ஆப்பசைத்த குரங்கின் நிலையில் இருந்தார் சிவநாதர். காவல்துறையிடம் இருந்து பெரும் அழுத்தம். போதைப்பொருள்கள் கிடைக்காமல் அதன் டீலர்கள் அவரை நெருக்கினர். சொன்ன திகதிக்குள் தராவிட்டால் அவரை ஏதாவது செய்துவிடுவதாக மிரட்டினார்கள். இன்னொரு பக்கம் அவரின் ஆள்களை விரட்டி விரட்டிக் கைது செய்துகொண்டிருந்தான் கதிரவன்.
அவரின் மிகப்பெரிய வியாபாரம் போதைப்பொருள் கடத்தல். இன்று அதற்கு தகுந்த ஆட்கள் இல்லாமல் அது அந்தரத்தில் நின்றது. எந்தப் பக்கமும் அவரால் அசைய முடியவில்லை.
இது எல்லாவற்றையும் விட வாசுசேனன் என்கிற காண்டீபனுக்கு நினைவு திரும்பும் என்று அவர் எதிர்பார்க்கவேயில்லை. அப்படி அவனுக்கு நினைவு திரும்பிவிடக் கூடாது என்றுதான் அவனைப் போட்டுச் சிதைத்தார்கள். அவனைப் பரிசோதித்து, பழைய நினைவு திரும்ப ஒரு சதவிகிதம் கூட இல்லை என்று சொன்ன வைத்தியரின் குரல்வளையை நெரிக்கிற அளவுக்கு அவருக்கு ஆத்திரம். என்ன அதைவிட விரைந்து ஆற்றவேண்டிய காரியங்கள் அவருக்கு நிறைய இருந்தன.
சும்மாவே அவன் மகா மோசமானவன். இதில் அவனுக்கு அவர் செய்தவைகள் எல்லாம் நினைவு வந்துவிட்ட பிறகு யோசிக்கவே முடியவில்லை. வேந்தனை எந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கிறான் என்பதே பெரும் உதாரணமாக இருக்க பேரனைக் குறித்து யோசிக்கவே பயந்தார். எப்படியாவது அவனை அவர்கள் கைகளில் இருந்து மீட்டுவிட வேண்டும். அதற்குமேல் எதையும் சிந்திக்க முடியாமல் புறப்பட்டு எல்லாளனைச் சந்திக்க நேரிலேயே வந்தார்.
அவன் வீட்டு வாசலில் வந்து நின்று காவலாளியிடம் சொல்லி அனுப்பினார். எல்லாளன் அவரை வீட்டுக்குள் எடுக்கவில்லை. மாறாக அவரைத் திருப்பி அனுப்பிவிட்டு அவர் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தான். அவருக்கு அது மிகுந்த அவமானத்தை உண்டாக்கிற்று. வேறு வழியற்றுப் பொறுத்துப் போனார்.
“எனக்கு என்ர பேரன் வேணும் எல்லாளன்.”
“எனக்குக் காண்டீபன் எந்தப் பிரச்சினையும் இல்லாம வெளில வரோணும்.”
“இப்ப நான் என்ன செய்யோணும்?” என்று அவனிடமே கேட்டார்.
“அந்தக் கொலையை ஆர் செய்தது எண்டு தெரியோணும்.”
“அதுக்குப் பதிலா…”
“உங்கட பேரன் கிடைப்பான்.” என்று முடித்து வைத்தான் எல்லாளன்.
“ஆளை நான் காட்டித் தந்த பிறகு பேரனை நீங்க தராட்டி?”
“தருவன்.”
“தராட்டி?”
“என்னோட கதைக்கிறதுக்காக என்ர வீட்டு வாசல்ல வந்து நிண்டு காவல் காத்தது நீங்க!” என்றுவிட்டு அவன் எழுந்துகொள்ள, அவருக்கு முகம் கறுத்துப் போயிற்று.
“எல்லாளன் ப்ளீஸ்!” என்று அவன் இருக்கையைத் திரும்பவும் காட்டினார்.
தன்னை அவன் தன் வலைக்குள் மிக அழகாக இழுத்துக்கொண்டுவிட்டது அவருக்குத் தெளிவாகப் புரிந்தது.
வேறு வழியற்றுக் கூலிக்குக் கொலை செய்ய வந்தவன் பற்றிய தகவல்களை அவனிடம் கொடுத்தார். அவன் கொழும்பைச் சேர்ந்தவன். உடனேயே கதிரவனுக்கு அதை அனுப்பி, கொழும்பு காவல்துறையினரைக் கொண்டு அவனைக் கைது செய்வதற்கு அங்கிருந்தே ஏற்பாடு செய்துவிட்டு எழுந்துகொண்டான்.
