அதியாயம்-15
இருந்த நிலையிலேயே உறங்கிவிட்ட ராஜ், அடுத்த நாளின் விடியலின் வெளிச்சத்தில் கண்கள் கூச எழுந்துகொண்டான். அவனின் நடமாட்டத்தில் தங்கம், வேலன், அன்னம் என்று ஒவ்வொருவரா எழுந்துகொண்ட போதும் மரகதம் எழுந்திருக்கவில்லை.
முதல் நாள் மரகதத்தின் வீட்டில் கூடியிருந்த ஊர்மக்கள் தங்கள் வீடுகளுக்கு சென்றிருந்தனர். அவர்களைக் குறை சொல்லவும் வழியில்லை. தினக்கூலியில் வாழ்க்கையை ஓட்டும் ஏழை மக்களுக்கு அன்றைய உழைப்பே அன்றைய உணவுக்கு வழி. அப்படியிருக்க அவர்களும் இவர்களுடன் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாதல்லவா….
கவியைக் காணவில்லை என்பதில் அவர்களுக்கும் கவலை இருந்தபோதும் அதை விழுங்கிக்கொண்டு வேலைகளைப் பார்க்கச் சென்றுவிட்டனர்.
தேநீர் எடுத்துவந்த தங்கம் அங்கிருந்த மூவருக்கும் கொடுத்துவிட்டு மரகதத்தின் கப்புடன் அவர் அருகில் சென்று மெல்லத் தட்டி எழுப்பினார்.
மரகத்திடம் அசைவே இல்லை. தங்கம் பலதடவைகள் தட்டியபோதும் அவர் எழுந்துகொள்ளாமல் இருக்கவே பதற்றம் தொற்றிக்கொண்டது அனைவருக்கும்.
பதட்டம் கொண்ட ராஜ் அவரின் மூக்கில் விரல் வைத்துப் பார்க்க, மிக மெல்லியதாக உணர்ந்த சுவாசம் உயிர் இருப்பதைச் சொன்னாலும் உணர்வற்ற நிலையில் இருந்தார்.
உடனேயே ராஜுவும் வேலனும் அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.
ராஜின் தந்தை அனுமதிக்கப்பட்டிருந்த அதே வைத்தியசாலைக்கே மரகதத்தையும் கொண்டு செல்ல, அங்கு அவரைப் பரிசோதித்த வைத்தியர், மன அழுத்தமே இந்த மயக்கத்துக்குக் காரணம் என்றார்.
மருந்து மாத்திரைகளை விட, மனக் காயத்தை குறைக்க முயற்சிப்பதே அவருக்கான சிறந்த மருந்து என்று சொல்லவும், கவியை உடனடியாகக் கண்டு பிடித்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் இன்னும் கூடியது ராஜுக்கு.
வேலனை மரகதத்துக்குத் துணையாக வைத்தியசாலையில் இருக்கச் சொல்லிவிட்டு, திரும்பவும் பெரியார் மலைக்குச் சென்று, தகப்பனுக்கும் மரகதத்துக்கும் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு வந்து, வேலனிடம் கொடுத்து அவர்கள் இருவரையும் பார்த்துக்கொள்ளும்படி அவனிடம் சொல்லிவிட்டு ரவியின் வீட்டுக்கு விரைந்தான் ராஜ்.
ரவி மூலம் சகுந்தலாவிடம் பேசி போலீஸ்க்கு சென்று கவியைக் கண்டு பிடிக்கவேண்டும் என்று நினைத்தபடி சென்றவன், அவர்கள் வீட்டு அழைப்புமணியை அழுத்தினான்.
அழைப்புமணியின் சத்தத்தைக் கேட்ட சகுந்தலா, “யார் என்று பார்த்துவா?” என்று ரவியை அனுப்பிவைத்தார். இப்போது யாரையும் பார்க்கும் மனநிலையில் அவர் இல்லை!
“சரிம்மா….” என்றபடி வாசலுக்குச் சென்றவன், அங்கே நின்ற ராஜைப் பார்த்து அதிர்ந்துபோனான்.
அவனின் திகைப்பை உணராத ராஜ், “ரவி, நீ வீட்டில் நிற்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டே வந்தேன்டா…. நல்லகாலம்! நான் நினைத்ததுபோலவே நிற்கிறாய்.” என்றவன் தொடர்ந்து,
“நம் கவியைக் காணவில்லைடா. எங்கள் ஊர் முழுக்கத் தேடிவிட்டேன். எங்குமே அவள் கிடைக்கவில்லை… பாவமடா அவள், சின்னப்பிள்ளை. என்ன நடந்ததோ… எங்கே யாரிடம் மாட்டித் தவிக்கிறாளோ தெரியவில்லை….” என்று கண்கலங்கக் கூறியவனைப் பேச்சற்ற நிலையுடன் பார்த்திருந்தான் ரவி.
