அத்தியாயம் 19 – 1

வேக வேகமாக காற்றை இழுத்த குழந்தை, ஏமாற்றத்தோடு சூப்பிப்போத்தலை பட்டென்று தட்டிவிட்டான். திடுக்கிட்டு பார்த்தாள் கயல்விழி.

“அச்சச்சோ!” குழந்தையை நிமிர்த்தி முதுகில் தட்டிக் கொண்டிருக்கையில் தான் கீழே ஓங்காளிக்கும் சத்தம் கவனத்தை இழுத்தது. 

“ஆர் லாதியா?” விறுவிறுவென்று இறங்கி வந்தாள்.

“லாதி என்னம்மா? ஏன் சத்தி எடுக்கிறா? இவரப் பிடியுங்க அக்கா.” விமலாவிடம் குழந்தையைக் கொடுத்த வேகத்தில் சமையலறை மூலையில் இருந்த குப்பைக் கூடைக்குள் தலையை விட்டுக் கொண்டிருந்த லாதியை நெருங்கினாள்.

“இங்கால தள்ளுங்க பார்ப்பம்.” மகளருகில் நின்ற பூபாலனை விலக்க முனைந்தாள்.

“ஒண்ணும் இல்ல கயல்விழி, நான் பாக்கிறன் விடுங்க.” என்று விட்டான் அவன்.

‘தள்ளி நில்’ என்ற தொனி அவன் குரலில் தெள்ளத் தெளிவாகவே இருந்ததை உணர்ந்தவள் திகைத்து நின்று விட்டாள்.

“வேணாம் எண்டா ஏன் சாப்பிடோணும் லாதி? சரி சரி சாப்பிட்டதே ரெண்டே ரெண்டு வாய் தான், அது எப்பவோ வெளில வந்திட்டு. போதும் வாங்க, வாயக் கொப்பிளிச்சுக் கழுவுங்க.” 

மகள் முதுகில் தடவியபடி சொன்னதெல்லாம் லாதியின் காதுகளை எட்டவே இல்லை போலும். குடல் வெளியில் வரும் வகையில்  ஓங்காளித்தாள், சத்தியும் எடுத்தாள்.

கயல்விழியால் பார்த்திருக்க முடியவில்லை. “ஐயோ கடவுளே! நீங்க முதல் இங்கால வாங்க!” பூபாலனைப்  பிடித்து அப்பால் விலக்கிவிட்ட வேகத்தில் லாதியின் நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.

“சரி சரி, ஒண்ணும் இல்ல, கொஞ்சம் நிமிர்ந்து நில்லுங்க.” கண்கள் முட்டக் கண்ணீரும் சிவந்து விடைத்த மூக்கும் அழுகையும் அருவருப்புமாக இன்னுமே ஓங்காளித்தபடி தன்னோடு அணைந்தவள் நெஞ்சைத் தடவி விட்டாள், கயல்விழி. 

“போதும் போதும் எல்லாம் வந்திட்டு. வாய் கொப்பளிக்கலாம்.” அழைத்துச் சென்றவளிடம் குழந்தை வேறு தாவினான். கயல்விழி வினையாற்ற முன்னர் இடையிட்டன, பூபாலனின் கரங்கள். மகனை வாங்கிக்கொண்டு நகர்ந்தவனிடம், “தம்பி சாப்பிடேல்லையா?” என்றார் விமலா. 

“பச் …கொஞ்சத்தில பாப்பம் அக்கா, நீங்க சாப்பிடுங்க.”

“சாப்பிடத் தொடங்கியாச்சு எல்லா பிறகென்ன? அவன என்னட்டத் தந்திட்டுச் சாப்பிடு தம்பி.” வற்புறுத்தி அமர்த்தினார், அவர். 

“பருப்புக்கறி போட்டிங்களா அக்கா? அவா அது சாப்பிட மாட்டா.” என்றபடி லாதியைக் கூட்டிக்கொண்டு வந்து அமர்த்திவிட்டு, “விருப்பம் இல்லாட்டி ஒதுக்கி வச்சிட்டுச் சாப்பிடலாம் எல்லா லாதிம்மா.  சுடுதண்ணி தாறன் குடிச்சிட்டு கொஞ்சத்தால சாப்பிடலாம்.” என்றபடி நகர்ந்தாள் கயல்விழி.

“அத்த தான் எல்லாத்தையும் பிரட்டி விட்டுட்டா!” சொல்லும் போதே லாதியின் விழிகள் நிறைந்து விட்டன.

“அட! பருப்புச் சாப்பிடுறதில என்ன இருக்கு?! முதல் இந்த வயசிலயே இதென்ன பழக்கம்? அது வேணாம் இது வேணாம் சாப்பிட மாட்டன் எண்டு சொன்னா அப்பிடியே விட்டிராம நாம தான் குடுத்துப் பழக்க வேணும்.” 