“என்ர பேரன்?” என்றார் அவர் கேள்வியாக.
பணம் கொடுத்து ஒருவனை ஏவி விட்டுவிட்டு, இன்று தன் பேரனைக் காப்பாற்ற வேண்டும் என்றதும் அவனையே மாட்டிவிட்ட அந்தக் குள்ளநரியின் மீது உள்ளுக்குள் வெஞ்சினம் மூண்டாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் பார்த்தன் எல்லாளன்.
பணத்துக்காக இரண்டு உயிர்களைப் பறிக்கத் துணிந்தவன் தண்டனைக்குரியவன்தான் என்றாலும் அவனை ஏவிய இவனை விடுவதா? இப்போதைக்கு விட்டு வைக்கத்தான் வேண்டும் என்று எண்ணிக்கொண்டு, “முதல் அவன் எங்கட கைக்கு வரோணும். உண்மையாவே அவன்தான் கொலை செய்தவனா எண்டுறது உறுதியாகோணும். அதுக்குப் பிறகு உங்கட பேரன் வருவான்” என்றான் நிதானமாக.
“இது நியாயமில்லை எல்லாளன்.”
“அந்தளவுக்கு நீ என்ன நியாயவானா?” என்று சட்டென்று மரியாதையைக் கையை விட்டுவிட்டுச் சீறினான் எல்லாளன். “வாசுவை கொன்றுபோட்டு காண்டீபன் எண்டு சொன்ன ஆக்கள் தானே அப்பனும் மகனும். நானா உன்ர பேரனை விடுற வரைக்கும் பொறுத்திரு!”
வாழ் நாளில் இப்படி ஒரு சூழ்நிலையை அவர் சந்தித்ததேயில்லை. இரத்தம் கொதித்தது அவருக்கு. அந்த வயதிலும் ஆத்திரத்தில் அவர் முகத் தசைகள் துடித்தன. ஆனால் வசமாகச் சிக்கிக்கொண்டாரே. பேரன் கிடைக்கிற வரை அமைதியாகத்தான் இருக்க வேண்டியிருந்தது.
“வேந்தனையாவது கொடுமை செய்ய வேண்டாம் எண்டு வாசுட்ட சொல்லிவிடுங்க எல்லாளன்.” என்றார் அப்போதும் தயவாய்.
“பாக்கேலாம இருக்கா? தாங்கேலாம இருக்கா? அவனை நீயும் சேந்துதானாமே எல்லாம் செய்தனி? அவன் துடிக்கிறதப் பாத்து அப்பனும் மகனும் சிரிச்சீங்களாமே. இப்ப இவன் துடிக்கிறதையும் ரசிச்சுப் பார்!” என்றுவிட்டுப் போனான் அவன்.
அன்று இரவே கூலிக்குக் கொலை செய்தவன் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டான். விசாரணையில் அவன்தான் கொலை செய்தான் என்று தெரியவந்தது. ஆனால், சிவநாதர்தான் செய்யச் சொன்னார் என்று சொன்னவனிடம் அப்படி அவர் சொன்னார் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. அவனைச் சிவநாதர் காட்டிக்கொடுத்த போதே இதை எல்லாளன் எதிர்பார்த்தான்.
இந்தப் பக்கம் காண்டீபனை எப்படி வலைவீசித் தேடியும் தேவனால் அவனைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை. நிச்சயம் இதன் பின்னால் இருப்பவன் எல்லாளன் என்று அவனுக்கு மட்டுமல்ல அவர்களின் டிப்பார்ட்மென்டுக்கே தெரிந்திருந்தது. அதற்கு எந்த ஆதாரங்களும் இல்லாததால் தொடர்ந்து தேடிக்கொண்டிருந்தனர்.
இரண்டு நாள்கள் கூடவே இருந்த தந்தையை மறுபடியும் காணவில்லை என்றதும் ஏங்கிப்போனான் அதிரன். அவனுக்கு என்ன சமாதானம் சொன்னாலும் கொஞ்ச நேரம்தான் கேட்டான். தன் மகன் இத்தனை பிடிவாதக்காரனா என்று மிதிலாவே வியந்து பார்க்குமளவில் இருந்தது அவனின் தந்தை மீதான தேடல்.