குற்ற உணர்ச்சி ஒருபக்கம், இவனிடம் உண்மையைச் சொன்னால் என்ன செய்வானோ என்பது மறுபக்கம் என்று கொஞ்சம் பயமாக இருந்தது அவனுக்கு.
“உன் அம்மாவிடம் சொல்லி, அவர்களுக்குத் தெரிந்த போலீசிடம் சொல்ல….” என்று தொடர்ந்த ராஜின் பேச்சை, சகுந்தலா இடைமறித்தார்.
“வாடா பெரிய மனிதா வா. உன்னைத்தான் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன். உன்னுடன் என் மகனைப் பழக விட்டதற்கு நல்ல பரிசு தந்துவிட்டாய்! உன் கூடப் பிறக்காத அந்தக் கழுதையை என் பிள்ளையுடன் கோர்த்துவிட நினைத்தாயா..? எங்கிருந்தடா வருகிறீர்கள் எல்லோரும்? பணம் வேண்டும் என்றால் உழைத்துச் சம்பாதிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு இப்படிப் பெண்களை வைத்துச் சம்பாதிக்க நினைக்கக் கூடாது!” என்று இருந்த ஆத்திரத்தில் வார்த்தைகளை அமைலமாகக் கொட்டினார்.
உள்ளே இருந்த சகுந்தலாவுக்கு ராஜின் குரலைக் கேட்டதுமே கோபம் பொங்கியது. அதுவும் அவன் கவியை ‘சின்னப்பிள்ளை’ என்றது இன்னும் சினத்தை கொடுக்கவே, அறையை விட்டு வெளியே வந்தவர் யோசிக்காமலேயே வார்த்தைகளை அள்ளி வீசினார்.
“ஆன்ட்டி! கதைப்பதை யோசித்துக் கதையுங்கள்! முதலில் நீங்கள் யாரைப் பற்றிச் சொல்கிறீர்கள்? அதை முதலில் சொல்லுங்கள்!” என்றான் அதட்டலாக.
எப்போதும் நிதானமாக இருக்கும் ராஜை நடந்துகொண்டிருந்த பிரச்சினைகள் தடுமாற வைத்துக்கொண்டிருந்தது. இதில் சகுந்தலாவின் வரைமுறைகளற்ற பேச்சு கோபத்தைக் கொடுக்க, சற்றே அதட்டலாகச் சொல்லிவிட்டான்.
வீட்டின் பின்பகுதியில் இருந்த கவியின் காதுகளுக்கு ராஜின் கோபத்தில் உயர்ந்த குரல் கேட்டுவிடவே, தாயைக் கண்ட கன்றாகப் பாய்ந்து ஓடிவந்தவள், “ராஜண்ணா….” என்று கதறியபடியே அவனைக் கட்டிக்கொண்டாள்.
அவனின் குரலைக் கேட்கும் வரை அவள் மனதில் பயம், நடுக்கம், பாதுகாப்பற்ற தன்மை அத்தனையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. ராஜின் குரல் அவளுக்கான ஆதரவுக்குரலாய்க் கேட்க வேகமாக ஓடிவந்தவள், தன்னை மறந்து அவனைக் கட்டிக்கொள்ளவும் அதைப் பார்த்த ரவியின் முகம் சுருங்கியது.
இந்த இரண்டு நாட்களும் அவள் கூடவே இருக்கும் அவளின் கணவனான என்னை ஒரு நாள் கூடி அணைத்தது இல்லை. அவனைக் கண்டவுடன் மட்டும் அணைக்கத் தோன்றுகிறதோ என்று கோணல் புத்தி அவனுக்கு வேலை செய்தது.
“இதோ.. இவளைப் பற்றித்தான் சொல்கிறேன்! முட்டைக் கண்ணீர் வடிக்கிறாள். அத்தனையும் நடிப்பு! இப்படி நடித்துத்தான் ரவியை வளைத்தாளா இவள்? அதற்கு நீ உடந்தை.. அப்படித்தானே…” நச்சுப்பாம்பாய் அவர் கொட்டிய வார்த்தைகள் காதில் விழுந்தாலும், கவியைக் கண்டதில் ராஜின் மனது பெரும் நிம்மதி அடைந்தது.
