“என்ன கேள்வி இது? படிச்ச, பண்பான, தங்கம் மாதிரி குணமுள்ள, நல்ல வேலைல நல்ல சம்பளத்தோட இருக்கிற உங்களை ஆர் வேண்டாம் எண்டு சொல்லப்போயினம்?” என்று வேகமாக இடையிட்டார் அவர்.
இத்தனை தகுதிகள் அவளிடம் உண்டா என்ன? உள்ளே வியப்போடு, “ஆரையும் பாத்து வச்சிருக்கிறீங்களாப்பா?” என்று கண்ணீரும் புன்னகையும் ஒருங்கே தோன்ற வினவினாள் அவள்.
“ஓம் மா. இத நீங்க பிழையா எடுத்திடக் கூடாது. ஆனா அவரை விடவும் உங்களுக்காகத்தான் இத நாங்க எல்லாரும் யோசிச்சம். இன்னும் அந்தத் தம்பிக்குத் தெரியாது. அவரோட நாங்க இதைப் பற்றிக் கதைக்கவும் இல்ல. உங்களுக்கு விருப்பம் எண்டா மட்டும்தான் அவரோட கதைப்பன்.”
பெற்ற பெண்ணுக்கு எப்படி எல்லாம் யோசித்து நடப்பாரோ அதைப் போலவே அவளுக்கும் அனைத்தையும் செய்கிறார். உள்ளம் நெகிழ யாரைப் பார்த்திருக்கிறார்கள் என்று பார்த்தாள்.
“அது… மாதவன்.” ஏற்கனவே மணமாகிக் குழந்தையோடு இருப்பவனைப் பேசி இருக்கிறார்களே என்று உள்ளுக்குள் வருந்துவாளோ என்று உள்ளே ஓட, அவளையே பார்த்து அந்தப் பெயரைச் சொன்னார்.
அவள் விழிகள் ஆச்சரியமா அதிர்வா என்று பிரித்தறிய முடியாமல் விரிந்துபோயின. “அவரா?” என்றாள் நம்ப முடியாமல்.
அவளின் முதற்கட்ட அதிர்ச்சி நீங்குகிறவரை அமைதியாக இருந்துவிட்டு, “ஏற்கனவே கட்டிக் குழந்தை இருந்தாலும் எங்க எல்லாருக்கும் நிறையக் காலமா அவரைத் தெரியும். பாசமான தம்பி.” என்று ஆரம்பித்து, ஒன்றுவிட்ட தங்கை அஞ்சலிக்காக சிறை வரை சென்று வந்தவனின் குண நலன்களைப் பற்றி விரிவாக எடுத்துச் சொன்னார்.
இப்போதும் ஒருவித அதிர்வும் ஆச்சரியமும் தாக்க உறைந்த நிலையில் இருந்தாள் கேதகி. பெற்ற மகளையே அம்போ என்று விட்டுவிட்டுப் போன அவள் தந்தையைப் போன்ற ஆண்களின் முன்னே மாதவன் எல்லாம் எத்தனை பெரிய மனிதன் என்று தோன்றிற்று.
“ஒரு அவசரமும் இல்லை அம்மா. நல்லா யோசிங்கோ. அந்தக் குழந்தை தியாவ உங்களுக்கும் பிடிக்கும். அவாக்கும் ஒரு அம்மா கிடைப்பா. அவரும் தாயையும் மகளையும் பாக்கேலாம அவதிப்படுறார். ஒரு குடும்ப அமைப்புக்க நேரடியா போறது உங்களுக்கும் நல்லது எண்டுதான் இப்பிடி யோசிச்சம். நிதானமா யோசிச்சுப்போட்டுப் பதில் சொல்லுங்கோ என்ன?” என்று இதமாய் அவளுக்கு எடுத்துரைத்தார் அவர்.
அவளுக்கு இது வேண்டவே வேண்டாம் என்பதுபோல் உறுதியான வெறுப்போ மறுப்போ இல்லை. அதே நேரத்தில் விருப்பு, ஆர்வம் என்று எதுவும் வரவுமில்லை. என்னவோ தெரியவில்லை. காண்டீபன் மீது உண்டாகி விலகியிருந்த அந்த ஈர்ப்பு, பழையபடி என் வாழ்வில் யாரும் வேண்டாம் என்கிற நிலைக்கு அவளைக் கொண்டுவந்து விட்டிருந்தது.
