“இனியாவது பொறுப்பாக இருக்கப்பழகு…”, “உன் அம்மாவைப் பதற வைத்துவிட்டாயே கவி…” என்று பலரும் பல பேச்சுக்களுடன் விலகிவிடவே, ஊர் மக்களைச் சமாளித்துவிட்டதை நினைத்து ராஜுக்கு நிம்மதியாக இருந்தது.
ஆனாலும் அந்த நயவஞ்சகனை நண்பன் என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்வதற்கு நாக்குக் கசந்தது அவனுக்கு. ஆனாலும் வேறு வழியில்லையே… கவியைக் காக்க வேண்டுமே…
மரகதம், வேலன், தங்கம் மற்றும் அன்னம் மூவரும் அமைதியாக இருந்தாலும், அவர்களுக்குத் தெரியும் கவி காணாமல் போனது உண்மை என்பது.
பின்னே, தினமும் ராஜுக்கு உதவியாக வைத்தியசாலைக்கு சென்றுவந்த வேலன் அறிவானே கவி இல்லாததை.
“ஏனடா அப்படிச் சொன்னாய்?” என்று அன்னம் கேட்கவும்,
“வேறு என்னம்மா சொல்வது? நடந்ததைச் சொல்லமுடியாதே. கவியை உண்டு இல்லை என்று ஆக்கிவிடமாட்டார்களா…” என்ற ராஜ், அப்போதுதான் மரகதத்தையும் வைத்துக்கொண்டு தான் இதைச் சொல்லிவிட்டதை உணர்ந்தான்.
“ஆன்ட்டி , நீங்கள் பயந்துவிடாதீர்கள். கவி இப்போது உங்கள் கண் முன்னால் இருக்கிறாள். அதை மட்டும் நினையுங்கள்.” என்றான் பதட்டத்தோடு. அவருக்கு மீண்டும் உடம்புக்கு ஏதும் என்றால் என்ன செய்வது என்கிற பயம் அவனுக்கு.
“ராஜ், நான் வாழ்ந்து முடித்தவள்! இதுவரை பட்டாசாக இருந்தவள் இவ்வளவு அமைதியாக இருப்பதில் இருந்தே ஏதோ பெரிதாக ஒன்று நடந்துவிட்டது என்று தெரிகிறது. இதைக் கூட உணரமுடியாவிட்டால், இந்த உலகத்தில் நான் இவ்வளவு காலம் வாழ்ந்ததுக்கே பிரயோசனம் இல்லையேப்பா.” என்று கசப்போடு சொன்னவர், “நீ பயப்படாமல் நடந்ததைச் சொல்லு. என் மகள் என்னிடம் வந்துவிட்டாள். அதுவே போதும் எனக்கு. எதையும் என்னால் இனித் தாங்கிக்கொள்ள முடியும்…” என்றவரின் மனமோ, சுமைகளைத் தாங்கியே பழக்கப்பட்டு விட்டேனே என்று தனக்குள் சொல்லிக்கொண்டது.
அவரின் பேச்சு திடத்தைக் கொடுத்தபோதும் சிறிய தயக்கத்துடனேயே நடந்தவைகளை ராஜே சொன்னான்.
கவிக்கு வாயைத் திறக்கவே முடியவில்லை. தனக்கு நடந்தவைகளை ராஜின் வாயால் கேட்கும்போதே அவள் கண்களில் கண்ணீர் வழிய, உடல் நடுங்கியது.
தாயின் அருகில் நகர்ந்தவள் அவரின் மடியில் தலையைச் சாய்த்துக்கொண்டாள்.
மரகதம் எதுவும் கதைக்கவில்லை. கண்கள் கண்ணீரைப் பொழிய மகளைக் தடவிக்கொடுத்தவரின் கை நடுங்கியது.
அவன் சொல்லி முடித்தபின்னர் அங்கே பலத்த அமைதி. எல்லோருக்கும் நடந்ததை ஜீரணிக்கப் பல நிமிடங்கள் தேவைப்பட்டது. பின்னே, கனவு போல் இருந்தாலும் கவியின் எதிர்காலம் அல்லவா தொலைந்துபோனது…
“அவனைச் சும்மாவா விட்டாய் ராஜ்? அவன் கைகளை அடித்து முறித்திருக்க வேண்டாமா நீ? இனி எவள் கழுத்திலும் அவன் தாலி கட்டமுடியாதபடி செய்ய வேண்டும்..” என்று வெகுண்டான் வேலன்.
