அத்தியாயம் 45
பழைய ஜெயிலர் சொன்னவற்றைக் கேட்டே கொதித்துப்போனவன் எல்லாளன். அப்படியிருக்க காண்டீபன் நொந்த குரலில் தான் பட்ட துன்ப துயரங்களை சொன்னால் சும்மா இருப்பானா? அவனிடம் வாசுசேனனின் வழக்கின் ஒரு பிரதி இருந்தது. இன்றைய நிலையில் அது சிறைச்சாலையின் பதிவுகளில் இல்லை. கிருபானந்தரைக் கொண்டு அதை அறிந்துகொண்டு டிஐஜியைச் சந்திக்கச் சென்றான்.
கேள்வியாகப் பார்த்தவரிடம் அந்தக் கோப்பினை நீட்டினான். வாங்கிப் பார்த்தவரிடத்தில் மெல்லிய அதிர்ச்சி. ஒரு கூட்டாயா இயங்கித்தான் சிறைச்சாலையில் இருந்து அதை முற்றிலுமாக வெளியே எடுத்தார்கள். அப்படியிருக்க அதன் பிரதி அவனிடம் இருக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அதைக் காட்டிக்கொள்ளாமல் அவனைக் கேள்வியாக ஏறிட்டார்.
“நீங்க அண்டைக்குச் சொன்னீங்களே ஜெயில் வரைக்கும் தேடி போனனான் எண்டு. அந்த வாசுன்ர ஃபைல் இது. சாதாரணமா அவன் இப்ப பெயில் முடிஞ்சு ஜெயிலுக்கு வந்திருக்கோணும். வரேல்ல. அதே போல இந்த கேஸ் ஃபைல் அங்க இருந்திருக்கோணும். அது இல்லை. இன்னும் சொல்லப்போனா வாசு எண்டுறவன் அங்க இருந்ததுக்கான எந்த அடையாளமும் இல்லை. எப்பிடி சேர் இது நடந்தது? ஆரால நடந்தது?” என்றவனின் கேள்வியில் உள்ளுக்குள் பல்லைக் கடித்தார் அவர்.
“நான் என்ன எண்டு விசாரிக்கிறன் எல்லாளன்.” என்றபடி அவன் தந்த கோப்பினை தன் மேசையின் இழுப்பறைக்குள் வைத்து மூடினார்.
“இதுல ஒரு கொப்பி என்ர வைஃப்ட்டயும் இருக்கு சேர்.” என்றான் அவன் நிதானமாக.
தாம் நன்றாக மாட்டிக்கொண்டுவிட்டது அவருக்குப் புரிந்தது. அன்று அவன் இதையெல்லாம் போய் ஆராய்ந்து எடுப்பதற்கு அனுமதி கொடுத்த தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்துபோனார். அதைவிட அன்று இதற்குள் சிவநாதர் இருந்த விடயம் அவருக்குத் தெரியாது. அவரும் முதலே சொல்லிவைக்கவில்லை. சாதாரணமாக இருவரை அடித்துக் கொன்றுவிட்டுத் தப்பியோடிய லொறிக்காரனை பிடிக்கும் வழக்கு என்று எண்ணிவிட்டார்.
“நேற்றுத் தேவன் வந்து வாசுதான் காண்டீபனா எண்டு மிதிலா… காண்டீபன்ர வைஃப்ட்ட கேட்டவர். சோ இத நான் தோண்ட வெளிக்கிட்டா வாசு கேஸ் மட்டுமில்ல காண்டீபன் கேஸும் வெளில வரும். இப்ப எனக்கும் டவுட்டா இருக்கு. காண்டீபன் செத்த நேரம் வாசு ஜெயில்லதான் இருந்திருக்கிறான்.” என்றதும், “தேவை இல்லாம கதைக்காதீங்க எல்லாளன். உருவ ஒற்றுமையால தேவன் அப்பிடி விசாரிச்சிருக்கலாம். எங்கட விசாரணை எப்பிடி இருக்கும் எண்டு உங்களுக்குத் தெரியாதா? உண்மைய வரவழைக்க அப்பிடித்தான் நாலு கேள்வி கேப்பினம்.” என்று இடையிட்டார் அவர்.
அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டுத் தன் கைப்பேசியில் இருந்த சில ஓடியோ கிளிப்புகளை போட்டுக் காட்டினான். அவையெல்லாம் வாசுவின் உடலைப் பிரேத பரிசோதனை செய்த வைத்தியர், சிறையில் இருக்கும் பழைய ஜெயிலர், தற்போது ஓய்வு பெற்றுவிட்ட உதவிச் சிறைச்சாலை அதிகாரி பேசியவை.
கிருபானந்தன் இன்னும் பணியில் இருப்பதில் அவருடையதை மட்டும் அவன் போட்டுக் காட்டவில்லை.
அதையெல்லாம் கேட்டவருக்குப் பேயறைந்தது போலாயிற்று. உண்மையில் நடுங்கிப்போனார். இது வெளியில் வந்தால் பெரும் பிரளயமே நடக்கும். அவர் மட்டுமில்லை சிறைத்துறை காவலர்கள், அவர்களின் டிப்பார்ட்மெண்ட்டில் இருப்பவர்கள் என்று பெரும் கூட்டம் ஒன்று கூண்டோடு மாட்டும். அதற்கு விடவே முடியாது.
ஆனாலும் சமாளிக்க முயல்கிறவராக, “என்ன எல்லாளன் என்னையே வெருட்டுறீங்களா? இப்ப நீங்க சஸ்பென்ஷன்ல இருக்கிறீங்க. நிரந்தரமா வீட்டில இருக்க ஆசையா?” என்றார் அவர் கோபமாக.
