“என்ன அக்கா நீங்க? என்னதான் எண்டாலும் ஃபோனில நாலு வார்த்த கதைக்கவுமுமா நேரம் இராது?” பெரும் குறையோடு ஆரம்பித்த சகோதரிக்கு, அருகில் அமர்ந்திருந்த லாதியைக் காட்டினாள், கயல்.
“நல்லாவே பயப்படுத்திப் போட்டா! பிள்ளைக்கு இண்டைக்குத்தான் முழுசா சுகம் வந்திருக்கு!” அவளை ஒரு கையால் அணைத்தபடி கதைத்தவளுக்கு தங்கையின் முகத்தில் வழமையாக இருக்கும் மலர்வு இல்லை என்பது கருத்தில் பதியவேயில்லை.
திரையில் தெரிந்தார் வேதா.
“ஹாய் சித்தி”
“ம்ம் எப்பிடி இருக்கிற? வேலையெல்லாம் எப்பிடிப் போகுது?”
“இருக்கிறன் சித்தி. வேலையும் சரியான பிசிதான்.”
“இன்னும் எட்டு மாசங்கள் கிடக்கு என்ன?”
“ஓம் சித்தி, நீங்க எல்லாரும் எப்பிடி இருக்கிறீங்க? அம்மம்மா ஆக்களோடும் ஒரு கிழமையாக் கதைக்கேல்ல. இனித்தான் கதைக்கோணும்.”
“லாதிம்மா விளையாடேல்லையோ? ஓடிப் போய் விளையாடுங்கவன்.” திடீரென்று வேதா இப்படிச் சொல்லவும் கயல் சிந்தனை நிதானித்தது. வேதாவில் தங்கி நின்று அவர் முகத்தின் இறுக்கத்தைக் குறித்தபடி தங்கையை நோக்கி நகர்ந்தது, பார்வை. அவள் முகமாற்றமும் கருத்தில் பதிந்திட்டு. வேதாவின் அருகில் தந்தை அமர்ந்திருப்பதையும் அப்போதுதான் கண்டாள்.
“லாதி தம்பியோடு இருங்க, ஸ்வீட்டி கதைச்சிட்டு வாறன்.” என்றதும், தலையாட்டிக்கொண்டே எழுந்து ஓடிவிட்டாள், அவள்.
“என்ன விசயம்? ஏதாவது பிரச்சினையா? அம்மம்மா தாத்தா சுகமா இருக்கினம் எல்லா?” தங்கையிடம் கேட்க, அவளோ தகப்பனைப் பார்த்தாள். தகப்பன் தலை முழுமையாகத் திரைக்குள் வந்திட்டு.
“எப்பிடிம்மா இருக்கிற?”
“எனக்கு என்ன? அங்க…எல்லாரும் சுகம் தானே?”
“ஒரு பிரச்சினையும் இல்ல. நீ…”
அவர் கதைக்கையில், இடையில் புகுந்தது கயல்விழியின் குரல்.
“கொரோனா எல்லாம் இப்ப எப்பிடி? சாமான்கள் எல்லாம் வாங்கக் கிடைக்குதா?”
அவள் கதை வேறு வழி செல்ல, குறுக்கிட்டது வேதாவின் குரல்.
“இங்க பார் கயல், நீ என்னையும் அப்பாவையும் ஒதுக்கி வச்சாலும் நீ எப்பவும் எங்கட மகள்தான். நாங்க இவளப் போலத் தான் உன்னையும் நினைக்கிறம்; நடத்துறம்.”
கேட்ட கயல் மனமும் முகமும் இறுகிற்று. “நான் ஆரையும் ஒதுக்க எல்லாம் இல்லை.” இடையிட்டாள். அதைப் பொருட்படுத்தாது தொடர்ந்தார் வேதா.
“இந்தாப் பாத்தியா, நீ எங்கள ஒதுக்கினது, ஒதுக்கிறது, ஒரு பொருட்டாவே நினைக்கிறதில்ல எண்டதெல்லாம் இப்பவரை உனக்குக் கொஞ்சமும் விளங்கேல்ல கயல்; அதுக்காக, அதை விளங்க வைக்க இப்ப நான் கதைக்கேல்ல.” ஒரு போதுமின்றி,நெற்றிச் சுளிப்போடு படபடத்தார் வேதா.
காரணம் தெரியாத கயல் முகத்திலும் குழப்பத்தின் நிழல் படியத் தொடங்கிற்று.
“என்னதான் என்னை எனக்குப் பாத்துக்கொள்ளத் தெரியும் எண்டு நீ நடந்தாலும் நீ தனியாள் இல்ல என்ன? உனக்கு எண்டு நாங்க, உன்ர அம்மம்மா, அம்மப்பா, மாமா குடும்பம் எண்டு சொந்தபந்தம் இருக்கு. என்ன முக்கிய முடிவு எடுக்கிறது எண்டாலும் எங்களிட்டையும் கேட்கோணும். எங்களுக்கும் தெரியோணும்.” தொடர்ந்தார் வேதா.
“இதென்னடா வம்பாக் கிடக்கு? நான் இப்ப என்ன அப்பிடி உங்களுக்குத் தெரியாமல் செய்திட்டன்?”
