எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு 16 — 1

அத்தியாயம்-16

 

 

தனது அறைக்குள் கட்டிலில் சாய்ந்துகொண்ட சகுந்தலாவுக்கு அழுகை வரும்போல் இருந்தது. ரவியின் செயல் அந்தளவுக்கு அவர் மனதைப் பாதித்தது.

 

பதினெட்டு வயதான ரவிக்கே திருமணத்தின் நிதர்சனம் புரியாதபோது, பதினைந்து வயதான கவிக்கு என்ன தெரியும். இப்படியான இருவர் திருமண வாழ்வில் இணைவது அவர்களின் எதிர்காலத்தை முற்றிலுமாகப் பாதிக்கும். இதை ரவிக்குப் புரியவைத்து கவியை அவள் வீட்டில் விடவேண்டும். வேண்டுமானால் கொஞ்சப் பணத்தையும் கவிக்குக் கொடுக்கலாம். ஏழைப் பெண் அதைவைத்து எதையாவது செய்து முன்னேறட்டும் என்பதுதான் அவர் எண்ணமாக இருந்தது.

 

அப்படி அவர் யோசித்துக்கொண்டு இருக்கையிலேயே ராஜ் வந்துவிட்டான்.

 

அவன் வரவும் அவனுடனேயே கவியை அனுப்பிவிட்டால் பிரச்சினை முடிந்தது என்று அவர் நினைத்திருக்க அவனோ அவளை இங்கேயே விட்டுச் சென்றுவிட்டான்.

 

ஒருவிதத்தில் அதுகூட நல்லதுக்கே என்கிற எண்ணம் தோன்றியது அவருக்கு. மகன் கட்டிய தாலியுடன் அவள் செல்வது ரவியை ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்கலாம் என்று எண்ணினார். எப்படியாவது அது இல்லாமலேயே அவளை அனுப்பவேண்டும் என்றும் நினைத்துக்கொண்டார்.

 

தான் பெற்ற மகனா இல்லை அடுத்தவீட்டுப் பெண்ணா என்று வருகையில் அவர் மனத்தராசு மகன் பக்கமாகவே சாய்ந்தது. எனவே மகனை எப்படியாவது இந்தச் சிக்கலில் இருந்து விடுவிக்கவே நினைத்தார் அவர்.

 

இதை எல்லாவற்றையும் யோசித்த சகுந்தலா, தாலியைக் கட்டி மனைவி ஆக்கியவன், உடலாலும் அவளைத் தனதாக்கி இருப்பானா என்பதை யோசிக்கத் தவறினார். அவசரத்தில் யோசிக்காமல் தாலியைக் கட்டியவன் வீட்டுக்கு வந்தால் நடந்தவைகள் தெரியவரும் என்பதால் விடுதியில் தங்கியிருக்கிறான் என்று நிமட்டும்தான் நினைத்தார். அந்த இரவுகளில் என்ன நடந்திருக்கும் என்பதை யோசிக்கத் தவறினார்.

 

என் பிள்ளைக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைப்பது தானே தாய் மனம்! அவரும் அதையே நினைத்தார். நாளை அவனைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு இவளை ஒரு வழி செய்யவேண்டும் என்றும் எண்ணிக்கொண்டார்.

 

ரவி அன்றிரவு கவியின் அறையிலேயே உறங்கினாலும், மனதின் அமைதியின்மை அவனைச் சீராக உறங்க விடவில்லை. நேரத்துக்கே முழிப்பு வந்துவிடவும் எழுந்து தன் அறைக்குள் புகுந்துகொண்டான். அதில் அன்றிரவும் நடந்தவைகள் சகுந்தலாவுக்குத் தெரியாமலேயே போனது.

 

காலையில் எழுந்த சகுந்தலா மகனைப் பள்ளிக்கு அனுப்பிவைத்தார்.

 

பள்ளிக்கூடம் சென்ற ரவிக்கோ மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது!