“உங்களுக்குப் பைத்தியமா? அவனை அடித்துவிட்டு பிறகு கவியை என்ன செய்யப் போகிறீர்கள்? என்ன இருந்தாலும் அவள் கணவன் அவன்தான். அவனுடன் அவளைச் சேர்த்து வைக்கும் வழியை பார்ப்பீர்களா.. அதைவிட்டுவிட்டு அடிக்கிறேன் முறிக்கிறேன் என்று அலட்டாதீர்கள்..” என்று தங்கம் கோபத்துடன் சொல்ல, கவியின் உடல் ஒருமுறை தூக்கிப்போட்டது.
அவளின் நடுக்கத்தை உணர்ந்த மரகதம், கொஞ்சம் அழுத்தமாக மகளின் மேனியைத் தடவிக்கொடுத்தார்.
“என்ன சொல்கிறாய் நீ? மகன் விளையாட்டாய்த் தாலியை கட்டுவானாம், தாய் அதைக் கழட்டி வாங்குவாராம். நம் வீட்டுப்பெண் என்ன அவர்கள் விளையாடும் பொம்மையா? இதில் அவனுடன் இவளைச் சேர்த்து வைப்பதா? புத்தி இல்லாமல் பேசாதே! பதினைந்து வயதில் திருமண வாழ்க்கையா? அவள் படிக்கவேண்டும்…..” என்று மனைவியிடம் கோபமாகச் சொன்னான் வேலன்.
“சிறு வயது என்றாலும் தாலியைக் கட்டிவிட்டானே. படிப்பை விட வாழ்க்கைதானே முக்கியம். அதனால்தான் சொன்னேன்…” தங்கத்தின் எண்ணம் அந்தளவில் தான் நின்றது.
இவர்களின் வாதாட்டத்தைக் கேட்டுக் கொண்டிருந்த மரகதமோ அன்னமோ அல்லது ராஜோ எதுவுமே பேசவில்லை.
கவியின் உடல்மொழியே அவளின் மனநிலையை உணர்த்தியது மரகதத்துக்கு.
நாம் போய்க் கேட்டாலும் நியாயம் கிடைக்குமா? நடந்த எதற்குமே சான்றுகள் இல்லையே! அப்படி இருந்தாலும் கூட அதை வைத்து என்ன செய்ய முடியும்? மிஞ்சி இருக்கும் மகளின் மானத்தையும் கப்பல் ஏற்றத்தான் முடியும். என் வாழ்க்கைதான் சீரழிந்து போனது என்று பார்த்தால் மகளின் வாழ்க்கையுமா? மகளின் வாழ்வும் கேள்விக்குறி ஆகிவிட்டது என்பது புரியவும் அவரின் நெஞ்சு வலிப்பது போல் இருந்தது.
இல்லை! இதை எல்லாம் நான் நினைக்கக்கூடாது! எனக்கு ஏதாவது நடந்து நானும் போய்விட்டால் என் மகளுக்கு இந்த உலகில் யாரும் இல்லை. நான் வாழவேண்டும்! இன்னும் நெடுநாளைக்கு நான் வாழவேண்டும்! எதையும் சிந்திக்கக்கூடாது. என் மகளுக்குத் துணையாக கடைசிவரை நான் இருக்கவேண்டும் என்று தனக்குள்ளேயே நினைத்துக்கொண்டவர், கண்களை அழுந்தத் துடைத்துக்கொண்டார்.
மனதின் உறுதி முகத்தில் தெரிய, “கவி.. எழுந்திரு! வருகிற திங்களில் இருந்து பள்ளிக்கூடம் செல்லவேண்டும் நீ…” என்றார் எதுவும் நடவாததுபோல் பாவித்து.
அதிர்ந்துபோய் தாயைப் பார்த்தாள் கவி….
“நானாம்மா…..?!?”
“பின்னே, நானா பள்ளிக்குப் போகமுடியும்? நீதான் போகவேண்டும்! எல்லாவற்றையும் மறந்துவிட்டு படிப்பில் மட்டும் கவனத்தைச் செலுத்து!” என்றார் அதட்டலாக.
“ஆனால்… நான் எப்படிமா…?” அப்போதும் அவள் தயங்க,
“ஏன்? உனக்கு என்ன? நீதான் படிக்கவேண்டும். இனி நீ படிப்பை மட்டுமே நினைக்க வேண்டும்!” என்றார் அதட்டலாக மரகதம்.
