Skip to content
“சரி பூபாலன், அப்பிடியே இருந்தாலும், இந்தக் குடும்பத்துக்கும் அவாக்கும் சரிவரும் போல இல்ல. நாங்க முடிவு எடுத்திட்டம். இவன் விரும்புறான் எண்ட ஒண்டுக்காகப் பொறுத்து இருந்தம். கடைசில எங்களயே ஆர் நீ எண்ட அளவில கேட்டாப் பிறகு, பச் விடுங்க…இதைக் கதைச்சு நமக்குள்ள ஏன் வீண் கோபதாபம்?” என்றபடி வந்தார், அவன் அன்னை.
அனைத்தையும் கேட்டுக்கொண்டு இருந்தார் என்றது அவரின் இறுகிய முகம்.
“அதுதான் நானும் சொல்லுறன், இன்னொரு தடவை வந்து கதைக்க எனக்கும் அவாக்கும் இடையில ஒண்ணுமே இல்ல!” பிரணவ் அடித்துச் சொன்ன அதே கணம், மீண்டும் மீண்டும் மனதுள் அதையேதான் சொல்லிக்கொண்டு இருந்தாள், கயல்விழி.
‘இனிமேல் பிரணவ் என்ற ஒரு நபரோடு எனக்கு எந்த விதத்திலும் கதை பேச்சு இல்லை!’ தனக்குத் தானே உருப்போட்டபடி குழந்தைக்கு இரவுப் பாலைப் பருக்கிக்கொண்டு இருந்தவளுள் ஆழ்ந்த சிந்தனை!
முதல் முதல் தன் பொருட்டு வீட்டில் சலசலப்பு. தந்தை, சித்தி, சுடர் என்று ஒவ்வொருவர் உதிர்த்த வார்த்தைகளும் அவளுள் வலம் வந்த வண்ணமிருந்தன. அதோடு, பூபாலன் மகளுக்கு எடுத்தியம்பியவையும் சேர்ந்து கொண்டன.
சற்று முன்னர் தான் வீட்டுக்கு எடுத்துக் கதைத்திருந்தாள். “நீங்க நினைக்கிறது மாதிரி எல்லாம் ஒண்டும் இங்க இல்ல. அதோட, என் சம்பந்தமாக எது எண்டாலும் நானே நேரில சொல்லுவன். வெளி ஆட்கள் மூலம் வராது!” என்று சொன்னவளை, கண்ணீரோடு கேட்டுக்கொண்டிருந்த வேதா நிறையவே பாதித்தார். அவள் ஒரு பொருட்டாகவே நினைக்காதவர் எக்கணத்தில் அவளில் பாதிப்பை ஏற்படுத்த ஆரம்பித்தார்?
“சித்தியா நான் பட்ட துன்பம் என்ர மகள் பட விடேன்” என்ற வகையில் அவர் கதைத்த கணம், கயல்விழியின் உள்ளத்தில் அவர் சொன்ன வார்த்தைகளும் பாவனையும் அந்தக் கண்ணீரும் கோபமும் சுரீலென்று தைக்கவே செய்தன.
ஒரு பாசமுள்ள அன்னையால் தானே அப்படியெல்லாம் அக்கறையோடு சொல்ல முடியும்? அப்போ அவர்? பெற்றுச் சீராட்டி வளர்த்தவர் இல்லை என்றாலும் தன் மீதான கரிசனையை உள்ளத்தில் தேக்கி வைத்திருந்திருக்கிறார். தான் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆசை கொண்டுள்ளவர் என்கையில், அவர் அன்பைத் தான் புரிந்து கொள்ளவில்லையே என்ற குறுகுறுப்பு அவளுள் முளைத்திருந்தது. அதைப் பட்டென்று வெளியில் காட்டி, சித்தி என்று பாசமாக ஒரு வார்த்தை கூடக் கதைக்க முடியவில்லை என்றாலும் அவர், அவளுள் பாதிப்பை ஏற்படுத்த ஆரம்பித்திருந்தார்.
