சுருங்கிய கண்கள் மலர அவனையே ஆவலுடன் அவர் பார்க்கவும், “ஆன்ட்டி, கவி கிடைத்துவிட்டாள்..” என்றான் கனிவோடு.
அந்த முதிய முகத்தில்தான் எத்தனை மலர்ச்சி! உதடுகள் சிரித்தபோதும் கண்கள் அழுதது…
“அவள்.. அவள் எங்கே… போனாளாம்? எப்..படி இருக்கிறாள்? என்ன….”
“ஆன்ட்டி! கவி நன்றாக இருக்கிறாள். அதுவும் எந்த ஆபத்திலும் சிக்காமல் மிக நன்றாக இருக்கிறாள். மிகுதியை வீட்டுக்கு வந்து விசாரியுங்கள். இப்போது நீங்கள் நன்றாக ஓய்வெடுத்து உங்களை தேற்றுங்கள். சரியா?” என்றான் சிறு கண்டிப்புடன்.
அவனிடம் இருந்து ஒன்றையும் அறிந்துகொள்ள முடியாமல் போனதில், மகளைத் தேடி அவரின் விழிகள் வேகமாக அந்த அறையைச் சுற்றி வந்தது.
தேதியைக் காணாமல் முகம் சோர, வேதனையோடு அவர் மீண்டும் அவனைப் பார்க்க, “உங்களுக்கு உடம்பு முடியவில்லை என்றதும் உங்களைப் பார்த்தே ஆகவேண்டும் என்று கவி அழுது அடம் பிடித்தாள். இங்கு வந்தாலும் அழுவாள் என்றுதான் நான் அழைத்துவரவில்லை. நீங்கள் வீட்டுக்கு வந்து உங்கள் மகளை ஆசைதீர பாருங்கள்..” என்றான் அவரை சமாதனாப்படுத்தும் விதமாக.
“நீ… நீ பொய் சொல்…கிறாயா?” பேசுவதற்குச் சிரமமாக இருந்தாலும் திக்கித் திக்கிக் கேட்டார் மரகதம்.
“நான் எப்போதாவது பொய் சொல்லி இருக்கிறேனா? கவி நன்றாக இருக்கிறாள் ஆன்ட்டி! நீங்கள் உங்கள் உடம்பைத் தேற்றுங்கள் முதலில்! அப்போதுதான் நாம் சீக்கிரமாக வீட்டுக்கு போகலாம்.. கவியையும் பார்க்கலாம்..” என்றான் அன்புக்கட்டளையாக.
அவரை ஒருவழியாக சமாதானப்படுத்தியவன் தன் அப்பாவுக்குத் தேவையான மருந்து வாங்குவதற்கு அலைந்தான். அதைவிட பள்ளிக்குச் சென்று அவன் வராத காரணத்தையும் அறிவிக்க வேண்டியிருந்தது.
கவியிடம் சொன்னதுபோல் அன்று அவளைச் சென்று பார்க்கமுடியவில்லை அவனால்.
ஆன்ட்டிக்கு நாளைக்கு இன்னும் நன்றாகிவிடும். நாளைக்கே சென்று அவர் சுகமாகிவிட்டதையும் சேர்த்துச் சொன்னால் இன்னும் சந்தோசப்படுவாள் என்று நினைத்துக்கொண்டான்.
அறையிலேயே முடங்கிக் கிடந்த ரவிக்கு வாழ்க்கையே வெறுத்தது. இனி படிப்பும் இல்லை நண்பர்களும் இல்லை என்று நினைக்கவே கசப்பாக இருந்தது.
எல்லாம் இந்தக் கவியால் வந்தது. என்றைக்கு அவள் என் கண்ணில் பட்டாளோ அன்றில் இருந்துதான் நான் கெட்டுப்போனேன். இவளால் தான் அம்மாவிடமும் திட்டு, இனி நண்பர்களும் மதிக்கபோவது இல்லை. ராஜுடனும் சண்டை இவளால் தான்.