கண்டிப்போடு ஆரம்பித்த  விமலா லாதியின் விழிகளால் கண்ணீர் வழியவும், “கூப்பிட  கூப்பிட வரேல்ல. பிறகு வந்திருந்து சாப்பிடாம அளைஞ்சு கொண்டு இருந்தா. சின்னப்பிள்ள தானே சாப்பிட வசதியா இருக்குமே எண்டு எல்லாம் சேர்த்துப் பிசைஞ்சு விட்டன்.” பரிவோடுதான் சொன்னார்.  லாதியின் கண்ணீரைத் துடைத்துவிட நகர்ந்த அவர் கைகளை விலத்திவிட்டுத் தானே துடைத்துக் கொண்டாள், லாதி.

“விருப்பம் இல்லாமல் சாப்பிட்டா இதுதான் நடக்கும்.” என்றதோடு நிறுத்திவிட்டாள், கயல்விழி.

“லாதிம்மா அப்பா தீத்தி விடட்டோ? பருப்பு இல்லாமல் தாறன்.” கேட்ட பூபாலனுக்கு மகள் தட்டில் என்ன இருந்தது என்றதைக் கவனிக்கவில்லையே என்றும் மகள் தயங்கி உண்ணாது தடுமாறியதைக் கண்டுவிட்டும் கருத்தில் எடுக்கவில்லையே என்றும் குற்றவுணர்வு.

அதுவும், ‘உன்னால பிள்ளைகளை ஒழுங்காகப் பார்க்க முடியாது’ என்ற எண்ணமுள்ளவர்கள் முன்னால்… 

 

“செல்லம், இதில பக்கத்தில வந்திருங்க, அப்பா தீத்தி விடுறன்.”

“இப்ப வேணாம், சுடுதண்ணியக் குடிக்கட்டும்.” வெதுவெதுப்பான சுடுநீர் இருந்த கோப்பையை அவள் முன்னால் வைத்த கயல்விழியை என்ன செய்வது? முகம் சுருங்கப் பார்த்தான் பூபாலன்.

எண்ணிச் சில கிழமைகளில் குழந்தைகளை முழுமையாகவே தன்னை விட்டு விலக வைத்துவிட்டானே! அதை உணராதும் இருந்திருக்கிறான். ‘இனி அதுக்கு இடம் கொடுக்கக் கூடாது. அவேக்கு நான் எனக்கு அவையள்.’ திடமான  தீர்மானத்தோடு, “கொஞ்சமா எண்டாலும் சாப்பிடலாம் லாதிம்மா, வாங்க.” சொல்லி முடிக்கவில்லை திரும்பியிருந்தாள், கயல்விழி.

“இப்ப உங்களுக்கு என்னதான் பிரச்சின? வேணாம் எண்டா விடுங்கோவன். நான் கொஞ்ச நேரத்தில குடுக்கிறன். இல்லையோ நீங்களே குடுங்கோவன்.”

‘நீ கொஞ்ச நேரம் வாய மூடிக்கொண்டு இருந்து உன்ர அலுவல மட்டும் பார் சரியோ!’ நாவில் துருத்திய வார்த்தைகளை அவள் முகத்துக்கு நேரே கொட்டிட முடியவில்லை. அந்தளவுக்கு அவன் குடும்பத்துக்காக பார்த்துப் பாராது உதவிகள் செய்தவள், செய்து கொண்டிருப்பவள்.

அரங்கிச் சென்றுவிட்டாலும் என்று ஒற்றைக் கையால் கயல்  இடுப்பை வளைத்துத் தன்னோடு அணைத்துக்கொண்டாள், லாதி. மற்றக் கையால் சுடுநீரை எடுத்து மெல்ல மெல்ல உறிஞ்சினாள். மகளையே சில  கணங்கள் பார்த்திருந்தவன், பெயருக்குச் சாப்பிட்டுவிட்டு எழுந்துவிட்டான்.

லாதி பெரிதாக எதையுமே உண்ணவில்லை. அன்று மாலையே படுக்கையில் குறண்டிவிட்டாள்.

“என்ன இந்த நேரம் தூக்கம்? பிறகு இரவுக்குத் தூக்கமே வராது.  வாங்க, நாம கொஞ்ச நேரம் பின்னால உள்ள பார்க்கில நடந்திட்டு வருவம்.” என்று வந்த கயல், அவளுக்குக் காய்ச்சல் கொதிப்பதை உணர்ந்த கணம் செய்வதறியாது நின்றுவிட்டாள்.

சாதாரண காய்ச்சல் தான் என்று வைத்தியர் சொல்லிவிட்டாலும், அடுத்து வந்த ஏழெட்டு நாட்கள், அவள் சுகயீனத்தில் இருந்து நிமிரும் வரை வீட்டிலிருந்து வந்த தொலைபேசி அழைப்புக்குக் கூட பதிலளிக்க நேரமிருக்கவில்லை, கயல்விழிக்கு. நேரம் என்பதைத் தாண்டி, சிந்தையில் இடம் இருக்கவில்லை என்றே சொல்லலாம். நான்கு வார்த்தைகளில் குறுஞ்செய்தியைத் தட்டுவதோடு சரி. ஏற்கனவே உள்ள விடுமுறை எல்லாம் எடுத்தாகிற்று. தனக்கான வேலையைக் கிடைக்கும் சிறு சிறு பொழுதுகளிலும் இரவிலும் செய்துவிட்டு லாதி நன்றாகிய பின்னரே சீராக மூச்சு விட்டாள், எனலாம்.

error: Alert: Content selection is disabled!!