இளந்திரையன் திருமணத்திற்குக் கேட்ட கணம் அவள் கட்டுப்பாட்டையும் மீறிக் காண்டீபன் நினைவில் வந்து போனான். உடனேயே தன்னை அதட்டி அடக்கிவிட்டாள்.
குழந்தை தியா மீது பாசமும் பரிவும் உண்டுதான். அதற்கென்று திருமணம்? அன்று இரவு முழுக்க யோசித்து யோசித்துப் பார்த்தவள் இப்போதே ஏன் முடிவு எடுக்க நினைக்கிறோம், கொஞ்ச நாள் போகட்டும் என்று விட்டுவிட்டாள்.
அடுத்த நாள் காண்டீபனின் வீட்டுக்குப் போய் வந்தார்கள். காண்டீபன் வீட்டுத் தோட்டம் பெரிதாகப் போட்டிருந்தான். முன்னரும் அதெல்லாம் செய்வான்தான். இப்போது உடலுக்கு உழைப்பாகவும் மனத்துக்கு இதமாகவும் இருப்பதில் இன்னுமின்னும் ஆர்வமாகச் செய்தான்.
எல்லோரும் அவன் தோட்டத்தில் இருக்க, கேதகி வந்து தியாவைத்த தூக்கிக்கொண்டாள். அப்போதுதான் வேலை முடிந்து வந்து குளித்துவிட்டு வந்த மாதவன் இவளைக் கண்டு ஆச்சரியப்பட்டுவிட்டு, “எப்ப வந்தனிங்க?” என்றான் இயல்பாய்.
சட்டென்று தடுமாறிப்போனாள் கேதகி. அவனை இயல்பாக எதிர்கொள்ள இயலவில்லை. “அது… அப்பா வரச் சொன்னவர். அதான்… நேற்று வந்தனான்.” குழந்தை மீதே பார்வை இருக்கச் சொன்னவளைப் புதிராகத் திரும்பிப் பார்த்தான் மாதவன்.
அவனுக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது, இயல்பாக இரு என்று மூளை அறிவுறுத்தினாலும் முன்னர் போன்று இயல்பாக அவனை எதிர்கொண்டு பேசச் சிரமப்பட்டாள் கேதகி. அங்கே அறைக்குள் படுக்கையில் இருந்த அவன் அன்னையோடு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு காண்டீபன் வீட்டுக்குக் குழந்தையோடு சென்றிருந்தாள்.
மாதவனுக்கு ஒன்றும் புரியவில்லை. நல்ல பெண். எப்போதும் அவன் முகம் பார்த்து இன்முகமாகப் பேசுவாள். அப்படியிருக்க இன்று என்ன புதிதாக?
ஒன்றும் விளங்கவில்லை அவனுக்கு. தெரிய வருகிற நேரம் வரட்டும் என்று விட்டுவிட்டான். மகள், அன்னை, வேலை, நாளாந்த வாழ்க்கை ஓட்டம் என்று ஓய்வற்று ஓடிக்கொண்டிருக்கிறவனுக்கு அதற்கு மேல் யோசிக்க முடியவில்லை.
கேதகி பதில் எதுவும் சொல்லாமலேயே கொழும்புக்குப் புறப்பட்டுப் போயிருந்தாள். மாதவனுக்கு ஆம் என்று சொன்னால் யாழ்ப்பாணத்திற்கே அவள் நிரந்தரமாக வர வேண்டும். அங்கே ஆசிரியனாக இருப்பவன் கொழும்பு வர மாட்டான். மொத்தமாக வேலையையும் விட வேண்டும். குழந்தையைப் பார்த்துக்கொண்டு ஒரு முழுமையான குடும்பத் தலைவியாக வீட்டில் இருக்க வேண்டும். இதையெல்லாம் யோசிக்கச் சொல்லி ஆதினி சொல்லியிருந்தாள்.
