ செய்தவன். அதையெல்லாம் என்னால உன்னட்டக் கூடச் சொல்லேலாது. அப்ப எனக்கு ஏன் இதெல்லாம் நடக்குது எண்டு கூடத் தெரியாது.” என்றவனை மேலே பேச விடாமல்,

“என்ன எண்டாலும் செய். ஆனா போன முறை மாதிரி இல்லாம மாட்டாத மாதிரிச் செய். என்ன செய்றாய் எண்டு ஒரு வார்த்த எனக்கும் சொல்லு போதும்!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்த எல்லாளன், அப்படியே அமர்ந்துவிட்டான்.

அவனால் யோசிக்கக் கூட முடியவில்லை. மனத்தளவில் மிகவும் ஆழமாய்க் காயப்பட்டு, உடைந்து, பலகீனமாய் நிற்கிறான் என்று புரிந்தது. அத்தனை காயங்களையும் தன் இறுக்கத்தால் போர்த்து மூடியிருக்கிறான் என்று நினைக்க நினைக்க அவன் கண்கள் கலங்கிக்கொண்டு வந்தன.

கடலில் தன் பாட்டுக்கு ஆடியசைந்து மிதக்கும் போட்டின் மீது மல்லாந்து கிடந்த காண்டீபன், நேரடியாக முகத்தைத் தாக்கும் சூரியனின் வெப்பத்தைத் தடுக்கும் வகையில் முகத்தின் மீது ஒற்றைக் கையைப் போட்டிருந்தாலும், தூண்டப்பட்டுவிட்ட பழைய நினைவுகளின் எரிவைத் தாங்க முடியாமல் தனியாகக் கிடந்து துடித்துக்கொண்டிருந்தான்.

எல்லாளனை ஆதினியை எல்லாம் எதிர்கொண்டவனால் இன்னுமே மிதிலாவை எதிர்கொள்ள இயலவில்லை. அவளைப் பார்க்க வேண்டும், அவளிடம் தனக்கு நினைவு திரும்பிவிட்டதைச் சொல்ல வேண்டும், அவளைக் கட்டிக்கொண்டு அழவேண்டும் என்று அத்தனை துடிப்பிருந்தாலும் அவனால் அவளை நெருங்க இயலவில்லை.

மனைவி என்பவள் அத்தனை உறவுகளைக் காட்டிலும் நெருக்கமானவளாயிற்றே. அவளிடம் அவனால் இவற்றைச் சொல்ல முடியும் போலும் இல்லை. எதையும் காட்டிக்கொள்ளாமல் நெருங்க முடியும் என்கிற நம்பிக்கையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவனால் சாதாரண நெருக்கத்தைக் கூட அனுமதிக்க முடியாது. என்னவோ ஒரு அருவருப்பு. பழைய நினைவுகள் எல்லாம் படையெடுத்து வந்துவிடுமோ என்று பயம். அப்படியிருக்க நினைவு திரும்பிய பின்னரும் அவள் தீபன் தள்ளி நிற்கிறான் என்றால் அவள் துடித்துவிட மாட்டாளா?

காலம் எப்போதுமே அவனை வஞ்சித்துக்கொண்டே இருக்கப் போகிறதா என்ன? கண்ணோரம் வழிந்துவிட்ட கண்ணீரைத் துடைத்துக்கொண்டான்.

மறைந்திரு என்று எல்லாளன் சொன்னபோது ஒரு ஆசுவாசம். இல்லாவிட்டால் மிதிலாவைப் பாராமல் இருக்க முடியாதே. சின்னவன் வந்து உள்ளத்தைக் கசிய வைத்தாலும் மூச்சு விட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்கான வெளி அவனுக்குத் தேவையாக இருந்தது.

*****

மிதிலாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. எல்லாளன் கணவனை அழைத்துச் சென்ற அன்று மாலை எல்லாளனும் ஆதினியும் வரவும் அவர்கள் பின்னால் கணவனைத் தேடிவிட்டு எல்லாளனைக் கேள்வியாக ஏறிட்டாள்.

“நாலஞ்சு நாளைக்கு அவன் வரமாட்டான்.” என்று எல்லாளன் சொன்னதும் அவளிடத்தில் பெரும் கலவரம்.

“திரும்ப என்ன?” என்றாள் கண்ணும் முகமும் கலங்க. பதில் சொல்ல எல்லாளன் எடுத்துக்கொண்ட நொடி நேர இடைவெளியையைக் கூடத் தாங்க முடியாமல், “அவருக்கு நீங்க எண்டா உயிர். என்னை விடவும் உங்களைத்தான் நிறையத் தேடுவார். ப்ளீஸ்! இந்த முறையாவது அவரை எப்பிடியாவது காப்பாத்தி என்னட்டத் தந்திடுங்க.” என்றாள் கைகளை ஏந்தி யாசகமாக.

ஒரு கணம் அவளையே பார்த்துவிட்டுச் சட்டென்று எழுந்து வெளியே வந்துவிட்ட எல்லாளன், தன்னைச் சமாளித்துக்கொள்ள மிகவுமே போராடினான்.

ஆதினிதான் அவளுக்கு நடந்தவற்றைச் சொன்னாள். கலங்கிக் கண்ணீர் வடித்தவளைத் தேற்றி, காவல்துறை வந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தாள்.

error: Alert: Content selection is disabled!!