ஆட்டநாயகன் 48.1

அத்தியாயம் 48

கிட்டத்தட்ட காண்டீபனைச் சுற்றியிருந்த அத்தனை பிரச்சனைகளையும் விலக்கி, அவற்றை எல்லாம் சட்டத்தின் முன்னே கொண்டுவந்திருந்ததில் அத்தனை பேருக்கும் மிகுந்த ஆசுவாசம்.

நீதிமன்றம் அழைக்கிற நாள்களில் எல்லாம் சென்று, எதிர்த்தரப்பின் விசாரணைக்கு அவன் பதில் சொல்லத்தான் வேண்டும். ஆனாலும் இனித் தலைமறைவு வாழ்க்கை தேவை இல்லை என்பதும், அவன் இந்த உலகில் வாசுசேனன் என்கிற பெயரில் சுதந்திரமாக நடமாட முடியும் என்கிற நிலையும் மிகப்பெரிய ஆசுவாசத்தை உண்டாக்கிற்று.

இன்னும் கொஞ்ச நாள்களுக்கு அவர்களை அங்கேயே இருக்கச் சொன்னான் எல்லாளன். இதை மிதிலா எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு என்று தனியாக அறை கொடுக்கப்பட்டிருந்தாலும் இளந்திரையன், கேதகி, அகரன் குடும்பம், எல்லாளன் குடும்பம், மாதவன் குடும்பம், குழந்தைகள் என்று அந்த வீடு முழுக்க ஆள்கள் நிறைந்திருந்தனர்.

அப்படிக் கலகலப்பாக இருப்பது மனத்திற்கு மிகுந்த ஆறுதலையும், எங்களுக்கும் சுற்றம் சொந்தம் என்று ஆள்கள் இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கையையும் தந்தாலும் இப்போது அவளுக்குத் தேவையானது அவை இல்லை. கணவனோடான தனிமை. அவனோடான மனம் விட்டுப் பேசும் தருணம். அது இங்கே கிடைக்கவே கிடைக்காதே.

அதில் கணவன் திரும்பி வந்த கணமே தம் வீட்டுக்குச் சென்றுவிடத்தான் ஆசைப்பட்டாள் மிதிலா. எல்லாளன் சொன்னதற்கு மறுப்பாக எதையாவது சொல்லி, அவர்களை அழைத்துக்கொண்டு போக மாட்டானா என்கிற எதிர்பார்ப்புடன் அவன் முகம் பார்த்தாள்.

அவள் எதிர்பார்ப்புக்கு மாறாக அவன் மறுப்பெதுவும் சொல்லாமல் இருந்தது அவளுள் ஏமாற்றத்தை விதைத்தது. அதில் தானும் அமைதியாகிப்போனாள்.

எல்லாளன் எதையும் காரணம் இல்லாமல் சொல்லமாட்டான்தான். என்றாலும்…

ஏமாற்றம் நிறைந்து வழிந்த அவள் முகத்மும், ஏன் இப்படி என்பதுபோல் இயலாமையுடன் அவள் பார்த்த பார்வையும் காண்டீபனை விதைக்காமல் இல்லை. ஆனால், அவளோடு அவர்கள் வீட்டில் இருக்க காண்டீபன் மிகவுமே தயங்கினான். முதல் இருந்த இரண்டு நாள்களும் அங்கே தனியறையில் இருந்தான். இனி அது சாத்தியப்படும் என்கிற நம்பிக்கை இல்லை.

இங்கேயும் அவர்களுக்கு என்று கொடுக்கப்பட்ட அறையில்தான் படுக்கை என்றாலும் இரவில் மிதிலாவை உள்ளுக்கு விட்டு, மகனை நடுவில் போட்டு, கரையாகப் படுக்கும் காண்டீபன், நடு இரவுகளில் எதேற்சையாக மிதிலா விழித்துப் பார்க்கிற பொழுதுகளில் அந்த அறையின் தரையில் படுத்திருப்பான். அதுவும் அவள் எப்போதெல்லாம் எட்டிப் பார்க்கிறாளோ அப்போதெல்லாம் விழித்து ‘என்ன?’ என்பான்.

