அத்தியாயம் 21 – 2

பூபாலன் நெற்றி சுருங்கிற்று! “என்ன சொன்னவன்?”

‘பிள்ளைகளுக்குத் தாய் எண்டு ஆரையும் வெளில தேட வேணாம். நான் என்ன சொல்லுறன் எண்டது உங்களுக்கே விளங்கும்’ எண்டு போட்டுப் போனவர். அவருக்கு உண்மையாவே கயலில விருப்பம் இருந்தா அவ்வளவு ஈசியா அப்பிடிச் சொல்லி இருக்க ஏலுமா யோசிச்சுப் பார். நான் அதை நினைச்சுப் பார்த்தன். கண்ணுக்கு முன்னால நடக்கிறதையும் பார்த்தன். அதுக்குப் பிறகுதான்…” என்றவரை பூபாலன் கரம் நிறுத்தியிருந்தது.

“சத்தியமா அதுவரை அப்பிடி எல்லாம் ஒரு கணம் சரி நான் நினைக்கேல்ல பூபாலன். பிரணவ், அந்த மாதிரி வலு ஈசியா சொல்லுறார் எண்டா என்ன அர்த்தம்? அவேக்க நீங்க நினைக்கிறது போல லவ் அது இது எண்டு எல்லாம் ஒண்ணும்…”

“போதும் அக்கா நீங்க நிப்பாட்டுங்க. வீட்ட வெளிக்கிடுங்க. நான் இண்டைக்கு அவனிட்ட நேரயே போய்க் கேக்கிறன். அவனுக்கு இதெல்லாம் விளையாட்டாப் போச்சுதா? அதுக்கு ஏன் என்னை இழுப்பான்?” கோபத்தில் கத்தினான்.

“இங்க பாருங்க அக்கா, எனக்கு…இந்த வீட்டுக்கு, என்ர பிள்ளைகளுக்கு எண்டு எல்லாம் ஒரு பொம்பள தேவையில்ல. சரியோ?” என்றுவிட்டு கார்த் திறப்பை எடுத்துக்கொண்டு வெளியேற எத்தனித்தவன், “கொஞ்சம் நில்லுங்க!” என்ற கயல் குரலில் திரும்பினான்.

கதைத்தவை எல்லாமே கேட்டிருக்கிறாள், சொல்லாமல் சொல்லியது, அவள் நின்ற விதம்.

“நீங்க இப்ப பிரணவ் வீட்டில போய் ஒண்ணும் கதைக்க வேணாம். அவே ஆரம்பத்தில இருந்தே தங்கட விருப்பப்படி என்ர வாழ்க்கையில முடிவு எடுக்கினம். இப்ப நான் உறுதியா சொல்லுறன்…” சொன்னவள், அமைதியானாள். விழிகள் கலங்கிற்று. அவள் மனதில் முதல் முதல் ஒருவன் மீது அன்பு உருவானது என்றால் அது பிரணவ் தான். மறுக்க மாட்டாள். ஆனால், அது அவள் வாழ்க்கைக்குச் சரிவராத அன்பு. ‘நான் சம்பந்தப்படுற விசயத்தில எல்லாம் தன்ர விருப்புக்கேற்ப சுயமுடிவெடுத்து…இல்ல சரிவரவே வராது’ மனம் மீண்டும் தன் முடிவைச் சரி பார்த்திட்டு.

“கயல்…ஏதோ அண்டைக்கு நானும் கத்த, கோவத்தில உளறிட்டுப் போயிருப்பான். நான் நேர்ல போய்க் கதைச்சா எல்லாம் ஒகே ஆகிரும். அவன் என்ர ஃபிரெண்ட். எனக்கு அவனப்பற்றி நல்லாவே தெரியும்.” பூபாலன்.

“இல்ல, கடைசிவரை அவருக்கும் எனக்கும் சரிவராது. மேற்கொண்டு அதுபற்றிக் கதைக்க நான் தயாரில்ல. எனக்காக… நான் இருக்கேக்க ஆரும் கதைக்கவும் தேவையில்ல.” சொல்லிக்கொண்டே இறங்கி வர, லாதியும் சேர்ந்து வந்தாள். அவள் கரம் மட்டும் கயல்விழியின் கரத்தை இறுகப் பிடித்திருந்தது.

