அத்தியாயம்-18
கைபேசி அழைக்கவும் பழைய நினைவுகளில் இருந்து சிரமத்துடன் மீண்டான் ரவி. நந்தன் அழைக்கிறான் என்றது பேசி. ஆனாலும் எடுக்க மனம் இல்லாது அதையே பாத்திருந்தான்.
சில நொடிகளில் தன்னை நிதானப்படுத்திகொண்டு,”சொல்லு நந்தா..” என்றான் கரகரத்த குரலில்.
எதிர்முனை சிலநொடிகள் மௌனத்தில் கரைந்தது.
“ரவி…? என்னடா, எங்கே இருக்கிறாய்? உனக்கு ஒன்றும் இல்லையே. ஏன் உன் குரல் ஒரு மாதிரி இருக்கிறது…?” கவலையுடன் கேட்ட நந்தனின் அக்கறை ரவியை அறைந்தது.
இப்படித்தானே ராஜும்! குரலை வைத்தே என் மனநிலையைக் கணிப்பானே! மலையகத்தின் அத்தனை மூலைமுடுக்குகளிலும் ஒன்றாகச் சுற்றித் திரிந்தோமே… எல்லாமே பொய்யாகிப்போனதா? அல்லது சுய புத்தியற்று அழகான நட்பை இழந்துவிட்டேனா….
“டேய்! ரவி, லைனில் இருக்கிறாயா?” அந்தப் பக்கத்தில் இருந்து பதட்டத்துடன் கத்தினான் நந்தன்.
“சாரிடா. ஏதோ நினைவு. அதுதான். லைனில்தான் இருக்கிறேன். சொல்லுடா..” என்று ரவி சொன்னதும்,
“இவ்வளவு நேரமாக எங்கே போனாய்? நீ இப்போது எங்கே இருக்கிறாய்? இடத்தைச் சொல்லு, நான் வந்து அழைத்து வருகிறேன். அவளிடம் சொல்லாமல் போய்விட்டாய் என்று இங்கே தாரிகா கோபமாக இருக்கிறாள்.” என்றான் நந்தன்.
தன்னை மறந்து பூங்காவிலேயே இருந்துவிட்டதை அப்போதுதான் உணர்ந்தவன், “அவளிடம் எதையாவது சொல்லிச் சமாளிடா… இன்னும் கொஞ்சத்தில் வீட்டுக்கு வந்துவிடுவேன்…” என்றவனுக்கு, கன்னத்தில் நாலு போடலாமா இல்லை முதுகில் நன்றாக மொத்தலாமா என்று யோசித்தான் நந்தன்.
பின்னே, அவன் கேட்ட கேள்விகள் எதற்கும் பதிலைச் சொல்லாமல் தாரிகாவைச் சமாளி என்றால்….
“உனக்கு இன்று நிச்சயம் நடந்தது ரவி!” என்று உணர்ச்சிகள் அற்ற குரலில் ரவிக்கு நினைவு படுத்திய நந்தன், “நிச்சயம் நடந்த அன்றே அந்தப் பெண்ணைத் தனியே விட்டுவிட்டு நீ ஓடியது அவ்வளவு நல்லதாக என் மனதுக்குப் படவில்லை.” என்றான் ஒட்டாத குரலில்.
“நந்தா, நீ சொல்வது புரிகிறதுடா…..ஆனால்….ஆனா…” தடுமாறினான் ரவி.
“என்ன ஆனா நோனா என்கிறாய்.. முதலில் நீ எங்கிருக்கிறாய் என்று சொல்லு…” என்று சினந்த நந்தனிடம்,
“நீ வரவேண்டாம் நந்தா. நான் இதோ ஆட்டோவில் ஏறிவிட்டேன். வீட்டுக்கு வந்துகொண்டு இருக்கிறேன். நீ வை…” என்றுவிட்டுக் கைபேசியை அணைத்தான் ரவி.
தாரிகாவுக்கு என்ன சொல்லிச் சமாளிப்பது என்று யோசித்த ரவிக்கு மீண்டும் தலை வலித்தது.
