எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு 16 – 3

“சாப்பிட……” எதையும் சொல்ல முடியாமல் பயத்தில் திக்கியது அவள் வாய்.

 

இரவு வேறு ரவிக்கு அடித்துவிட்டாள். அதை அவன் தன் தாயிடம் சொல்லி இருப்பானோ என்று அதுவேறு பயமாக இருந்தது. இதில் பசியால் வந்த கலக்கம் வேறு. கண்ணில் நிறைந்த கண்ணீர் இதோ விழுகிறேன் என்று நின்றது.

 

“நான் என்ன சத்திரமா நடத்துகிறேன். கண்டதுகளும் வந்து என் வீட்டில் வாய் வைக்க?” இரக்கமே இன்றிச் சொன்னார் சகுந்தலா.

 

“பசிக்…கிறது….” கன்னத்தில் கண்ணீர் வழியச் சொன்னாள் கவி.

 

“உனக்குப் பசித்தால் உன் வீட்டில் போய்ச் சாப்பிடு! என் வீட்டில் உனக்கு சாப்பாடு இல்லை!”

 

“எனக்கும் உங்கள் வீட்டில் இருக்க விருப்பம் இல்லை. உங்களை எனக்குப் பிடிக்கவே இல்லை! வர்மாதான் என்னை கூட்டிக்கொண்டு வந்தான்…” அழுகையோடு பேசிய கவிக்கும் கோபம் எட்டிப் பார்த்தது.

 

அவளின் வாய்த்துடுக்கும், தன்னைப் பிடிக்கவில்லை என்று துணிந்து அவள் சொன்னதும், தன் மகனை அவன் என்று அவள் சொன்னதும் சகுந்தலாவுக்கு பெரும் கோபத்தை உண்டு பண்ணியது.

 

“வர்மாவா? என் மகனின் பெயரையா சொல்கிறாய்? ஒரு அறை விட்டேன் என்றால் கன்னம் பழுத்துவிடும். யாரிடம் வந்து யாரைப் பற்றி மரியாதை இல்லாமல் பேசுகிறாய். அவன் கூப்பிட்டானாம் இவள் வந்தாளாம்.. நன்றாகத்தான் இருக்கிறது!” என்றார் நக்கலாக.

 

“ஒழுங்காக வாழத் துப்பில்லை. ஆனால் இந்த வாய்க்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. என்னைப் பிடிக்காவிட்டால் எதற்கு என் வீட்டில் இருக்கிறாய்? என் மகன் கூப்பிட்டவுடன் வந்துவிட்டாயே, எவன் கூப்பிட்டாலும் இப்படித்தான் போவாயா?”

 

“ஆன்..ட்டி.. இப்படி எல்லாம் கதை…க்கா..தீர்கள். வர்..மா தான் கூட்டி வந்..தான்….” அழுகையோடு சொன்னாள்.

 

“நான் அப்படித்தான் கதைப்பேன். இது என் வீடு! என் வீட்டில் என் விருப்பம் போலத்தான் நான் கதைப்பேன். நீ உன் வீட்டில் போய் உனக்கு விருப்பமானதை செய்! அடுத்தவர் வீட்டில் இருந்துகொண்டு சாப்பாடு கேட்கிறதோ உனக்கு?” அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அந்தச் சின்ன மனதைக் குத்திக்கிழித்தது.

 

“நான்… நான் என் வீட்டுக்கே போகிறேன்…” அழுதபடி சொன்னவள் வாசலை நோக்கி நடந்தாள்.

 

உள்ளூர மகிழ்ந்தபோதும், “நல்லது! இன்றோடு என் மகனைப் பிடித்த சனி தொலையட்டும்! ஆனால் போவதற்கு முதலில் உன் கழுத்தில் கிடக்கும் அந்தத் தாலியை தந்துவிட்டு போ..!” என்றார் சகுந்தலா.

 

கவியும் எந்த யோசனையும் இன்றி உடனேயே அதைக் கழட்டி அங்கிருந்த மேசையில் வைத்தாள். தாயும் தாலிக்கயிரைக் கழுத்தில் சுமந்து பாத்திராதவளுக்கு அதன் முக்கியத்துவம் தெரியாமல் போனது. அதை கழட்டியதில் அவளுக்கும் ஏதோ ஒருவித விடுதலை உணர்வே தோன்றியது.

 

சகுந்தலாவுக்கோ போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது. இவளை வெளியே அனுப்பவேண்டும், அதுவும் தாலி இல்லாமல் என்று நினைத்திருந்தவருக்கு அதை எப்படிச் செய்து முடிப்பது என்று தெரியாமலேயே இருந்தது.

 

அவர் எதிர்பாராமலேயே அவருக்குச் சந்தர்ப்பத்தை வழங்கிவிட்டாள் கவி. ஆனாலும் கழட்டுவாளா என்று மனதிற்குள் நடுங்கிக்கொண்டே தான் இருந்தார். என்றாவது ஒரு நாள் அந்தத் தாலிக்கயிரே மகனின் வாழ்க்கைக்கு பிரச்சினையாக அமைந்துவிட்டால்…..

 

அவள் அதைக் கழட்டிவிட்ட நிம்மதியில், “செலவுக்கு பணம் வேண்டுமானால் கேள் தருகிறேன்…” என்றார் அமைதியான குரலில்.

