அவன் பாவம் என்று எண்ணிய கதிரவன், “தீபுக் குட்டி, நீங்க வாங்க! நாங்க கடைக்குப் போயிற்று வருவம்.” என்று அவளைத் தூக்க முயன்றான். அவள் வர வேண்டுமே. அவன் கையில் அகப்படாமல் காண்டீபனைக் கைப்பற்றுவதிலேயே இருந்தாள்.
“ஐஸ்கிரீம் வேணாமா பிள்ளைக்கு? வாங்க வாங்கிக்கொண்டு வருவம்.” என்றவனின் செயல் அவளுக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கிவிட்டது. “போடா!” என்றாள் உருண்டைக் கண்களால் அவனை நன்றாக முறைத்து. ஒரு கணம் அதிர்ந்து நின்றுவிட்ட கதிரவன் சத்தமாகச் சிரித்தான்.
அப்போதுதான் கைப்பேசி அழைப்பு ஒன்றை முடித்துக்கொண்டு வீட்டுக்குள் வந்த எல்லாளன் ஆதினியை அனல் பார்வை பார்த்தான். உண்மையில் ஆதினியும் இதை எதிர்பார்க்கவில்லை. “தீபனா! என்ன பழக்கம் இது? மாமாக்கு சொறி சொல்லு!” என்று அதட்டினாள்.
காண்டீபனின் முகத்தில் முகம் புதைத்துச் சொல்ல மாட்டேன் என்கிற மறுப்பைச் செயலில் காட்டினாள் சின்னவள்.
ஆதினிக்குப் பயம் பிடித்துக்கொண்டது. இன்றைக்கு அவள் கணவன் நன்றாக மண்டகப்படி தரப்போகிறான். பின்னே, இது அவள் அவனிடம் பாவிக்கும் சொல். பிள்ளைகள் இல்லாதபோதுதான் கதைப்பாள். என்ன சில நேரங்களில் மாட்டிக்கொள்வாள்.
மனைவியின் சொல்லுக்கும் மகள் அடங்கவில்லை என்றதும் எல்லாளனின் கோபம் உச்சியைத் தொட்டது. “தீபனா!” என்றான் ஒற்றை அதட்டலாக.
அவனுக்குச் சின்னவள் எப்போதுமே அம்முக்குட்டிதான். நண்பனின் பெயர் கொண்ட தன் அன்னையின் இன்னொரு வடிவாகத்தான் அவளைப் பார்ப்பான். அப்படியான அவன், பெயர் சொல்லி அழைத்ததிலேயே நடுங்கிப்போன சிட்டு, கண்ணில் உருண்டுவிட்ட கண்ணீருடன் தந்தையைத் திரும்பிப் பார்த்தாள்.
காண்டீபனுக்கும் கதிரவனுக்கும் உள்ளம் உருகிப்போயிற்று. “விடு மச்சான்!” என்ற காண்டீபனையோ, “சேர், எனக்குப் பிடிச்சிருந்தது. ஒண்டும் சொல்லாதீங்க ப்ளீஸ்!” என்ற கதிரவனின் பேச்சையோ கேளாமல், “அப்பாட்ட வாங்கோ!” என்று அவளைத் தூக்கிக்கொண்டான்.
சின்னதாகச் சுருங்கிவிட்ட முகமும், உதட்டுப் பிதுக்களுமாக அவனிடம் தாவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு தோள் வளைவில் முகம் புதைக்கவும் தகப்பன் உருகிப் போனான். கண்டிக்க மனமேயில்லை. பிஞ்சின் நடுக்கம் அவன் உள்ளத்தையும் உடலையும் உருகிற்று. ஆனால் இது திருத்த வேண்டிய பழக்கமாயிற்றே. எதையும் காட்டிக்கொள்ளாமல், அவளைத் தன்னைப் பார்க்க வைத்து, “இப்பிடித்தான் மாமாவை போடா சொல்லுறதா? பாவம் எல்லா? பிறகு கதிரவன் மாமா கவலைப்படுவார் எல்லாம்மா?” என்று கனிவையும் கண்டிப்பையும் கலந்து கேட்டான்.
“போடா சொல்லக்கூடாதாப்பா?” உதட்டுப் பிதுக்கள் நீங்காமல் அழுகையை அடக்கிய குரலில் அவன் முகம் பற்றித் தலையை ஆட்டியாட்டி கேட்டாள் சின்னவள்.
“சொல்லக்கூடாது.”
“அப்ப வாடா சொல்லவா. கடிதவன் மாமா பாவம்தானே?” என்றவள் கேள்வியில் அந்தக் காவல்துறையே ஒரு நொடி ஒன்றும் புரியாமல் விழித்துவிட்டான்.
மொத்த வீடும் பக்கென்று சிரித்தது. அந்தச் சிரிப்பில் தான் என்னவோ சரியாக சொல்லிவிட்ட நினைப்பு சின்னவளுக்கு. அழுகை எல்லாம் அந்தமானுக்கு ஓடிவிட, “கடிடவன் மாமா வாடா!” என்று ஒற்றைக் கையால் அவனை அழைத்தாள்.
தகப்பன் கரைந்தே போனான். தன்னை மீறி, “அப்பான்ர அம்முக்குட்டி!” என்று அவளைக் கொஞ்சிவிட்டு, டா சொல்லக்கூடாது என்பதை அவளுக்குப் புரிய வைத்துவிட்டே விட்டான். அப்போதும், “தனியா ஆப்பிடு. உனக்கு இருக்கு!” என்று மனைவியிடம் பல்லைக் கடிக்க அவன் மறக்கவில்லை.
