Skip to content
பூபாலனும் தான், மனைவியின் திடீர் மறைவு உள்ளத்தில் விதைத்திருந்த பயம் மீண்டும் மீண்டும் மேலெழுந்து அவனை நிலைகொள்ளவிடாது செய்திருந்தது. ‘கொரோனா’வோ என்ற பீதி ஆட்டிப் படைத்திட்டு. அதிலிருந்து மீண்டு இது சாதாரணக் காய்ச்சல் என்றதை மனம் ஏற்றுக் கொள்ள மிகவுமே சிரமப்பட்டிட்டு.
பழைய துள்ளல் துடிப்பு இல்லையென்றாலும் மகள் ஓரளவு குணமாகி எழுந்த பின்னரே அவனுக்கு சுற்றம் தெரிந்தது எனலாம். அப்போதோ…அந்த வெளி உலகு வேறு வேறு கோலங்களை அவர்கள் முன்னால் இழுத்து வந்து வைத்தது. மகளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகச் சுகம் வரும் போதுதான் அவள் தன்னைத் தவிர்க்கிறாள் என்பதையே கண்டு கொண்டான். எல்லாவற்றுக்கும் ஸ்வீட்டி ஸ்வீட்டி ஸ்வீட்டி மட்டுமே!
மகளையே கூர்மையாகக் கவனிக்கத் தொடங்கினான். அவளுக்கு வந்த காய்ச்சல் கூட கயல்விழி தம்மை விட்டுப் போய்விடப்போகிறாள் என்ற ஏக்கத்திலோ என்றும் அவனால் எண்ணாதிருக்க முடியவில்லை. அந்தளவுக்கு இருந்தது லாதியின் கதைகளும் நடவடிக்கையும்.
அவனுக்கும் மேலாக, விமலாவின் விழிகள் கயல்விழியிலும் அவள் பிள்ளைகளில் காட்டும் கரிசனையான கவனிப்பிலும் தான். தான் அவதானித்ததை அப்படியே ஊருக்குக் கடத்தும் வேலையையும் செவ்வனே செய்தார், அவர்.
“ஸ்வீட்டி நீங்க இங்க எங்களோடவே இருப்பீங்களா? பிரணவ் அங்கிளும் இங்கயே இருக்கலாம் தானே? ப்ளீஸ்! ப்ளீஸ்!” நன்றாகக் குணமடைந்திருந்த லாதி கேட்ட போதுதான், கோபத்தோடு சென்றவனுக்கு அழைக்கவில்லை என்பதே நினைவுக்கு வந்தது, கயல்விழிக்கு.
“அதெல்லாம் பிறகு பாப்பம். இப்ப இந்த சீரியல முழுசும் சாப்பிடுங்கோ! ரூயி ஆன்ட்டி எடுக்கிறா கதைச்சிட்டு வாறன்.” என்று நகர்ந்தவள், அவளோடு கதைத்துவிட்டு பிரணவ்வுக்கு அழைத்துப் பார்த்தாள். ரிங் போய்க்கொண்டே இருந்தது.
‘வாட்சப்’பில் மெசேஜ் போடுவமா’ நகர்ந்த விரல்கள் தயங்கி நின்றன. இதுவரை அப்படி அவனுக்கு செய்தி அனுப்பவில்லை. அதைவிட மனச் சுணக்கத்தோடு சென்றவனிடம் நேரில் முகம் பார்த்துக் கதைப்பதே சரியென்று பட, மீண்டும் அழைத்தாள். பதிலில்லை.
‘ஏதாவது அலுவலா நிக்கிறாரோ! டிரைவ் பண்ணிக்கொண்டும் இருக்கலாம்.’ எண்ணியவள், ‘எதுக்கும் பொழுதுபட எடுப்பம்.’ என்ற முடிவோடு கைபேசியை வைத்தாள் என்றால், அவள் அழைக்க அழைக்க எடாது கைபேசியையே பார்த்திருந்த பிரணவ் முகமோ, பாறையாக இறுகிக் கிடந்தது.
அன்று, பூபாலன் வீட்டிலிருந்து எல்லாம் முடிந்திட்டு என்ற வகையில் வந்திருந்தான் தான், லாதியிடம், ‘ஸ்வீட்டி இங்கயே இருப்பா’ என்றும் முடிவாகக் கூறி விட்டிருந்தான் தான், ஏன், ஒரு படி மேலே சென்று ‘பிள்ளைகளுக்குத் தாய் வெளியில் பார்க்கவே தேவையில்ல’ என்றொரு ஸ்டேட்மென்ட் விட்டும் இருந்தான் தான்.
இத்தனைக்கும் பிறகும் எதிர்பார்த்தான்; வலுவாகவே எதிர்பார்த்தான்; அழைப்பாள், மனம் திறந்து கதைப்பாள், அவள் மனதில் அவன் பாலுள்ள அன்பை வெளிப்படுத்தத் தயங்காள் என்று நிறையவே நம்பினான்.
ஒன்றுக்குள் ஒன்றாகப் பழகியவள் இழப்பு நேற்றென்று இருக்க, புதுவாழ்க்கை ஆரம்பிக்கலாம் வா என்றால் கோபம் வரும் தானே? அதுதான் அவள் கோபத்திற்குக் காரணம் என்றளவில் அவளுக்காக மனதுள் வாதாடியிருந்தான். அதுவே, ‘இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் பிரணவ், காயுட ஒரு வருசம் சரி முடியட்டும் கலியாணம் செய்வம்.’ என்றளவில் சரி வாய் திறந்து சொல்வாள் என்றெல்லாம் எதிர்பார்க்க வைத்தும் இருந்தது.
