எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு 15 – 3

“இல்லையில்லை. ஆனால் அந்த ஆன்ட்டி…. ம்.. வர்மா…..” மனதில் நினைப்பவைகளைச் சொல்லத் தெரியாமல் தடுமாறினாள்.

 

“உன்னைத் திட்டினார்களா?” ராஜ் கேட்க,

 

“இல்லை… ஆனால் வர்மா… அவன்… அவன்…என்னை…” என்று அவள் இழுக்கவும், “மிரட்டினானா….?” என்று கேட்டான் ராஜ்.

 

இரண்டு பக்கமும் அவள் தலை ஆடியது.

 

கவிக்கு, ரவி தன்னுடன் கொண்ட உறவைச் சொல்லும் விதமும் தெரியவில்லை. ஆண்பிள்ளை ராஜிடம் சொல்லலாமா என்றும் தெரியவில்லை. இதில் தயக்கம் வேறு.

 

அவளின் தடுமாற்றத்தில் பயந்திருக்கிறாள் என்று நினைத்த ராஜ், “சரி.. நீ பயப்படாதே. நான் ரவியிடம் சொல்கிறேன் உன்னை ஒன்றும் சொல்லக்கூடாது என்று. சரியா?” என்று கேட்டான் இரக்கத்துடன்.

 

“ம்…ம்…”

 

திரும்பி ரவியைப் பார்த்துக்கொண்டே, “நீ உள்ளே போ…” என்றான் ராஜ்.

 

அவனின் உதட்டசைவை வைத்து அவன் சொன்னதைப் புரிந்துகொண்ட ரவி, அவர்கள் அருகே வந்தான்.

 

அவனுக்கு ராஜ் கவியைக் கூட்டி செல்லவில்லை என்பது ஒருவித சந்தோசத்தைக் கொடுத்தது.

 

ரவி அருகே வரவும், அவனை நேராக நிமிர்ந்து பார்த்த ராஜ், “நண்பன் என்று நம்பிப் பழகியதற்கு நல்ல பரிசு தந்திருக்கிறாய். கள்ளம் இல்லாமல் பழகியவளின் வாழ்க்கையையே கேள்விக்குறி ஆக்கிவிட்டாய். நீயெல்லாம்..” என்று ஆத்திரத்தோடு ஆரம்பித்த ராஜ், பல்லைக் கடித்துத் தன்னை அடக்கினான்.

 

ராஜின் பேச்சில் கோபம் வந்தபோதும், அதில் இருந்த உண்மையில் வெட்கியும் போனான் ரவி.

 

கவியின் பக்கமாகக் கையை நீட்டி, “நீ செய்த வேலையினால் இவளின் அம்மா இப்போது வைத்தியசாலையில் இருக்கிறார். கழுத்தில் தாலியுடன் இவளை நான் அவரிடம் கூட்டீக்கொண்டு போகமுடியாது. அதனால் ஆன்ட்டிக்கு உடம்பு சரியாகும்வரை இவள் இங்கேயே இருக்கட்டும்!” என்று ரவியின் முகமும் பாராது வெறுப்போடு சொன்னான்.

 

கவியின் புறம் திரும்பி, “பயப்படாமல் இரு! நான் தினமும் உன்னைப் பார்க்கவருவேன்…! உன்னை யாராவது ஏதாவது சொன்னால் என்னிடம் சொல்லு. எதற்கும் பயப்படக்கூடாது கவி. தைரியமாக இரு!” என்றான் மீண்டும். அது ரவிக்கான அறிவிப்பாக இருந்தது.

 

அவளின் அம்மாவுக்கு உடம்புக்கு முடியவில்லை என்றதில் உண்டான கவலையில் கவியின் கையை மென்மையாகப் பற்றிக்கொண்ட ரவி, “கவியின் அம்மாவுக்கு என்ன?” என்று ராஜை பார்த்துக் கேட்டான்.

 

“அதை அறிந்து நீ என்ன செய்ய போகிறாய்?” என்று ஆத்திரத்தோடு சீரிய ராஜ், அவர்களின் இணைந்திருந்த கைகளை முறைத்தான்.

 

அந்தப் பார்வையில் எதைக் கண்டாளோ, ரவியிடம் இருந்து தன் கையை உருவிக்கொண்ட கவி ராஜின் அருகில் நகர்ந்து நின்றுகொண்டாள்.