 

அவன் திருமணம் செய்துகொண்டான் என்பது பள்ளி முழுவதும் பரவி இருந்தது. அதுவும் அழகற்ற, குண்டான, கறுப்பான பெண் என்பது அங்கே முக்கியமான விசயமாகப் பேசப்பட்டது. வாழ்வின் நிஜத்தை அறியா வயதல்லவா பதினெட்டு வயதென்பது….

 

வெளிக்கவர்சிக்கு மயங்கும் பருவம்… சமையல்காரியின் மகளை அதுவும் பதினைந்து வயதுப்பெண்ணைக் கட்டியிருக்கிறான் என்கிற விஷயம், மற்ற மாணவர்களிடமிருந்து அவனை ஒதுக்கியது. கண்ணன் தேவன் உட்பட….

 

இவனைப் பள்ளிக்கூட வாசலில் கண்ட கண்ணனோ, “இனிமேல் எங்களுடன் கதைக்காதே ரவி. என்னுடைய அப்பா நேற்றுக் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார், உன்னுடன் நான் சுற்றுவது தெரிந்தால் என் காலை அடித்து முறித்து விடுவாராம். உன்னுடன் சேர்ந்து நானும் கெட்டுவிடுவேன் என்று பயப்படுகிறார் அம்மா… அதனால் எங்களுடன் பேசாதே நீ…” என்றவன், அவனுடன் நின்று கதைத்ததே அவமானம் என்பது போல் பாய்ந்தடித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடினான்.

 

அதைக்கேட்டு திகைத்து நின்றான் ரவி.

 

நான் கெட்டு விட்டேனா? அப்படி என்ன கெட்ட செயல் செய்தேன் என்று தனக்குள்ளேயே குமுறியபடி வகுப்பறைக்குள் செல்ல, அவனருகில் யாருமே இருக்க மறுத்தனர்.

 

நான் என்ன தீண்டத் தகாதவனா? என்னைக் கண்டால் இப்படி ஓடுகிறார்களே எல்லோரும் என்று பொருமியபடி இருந்தவனுக்கு, பள்ளிக்கூட அதிபரிடம் இருந்து அழைப்பு வந்தது.

 

அங்கே சென்றால், அவரோ கேவலமான பார்வையுடன் அவனை எதிர்கொண்டார். அவரின் பார்வையிலேயே கூனிக்குறுகி நின்றான் ரவி.

 

வசதி உள்ள குடும்பத்து வாரிசு என்றபடியாலும், காலகாலமாக பிரபலமாக வாழ்ந்த குடும்பத்தவன் என்பதாலும் எங்கேயும் எல்லோராலும் மதிக்கப்பட்டே பழக்கப்பட்ட ரவிக்கு இவை மிகுந்த அவமானத்தைக் கொடுத்தது.

 

“வசதியான வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும் நீ மிகவும் நல்ல பிள்ளை என்று இதுவரை உன்னைப் பற்றிப் பெருமையாக நினைத்திருந்தேன். ஆனால் நீயும் விளையாட்டுப்பிள்ளை என்பதை நிரூபித்துவிட்டாய். இனி எங்கள் பாடசாலையில் உனக்கு இடம் கிடையாது. நீ இங்கே தொடர்ந்து படித்தால் உன்னைப் போல எல்லாப் பிள்ளைகளும் ஒழுக்கம் கெட்டுப் போவார்கள். அதனால் எங்கள் பள்ளியில் இருந்து உன்னை நீக்குவதாக முடிவு செய்துவிட்டோம். இனிமேல் இங்கே உனக்கு அனுமதி இல்லை.” என்றார் அதிபர்.

 

“இதை மாணவர்கள் எல்லோருக்கும் முன்னால் வைத்துச் சொல்லவேண்டும் என்பதுதான் என் விருப்பம். அப்போதுதான் மற்ற மாணவர்களுக்குத் தப்பு செய்வதற்குப் பயம் வரும். ஆனால் உன் அப்பா மிகவும் நல்ல மனிதர், அவரின் பெயர் கெட்டுவிடக்கூடாது என்பதால் தனியே கூப்பிட்டு எச்சரித்து அனுப்புகிறேன்..” என்றார் கடுமையான குரலில் அவர்.