ஆனால், உருண்ட ஒவ்வொரு தினமும் மீண்டும் மீண்டும் அவன் எதிர்பார்ப்புக்கு சுளீர் சுளீரென்ற அடிபோட்டு துடிக்க வைத்ததே! அவளில் வைத்த அன்பு எவ்வித மதிப்பும் இன்றி நசுக்கி எறியப்பட்டதாக அவமானத்தில் குன்றிப்போனான், பிரணவ்.
“பின்னேரமா வருவன் எண்டு காலம சொன்ன தம்பி என்ன இப்பவே வந்திட்ட? அங்க எல்லாரும் சுகம் தானே?” அன்று அங்கிருந்து முகம் கறுக்க வந்த மகனிடம் கேட்டிருந்தார், அன்னை.
அப்போதைக்கு எதை எதையோ சொல்லி சமாளித்து விட்டான் , தான். அடுத்தடுத்த நாட்கள் ஏமாற்றம் அறைய அறைய, மனதின் குமுறலை வீட்டினரிடம் மறைக்க முடியவில்லை. கொட்டிவிட்டான்.
கேட்ட பெற்றோரும் தமக்கையும் கொதித்துப் போனார்கள்.
“இதுக்குத்தான் முதலே வேணாம் விட்டிருவம் எண்டு சொன்னன், ஊரில இல்லாத பொம்பள அவா எண்டு நிண்டிங்க, இப்பப் பாத்தீங்களா? இதெல்லாம் உனக்குத் தேவையா சொல்லு? தான் எண்ட நினைப்புப் பிடிச்ச பெட்டை அது!” சீறினாள், தமக்கை.
“சொந்தக்காரப்பிள்ள அது இது என்டீங்க அம்மா. அவா வேதா ஆன்ட்டியவே சொந்தமா நினைக்கிறதில்ல, பிறகு நாம எல்லாம் எம்மட்டில?” தாயிடமும் கோபப்பட்டாள்.
“நானும் இதையேதான் சொன்னன், நீங்க ரெண்டு பேரும்தான் கேக்கவே இல்ல.” என்ற பிரணவ் தந்தைக்கு, தம்மை அவ்வளவாக கருத்தில் எடுக்காத கயல்விழியை முதலில் இருந்தே பிடிக்கவில்லை. மகனுக்கு இங்கேயே பெண் பார்க்கலாம் என்பதே அவர் எண்ணமாக இருந்தது.
மகன் விரும்பியது நடக்கவுமில்லை. வெளியில் காட்டவில்லை என்றாலும் அதில் அவன் வருந்துகிறான். ஏமாற்றம் அடைவது என்றால் அத்தனை இலகுவானதா என்ன? மகள், கணவர் பார்வையில் எல்லாத்துக்கும் காரணம் தான். வேதாவில் உள்ள அன்பில் தானே கயல்விழியைத் தம் மகனுக்கு கல்யாணம் செய்யவே நினைத்தார். விறுவிறுவென்று சென்று தொலைபேசியை எடுத்ததுப் பொரிந்து தள்ளிவிட்டே ஓய்ந்தார், பிரணவ்வின் தாய்.
இது நடந்து அடுத்த சில மணித்தியாலங்களிலேயே கயல்விழி அழைக்கிறாள் என்றால் என்ன அர்த்தம்?
‘அம்மா ஏசினதச் சொல்லி வேதா ஆன்ட்டி கத்தியிருப்பா. உடனே எடுக்கிறா. சமாதானம் செய்ய எடுத்தாலும், ‘உனக்கு என்ர பதில் முதலே சொன்ன பிறகு ஏன் வழிஞ்சு கொண்டு வந்தனி’ என்று குத்திக் கதைக்க எடுத்திருந்தாலும் இனி எடுத்து என்ன தேவைக்கு? அவன் மனம் முழுமையாக விட்டுப் போயிற்று. ‘என்ர வாழ்க்கையில கயல்விழி சாப்ட்டர் மிகக் குறுகிய காலத்திலயே க்ளோஸ்ட்’ நிரந்தமாகவே சீல் வைத்து விட்டான்.
பூபாலன் வீட்டிலோ, கயல்விழியும் மகளும் கதைத்ததைக் கேட்ட பூபாலனுக்கு ஐயோ என்றிருந்தது. அன்றே பிரணவுக்கு எடுத்து அவனைச் சமாதானம் செய்விக்க வேண்டும் என்று நினைத்திருக்க, என்ன என்னவோ நடந்து ஒரு கிழமையும் ஆயிற்றே!
நண்பனுக்கு அழைத்துப் பார்த்தான். அவன் அழைப்பையும் பிரணவ் ஏற்கவில்லை.
‘வேலையாக இருப்பான் எண்டு நினைக்கிறன், இரவுக்கு எடுப்பம். முடிவோடு இருந்தான் என்றால், பூபாலனும் அழைக்க எக்கச்சக்க கோபம் தான், பிரணவ்வுக்கு. காயுவை எண்ணியவனுக்கு அதைக் காட்டவும் முடியவில்லை. பொறுமையாக யோசித்தால் இதில் பூபாலனில் கோபம் கொள்வதும் வீண் தான். எத்தனை வருடமாக ஒன்றுக்குள் ஒன்றாகப் பழகியவர்கள். ‘நேற்று வந்த கயல்விழியால் பிரிவதா?’ என்றும் வீம்புக்கு வினவியது உள்ளம். எது எப்படி இருந்தாலும் அவனோடு பழையபடி நட்போடு பழகவோ, கதைக்கவோ காலம் தேவை. வேலையில் கவனம் செலுத்த முயன்றான், அவன்.
error: Alert: Content selection is disabled!!