ஆட்டநாயகன் 51.2

ஆதினி வெளியே வருவதற்காகவே காத்திருந்த காண்டீபன், அவளைக் கண்டதும் குறும்புடன் புன்னகைத்தான். உடனேயே அவளுள் இருந்த தைரியமான சட்டத்தரணி எங்கோ ஓடிப்போனாள். குழந்தையாய் மாறி, “அண்ணா!” என்றுகொண்டு குடுகுடுவென்று அவனிடம் ஓடி வந்தாள்.

அவள் தோளைச் சுற்றி ஒற்றைக் கையைப் போட்டுக்கொண்டு, ஒரு கணம் அவள் முகத்தைப் பெருமையாகப் பார்த்துவிட்டு, “இஞ்ச ஒருத்தன் வக்கீல் வண்டுமுருகியா கூட வரமாட்டாய் எண்டு சொல்லிக்கொண்டு திரிஞ்சான். எங்கம்மா அவன்?” என்றான் நண்பனைப் பார்வையால் சீண்டியபடி.

கணவனை ஒரு முறை பார்வையால் வெட்டிவிட்டு, “கொஞ்ச நாளுக்கு முதல் வேலை வெட்டி இல்லாம ஒருத்தர் வீட்டில இருந்தாரே அண்ணா. அவர்தான். பாவம் எண்டு அவருக்கும் சேத்துச் சோறு போட்டது நான்.” என்று தலையைச் சிலுப்பினாள் அவள்.

எழுந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு அவளையே பார்த்தான் எல்லாளன். குழந்தை விசயம் அவளைப் பெரியளவில் பாதிக்காமல் இருக்கக் காரணம் காண்டீபனின் வருகை. இன்று அனைத்திலிருந்தும் வெளியே வந்து, இன்னும் சொல்லப்போனால் காண்டீபனின் வருகைக்குப் பிற்பாடு அவள் சேட்டை கூடித்தான் போனது.

“குணசேகரன் மாமா இல்லாட்டி இன்னுமே குட்டிக்கரணம் அடிச்சுக்கொண்டு இருந்திருப்பாளாடா. இதுல இவா பெரிய லோயராம். அத்தனை ஆதாரங்களையும் எடுத்துக் குடுத்தது நான். அதைக் கொண்டுபோய்க் குடுத்துப்போட்டுப் பெரிய இவா மாதிரிக் கதை!”

“போடா டேய்! அவள் இல்லாட்டி அந்த ஆதாரம் எல்லாம் ஒண்டுமில்லாம போயிருக்கும்.” என்றவன் அங்கே அவளை ஏற்றிச் செல்ல வந்த காரை கவனித்துவிட்டு, “முதல் அவளுக்கு ஒரு சிலுக்கை வாங்கிக் குடு. இனிப் பயமில்லத்தானே?” என்றான் நினைவு வந்தவனாக.

பாதுகாப்புக் காரணங்களினால் அவளை ஸ்கூட்டியில் செல்ல அவன் அனுமதிப்பதில்லை. பிள்ளைகளும் இருப்பதால் கார்தான். பாதுகாப்புக்கும் சேர்த்து என்று பெரும்பாலும் ஓட்டுனரையும் போட்டுவிடுவான்.

“என்னத்துக்கடா புதுச் சிலுக்கு? எனக்குப் பழைய சிலுக்கே போதும்!” அவள் புறம் திரும்பாமல் காண்டீபனையே பார்த்துப் பதில் சொன்னவனின் இதழ்கடையோராம் விசமத்துடன் ஒளிந்துகொண்டிருந்த சிரிப்பைக் காண்டீபன் கவனிக்காதபோதும் கண்டுவிட்ட ஆதினிக்கு புசுபுசுவென்று கோபம் கொப்பளித்துக்கொண்டு வந்தது.

“விசரா உனக்கு? பழைய சிலுக்கு ஒண்டுக்கும் உதவாது.” என்றவனை விழுக்கென்று திரும்பி முறைத்தாள் ஆதினி.

அதனை அவளின் அப்பாவி அண்ணன் கவனிக்கவில்லை. அவன் அவளுக்கு எப்படியாவது ஒரு சிலுக்கை வாங்கிக் கொடுத்துவிடும் முடிவில் இருந்தான்.

வெடித்துக்கொண்டு கிளம்பிய சிரிப்பை அடக்க முயன்றபடி, “அப்பிடியா சொல்லுறாய்? என்ர கண்ணுக்கு எல்லாமே பளபளப்பாத்தான் மச்சான் தெரியுது.” என்று கண்களும் சேர்ந்து சிரிக்கச் சொன்னவனைக் கண்டு ஆதினி தடுமாறிப்போனாள்.

