அத்தியாயம் 51
மூன்று மாதங்கள் மின்னலாகக் கழிந்திருந்தன. காண்டீபன் தன் இறுக்கங்களில் இருந்து பெருமளவில் வெளியே வந்திருந்தான். அவனே உலகம் என்று வாழும் மனைவி, முத்துப் போன்ற செல்ல மகன், அவன் நலனில் கண்ணும் கருத்துமாய் இருக்கும் நண்பன், அன்னைக்கு ஒப்பாகத் தன்னைப் போற்றும் ஆதினி, அவனின் ஆள் மயக்கி தீபனா, கதிரவன், அகரன் என்று அவன் உலகம் அன்பானவர்களால் நிறைந்து தளும்பிற்று.
அது போதாது என்று சீரான உடற்பயிற்சி, நல்ல மனநிலை, நிம்மதியான உறக்கம், யோகா என்று அவன் உலகம் மிக மிக அழகாக மாறிற்று. கொஞ்சம் கொஞ்சமாய்த் தன்னை இந்த உலகத்துடன் பழையபடி பொருத்திக்கொண்டிருந்தான்.
இந்த மூன்று மாதங்களில் சொந்த ஊருக்கு, பூநகரிக்கு என்று நண்பர்கள் இருவரும் சென்று வந்தார்கள். அவர்கள் வாழ்ந்து வளர்ந்த இடங்களைப் பார்த்தபோது மனம் நெகிழ்ந்து கனத்துப்போயிற்று.
இது எல்லாவற்றையும் விடப் பெரிய விடுதலை அவன் இந்த உலகத்திற்குக் காண்டீபனாகவே அறியப்பட்டது. முக்கியமான சில தொலைக்காட்சிகளுக்குப் பேட்டி கொடுத்து, தனக்கு நடந்த அநியாயங்களைச் சொல்லி, அவனும் தன்னைக் காண்டீபனாக மிகவும் உறுதியாக வெளிப்படுத்திக்கொண்டிருந்தான்.
அதைப் பயன்படுத்தி யாழ் பல்கலையில் பேசி, பழைய வேலையை எடுத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகள் கூட நடக்க ஆரம்பித்திருந்தன.
அதற்கு ஏதுவாகத் தன் அறிவாற்றலை மீட்டெடுக்கும் முயற்சியாகப் பேராசிரியப் பயிற்சிக் கல்லூரியில் பயிலவும் ஆரம்பித்திருந்தான்.
அன்று தயாநிதி வழக்கு நீதிமன்றுக்கு வரவிருந்தது. அவன் போக வேண்டிய அவசியம் இல்லை. என்றாலும் காலையிலேயே எழுந்து புறப்பட்டான். ஆதினி வழக்காடும் அழகைப் பார்ப்பதென்றால் அவனுக்கு அலாதிப் பிரியம். அவள் ஆணித்தரமாகவும் அழுத்தம் திருத்தமாகவும் தன் வாதங்களை எடுத்து வைக்கிற ஒவ்வொரு முறையும் பூரித்துப்போய்விடுவான்.
இன்று அவள் இரண்டு குழந்தைகளின் அன்னை. சமூகத்தில் பலராலும் மதிப்போடும் மரியாதையோடும் பார்க்கப்படும் பொறுப்பான பெண். சட்டத்தரணி. அவள் வந்து வகுப்பு எடுக்க மாட்டாளா என்று பல பல்கலைக்கழகங்கள் காத்திருக்கும் சிறப்புப் பேராசிரியை.
இப்படிப் பல தகமைகளோடு இருந்தாலுமே அவன் கண்களுக்கு மட்டும் அவள் குறும்புப் பெண்ணாகவே தெரிகிற மாயம் அவனுக்குப் புரிபடுவதே இல்லை. அவளும் அப்படித்தான். அவனைக் கண்டால் மட்டும் அண்ணா என்று குழைந்துவிடுவாள். அதனாலோ என்னவோ அவளின் சின்ன சின்னச் செய்கைகளைக் கூடப் பார்த்து பார்த்து இரசிப்பான்.