 

அவர் முன் நிற்கவே அசிங்கமாக இருந்தது அவனுக்கு. இதே அதிபர் விளையாட்டுப் போட்டிகளில், படிப்பில் எல்லாம் இவன் முதல் பரிசுகளை வாங்கியபோது,’உன்னால் எங்கள் பள்ளிக்கு பேரும் புகழும் கிடைத்திருக்கிறது ரவி’ என்று அவனைப் பாராட்டி இருக்கிறார். அவன் முதுகில் பெருமையோடு தட்டிக் கொடுத்திருக்கிறார். இன்று அவரே அவனைப் பார்த்து இப்படிச் சொல்லிவிட்டாரே! அப்படி என்னதான் பிழை செய்தேன் நான்?

 

கவியைக் கட்டியதா? முதன் முதலாக அவளின் மேல் ஒருவித கோபம் வந்தது அவனுக்கு. அவளால் தான் எல்லாமே….

 

பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டதும், நேரே வீட்டுக்குச் செல்ல மனமின்றி அங்கே இங்கே என்று சுற்றிவிட்டு மாலையில் வீட்டுக்குச் சென்றான்.

 

நடந்ததை அறிந்த சகுந்தலாவும் ரவியைத் திட்டித் தீர்த்துவிட்டார். தாயின் திட்டைக் கேட்க முடியாமல் தனது அறைக்குச் சென்றவனுக்கு எல்லாமே வெறுப்பாக இருந்தது.

 

நண்பர்கள் என்று செல்வதற்கு யாரும் இல்லாமல் அம்மாவிடமும் கதைக்க முடியாமல் தனியறைக்குள் அடைந்து கிடப்பது சிறை வாழ்க்கை போல் மூச்சு முட்டியது அவனுக்கு!

 

 

இங்கே வைத்தியசாலையில் மரகதத்துக்கு நினைவு திரும்பி இருந்தபோதும் நன்றாகச் சோர்ந்திருந்தார். ராஜின் தந்தையின் உடல்நிலை இன்னும் இன்னும் பின்னோக்கிச் சென்று கொண்டிருந்தது. அவர்கள் இருவரினதும் வேலைகளைப் பார்ப்பதிலேயே ராஜின் நேரம் பறந்தது.

 

மகள் கிடைத்துவிட்டாள் என்கிற சந்தோசமே மரகதத்தின் உயிருக்கு ஆபத்தாக முடியும் என்பதால், நாளை அவரின் உடல் நிலையைப் பார்த்துவிட்டுச் சொல்லலாம் என்று வைத்தியர் சொன்னதில் வேலனையும் அழைத்துக்கொண்டு ராஜ் வீட்டுக்குச் செல்ல நடு இரவைத் தாண்டி இருந்தது நேரம்.

 

பின்னே இவ்வளவு அலைச்சலுக்கும் அவனுடைய வாகனம் சைக்கிள் மட்டுமே. ஆட்டோவில் செல்வதற்கு பணம் வேண்டுமே… அதோடு ஒரு தடவையா அல்லது இரண்டு தடவையா போனால் போகிறது என்று ஆட்டோ பிடிக்க.

 

சைக்கிள் மிதித்து மிதித்தே கால்கள் விண்டுவிடும்போல் வலித்தது அவனுக்கு. அவனின் முக்கால்வாசி நேரத்தை அங்குமிங்குமான அலைச்சலே பிடித்துக்கொண்டபோதும், மனதின் திடமே அவனை இன்னும் துடிப்பாக நடமாட வைத்தது.

 

அடுத்தநாள், மரகதம் கொஞ்சம் தெளிந்திருந்தார். இனி ஆபத்து இல்லை என்று வைத்தியரும் சொல்லிவிடவே, அவனையே விழிகளால் கேள்வி கேட்ட மரகதத்தின் கையைப் பிடித்துக்கொண்டு கனிவாகச் சிரித்தான் ராஜ்.

error: Alert: Content selection is disabled!!