*****
எல்லாளனின் காவல் நிலையத்தில் வாசலில் காவலுக்கு நின்ற காவலர் ஆதினியைக் கண்டுவிட்டு நலன் விசாரித்தார்.
அதற்கான பதிலைச் சொல்லி அவர் நலனையும் விசாரித்துவிட்டு, “இவர் நிக்கிறாரா அண்ணா?” என்று விசாரித்தாள்.
அவருக்கு நல்ல வயது. கூடவே நிறையக் காலமாக மாற்றல் இன்றி அங்கேயே கடமையில் இருப்பதில் அவரை நல்ல பழக்கம்.
“ஓம் மா. சேருக்கு இண்டைக்கு மீட்டிங் இருந்தது. இப்ப முடிஞ்சிருக்கும்.”
“ஒரு கேஸ் குடுக்கிறதுக்காக அவரைப் பாக்கோணுமாம் எண்டு உங்கட ஒபீசரிட்ட போய்ச் சொல்லுங்க அண்ணா.” என்றவளைச் சின்ன சிரிப்புடன் நோக்கிவிட்டுக் குடுகுடு என்று ஓடிப்போய் அவனிடம் தகவல் சொன்னார் அவர்.
ஒரு கோப்பில் ஆழ்ந்திருந்தவன் வியப்புடன் நிமிர்ந்து சிசிடிவியில் பார்த்தான். கோயிலுக்குச் சென்று வந்ததன் அடையாளமாகக் கையில் அர்ச்சனைத் தட்டுடன் சேலையில் அமர்ந்திருந்தவள் விசிலடிக்கும் உணர்வைத் தந்தாள் அவனுக்கு.
“அண்ணா கோவிக்காம ரெண்டு டீக்கு சொல்லிப்போட்டு ஆளையும் வரச் சொல்லுங்க.” என்றான் அவரிடம்.
“என்ன தம்பி நீங்க? செய் எண்டு சொன்னா செய்யப்போறன்.” மற்றவர்கள் போன்று நான் உனக்கும் மேலே என்கிற மமதை இல்லாமல், வயதிற்கு மரியாதை தந்து பழகுகிறவனை அவருக்கு மிகவுமே பிடிக்கும். இப்போதும் குடுகுடு என்று ஓடிப்போய் அவளை உள்ளே போகச் சொல்லிவிட்டு, பால் தேநீருக்குச் சொல்வதற்கு ஓடினார்.
தன் நாற்காலியில் மிக வசதியாக சாய்ந்திருந்தவன் உள்ளே வந்தவளைக் கண்ணில் சிரிப்புடன் பார்வையால் மேய்ந்தான்.
அவள் முறைப்பில் உள்ளூர எழுந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு பார்வையாலேயே தன் முன்னால் இருந்த இருக்கையை அவளுக்குக் காட்டினான்.
எப்போதுமே அவளுக்கு இப்படி அவனுடைய அலுவலக அறையில், அவன் பின்னே காவல்துறையின் இலச்சினை பெரிதாகப் பொறிக்கப்பட்டிருக்க, சிங்கமெனக் காக்கி உடையில் அமர்ந்திருப்பவனைப் பார்க்க மிகவுமே பிடிக்கும். இவன் என் நாயகன் என்கிற நினைப்புத் தரும் பெருமையும் பூரிப்புமாக அவனைப் பார்த்து ரசிப்பாள்.
இன்றும் அவன் மீதிருந்த கோபத்தையும் தாண்டிக்கொண்டு ரசிக்க வைத்தான் அந்தக் காவல்காரன். அவன் இருக்கைக்குப் பின்னால் இருந்த ஜன்னல் திட்டில் அவளும் குழந்தைகளும் புகைப்படச் சட்டம் ஒன்றில் இருந்தார்கள். எப்போதுமே இருப்பதுதான். அவள் பார்வை அங்கே சென்று வருவதைக் கவனித்துவிட்டு, “அது மேம், என்ர சிலுக்கும் அந்த சிலுக்கு எனக்குப் பெத்துத் தந்த ரெண்டு குட்டீஸும்!” என்றான் வேண்டுமென்றே.