இனி நான் எந்த முகத்தை வைத்துக்கொண்டு வெளியே செல்வேன். இனி இந்த ஊர் முழுவதுமே என் விஷயம் பரவிவிடும். மானம் மரியாதை எல்லாமே தொலைந்தது. எல்லாமே அவளால்தான் என்று அத்தனை பிரச்சினைகளுக்கும் கவியையே காரணமாக்கியது ரவியின் மனம்.
மனித மனம் அல்லவா. முள்ளு என் காலில் குத்திவிட்டது என்றுதானே சொல்வோம். முள்ளின் மேலே நான் காலை வைத்துவிட்டேன் என்று சொல்வதில்லையே… இதற்கு ரவி மட்டும் விதிவிலக்கா என்ன? அவன் செய்த தவறுகள் அத்தனைக்கும் கவியையே காரணமாக்கினான்.
தாய் இரவுச் சாப்பாட்டுக்கு அழைக்கவும், இப்போது எதைச் சொல்லித் திட்டபோகிறாரோ என்று நினைத்தபடி சென்றான். ஆனால் அவரோ அவன் முகமும் பாராது பரிமாறிவிட்டுத் தன் வேலையைப் பார்த்தார்.
உண்டு முடித்தவனுக்கு கவியின் நினைவு வர, அவளுக்கும் உணவைத் தட்டில் எடுத்து சென்று கொடுத்தான்.
அவனின் வரவுக்காக வாசலிலேயே காத்திருந்திருப்பாள் போல.. உணவுத்தட்டைப் பிடுங்கிச் சாப்பிட்டாள்.
நேற்றுப் பசியாக இருப்பாளே என்று பரிதாபப்பட்ட அதே அவன் மனது, இன்று ‘பார் பாய்ந்து பாய்ந்து விழுங்குவதை. உணவுக்காகவே உயிர் வாழ்கிறாள் போல..’ என்று ஏளனமாக எண்ணிக்கொண்டது.
இன்று முழுவதுமே அவளுக்கு சகுந்தலா பச்சைத் தண்ணீர் கூடக் குடுக்கவில்லை என்பதை அவன் அறியவில்லை.
இந்த வீட்டுக்கு மருமகளாக வருவதற்கு என்றுமே அவள் நினைக்கவே கூடாது என்று நினைத்ததில், ஒரு நாள் உண்ணாவிட்டால் ஒன்றும் ஆகாது என்று அவளுக்கு அன்று உணவைக் கொடுக்கவில்லை சகுந்தலா.
அதை அறியாத ரவியோ இன்னும் சகுந்தலாவின் நடமாட்டம் வீட்டுக்குள் இருந்ததில் தனது அறைக்குள் புகுந்துகொண்டான்.
அவர் தனது அறைக்குள் உறங்கச் சென்றுவிட்டார் என்பதை உறுதிப் படுத்திக்கொண்டவன், கவியின் அறைக்குச் சென்றான். அங்கே முழு நாளும் உணவில்லாமல் இருந்தவள் உண்ட களைப்பில் உறங்கி இருந்தாள்.
அவளை இவன் அணைக்கவும், பயத்துடன் திடுக்கிட்டு விழித்த கவி, ரவியைக் கண்டுவிட்டு கோபத்தில் அருகிலிருந்த பூச்சாடியை எடுத்து அவன் மண்டையில் அடித்துவிட்டாள்.
அதை எதிர் பாராத ரவியோ, “ஐயோ..அம்மா…” என்று அலறியபடி, நெற்றியில் வழிந்த இரத்தத்தை பொத்திப்பிடித்தான் ரவி.
உணவுக்காகக் காத்திருந்து காத்திருந்து ஏமாந்து, பசியில் அழுது மனதில் கோபத்தோடு கூடிய வன்மம் கொண்டு இருந்தவளுக்கு, அவன் அணைக்கவும், ‘சாப்பாடு தரத் துப்பில்லை இதற்கு மட்டும் வந்துவிட்டான்’ என்கிற கோபத்தில் அடித்துவிட்டாள்.