வெட்கம் கோபம் இரண்டும் சேர்ந்து வந்தன. எட்டி நங்கு நங்கு என்று அவன் தலையில் குட்டும் ஆத்திரம் எழுந்தது. இருக்குமிடத்தையும், அவன் அணிந்திருக்கும் யூனிபோர்மையும் கருத்திற்கொண்டு அடக்கிக்கொண்டு, “காணும் காணும் கதச்சது. போய்க் கடமையப் பாருங்க!” என்று அவனைத் துரத்திவிட்டவள் காண்டீபனிடம் சொல்லிக்கொண்டு அவசரமாகப் புறப்பட்டுவிட்டாள்.

காண்டீபனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவள் ஏன் இப்படி அவசரமாக ஓடுகிறாள் என்று பார்த்தான்.

எல்லாளன் போகிறவளையே சிரித்தபடி பார்த்திருக்க, ஏதோ மறைமுகமாக அவளைச் சீண்டியிருக்கிறான் என்று புரிந்துபோயிற்று.

அவன் தாடையைப் பற்றித் தன்னைப் பார்க்க வைத்து, “இந்த முகம்தானே ஒரு காலம் அவளைக் கட்டுறதுக்கு முறுக்கிக்கொண்டு திரிஞ்சது?” என்றான்.

“இப்பிடி விழுந்து கிடப்பன் எண்டு அண்டைக்கு எப்பிடியடா தெரியும்.” என்றான் அவன் சிரிப்புடன்.

நண்பனையே பார்த்தான் காண்டீபன். நிறைவாக வாழ்கிறான் என்று அவன் முறுவல் சொல்லிற்று. “சொறியடா!” என்றான் இலேசாய்க் கரகரத்த குரலில்.

“ஏன்?” என்றான் அவன் உடனேயே.

“குழந்தை…”

“லூசா நீ?” அவன் சொல்லி முடிக்க முதலே சீறினான். “அது நடந்திருக்க வேண்டாம்தான். அதுக்கெண்டு மன்னிப்புக் கேப்பியா? இத இப்ப போனாளே அவளிட்டச் சொல்லிப் பார். அப்ப தெரியும்.”

ஒரு முறை சொல்லி, இரண்டு நாள்களாக அவள் அவனோடு கதைக்கவேயில்லை. கடைசியில் தீபனா மூலம் தூது விட்டுத்தான் சமாதானம் செய்திருந்தான். இன்னொரு முறையும் சொல்வதா? “ஆளை விடு!” என்றான் உடனேயே.

“விடு மச்சான். இன்னொரு பிள்ளை பெத்துத் தாறன். தாய் மாமனா இருந்து மொட்டை அடிச்சு, காது குத்தித் தா, எல்லாம் சரியாகும்.”

நண்பனின் அன்பில் நெகிழ்ந்துபோனான் காண்டீபன். அவனையே சில கணங்களுக்குப் பார்த்துவிட்டுத் தன் கைகளை இலேசாக விரித்தான். சட்டென்று எல்லாளனுக்குப் பல்கலை வாசலில் நடந்த நிகழ்வு நினைவில் வந்து போயிற்று. அன்றைக்கும் சேர்த்து இன்று நண்பனை வேகமாக ஆரத்தழுவிக்கொண்டான்.

வேந்தன் குழுவைக் கதிரவனின் பொறுப்பில் அனுப்பிவிட்டுக் காண்டீபனின் பைக்கின் பின்னால் ஏறி அமரப்போன எல்லாளன், அங்கே வந்துகொண்டிருந்த தேவனைக் கண்டான். “ஒரு நிமிசம் வெய்ட் பண்ணு மச்சான்.” என்றுவிட்டு அவனிடம் நடந்தான்.

“என்னை குத்தினவன் அவன்தான்.” காண்டீபனைக் காட்டிச் சொன்ன எல்லாளனை அதிர்ந்து பார்த்தான் தேவன்.

“அப்ப அவனுக்கு அவன் ஆர் எண்டும் தெரியாது, நான் ஆர் எண்டும் தெரியாது. சிவநாதர் என்னில இருந்த கோபத்தில ஏவி விடவும் வந்திட்டான். இருந்த சாட்சி எல்லாத்தையும் அழிச்சதும் நான்தான். சோ சும்மா இந்த கேஸுக்காக அலையிறத விட்டுட்டு வேற வேலை இருந்தா பாருங்க.” என்றுவிட்டு நடந்தான்.