இந்தப் பன்னிரண்டு வருடங்களாக வெளிப்பார்வைக்குச் சிரித்து வாழ்ந்தாலும் ஏதோ ஒருவித உணர்ச்சி உள்மனதை அரிப்பதை அவனால் தடுக்கவே முடிந்ததில்லை. அது குற்ற உணர்ச்சியா, பரிதவிப்பா அல்லது தப்பு செய்துவிட்டோமே என்கிற குன்றலா.. அவனே அறியான்.
ஆனால் அவன் மனதின் நிம்மதி தொலைந்து பன்னிரண்டு வருடங்கள் ஆகிவிட்டது!
அதற்கு முந்தய காலம், ராஜுடன் உண்டான நட்பும் கவியுடன் உண்டான சின்னச் சின்ன வம்பிழுப்புக்களும் என்று எவ்வளவு ஆனந்தமாகக் கழிந்தது!
கவியைத் தேடி ராஜ் ரவியின் வீட்டுக்கு வந்தபோதே அவனைக் கடைசியாகப் பார்த்தான் ரவி. அதன்பிறகு இன்றுதான் சந்தித்து இருக்கிறார்கள் இருவரும்.
கொழும்பு சென்ற ரவி படிப்பைச் சாக்காக வைத்து ஐந்து வருடங்கள் அங்கிருந்து நகரவே இல்லை. அதன்பிறகும் சகுந்தலாவின் வற்புறுத்தலாலேயே மலையகம் வந்தான்.
அவனுக்கு மட்டும் அல்லாது கண்ணன் தேவன் உட்பட அவனின் நண்பர்களுக்கும் பல அனுபவங்களைக் காலம் கற்றுக்கொடுத்திருந்தது . எனவே பழைய கதைகளை யாரும் மீண்டும் பேசாத போதும், கண்ணன் தேவனுடனான நட்பை வளர்க்கவில்லை ரவி.
அதன்பிறகு அவன் வாழ்க்கை மலையகத்திலே அமைதியுடனேயே கழிந்தது. புயல் வீசாதபோதும் தென்றலும் வீசவில்லை அவன் வாழ்வில்!
ஒருவித சலிப்புடன் தொழிலில் மட்டுமே கவனத்தை வைத்து, நாட்களைக் கடத்தியவனை சகுந்தலாதான் வவுனியாவுக்குப் போகலாம் என்று அழைத்தார்.
அவனுக்கும் அது பிடித்தமாகவே இருந்தது. காலங்கள் உருண்டோடினாலும் மனதின் காயங்கள் ஆறவே இல்லை அவனுக்கு!
இன்று அந்தக் காயங்கள் அத்தனையும் மீண்டும் வலியை கொடுத்தது!
இதுவரை ஒருவித கோபத்துடன் கூடிய வலியாக இருந்தது மாறித் தப்புச் செய்துவிட்டோமோ என்கிற தவிப்புடன் கூடிய வலியாக இருந்தது.
அவன் செய்தது பிழை என்பதை அறிவான்தான். ஆனால், ஒழுக்கம் இல்லாதவள் அவள் என்கிற எண்ணம் இருந்தவரை அது அவனைப் பெரிதாகத் தாக்கவில்லை.
அவளும் ஒழுங்கானவள் இல்லையே. என்னை விட்டுவிட்டு ராஜைப் பிடித்தவள் தானே என்கிற அலட்சியம் இருந்தது.
இன்றோ, அவள் எந்தத் தவறும் செய்யவில்லையோ. ராஜ் தப்பானவன் அல்லவோ என்கிற எண்ணம் தோன்றிய நொடியில் இருந்து, அவன் மனம் தான் செய்த தப்புக்களை நினைத்துத் தவித்தது.
ஏனோ ராஜுடன் பேசவேண்டும் போல் இருந்தது அவனுக்கு. தன் மனதின் தவிப்பை அவனிடம் கொட்டவேண்டும்போல் இருந்தது. அந்த நிமிடம் உணர்ந்தான் ரவி, ராஜின் நட்பின் ஆழத்தை!