இன்றும் அதே ஆவலோடு தயாராகி வந்த கணவனைக் கண்டதும் அப்படியே நின்றுவிட்டாள் மிதிலா. சாம்பல் வண்ண பாண்ட்ஸ்க்கு மெரூன் நிற பிளேன் ஷேர்ட் அணிந்து, இன் பண்ணியிருந்தான். அதன் கைகளை முக்கால் கையாக மடித்து விட்டிருந்தான். என்னவோ பழைய காண்டீபனையே பார்ப்பது போலிருந்தது. அதுவும் தினமும் காலையில் பல்கலைக்குப் புறப்படும் அதே காண்டீபன்.
அவனுக்கு எப்போதுமே நல்ல அடர்ந்த கேசம். இனி பழையபடி வராதோ என்று எண்ணிக் கவலையுற்றிருந்தாள். அது பார்த்தால் அதைவிடவும் அடர்த்தியாக வளர்ந்திருந்தது. இன்னும் சொல்லப்போனால் ஆங்காங்கே நரை முடிகளோடு அவள் கண்களுக்கு இன்னும் கம்பீரமாக, களையாகத் தெரிந்தான்.
“தம்பி ரெடியா மிது. அவரை விட்டுட்டு நான் அப்பிடியே கோர்ட்டுக்கு போயிட்டுத்தான் வருவன்.” கையில் மணிக்கூட்டை அணிந்தபடியே சொன்னான்.
அவளிடமிருந்து பதில் இல்லாது போகவும் நிமிர்ந்து பார்த்தான். அப்போதுதான் அவள் தன்னையே பார்த்தபடி நிற்பது தெரிந்தது. அது தோற்றுவித்த புன்னகையுடன் என்னவென்று புருவங்களை உயர்த்தி வினவினான்.
“இல்ல…” என்று தலையையும் சேர்த்து வேகமாக அசைத்துவிட்டு, “வடிவா இருக்கிறீங்க.” என்றாள் அவள்.
அவன் முறுவல் விரிந்தது. “எங்க தம்பி?” என்றான் பார்வையால் மகனைத் தேடியபடி.
“பாத்ரூமுக்க. பள்ளிக்கூடம் போற நேரம்தானே அவருக்கு எல்லாம் வரும்.”
அவன் அப்படித்தான். இவன் வந்த பிற்பாடு, அதுவும் பாதுகாப்புக் காரணங்களினால் கொஞ்ச நாள்கள் பள்ளிக்கூடம் செல்லாமல் இருந்து தகப்பனோடு தொற்றிக்கொண்டு திரிந்து பழகியவனுக்கு இப்போது பள்ளிக்கூடம் செல்வதென்றால் வேப்பங்காயாகக் கசக்கிறது.
ஏதாவது செய்து பள்ளிக்கூடம் செல்லாமல் நின்றுவிடலாமா என்று தினமும் முயல்வான். காண்டீபனால் மகனைச் சிறிதாகவேனும் கண்டிக்க முடிவதேயில்லை. அப்பா என்று செல்லம் கொஞ்சியபடி எதைக் கேட்டாலும் அடுத்த நொடியே அதைச் செய்துவிடத் துடித்தான். இன்றும் மகனின் குறும்புத்தனம் தந்த புன்னகையோடு அவளை நெருங்கி, இலகுவாய் அணைத்து நெற்றியில் முத்தமிட்டான்.
காலையிலேயே எழுந்து, முகம் கழுவி, தலை இழுத்து, சுவாமி கும்பிட்டதற்கு அடையாளமாக நெற்றியில் திருநீறு திலகம் என்று இருந்தவள் முகம், அவன் தந்த முத்தத்தின் தித்திப்பில் மலர்ந்து விகசிப்பதை ஆசையாகப் பார்த்துவிட்டு, “எப்பவும் என்ர மிதுதான் வடிவு!” என்று சொன்னான்.