அப்படி நடந்திருக்குமோ இப்படி நடந்திருக்குமோ என்று கற்பனையிலேயே எதையெதையோ பயந்திருந்தவனுக்கு, அவளை நேரில் கண்டதும் சகுந்தலாவின் பேச்சை ஒதுக்கி,
“கவி இங்கேயா இருக்கிறாய் நீ? என்னம்மா இது இப்படியா செய்வாய்? ரவி நீயாடா இவளைக் கண்டு…” அவளை ரவிதான் எங்கிருந்தோ கண்டுபிடித்துக் கூட்டிவந்திருக்கிறான் என்று நினைத்தவனின் கண்களில், அவளின் கழுத்தில் தொங்கிய தாலி பட்டது.
“என்ன கவி இது? தா..லியா? யார்.. என்ன நடந்தது கவி…?” திகைப்போடு கேட்டான் ராஜ்.
“அவன்… வர்மாதான் அண்ணா கட்டினான்….” என்றாள் கவி, ரவியைச் சுட்டிக் காட்டி.
“என்னது??” அதிர்ச்சியுடன் கேட்ட ராஜ், கவியையும் ரவியையும் மாறி மாறிப் பார்த்தான்.
ரவியா? அவன் நண்பனா? என்னையும் அண்ணா என்று அவளைக் கூப்பிடச்சொல் என்று சண்டை பிடிக்கும் ரவியா கட்டினான்?
ஆனால் கவி? அங்கே மரகதம் ஆன்ட்டி…
அவரின் நினைவு வந்ததும், அவர் துடித்த துடிப்பும், மகளைத் தேடிக் காடுமேடெல்லாம் அவர் அலைந்ததும், கடைசியில் இன்று பேச்சு மூச்சற்று மயக்கத்தில் கிடக்கும் மரகதமும் அவன் கண்முன்னால் படமாக விரிய, அளவற்று வந்த கோபத்தில், “அங்கே உன் அம்மா உயிருக்குப் போராட, உனக்கு இந்த வயதில் காதலோ?” என்று உறுமியவன், கவியின் கன்னத்தில் விட்டான் ஒரு அறை.
எதிர்பாராது விழுந்த அடியில், “அம்மா…” என்றபடி சுழன்று விழுந்தாள் கவி.
“டேய்…! என் மனைவியை அடிக்க நீ யாருடா?” என்று கோபத்தில் கத்திய ரவி, ராஜின் சட்டையைப் பாய்ந்து பிடித்தான். தன்னிடம் காட்டாத ஒட்டுதலை கவி ராஜிடம் காட்டியதில் உண்டான கோபமும் சேர்ந்துகொண்டது ரவிக்கு.
தன் சட்டையைப் பிடித்திருந்த ரவியை ஒரே தள்ளில் தள்ளிவிட்டான் ராஜ். இருவருக்கும் ஒரே வயதுதான் என்றாலும், சிறு வயது முதலே உழைத்து உரமேறிய உடலைக் கொண்ட ராஜால் ரவியைச் சமாளிப்பது இலகுவாக இருந்தது.
“அவள் என் தங்கையடா புத்திகெட்டவனே! உன் மனைவியா? அவளா? என்ன சொல்லி ஏமாற்றி அவளின் கழுத்தில் இந்தத் தாலியைக் கட்டினாய்?” என்று ரவியைப் பார்த்துச் சினம் கொண்டு சீறினான் ராஜ்.
மகனை ராஜ் தள்ளிவிட்டதும், ரவி கவியை ஏமாற்றியதாக அவன் சொன்னதும் சகுந்தலாவுக்கு சினத்தை உண்டாக்க, “அவளை ஒழுங்காக வளர்க்கத் துப்பில்லை. வந்துவிட்டாய் என் மகனைக் குறை சொல்ல! இவனைக் கேள்வி கேட்கிறாயே, பதினைந்து வயதில் ஆண்பிள்ளை கேட்கிறதோ உன் தங்கைக்கு? வெட்கமாய் இல்லை?” என்றார் இரக்கமின்றி.
“ஆன்ட்டி! பேசுவதை அளந்து பேசுங்கள்! கவி அப்படியானவள் இல்லை. உங்கள் மகன்தான் எப்போதும் அவளுடன் வம்பு வளர்ப்பானே தவிர அவள் இல்லை.” என்று அவரிடம் அடக்கப்பட்ட ஆத்திரத்தோடு சொன்னவன் கவியின் புறம் திரும்பி,
“கேட்டாயா இவர்கள் சொல்வதை? இந்தப் பேச்சுக்களைக் கேட்கவா உன் அம்மா உன்னை அவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தார்கள்?” என்று பாய்ந்தான்.