ஆழ்மனதின் அழகிய தேடல்தானே நட்பு என்பது! காதலுக்கு கூட சுயநலம் இருக்கும். ஆனால் நட்புக்கு உண்மையான நேசிப்பு மட்டுமே இருக்கும்!
நந்தன் எத்தனையோ தடவைகள் கேட்டும் சொல்லமுடியாத மனதின் கஷ்டங்களை ராஜைத் தேடிச்சென்று சொல்ல மனம் துடித்தது. அவன் கைபேசி எண் இல்லையே என்று நினைத்தவன், நந்தனுக்கு அழைத்தான்.
“வந்துவிட்டாயா?” எடுத்தவுடனேயே கேட்டான் நந்தன்.
“நந்தா, எனக்கு ராஜ்…. வசந்தனின் கைபேசி எண் வேண்டுமேடா….?” என்றான் தயக்கத்துடன்.
“நான் கேட்கும் ஏதாவது ஒரு கேள்விக்காவது பதில் சொல்கிறாயாடா நீ? உன்னையெல்லாம்…..! வசந்தனின் எண்ணை எதற்காக கேட்கிறாய்?”
ரவி அமைதியாகவே இருந்தான். பதில் சொல்லவில்லை.
“குறித்துக்கொள்…!” என்றுவிட்டு நம்பரை நந்தன் சொல்லவும், தன்னுடைய கை பேசியிலே பதிந்துகொண்டான் ரவி.
“நன்றிடா….” என்ற ரவிக்குப் பதில் எதுவும் சொல்லாது கைபேசியை வைத்துவிட்டான் நந்தன். அவனின் பொறுமையும் மெல்ல மெல்லப் பறந்து கொண்டிருந்தது.
ராஜின் நம்பரையே பார்த்திருந்தான் ரவி. அவனுக்கு அழைக்கலாமா வேண்டாமா? நான் என்று தெரிந்தால் பேசுவானா திட்டுவானா? அல்லது பட்டென்று வைத்துவிடுவானா? என்று தடுமாறியது அவன் மனம்.
என்ன ஆனாலும் அவனுடன் பேசியே ஆகவேண்டும் என்கிற உத்வேகத்தில், துணிந்து அவன் எண்ணை அழுத்திவிட்டு, மனம் படபடக்க அந்தபுறத்தில் கைபேசி எடுப்பதற்காகக் காத்திருந்தான்.
“ஹலோ…” என்ற ராஜின் குரலைக் கேட்டவனுக்கு, சில நொடித்துளிகள் பேச்சென்ன மூச்சே வர மறுத்தது.
“ஹலோ, யார் பேசுகிறீர்கள்? நான் வசந்த் பேசுகிறேன்…” என்றான் மீண்டும் ராஜ்.
வசந்தா….? வசந்தராஜ் என்கிற அவனின் பெயரில் உள்ள ‘வசந்த்’ என்பது பலருக்கு உள்ள பெயர் என்பதால் ‘ராஜ்’ என்று தானும் அழைத்து அனைவரையும் அப்படியே அழைக்க வைத்தவன் ரவியே!
அதன்பிறகு ராஜே, யார் கேட்டாலும் தன் பெயர் ராஜ் என்றுதான் சொல்வான்.
இன்று அவனே தன்னை வசந்த் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட விதமே ரவியின் மீதான அவனின் வெறுப்பை அப்பட்டமாகக் காட்டியது.
“ரா..ஜ்… நா..ன் ரவி…” என்றான் தயங்கி.
அங்கே கனத்த அமைதி நிலவியது. அதன்பிறகு கைபேசி வைக்கப்பட்டு விட்டதற்கான சத்தம் தான் ரவியின் காதில் கேட்டது.
தன் கைபேசியையே சிலநொடிகள் வெறித்தான் ரவி. அதற்கிடையில் நந்தனின் வீடும் வந்துவிட, ஆட்டோவில் இருந்து இறங்கியவனையே முறைத்துக்கொண்டு நின்றாள் தாரிகா.