கணவன் வந்ததில் மிதிலாவின் ஒட்டு மொத்தக் கவனமும் அவன் புறம் திரும்பிற்று. அதுவரை மாதவன் தடுமாறுகிற பொழுதுகளில் அவள்தான் குழந்தையைப் பார்த்துக்கொள்வாள். அவன் அன்னையால் இப்போதெல்லாம் முற்றிலுமாக முடிவதில்லை. அவரையும் சேர்த்துப் பார்த்துக்கொள்ளவேண்டிய நிலையில் இருந்தான் மாதவன். இப்போது அவன் திணறுகையில் காண்டீபன் முன்னே சென்று நிற்க விரும்பாத கேதகி இயல்பாக அவன் உதவிக்கு வந்தாள்.
அதைவிட எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அந்தக் குழந்தையோடு பழகுவது அவளுக்கு இலகுவாய் இருந்தது. கூடவே அவள் நிலையும் தன் நிலையும் ஒன்றுதான் எனும் எண்ணம் அவளுக்கு. அவள் சின்ன வயதில் இருந்தே தகப்பன் இருந்தும் அந்த அரவணைப்பும் அன்பும் இல்லாமல் எப்படி வளர்ந்தாளோ அப்படி அந்தக் குழந்தை அன்னை இல்லாமல் வளரப்போகிறாள் என்கிற நினைப்பே அவளுள் குழந்தை மீதான பிணைப்பை ஆழமாக உண்டாக்கிற்று.
அதில் யாரும் கேளாமலேயே சின்னவளைத் தூக்கி வைத்துக்கொண்டாள்.
இந்தப் பக்கம் எல்லாளனின் வழிநடத்தலில் இனி என்றைக்கும் கஜன் வெளியே வரமுடியாதபடிக்கு அவன் மீதான வழக்கினை மிக நேர்த்தியாகப் போட்டு முடித்தான் கதிரவன். அவன் போதைப்பொருள்களுடன் பிடிபட்டது, அவன் குடும்பப் பின்னணி, மொத்தக் குடும்பமும் செய்துவந்த தொழில், அவர்கள் ஒவ்வொருவரும் இறந்த முறைகள், சிறையில் இருப்பதற்கான காரணங்கள் எல்லாம் சேர நிச்சயம் அவனுக்குப் பல வருடங்கள் சிறைத்தண்டனை தீரும்.
அதன் பிறகும் வெளி வராதபடியோ, அப்படியே வெளியே வந்தாலும் மீண்டும் சிக்க வைக்கவோ எல்லாளன், கதிரவன், அகரன் என்று ஒன்றுக்கு மூன்று சிங்ககங்கள் இருக்கிறார்கள். பிறகும் எதற்கு யோசிக்க.
இந்தப் பக்கம் தயாநிதி கொலை வழக்கு முதல் நாள் நீதிமன்றுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கேதகி சார்பில் சட்டத்தரணியாகக் களமிறங்கியவள் ஆதினி. அதன் படி, பதினோரு பேர் அடங்கிய குழு தயாநிதி வீட்டுக்குப் போனது, திரும்பி வருகையில் பன்னிரண்டு பேராகத் திரும்பி வந்தது, மிக்கி மினி மவுஸ் உடைகள் வாங்கிய கடைகளில் தெரிந்த முகங்கள், ஐஸ் கஃபேயில் அதே அவர்களே இருந்தது. அந்தக் கடை முதலாளியின் வாக்குமூலம், அதில் ஒருவனின் ஆப்பிள் மணிக்கூட்டின் அடையாளம், அந்தப் பதினோரு பேரினதும் கைப்பேசி சிக்னல் தயாநிதி குடும்பம் எரித்துக்கொள்ளப்பட்ட அந்த நேரத்தில் அங்கே காட்டியது என்று அத்தனை சாட்சியங்கள் குறித்தும் அவள் கேட்க கேள்விகளுக்கு அந்தப் பதினோரு பெருநாளும் ஒரே மாதிரியான பதில்களை சொல்ல இயலாமல் போயிற்று.
ஒருவர் சொன்னதற்கு மாறாக மற்றவர் சொன்னது, அவர்கள் தடுமாறியது, உளறிக்கொட்டியது, கேதகியின் சாட்சி என்று எல்லாமாகச் சேர யாராலும் எதுவும் செய்ய இயலாமல் போயிற்று.
கடைசியில் அந்தப் பதினோரு போரையும் முறையாக விசாரித்து, அவர்களின் வாக்குமூலங்களை பெற்று நீதிமன்றில் ஒப்படைக்க வேண்டும் என்று காவல்துறைக்கு ஆணையிட்டு அந்த வழக்கினைத் தள்ளி வைத்தார் நீதிபதி. எல்லாளனுக்கு இது போதாதா? தன் பணி இடைநீக்கக் காலம் முடியட்டும் என்று காத்திருந்தான்.
அதைவிட அந்த வழக்கிற்காக சிவநாதரால் நியமிக்கப்பட்ட வக்கீல், சிவநாதர் காணாமல் போய்விட்டார் என்கிற தைரியத்தில் வாங்கிய பணத்திற்கு வந்துவிட்டுப் போனார்.
அப்பா எங்கே என்று விசாரித்த வேந்தனுக்கு கஜனும் இப்போது சிறையில் இருப்பதும் சிவநாதர் தலைமறைவாகிவிட்டதும் சொல்லப்பட்டன. திகைத்துப்போனான். அவரின் நிழலில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு திரிந்தவன் அவன். அவரே இல்லை என்றால் அவன் பூஜ்ஜியம்தான். அடுத்து என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவேயில்லை.
தொடரும்…