அவள் முகம் பூவாக மலர்ந்தது. “நீங்களும் உண்மையாவே பழைய தீபனைப் பாக்கிற மாதிரியே இருக்கிறீங்க. அதுவும் இந்தத் தலைமுடி…” என்றவள் தன் பிஞ்சு விரல்களை அவன் கேசத்தினுள் நுழைத்துக் கோதிக்கொடுத்தாள்.
“மிதும்மா…” அந்த வருடலில் சொர்க்க சுகம் கண்டவன் நெற்றி முட்டி நின்றான்.
இன்னும் அவர்களுக்குள் பழையபடி தாம்பத்திய உறவு ஆரம்பிக்கவில்லை. அதை மிதிலாவும் வேண்டவில்லை. கணவன் கிடைத்ததே அவளுக்கு வாழ் நாள் மகிழ்ச்சி. அப்படியிருக்க அவன் அனுபவித்து வந்த வேதனைகளை அறிந்தவள் அவனுக்கு இதமாக நடக்காமல் போவாளா?
“சந்தோசமா இருக்கிறியா மீது?” அவள் முகம் தாங்கி வினவினாள்.
அவன் எதை மனத்தில் வைத்துக் கேட்கிறான் என்று புரிந்தவள் அவனைக் கனிவுடன் நோக்கிப் புன்னகைத்தாள்.
“இந்த உலகத்தில என்னை விடச் சந்தோசமா வாழுற ஒருத்திய நீங்க பாக்கவே மாட்டீங்க தீபன்.” என்றவள் எம்பிக் கணவனின் நெற்றியில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தாள்.
இதற்குள் சின்னவன் வந்துவிட அவளிடம் கண்ணால் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டான் அவன்.
****
நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட வேந்தன் ஆளே உருக்குலைந்துபோயிருந்தான். அங்கே என்ன நடந்திருக்கும், ஏன் இப்படியாகிப்போயிருக்கிறான் என்று காண்டீபனால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனாலும் ஈவிரக்கம் வரவில்லை. ஒரு குடும்பத்தையே எரித்தவனாயிற்றே.
அவன் கூட்டாளிகளில் பாதிப்பேருக்கும் மேலே அப்ரூவர்களாகியிருந்தார்கள். அவர்களால் எல்லாளனின் விசாரணையைச் சமாளிக்க முடியவில்லை.
சிவநாதரின் தலைமறைவுச் செய்தியும், அவர்களுக்கு எதிராக அத்தனை ஆதாரங்களும் இருப்பதும் அவர்களை நடுங்க வைத்திருந்தன. இதில் ஆதினியின் கிடுக்கிப்பிடி விசாரணை வேறு. கடைசியில் குற்றத்தை ஒப்புக்கொண்டு, முடிந்தவரையில் குறைந்த தண்டனையைப் பெறுவதே இருப்பதில் சிறந்த முடிவு என்கிற முடிவுக்கு வந்திருந்தார்கள்.
வேந்தன் முற்றிலுமாக உடைந்திருந்தான். அதுவும் சிவநாதர் இனி வரப்போவதில்லை என்று சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் தெரிந்திருந்ததால் தைரியம் வரப்பெற்று அவனைப் போட்டுப் பந்தாடியிருந்தனர்.
இத்தனை காலமும் அதிகாரத்தையும் செல்வாக்கையும் வைத்துக்கொண்டு அவர்களை எல்லாம் ஆட்டிவைத்தவர் மீதிருந்த வஞ்சமெல்லாம் இவன் புறம் திரும்பிற்று. அதில் கிடைக்கிற சந்தர்ப்பத்திலெல்லாம் நையப்புடைத்திருந்தனர்.
அவனும் வருவது வரட்டும் என்கிற நிலைக்கு வந்திருந்தான். அதில் எதையும் எதிர்த்து வாதாடும் நிலையில் அவன் இலை.
ஆக மொத்தத்தில் வழக்கு விசாரணை இன்னும் பல கட்டங்களாக நடக்குமென்றாலும் அதிகபட்சத் தண்டனையை அவனும் அவன் நண்பர்களும் அனுபவிக்கப்போவது உறுதியாயிற்று.