அவன் நெற்றியிலிருந்து வழிந்த இரத்தத்தைக் கண்டதும் பயம் வந்துவிட்டது அவளுக்கு. அடித்துவிடுவானோ என்று பயந்தவள், வேகமாக எழுந்து அந்த அறைக்கு வெளியே சென்று நின்றுகொண்டாள்.
ரவிக்கு கவி அடித்தது அவமானமாக இருந்தது. அதோடு அவனின் தேவையை அவள் மறுத்தது கேவலமாக இருந்தது. கோபத்துடன் பல்லைக் கடித்தவனால் அவளைத் திட்டவும் முடியவில்லை. அந்தச் சத்தத்தில் தாய் வந்துவிட்டால் மாட்டிக்கொள்வானே! கோபத்துடன் அவளை முறைத்தவன், நெற்றியைப் பொத்திப் பிடித்தபடி தன்னுடைய அறைக்குச் சென்றான்.
அடுத்தநாள் காலை நெற்றியில் பிளாஸ்டரோடு வந்தவனைப் பார்த்த சகுந்தலா, “நெற்றியில் என்ன காயம்?” என்று கேட்டார்.
நடந்தவைகளை சொல்லவா முடியும்…. “குளியலறையில் வழுக்கிவிட்டது அம்மா….” என்றான் முணுமுணுப்பாக. அதைச் சொல்லும்போதே நடந்ததை நினைத்தவனுக்கு அவமானத்தில் முகம் கன்றியது.
அவன் மேல் இருந்த கோபத்தில் அதற்கு மேல் சகுந்தலாவும் எதுவும் கேட்கவில்லை. அதுவும் ரவியைப் பலமாகப் பாதித்தது. எப்போதும் அவனுக்கு ஒன்றென்றால் வா வைத்தியரிடம் போகலாம் என்று துடிக்கும் அம்மா இன்று கவனிக்காமல் போகிறாரே என்று நினைத்தவனின் மனது, அதற்கும் கவியையே காரனமாக்கியது!
வீட்டில் இருக்கப் பிடிக்காமல், “அம்மா, நான் நம் தேயிலைத் தோட்டத்துக்குப் போகவா?” என்று தயங்கியபடியே கேட்டான்.
அவனை முறைத்தவர், “போய்வா… படிப்பைத்தான் தொலைத்துவிட்டாய். இனி வேலையாவது செய்! அங்கேயும் போய் இவளைப் போல் எவளையாவது கூலிக்கு வேலை செய்பவளைப் பிடிக்காமல் வேலையை மட்டும் பார்…” என்றார் வெறுப்பாக.
தாய் அப்படிச் சொன்னது அசிங்கமாக இருந்தது அவனுக்கு. அங்கே போகும் எண்ணமே வெறுத்தபோதும், வீட்டில் இருந்தால் அம்மா ஏதாவது சொல்வார் என்று நினைத்தவன் தோட்டத்துக்குச் சென்றான்.
ரவியின் வீட்டில் கவிக்கு பதினோரு மணியாகியும் காலை உணவு வரவில்லை. மறுபடியும் பசியில் அழுகை வந்தது. நன்றாக உண்ணும் வயதல்லவா, பசியைத் தாங்க முடியாமல் சகுந்தலா திட்டினாலும் பரவாயில்லை என்று நினைத்து அறையை விட்டு வெளியே வந்தாள் கவி.
சாப்பாட்டு அறையை இனம் கண்டு அதனுள்ளே சென்றவளின் பசியை, அங்கே மேசையில் இருந்த உணவின் வாசனை இன்னுமே கூட்டியது.
அதனருகில் சென்று மூடியைத் தூக்குவதற்காக கவி கையை நீட்டவும், “ஏய்! நீ இங்கே என்ன செய்கிறாய்?” என்று சகுந்தலாவின் கடினக்குரல் கேட்கவும் சரியாக இருந்தது.
நடுக்கத்துடன் கையை இழுத்துக்கொண்டவள், “ப…பசிக்கிறது…” என்றாள் கண் கலங்க.
“அதுக்கு?” என்று சகுந்தலா கேட்கவும் என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் திணறினாள்.