அம்மம்மா, தாத்தா இருவரும் கண்கலங்கி இருந்தார்கள்.
“என்னம்மா ஃபோனயே காணேல்ல, சரியான வேல போல!” யோசித்து யோசித்து வார்த்தைகளை உதிர்த்தார்கள்.
பூபாலனின் அன்னை கதைத்த மாதிரி எதுவுமே இல்லை என்றதும் அவர்கள் முகத்தில் வந்த பிரகாசம், உள்ளத்தில் எந்தளவு வேதனையோடு இருந்தார்கள் என்பதைத் தெளிவாகவே காட்டிற்று.
“தெரியுமன, நீ நாலையும் ஆராயாமல் எதும் செய்யாய் எண்டு தெரியும்.” என்றார், தாத்தா.
“இப்ப அந்தத் தம்பி சின்னப்பிள்ளைகளோட அந்தரிச்சுப் போய் நிக்கேக்க நம்மால ஏலும் எண்ட அளவுக்கு உதவி செய்யிறதில பிரச்சினையே இல்ல. நம்மட எல்லை நமக்குத் தெரியோணும். அதோட நம்மட உதவி அவேக்கும் உதவியா இருக்கோணும், உபத்திரமா மாறிரக் கூடாது.” பொறுமையாக வார்த்தைகளைத் தேடி எடுத்துக் கதைத்தார், அம்மம்மா.
“இல்ல பிள்ள, என்ன சொல்ல வாறன் எண்டா உன்னோடயே இருந்து பழகினா நாளைக்கு அந்தக் குழந்தை தகப்பனிட்ட இரான், அவருக்கும் குழந்தைக்கு என்ன எப்பிடிச் செய்யிறது எண்டு தெரியாம இருக்கும். கொஞ்ச நாளில நீ வெளிக்கிட்டு வரத்தான் போற. அப்ப சிக்கலாகிரும். லாதியும் குழந்தையும் தான் கரைச்சல் பட வேண்டி வரும். இப்பவே அளவோட பாத்துக்கொள்ளு. அதுதான் எல்லாருக்குமே நல்லது. என்னம்மா நான் சொல்லுறது?” என்று, பூபாலன் மகளுக்குச் சொன்னதையேதான் அவரும் சொல்ல முயன்றிருந்தார்.
“மத்தப் படி பூபாலனிட அம்மா ஆக்கள் அலட்டல் கதை கதைக்கேக்க விசர் வந்தது தான், விடு!” என்று மறைமுகமாகத் தம்மை உணர்த்தியிருந்தார்கள்.
“வேதாவும் நானுமா பிரணவ் வீட்டில கதைக்கிறம்…” என்று அவர் ஆரம்பிக்கவே, “எனக்குப் பிடிக்கேல்ல, சரிவராது விட்டிருங்க அம்மம்மா!” உறுதியாகவே முற்றுப்புள்ளியிட்டு, அம்மம்மாவினதும் தாத்தாவினதும் முகத்தை இறுக வைத்தும் விட்டாள்.
மனம், நடந்தவற்றில் சுற்றிச் சுழன்று நிற்க, பார்வையோ மடியில் அயர்ந்து உறங்கிவிட்ட குழந்தையில்.
“நீ உன்ர அப்பாவோடு இனி நிறைய நேரம் இருக்க வேணும். ஸ்வீட்டி இண்டைக்கு இருந்திட்டு நாளைக்குப் போகப்போற ஆள்.” கடைவாயால் கசிந்த பாலைத் துடைத்துக்கொண்டே சொன்னவள், குழந்தையைத் தோளுக்கு மாற்றி, முதுகில் மெல்லத் தட்டிக்கொண்டே எழுந்தவள் பார்வை இப்போது தன் கட்டிலில் அயர்ந்து உறங்கும் லாதியில்.
error: Alert: Content selection is disabled!!