எப்போதும் தாய் அதட்டினாள் அதை மீறவேண்டும் என்று நினைக்கும் கவி இன்று பலமாகத் தலையை ஆட்டினாள் சரி என்பதாக.
மரகதம் கவி இருவரினதும் மனநிலை அங்கிருந்த மற்ற மூவருக்கும் புரிய, மனம் கசிந்தது அவர்களுக்கு.
ஆனாலும் வேறு வழி? இன்றே துரத்திவிட்டவர்களின் வீட்டில் என்ன நம்பிக்கையில் நம் வீட்டுப் பெண்ணை விட்டு வைப்பது. தாலிக்கே மதிப்பு இல்லாதுபோன அந்த வீட்டில் ஒரு பெண்ணுக்கு, அதுவும் ஏழை வீட்டுப் பெண்ணுக்கு மதிப்போ அல்லது வாழ்க்கையோ கிடைக்குமா? முதலில் நடந்தது திருமணம் தானா? அதனால் நடந்தவைகளை ஒதுக்கி அடுத்ததாக என்ன என்று பார்ப்பதே சிறந்தது என்று அன்னத்துக்கும் தோன்றியது.
ஆக நிஜத்தை மெல்ல மெல்லப் புரிந்துகொண்டவர்களின் வாழ்க்கை வழமைக்குத் திரும்பியது. அல்லது அப்படி ஒவ்வொருவரும் காட்டிக்கொண்டனரோ..?!
கவி ஊமையாகிவிட்டிருந்தாள். தேவை இல்லாமல் அவள் கதைப்பதே இல்லை.
நடந்தவை அனைத்தையும் சொன்னவளால், இரண்டு நாட்கள் ரவிக்கும் அவளுக்குமிடையில் நடந்த உறவை அவளால் யாரிடமும் சொல்லவே முடியவில்லை. அதை எப்படிச் சொல்வது என்பது ஒரு புறம் என்றால் சொன்னால் என்னைத் தப்பாக நினைப்பார்களோ என்று பயமாகவும் இருந்தது.
கணவன் மனைவிக்கான உறவு புரியாத வயதல்லவா, மனதால் மிகவும் காயப்பட்டு இருந்தாள் கவி.
ரவி எதற்காக இப்படி எல்லாம் நடந்துகொண்டான். அவனுடைய அம்மா என்னை வீட்டை விட்டுத் துரத்திய பிறகு அவன் என்னைத் தேடி வரவில்லையே. கணவன், காதல் அது இது என்று நிறையச் சொன்னானே என்று புரியாத பல கேள்விகள் வேறு அவளை ஆட்டிபடைத்தது.
ஆனாலும், அவன் தன்னைத் தேடி வராமல் இருப்பதே நல்லது என்றும் நினைத்துக்கொண்டாள். அந்தளவுக்கு அவனையும் அவன் அம்மாவையும் அவளுக்குப் பிடிக்காமல் போயிருந்தது.
மரகதம் எப்போதும்போல் தன் சமையல் வேலைகளைப் பார்த்தாலும், ஏதோ ஒரு சிந்தனையுடனேயே அவரின் நாட்கள் கடந்தது.
ஒரு நாள் கூடி மகளிடம் என்ன நடந்தது என்று அவர் கேட்கவில்லை. அன்று ராஜ் சொல்கையில் அவள் அழுததும், அவளின் உடலின் அதிர்வும் அவரை வாய்மூட வைத்தது. திரும்பத் திரும்ப நடந்தவைகளைக் கதைத்து ஆகபோவது என்ன என்று விட்டுவிட்டார்.
ஆகமொத்தத்தில் எப்போதும் சண்டையும் சத்தமுமாக இருந்த அந்தச் சின்ன வீடு இப்போது அமைதியில் கழிந்தது.
ராஜ் படிப்பை விட்டுவிட்டு, கூலி வேலைக்கும் தந்தையைப் பார்ப்பதுமாக அலைந்து கொண்டிருந்தான்.
இப்படியே இரண்டு மாதங்கள் உருள, ஒருநாள் மாலை கவி படித்துக்கொண்டு இருக்க, மரகதம் அவர்கள் வீட்டு விறாந்தை நிலத்தில் ஓய்வாகச் சாய்ந்திருந்தார். பரபரப்பாக அவர்கள் வீட்டுக்குள் நுழைந்த வேலன், “மரகதமக்கா…. நம் ராஜின் அப்பா இறந்துவிட்டாராம்…” என்றான் கவலையோடு.