பூபாலன் முகம் இறுகீற்று. “ஓ நான் ஆரோ? சரி இருக்கட்டும். இந்த ஆரோவுக்காக நீ இங்க இருந்து ஒண்ணும் செய்யத் தேவையில்ல. வெளிக்கிடு! உனக்குத்தானே அறை இருக்கே, அங்க இருந்து வந்த வேலைகளைப் பார்!”

“நோ அப்பா! நோ! நோ!” 

“லாதி  நீ முதல் மேல போ! போ எண்டு சொல்லுறன் எல்லா போ!” 

ஓரெட்டில் வந்து அவள் கரத்தைப் பிடிங்கி மேலே திருப்பி விட்டவன் நின்ற தோரணையில், பயந்து போனவள் அழுதபடியே மாடியேறினாள், “ஸ்வீட்டி போகாதீங்க!” விக்கலிடையே சொன்னபடி.

“இங்க பாருங்க, ஆர் என்ன சொல்லட்டும் நான் எனக்குக் கொன்ராக்ட் முடியும் மட்டும் இங்க தான் இருக்கப் போறன். அதில மாற்றம் இல்ல. அதோட இன்னொண்டு…” என்றுவிட்டு, பூபாலனைப்  பார்த்த பார்வையில் வெளிப்படையாகவே நக்கல் கசிந்திட்டு.

அவன் நெற்றி சுருங்கியது. 

“என்ர வீட்டில இருக்காத போ எண்டு சொல்லுறன் அசையிறா இல்லையே! ராங்கி பிடிச்சவளோட நான் இந்தப் பாடு படுறன், நீ போய்ச் சேர்ந்திட்ட என்னடி?” மனைவியின் புகைப்படம் நோக்கி இரைந்தான்.

“ஹலோ…நான் ராங்கி பிடிச்சவள் தான். இலங்கை போகுமட்டும் இங்க இரு எண்டு காயு சொன்னவா.” விழிநீர் உருளத்  துடைத்தாள்.

“அதோட…ரெண்டாம் தாரமா அதும் ரெண்டு பிள்ளைக்காரனை எல்லாம் கலியாணம் செய்யிற மாதிரி ஐடியா எனக்கு இல்லவே இல்ல. அதனால, நீங்களா ஏதாவது கற்பனையில இருக்க வேணாம் ஒகே!” என்றவள் பார்வை விமலாவிடம் திரும்பி, ‘உங்களுக்கும் தான்’ உணர்த்திவிட்டு நிதானித்தது.

 

இப்படிப் பட்டென்று வெளிப்படையாகவே அவள் சொன்னதில் விமலாவின் முகம் சுருங்கிற்று என்றால், பூபாலனுக்கு பெரும் நிம்மதியாக இருந்தது. தன் உயிர் பிரிந்த வலியில் துடித்து நின்றவன் உதட்டில் மெல்லிய முறுவல் உரசிச் சென்றது.

“சுடர் ஆக்களுக்கு இத நான் சொல்லி விளங்கப்படுத்துவன். அப்ப அவே சொல்லேக்க எனக்கு உண்மையா பெரிய அதிர்ச்சியா இருந்தது, பிரணவ நினைச்சு மட்டும் தான்.” மீண்டும் கண்கள் தளம்ப, தன்னறை நோக்கித் திரும்பிவிட்டாள்.

‘சில நேரங்களில் நேசங்கள் மலர முன்னரே மடிவதுண்டு!’ எங்கோ வாசித்த நினைவில் உதடுகள் வருத்தத்தில் நெளியவே செய்தன. ‘மலர்ந்தாலும் மணம் கசிய முன்னர்…’ இவள் மனம் தொடர்ந்து எழுதவும் எண்ணியது.   

“கயல் நான் அவனோட கதைக்கிறன் எல்லாம் சரி வந்துரும்.” பூபாலன்.

“வேணாம் எண்டு சொல்லிட்டன், விட்டிருங்க!” குரலில் கடினத்தோடு சொல்லிவிட்டவள் தலை மறைய, செய்வதறியாது தவித்து நின்றான், பூபாலன்.

“இங்க ஒராள் முப்பத்தியைஞ்சு வயசில பெரிய முனிவர் கணக்கில கதைக்கிறார். நாள பின்ன ஆரோ ஒருத்தி இதுக்க வந்து அந்தப் பிள்ளைகள இருத்தி எழுப்பினா எல்லாம் தெரியும்.” சத்தமாகவே சொன்னபடி நகர்ந்தார், விமலா.

error: Alert: Content selection is disabled!!