“இதெல்லாம் வெளில வந்தா நான் நிரந்தரமா வீட்டுக்கு போர்னோ இல்லையோ இஞ்ச பலபேர் பெயர் கெட்டு, மானம் கெட்டு, மரியாதை கெட்டு வீட்டுக்குப் போவினம் சேர்.” என்றான் அவனும் விடாமல்.
அவரால் இதை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. அவருக்கு கீழ் இருப்பவன். அவர் ஏவுகிறவற்றைச் செய்ய வேண்டியவன். அவரைக் கண்டதும் எழுந்து நின்று சல்யூட் வைக்கிறவன். இன்று அவன் மிரட்டுகிறான். அவர் கேட்டு நிற்கிறார். அவரின் அகங்காரம் மிக அதிகமாய் சீண்டப்பட்டது. தன்மானம் துடித்து நின்றது. இந்த நொடியே அவனை எதிலாவது முறையாக மாட்டி, அவரின் காலின் கீழே போட்டு நசிக்க முடிந்தால் மட்டுமே அவரின் அகங்காரம் அடங்கும் என்றாயிற்று.
இப்படி உள்ளே கொதித்தாலும், “அவசரப்படாதீங்க எல்லாளன். என்ன செய்யலாம் எண்டு பாப்பம்.” என்று சொல்லி முதலில் அவனை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.
அவன் தலை மறைந்ததும் சிவநாதருக்கு அழைத்து, “என்ன செய்து வச்சிருக்கிறீங்க நீங்க? முதல் எங்களை என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறீங்க? உங்கட கதையக் கேட்டு நடந்ததுக்கு எங்களைத் தூக்கில தொங்க வைப்பீங்க போல. எல்லாளன் வந்து என்னையே கேள்வி கேட்டு வெருட்டிப்போட்டுப் போறான். இந்த கேஸ அவன் கிண்டிக் கிளற ஆரம்பிச்சா என்னாகும் தெரியுமா? ஒண்டு நீங்க ஒழுங்கா இருக்கோணும். இல்ல நீங்க பெத்துப் போட்ட உதவாக்கரைகள் ஒழுங்கா இருந்திருக்கோணும். இது ஒரு சனியனும் இல்ல. அப்பனும் பிள்ளைகளும் அடங்கி இருக்கேலாம ஆடுவீங்க. அதுக்கு நாங்க பலியா? மரியாதையா அவனோட இருக்கிற அத்தனை பிரச்சினைகளையும் சுமூகமா முடிக்கிறீங்க. இல்லை எண்டு வைங்க அத்தனை கேஸையும் உங்கட தலைல போட்டு உங்களைக் கொண்டுபோய் உள்ள வச்சிடுவன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தவருக்கு அப்போதும் ஆத்திரம் அடங்குவதாக இல்லை.
ஒருவனைச் சுட்டதே பெரும் தவறு. இதில் ஆளை மாற்றிக் கொன்றது, உண்மையான காண்டீபனை இத்தனை காலமும் ஜெயிலுக்குள் வைத்திருந்தது, அவனுக்குச் செய்த கொடுமைகள், கடைசியாக சிறைச்சாலை தரவுகளில் இருந்து வாசு என்கிறவனின் கோப்பையை அகற்றியது என்று அவர்கள் செய்துவைத்திருப்பது இலங்கை நாட்டின் மொத்த அரசியல் யாப்பையே அவமானப்படுத்தியதற்கு ஒப்பானது. கிரிமினல் குற்றம். எல்லாவற்றையும் நினைக்க நினைக்க அவருக்கு வியர்த்து வழிய ஆரம்பித்தது.
சிவநாதரும் இடிந்துபோய் அமர்ந்துவிட்டார். பேரனை மறுபடியும் காணவில்லை எனும்போதே அவருக்கு அடுத்து எப்படியும் நகரமுடியா நிலை. இப்போது அவன் இந்தப் பக்கத்தாலும் அடிக்க ஆரம்பித்துவிட்டான்.
வாசு என்கிற காண்டீபனின் பழைய இலக்கத்துக்கு அழைத்தார். அது போகவில்லை. எல்லாளனுக்கு அழைத்தார். அவன் எடுக்கவில்லை.
“நீ என்ன சொன்னாலும் செய்றன். எனக்கு கோல் எடு.” என்று குறுந்தகவல் அனுப்பிவிட்டார்.
அப்போதும் எல்லாளன் அழைப்பை ஏற்கவில்லை. இந்தமுறை அவனுக்கு மொத்தமாக முடிக்க வேண்டும். அதற்கான வேலையில் இறங்கி இருந்தான்.
இந்தப் பக்கம் சம்மந்தர் வழக்கை ஆதினி ஆராய ஆரம்பித்தாள். மாதவன், மிதிலா சார்பாக வாதாடப்போவது அவள் என்கையில் அந்த வழக்கு பற்றிய தகவல்களை அவளுக்குக் கொடுக்காமல் இருக்க முடியாது. அதில் இணைக்கப்பட்டிருந்த அந்த வீடியோ கிளிப்பை பார்த்தாள்.
அது எங்கும் பொருத்தப்பட்ட சிசிடிவி புட்டேஜோ, நிலையான இடத்திலிருந்து எடுக்கப்பட்டதோ இல்லை. அவன் வருவது, பைக்கை நிறுத்துவது, நடந்து நேராகச் சென்று சம்மந்தரைப் பார்ப்பது, அப்படியே மக்களுக்குள் மறைந்து போவது, பிறகு அவர்களைச் சுற்றிக்கொண்டு வந்து மறுபடியும் பைக்கை எடுத்துக்கொண்டு புறப்படுவது என்று யாரோ ஒருவர் அவன் பின்னாலேயே சென்று அத்தனையையும் காமராவினுள் அடங்கியிருப்பது தெளிவாகத் தெரிந்தது.