 

அவரைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தவள், “எனக்கு அடுத்தவரிடம் பிச்சை எடுத்துப் பழக்கம் இல்லை…” என்றுவிட்டு வேகமாக நடந்தாள்.

 

அழுதழுது நடந்தவளுக்கு இப்போது எங்கே போவது என்கிற யோசனை எழுந்தது. அம்மா இல்லாத வீட்டுக்குச் செல்வதால் பயனில்லை என்று நினைத்தவள், வைத்தியசாலைக்கே செல்ல முடிவு செய்தாள்.

 

அடுத்த பிரச்சினையாக பஸ்சுக்கு பணம் வேண்டுமே என்று நினைத்ததும் மீண்டும் அழுகை வந்தது.

 

என்ன செய்வது யாரிடம் கேட்பது… இங்கு யாரையும் பழக்கம் இல்லையே என்று யோசித்தபடி, வழியில் சென்றவர்களிடம் பஸ் தரிப்பிடத்துக்குப் போகும் வழியைக் கேட்டுக் கேட்டுச் சென்றாள்.

 

இனிப் பணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்தபடி காற்றில் கலைந்த முடிகளைக் காதுக்குப் பின்னால் ஒதுக்கியவளின் விரல்களில் காதில் போட்டிருந்த தோடு தட்டுப்பட்டது.

 

அங்கே இருந்த சிறிய பெட்டிக்கடைக்கு சென்றவள், காதிலிருந்த தோட்டைக் கழட்டி, “அண்ணா… இந்தத் தோடு தங்கம். இதை வைத்துக்கொண்டு எனக்குக் கொஞ்சம் பணம் தருகிறீர்களா?” என்று கேட்டாள் கண்ணீருடன்.

 

அந்தக் கடைக்காரர் சந்தேகமாக இவளைப் பார்க்கவும், “என்னுடைய அம்மா மலையக வைத்தியசாலையில் இருக்கிறார். அங்கே செல்வதற்கு என்னிடம் பணம் இல்லை அண்ணா. தயவுசெய்து இதை வைத்துக்கொண்டு அங்கே போவதற்கு உண்டான பணத்தை மட்டும் தருகிறீர்களா?” என்று கெஞ்சியவளுக்கு, விம்மலுடன் அழுகை வந்தது.

 

ஏழை வீட்டுப் பெண்ணாக இருந்தாலும் இதுவரை அவள் அடுத்தவரிடம் கையேந்தியது இல்லை! அதற்கு மரகதம் விட்டதும் இல்லை. இன்று பிச்சை எடுப்பது போல் உணர்ந்தவளுக்கு அழுகை வந்தது.

 

அவளின் முகத்தில் எதைக் கண்டாரோ, “தோட்டை நீயே வைத்துக்கொள்ளம்மா. பெண் பிள்ளைகள் தோடில்லாமல் இருக்ககூடாது. இந்தா, பஸ்ஸில் செல்வதற்குப் போதுமான பணம்” என்று பணத்தை எடுத்து நீட்டினார்.

 

அழுத கண்களால் சிரித்தபடி, “நன்றி அண்ணா! மிகவும் நன்றி. ஆனால் எனக்கு சும்மா தரவேண்டாம் நீங்கள். இதை வைத்துக்கொண்டு பணத்தைத் தாருங்கள்…” என்றவள், தோட்டை வைத்துவிட்டு பணத்துக்காக கையை நீட்டினாள்.

 

“என்னம்மா நீ. சொன்னால் கேட்கிறாய் இல்லையே…” என்று சலித்தவர், ” “எனக்குச் சரியாக எடை போடத்தெரியாது. அதனால் குத்துமதிப்பாக இந்தப் பணத்தை பிடி…” என்று தோட்டுக்குப் பதிலாக கொஞ்சம் அதிகமாக பணத்தை நீட்டினார்.

 

“நன்றி அண்ணா…..” என்றுவிட்டுப் பணத்தை வாங்கிக்கொண்டாள் கவி.

 

“உனக்குப் பணம் மீண்டும் கிடைத்தால் அதைத் தந்துவிட்டு உன் தோட்டை திரும்ப பெற்றுக்கொள்…” என்று அவர் கூறவும், சரி என்பதாகத் தலையை அசைத்துவிட்டு பஸ் வரும் இடத்துக்கு சென்று நின்றுகொண்டாள்.

 

மனதுக்குக் கொஞ்சம் தெம்பாக இருந்தது. அம்மாவைப் பார்க்கப் போகிறேன் என்று நினைத்த மாத்திரத்தில் மகிழ்ச்சியாகவும் இருந்தது அவளுக்கு.

 

பதினைந்து வயதில் திருமணமாகி, தாம்பத்தியத்தை விரும்பாமலேயே அனுபவித்து, தாலியின் சக்தியை உணராமலேயே அதைப் பெற்றும் ஐந்து நாட்களில் இழந்தும் விட்டாள் கவி!

 

வாழ்வின் நிதர்சனம் அறியா வயதிலேயே வாழ்வைத் தொலைத்துவிட்டாள்! தொலைந்தது தன் வாழ்க்கை என்பது புரிகையில்…???????

 

error: Alert: Content selection is disabled!!