இப்படி எப்படி சிறு அசைவுக்குக் கூட விழித்துவிட முடிகிறது என்று அவளுக்குப் புரியவேயில்லை. முதல் இவன் உறங்குகிறானா என்கிற கேள்வி பெரும் சந்தேகமாய் எழுந்து நின்றது.

அடுத்த கட்டமாகத் தானும் இப்போது விடுப்பில் நிற்பதில் மனநல வைத்தியரிடம் அவனை அழைத்துச் சென்றான் எல்லாளன். காண்டீபன் மறுக்கவில்லை. அவனுக்கும் அவனைப் போட்டு நெரிக்கும் அத்தனை மனத்தளைகளில் இருந்தும் விடுபடவேண்டியிருந்தது. தன்னைக் கண்ணீருடனும் கவலையுடனும் நோக்கும் மனைவியின் துயரைத் துடைப்பதற்காகவாவது தான் நலன் பெற வேண்டும் என்று விரும்பினான்.

ஆனாலும் கூட பல வருட அனுபவம் பெற்ற, கிட்டத்தட்ட அறுபது வயதைத் தாண்டிய அந்த மனநல மருத்துவரால் காண்டீபனின் உள்ளத்தைத் திறக்க முடியவேயில்லை.

அத்தனையிலிருந்தும் வெளிவர விரும்பியவன் மனம் திறக்கமாட்டேன் என்று நின்றான். மாட்டேன் என்பதை விடவும் அவனால் முடியவில்லை. அப்படி ஒரு இறுக்கம்.

அந்த இறுக்கம் என்பது உண்மையான இறுக்கத்தின் வெளிப்பாடு அல்ல. பயத்தின் வெளிப்பாடு. அவனைத் தாக்கிய பேரதிர்ச்சியின் வெளிப்பாடு. பாதுகாப்பின்மையின் வெளிப்பாடு.

என்னதான் இன்று அத்தனையையும் கடந்து வந்துவிட்டாலும் அவன் ஆழ்மனம் இன்னுமே அப்படி ஒன்று தனக்குத் திரும்பவும் நடந்துவிடுமோ என்கிற அச்சத்தில் உறைந்துபோய் இருந்தது. எப்போதும் அது நடந்துவிடக்கூடாது என்கிற கவனத்தோடு இருந்தான். அதனாலேயே அவனை யார் நெருங்க நினைத்தாலும் தன் மூர்க்கத்தை வெளிப்படுத்தி, தள்ளி வைக்கத் தன்னிச்சையாகவே முயன்றான். அது மிதிலாவைக் காயப்படுத்திவிடுமோ என்கிற பயம்தான் அவனை அவளிடமிருந்து தள்ளி நிறுத்துவதும்.

ஒரு நாளோ, சில மணி நேரங்களோ அனுபவிக்கும் பாலியல் வதைகளே ஒருவரின் வாழ்க்கை முழுவதையும் பாதிக்கப் போதும் என்கையில் இவன் இரண்டு வருடங்களாக அதை அனுபவித்திருக்கிறான். அவனை மறுசீரமைப்பது என்பது இலகுவாய் நடக்காது என்று வைத்தியருக்கே புரிந்தது.

அது காலவோட்டத்தின் வேகத்தில் கரையை அரிக்கும் அலையாய் அவனே அறியாமல் அவனுக்குள் நிகழப்போகும் மாற்றம். அதைத் தூண்டிவிடும் தூண்டுகோலாக மட்டுமே அவர் இருக்கப் போகிறார்.

உண்மையில் அத்தனைக்குப் பிறகும் அவன் இந்தளவில் தெளிவாய் இருப்பதே அவன் மனத்திடத்தின் வெளிப்பாடு என்றார். வேறு யாராகவும் இருந்திருக்க இன்று உயிரோடு இருக்க மாட்டார்கள், இல்லையா மனப்பிறழ்ச்சி அடைந்திருப்பார்கள் என்று அவர் சொன்னதை உள்ளுக்குள் அழுதபடிதான் எல்லாளன் கேட்டான்.