 

ரவிக்கு முகத்தில் அடித்ததுபோல் இருந்தது. அவள் தன்னை அவமதித்துவிட்டதாக உணர்ந்தான். கவி மீது ஒருவித உரிமை உணர்வு தோன்றியது. ராஜின் முன்னால் அதை நிலை நாட்டமுடியாமல் போனதில் கோபம் எழுந்தது. அவன் மனதின் அமைதி குலைந்துபோனது!

 

ரவியின் நிலை அறியாத ராஜ், “சரி கவி. நீ உள்ளே போ. நான் வருகிறேன்…..” என்றுவிட்டு ரவியிடம் சொல்லிக்கொள்ளாமலே வேகமாக வெளியேறினான்.

 

அவன் வெளியேறவும் தேவன் ரவி வீட்டுக்கு வரவும் சரியாக இருந்தது.

 

உள்ளே வந்தவன் ரவியுடன் கவியும் நிற்பதைக் கண்டு புருவங்களை உயர்த்தினான். அவர்களையே பார்த்துக்கொண்டு அருகில் வந்தவன் கவியின் கழுத்திலிருந்த தாலியைக் கண்டதும் அதிர்ச்சியோடு இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.

 

இப்போது கவி ரவியின் அருகில் நெருங்கி நின்றுகொண்டாள்.

 

“ரவி…??”

 

ரவிக்கும் தடுமாற்றமாக இருந்தது.

 

ராஜிடம் நெஞ்சை நிமிர்த்தி அவள் என் மனைவிடா என்று சொன்னவனால் தேவனிடம் ஏனோ அப்படிச் சொல்ல முடியவில்லை.

 

பதில் சொல்லாது நின்ற ரவியிடம், “இவள் எப்படிடா உன் வீட்டில்? அதுவும்….” என்றவனின் பார்வை அவள் தாலியைக் குறிப்பாகப் பார்த்தது.

 

“அவள் என்.. என் மனைவிடா…” என்ற ரவியின் குரல் தடுமாறியது. அதைச் சொல்லவே அவனுக்கு வெட்கமாக இருந்தது.

 

“என்னது? என்ன சொன்னாய்?” தான்தான் எதையாவது பிழையாக விளங்கிக்கொண்டோமோ என்று சந்தேகமாக இருந்தது தேவனுக்கு.

 

“நான் அவளைத் திருமணம் செய்துகொண்டேன்…” என்றான் குன்றலுடன்.

 

யாரின் முன்னால் அவளைத் திருமணம் செய்து காட்டவேண்டும் என்று நினைத்தானோ அவன் முன்னிலையில் அதைச் சொல்லவே தடுமாறினான் ரவி.

 

ஒரு நிமிடம் விக்கித்து நின்ற தேவன், “உனக்கென்ன மறை கழண்டு விட்டதாடா…?” என்று கோபமாகக் கேட்டான்.

 

ரவியின் பின்னே பதுங்கி நின்றவளையும் ரவியையும் ஏளனமாகப் பார்த்துவிட்டு, எதுவும் சொல்லாது வேகமாக அங்கிருந்து வெளியேறினான் தேவன்.

 

ரவிக்கோ மனதிற்கு ஒரு மாதிரியாக, ஏதோ அவமானமாக இருந்தது. தன் பாட்டிற்கு வீட்டுக்குள் திரும்பி நடந்தான். அவன் பின்னால் கவியும் சென்றாள்.

 

கவி திரும்ப வருவதைக் கண்ட சகுந்தலா, “இவள் இன்னும் போகவில்லையா?” என்று வெறுப்போடு கேட்டார்.

 

ரவிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. “இல்லைமா… அவளின் அம்மா உடம்பு முடியாமல் வைத்தியசாலையில் இருக்கிறாராம்… அவர் வீட்டுக்கு வரும்வரை இவளை இங்கேயே இருக்க சொல்லி ராஜ் சொன்னான்….” என்றான் மெல்ல.

 

கோபம் வந்தபோதும், ராஜிற்கும் வேறு வழி இல்லை என்பது அவருக்கும் புரிந்தது. அத்தோடு மகன் செய்த தவறால் இவற்றை எல்லாம் பொறுத்துத்தான் ஆகவேண்டும் என்று நினைத்தவர், “முடிந்தவரை அவளை விரைவாக அழைத்துபோகச் சொல்லு…” என்றார் வெறுப்பாக.