“நீ என்ன செய்து கொண்டிருக்கிற எண்டே உனக்கு விளங்கேல்லையா? நல்ல பகிடிதான் போ! படிப்பறிவு உனக்குக் கூடவா இருக்கலாம், அனுபவ அறிவு எங்களுக்குக் கூட!” இடையிட்டார், கரன்.
அடியும் நுனியும் விளங்காது முழித்தாள், கயல்விழி. எடுத்ததும் இப்படிச் சீறினால்? எரிச்சல் தான் உருவாகிற்று. முகம் கறுத்திட்டு. எதையோ சொல்லப் போக குறுக்கிட்டார், கரன்.
“உன்ன எங்களிட்ட இருந்து தள்ளி வச்சது நீ! நீ மட்டும் தான். அண்டைக்கு நீ பிடிச்ச பிடியில நிக்க, சின்னப்பிள்ள மனம் நொந்திரக்கூடாது, சரி மாமா மாமி ஆக்களோடு தானே எண்டு விட்டிருந்தாலும் எங்கட பார்வை எப்பவும் உன்னில இருந்திருக்கு. ஓமா இல்லையா சொல்லு பாக்கலாம்?
இப்ப வரை எங்கட பிள்ள எதையும் ஆற அமர யோசிச்சு முடிவு செய்வாள் எண்ட நம்பிக்கையும் இருக்கு. அப்படி இருக்கேக்க இப்படி …”
மகளின் ஒதுக்கம் தந்த வலியும் அந்த நிலைக்கு வளர விட்ட தன் மீதான கோபமும் கலந்து கிடந்தாலும் இந்நிலையில், மகள் சரியான தீர்மானம் எடுத்தலின் அவசியம் உணர்ந்து கண்டிப்போடு சொல்லிக்கொண்டு வந்தார், கரன்.
கயல்விழிக்கு இதையெல்லாம் கேட்கும் அளவுக்குப் பொறுமை இல்லை. அதையும் விட நேரமும் இல்லை. செய்ய வேண்டிவை தலைக்கும் மேலே வரிசைகட்டி இருக்கும் நேரம் பார்த்து ‘இதென்ன அலட்டல்?’ என்றிருந்தது. வேகமாக இடையிட்டாள்.
“உங்கட முகங்களே சரியில்ல, என்னவோ இருக்கு. அதோட ஒருநாளும் இல்லாமல் குடும்பமா என்னோட கதைக்க வந்திருகிறீங்க.” குடும்பம் என்றதில் அவள் குரல் அழுத்தம் கொடுத்திருந்தது. அதை உணர்ந்த மூவரினதும் முகங்களும் சுருங்கின.
அதையெல்லாம் கருத்திலெடுக்காது, “சுத்தி வளைக்காம வெளிப்படையா என்ன சொல்லோணுமோ சொல்லுங்கோ. எனக்கு நிறையவே வேலை இருக்கு. உண்மையாவே!”
“என்ன வேல… பிள்ள பாக்கிறதோ?” வெடுக்கென்று கேட்டிருந்தார் கரன்.
“அதுக்கா நீ இங்க இருந்து போனனி. இங்க பார் கயல்…” தொடர்ந்தார்.
கயல் முகம் சுருங்கிற்று. விழிகளில் கோபம் மின்ன எதையோ சொல்ல வர இடையிட்டார், வேதா.
“இப்பிடி நாங்க கேட்க, உனக்குக் கோபம் வருதல்லா? அப்பிடித்தான் பிரணவ்விட அம்மா எடுத்து நாக்கைப் பிடுங்கிறது போல கேக்க எங்களுக்கும் இருந்தது. என்ன பதில் சொல்லுறது எண்டு தெரியாமல் தலை குனிஞ்சு இருந்தம் தெரியுமா?” என்றதும் பெரிதும் குழம்பிப் போனாள், கயல்.
“அவர் என்ன எடுத்துச் சொன்னவர்?” கேட்டவள் குரல் இறங்கியிருந்தது.
‘அண்டைக்கு இங்க கதவளிப்பட்டத பிரணவ் உண்மையாவே கோவமா எடுத்து வீட்டிலும் சொல்லிட்டாரோ! ஐயோ…இவர என்ன செய்யிறது?’ மனம் முணுமுணுத்தது.
“என்ன சொன்னவர் எண்டா அங்க நடக்கிறதுகளச் சொன்னவர்.” கரன்.
“வேணாம் எண்டோன்ன விட்டு விலகிராமல் பிடிச்சுத் தொங்கினது தங்கட மகன்ட பெரும் பிழை எண்டு சொல்லேக்க, அவாக்கு அழுகை வந்திட்டு. பிரணவ் அவ்வளவு உறுதியா உனக்கும் தன்னில விருப்பம் எண்டு வீட்டில சொல்லி இருக்கிறார். நீ முதல் தடவ வேணாம் எண்ட பிறகும் மகன் உன்னையே விரும்பி இருக்க இது எங்க கொண்டு போய்விடும் எண்டு இருந்தவே, மகன் அப்படி நம்பிக்கையா சொன்னோன்ன சரியான சந்தோசத்தில தான் எனக்கு எடுத்துச் சொன்னவா.
அதே சந்தோசத்தில நான் உன்ர அம்மம்மாக்கு சொன்னன். அவேதான் பிரணவ்ட அம்மாவோட கதைச்சு ரெஜிஸ்டர் செய்யிறது எண்டது வரைக்கும் முடிவு செய்தது.