இன்னுமே அதிர்வு நீங்காமல் அப்படியே நின்றிருந்த தேவன் அவன் போகிறான் என்பதை பிறகே உணர்ந்து, “சேர்!” என்று அழைத்தான்.

திரும்பிப் பார்த்தான் எல்லாளன்.

“சிவநாதர்?”

புன்னகை அரும்ப ஒற்றைக் கண்ணைச் சிமிட்டிவிட்டுப் போனான் அவன்.

நெஞ்சைப் பற்றாத குறையாக அப்படியே நின்றுவிட்டான் தேவன். அதே நேரத்தில் காண்டீபனைப் பற்றிய விடயம் பூதாகரமாக வெடித்த நேரம் அவனும் அந்த வழக்கைப் பற்றி விசாரித்து அறிந்துகொண்டிருந்தான். அதுவரை சிவநாதர் தூக்கிப் போடும் பணத்தை எடுத்துக்கொள்கையில் பெரிதாக எதுவும் தோன்றியதில்லை. அசட்டையாகத்தான் இருந்திருக்கிறான்.

என்றாலும் இன்று அவர் குடும்பமே எத்தனை கொடூரமானவர்கள் என்று அறிந்தபோது, எல்லாளன் செய்தது சரியே என்றுதான் அவன் மனமே அவனிடம் சொல்லிற்று. இனிக் காலம் முழுக்க அவனும் சிவநாதரைத் தேடுவான். ஆனால், கண்டுபிடிக்கவே மாட்டான்.

அன்று நண்பர்கள் இருவரும் சிவநாதரைப் பார்க்க வந்திருந்தார்கள். வளர்த்து வைத்திருந்த வயிறு வற்றி, தலைமுடி, தாடி எல்லாம் காட்டுத்தனமாக வளர்ந்து, கண்கள் பூஞ்சையாகி, கண்ணைச் சுற்றிக் கருவளையம் படர்ந்து, உதடுகள் காய்ந்து வெடித்து, உடல் எல்லாம் கடிசொறி வந்து, வாடி, வதங்கி, ஆளே உருமாறி முழுப் பைத்தியமாகியிருந்தார்.

இவர்களைக் கண்டதும் காலில் விழுந்து அழுதார். “என்னைக் கொன்று போட்டுவிடு வாசு. சத்தியமா என்னால இதுக்கு மேல ஏலாது. கடல்லயாவது தூக்கிப் போட்டு விடு. நீயாவது சொல்லு எல்லாளன்.” என்று அழுதார் அவர்.

நண்பர்கள் இருவரும் இரக்கம் காட்டவேயில்லை. அவர் உடலில் இருந்து கடைசிச் சொட்டு உயிர் வடிந்து முடிகிற வரை இதே கப்பலில் அநாதையாகக் கிடந்து துடிதுடித்துச் சாகட்டும் என்று விட்டுவிட்டார்கள்.

இப்போது யாரும் அவரைக் காவல் காப்பது கூட இல்லை. கடலுக்குள் பாய முடியாத அளவில் இரும்புச் சங்கிலியால் கட்டிப்போட்டிருந்தார்கள். ஒரு நாளைக்குத் தேவையான உணவை அவருக்குப் பக்கத்தில் வைத்துவிடுவார்கள். சில நேரங்களில் இரண்டு நாள்களுக்குத் தேவையான உணவு கூட ஒன்றாகப் போகும். அது கெட்டுக் கிடந்தாலும் பரவாயில்லை. அவர் சாப்பிட்டாலும் ஒன்றுதான், சாப்பிடாமல் பட்டினி கிடந்தாலும் ஒன்றுதான்.

காண்டீபனின் நண்பர்கள் இருவரையும் தனியார் செக்கியூரிட்டி நிறுவனம் ஒன்றின் பயிற்சிக்குச் சேர்த்துவிட்டான் எல்லாளன். அது அவர்களுக்குப் பொருந்திப்போகும் வேலை என்பதில் மிகுந்த ஆனந்தமாகவே சேர்ந்துகொண்டனர்.

இவர்களால் எப்போதும் வர முடியாது என்பதும், அதுவே சந்தேகத்தைக் கிளப்பும் என்பதாலும் அவ்வப்போது வந்து அவரைக் கவனித்துக்கொள்வது அவர்கள்தான்.

error: Alert: Content selection is disabled!!