 

“ம்..ம்…”

 

சகுந்தலாவைப் பார்க்கவே பயமாக இருந்தது கவிக்கு. தனக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்குள் மெல்லப் புகுந்துகொண்டாள்.

 

இரவு உணவைச் சமைத்த சகுந்தலா, ரவியை அழைத்து அவனுக்குச் சாப்பாட்டைப் பரிமாறினார்.

 

தட்டில் கையை வைக்காமல், “கவிக்கு..?” என்று இழுத்தான் ரவி.

 

அவனை முறைத்துப் பார்த்துவிட்டு, விருப்பம் இல்லாமல் ஒரு தட்டில் உணவை இட்டவர், “நீ சாப்பிட்டுவிட்டு அவளுக்கு அங்கேயே கொண்டுபோய்க் கொடுத்துவிடு…” என்று, அவன் முகத்தைப் பாராமல் சொன்னவர் தனக்கும் போட்டுக்கொண்டு சாப்பிட்டார்.

 

அவளுக்குக் கொடுக்காமல் அவனால் ஒரு வாயைத் தன்னும் வாயில் வைக்க முடியவில்லை. உணவைப் பிசைந்தபடி, நேரத்தைக் கடத்திக்கொண்டிருந்தான்.

 

சாப்பிட்டு முடித்த சகுந்தலா அவனைத் திரும்பியும் பாராது எழுந்து தன்னரைக்குச் சென்றவர், அறை வாசலில் நின்று, “அவள் இங்கு இருக்கும் வரை அந்த அறையை விட்டு வெளியே வரக்கூடாது. முடிந்தவரை என் கண்ணில் படவேண்டாம் என்றும் சொல்லிவிடு. நீயும் தேவை இல்லாமல் அவளுடன் கதைக்கக் கூடாது. அவளுக்குச் சாப்பாட்டைக் கொடுத்துவிட்டுத் தூங்கப்போ! நாளைக்கு பள்ளிக்கூடம் போகவேண்டும்!” என்றவர் உள்ளே சென்றுவிட்டார்.

 

அவர் சென்ற உடனேயே உணவுத் தட்டோடு அவள் அறைக்குச் சென்றான் ரவி. அந்த அறையோடு குளியல் அறையும் இருந்ததில் குளித்திருப்பாள் போல, மீண்டும் பாவாடை தாவணியில் இருந்தாள் கவி.

 

அவளைக் கண்களால் அளந்தபடி, “இந்தா சாப்பாடு…” என்று அவன் கொடுக்கவும், தட்டை வேகமாக வாங்கியவள் வேக வேகமாக உண்டாள்.

 

அவளின் வேகத்தைப் பார்த்துவிட்டு குடிப்பதற்கு நீரையும் கொண்டுவந்து கொடுத்தவன், அதன் பிறகே தன்னுடைய உணவைப் பசியறிந்து உண்டான்.

 

உணவு உண்டபின் தனது அறைக்குச் சென்ற ரவியால் அங்கு இருக்கவே முடியவில்லை. கவியின் அருகாமை வேண்டும் என்று மனம் அடம்பிடித்தது.

 

ராஜ் வீட்டுக்கு வந்தபோது நடந்தவைகள் அவன் மனதில் வலம் வரவும், முகம் கோபத்தில் இறுகியது அவனுக்கு. அவள் கையைப் பிடித்ததுக்கே முறைத்தாயே, அவளை முழுதாகத் தொடுகிறேன் உன்னால் என்ன செய்ய முடியும் என்று மனதால் ராஜுடன் சண்டை இட்டவன், வேகமாக கவியின் அறைக்குச் சென்றான்.

 

வேகமாக நுழைந்தவனைப் பார்த்துப் பயந்து கட்டிலில் இருந்து எழுந்த கவி பின்னாலே நகர்ந்தாள். அவளின் அந்தச் செயல் அவனுக்கு இன்னுமே கோபத்தை உண்டாக்கியது.

 

எட்டி அவளின் கையை பிடித்துத் தன்னருகில் இழுத்து, “நீ என் பெண்டாட்டிடி… எதற்காக என்னைப் பார்த்து பயப்படுகிறாய். அவன் என்றால் மட்டும் ஓடுகிறாய்.” என்று உறுமியவன், அவளைத் தன் வசப்படுத்தினான் வேகமாகவே….

 

அவனது உடலின் தேவையாக அல்லாமல் உள்ளத்தின் அமைதிக்கான தேடலாக இருந்தது அது…..

 

error: Alert: Content selection is disabled!!