அதுதான் மிருகம் போன்று உடற்பயிற்சி செய்து, அவன் உள்ளத்தினுள் எழுந்தடங்கும் ஆக்ரோசத்துக்கும் ஆத்திரத்துக்கும் தீனி போடுகிறான் என்று இப்போது புரிந்தது. இன்னுமே அவன் நண்பர்கள் இருவரோடும் நேரம் கிடைக்கிற பொழுதுகளில் எல்லாம் அந்த வீட்டுக்குச் சென்று ஆக்ரோஷமாய் அடிபடுவதை அவன் விடவில்லை.

அன்றும் சிவநாதர் ஏவி விட்டவர்களை அவன் தாக்கிய வேகத்தையும் மூர்க்கத்தையும் கண்டு எல்லாளன் ஆடிப்போனான். உயிர் ஏதும் போய்விடுமோ என்று பயந்து அவர்களை அடிப்பதை விட்டுவிட்டு இவனைக் கட்டுப்படுத்துவதற்குத்தான் எல்லாளன் பெரும்பாடுபட்டான்.

அதன் பிறகான நாள்களில் தனிக்கவனம் எடுத்து அவனைக் கவனித்துக்கொண்டார் வைத்தியர். கட்டாயமாக மனம் திறந்தே ஆகவேண்டும் என்று அவனைத் தூண்டவில்லை. தன்னை அவனுக்குத் தெரிந்த ஒரு நபராக்கி, அவர் பார்த்த பல கேஸ்கள் பற்றி விளக்கி, முதலில் அவனை இலகுவாக்கினார்.

இதற்கே அவருக்கு ஒரு வாரம் பிடித்தது. கூடவே நீ பாதுகாப்பான கைகளிடம் வந்துவிட்டாய், அத்தனையில் இருந்தும் மீண்டுவிட்டாய், இனி அப்படி ஒன்று நடக்காது என்பதைப் பல வடிவங்களில் எடுத்துரைத்தார்.

இறுக்கம் என்கிற போர்வையில் அவன் தன் பயத்தை, கோபத்தை, அவமானத்தை, துக்கத்தை மறைத்து வைத்திருப்பதைக் குறித்துப் பேசி அவற்றை வெளிப்படுத்தகி சொன்னார். எல்லாவற்றையும் தனக்குள்ளேயே வைத்துக் குறுகுவதை, அழுவதை, இத்தனை அசிங்கமாகிப்போனோமே என்கிற நினைப்பை எல்லாம் விட்டுவிடச் சொன்னார். அவற்றை அவன் வெளியேற்ற வெளியேற்றவே அவன் இலகுவாவான்.

இத்தனைக்குப் பிறகும் கூட அவனிடம் எந்த மாற்றமும் இல்லை. அப்படியே அவன் எதைப் பேசினாலும் அதில் எல்லாளன் இருந்தான். அதைக் குறித்துக்கொண்டவர் எல்லாளனைத் தனியாக அழைத்து, அவனோடு நேரம் செலவிடச் சொன்னார். அதன்போது அவனைப் பேசவிட்டுக் கேட்கச் சொன்னார்.

இந்த இடைப்பட்ட நாள்களில் சுவாசப் பயிற்சி, தியானம், கடினமாக அல்லாமல் மனதிற்கும் உடலிற்கும் நலன் சேர்க்கும் வகையிலான உடற்பயிற்சி போன்றவற்றைப் பரிந்துரை செய்தார்.

அடுத்த கட்டமாய் அவனைத் தினசரி வாழ்க்கையினுள் நுழைக்கச் சொன்னார். ஒரு வேலை, அது முடிந்து வந்தால் குடும்பத்தைப் பார்ப்பது, நாலு இடங்களுக்குச் செல்வது, அவனின் இறந்தகாலம் தெரியாத புதிய மனிதர்களோடு இயல்பாகப் பழகுவது, அவன் பொறுப்புகளை அவனிடமே ஒப்படைப்பது என்று அவன் போட்டு வைத்திருக்கும் குறுகிய வட்டத்தினுள் அவனை வைத்திருக்காமல் வெளி உலகத்திற்கு இழுத்து வரச் சொன்னார்.

error: Alert: Content selection is disabled!!