இந்தக் கொஞ்ச நாள்களாக இரவுகளில் அவன் அடிக்கிற லூட்டிகள்தான் அவனை இப்படிப் பேச வைக்கின்றன என்று புரிந்து அவள் கண்ணக் கதுப்புகள் சூடாகவா என்றன.
“ஏதோ கேஸ் குடுக்கோணும் எண்டு சொன்னீங்களாம்?” அவனே ஆரம்பித்தான்.
பார்வையில் முறைப்பு வந்து அமர, “என்ர புருசனக் காணேல்ல.” என்றாள் அவள் கடுப்புடன்.
ஒரு கணம் அவனே அதிர்ந்துவிட்டான். குபீர் என்று வெடித்துக்கொண்டு கிளம்பிய சிரிப்பை அடக்கினான்.
“எப்பிடிக் காணாமப் போனவர்?”
“இடுப்பில சொருகி வச்சிருந்தனான். எங்கயோ விழுந்திட்டார்.”
உதட்டைக் கடித்து முறுவலை அடக்கியபடி அவளையே பார்த்துவிட்டு, “ஓ! அப்ப முதல் உங்கட இடுப்பத்தான் செக் பண்ணோணும்.” என்றான் அவன்.
‘செக் பண்ண வாடா! இருக்கு உனக்கு!’ என்று அமர்ந்திருந்தாள் அவள்.
கண்ணில் சிரிப்புடன் குறுகுறு என்று அவளைப் பார்த்துவிட்டு, தன் முன்னிருந்த கணனியில் தீவிரமாகப் பார்வையைப் பதித்து, அவள் சொல்கிறவற்றைப் பதிவேற்றுகிறவன் போன்ற பாவனையோடு, “கடைசியா அவரை எப்ப பாத்தனீங்க?” என்று கேட்டான்.
“கள்ளக் காதலியப் பாக்க வாற மாதிரி நடுச்சாமத்தில மட்டும் வந்திட்டுப் போறார் அவர்.” என்ற அவளின் பதிலில், “ஏய் என்னடி!” என்று தன்னை மீறி நகைத்தான் அவன்.
“என்னவா? எனக்கு வாற ஆத்திரத்துக்கு உங்களக் கொல்லப்போறன் இப்ப!” அவளின் பிரத்தியேக வசனத்தைக் கடித்துத் துப்பிவிட்டு எழுந்து வந்து, பிரசாதத் தட்டிலிருந்த திருநீறு சந்தனத்தை எடுத்து அவன் நெற்றியில் வைத்துவிட்டாள்.
அவள் அவற்றை வைத்த வேகத்தில் அவன் தலை ஒருமுறை பின்னே சென்று வந்தது.
“என்ன விசேசம்?” தீற்றிய திருநீறு அவன் கண்களில் விழுந்து உருத்திவிடக் கூடாது என்று கையை வைத்து ஊதிவிட்டவளின் அன்பு கொடுத்த கனிவுடன் வந்தது அவன் கேள்வி.
“இண்டைக்கு ஒண்டுக்கும் உதவாத என்ர புருசனை நான் கட்டின நாள். அதான் கோயிலுக்குப் போயிற்று அப்பிடியே இஞ்ச வந்தனான்!”
“கலியாண நாளாடா?” ஆச்சரியமும் ஆனந்தமுமாகக் கேட்டவனுக்குக் கவலையாகவும் போயிற்று. “இந்த முறையும் மறந்திட்டனா?” என்றான் மன்னிப்புக் கோரும் குரலில்.
“அதானே! அதெல்லாம் உங்களுக்கு நினைவிருக்காதே. ஆனா எவனாவது கள்ளன் காடையன் விட்ட ஒரு சின்ன வார்த்தையும் மறக்காது என்ன!” என்று அவன் தாடையிலேயே ஒரு குத்துக் குத்தினாள் அவள்.
“ஆதிம்மா கோவமாடி!” என்று குழைந்தவனுக்கு ஒவ்வொரு முறையும் இப்படிச் சறுக்குகிறோமே என்று ஒரு மாதிரியாகிற்று.
“கோவமாவா? உங்களக் கொல்லுற ஆத்திரத்தில இருக்கிறன் எண்டு சொன்னனே!” என்று அவன் மண்டையிலேயே நங்கு நங்கு என்று குட்டினாள் அவள்.
“சேர் இது…” என்று ஒரு கோப்புடன் அவசரமாகக் கதவைத் திறந்துகொண்டு வந்த கதிரவன், நடந்ததைக் கண்டு ஒரு கணம் திகைத்து நின்றுவிட்டுச் சட்டென்று சிரித்துவிட்டான்.
“சொறி கதிரவன்!” என்று வேகமாய் விலகி நின்றாள் ஆதினி.
“பரவாயில்ல மேம். உங்களுக்கு இன்னும் சேர அடிக்கோணும் எண்டா சொல்லுங்க, நான் வெளில போயிட்டு வாறன்!” என்றான் அவன்.
“நீங்க டியூட்டிலதானே இருக்கிறீங்க கதிரவன். உங்கட மேலதிகாரிக்கு அடி விழுது. என்ன ஏது எண்டெல்லாம் கேக்க மாட்டீங்களா?” என்று சிரித்துக்கொண்டு அவனை அதட்டினான் எல்லாளன்.
“நீங்களும் அதே டியூட்டிலதான் சேர் இருக்கிறீங்க.”
அவன் முறைக்க, “சொறி சேர்! சட்டத்துறை காவல்துறை எல்லாம் மேம்ன்ர கட்டுப்பாட்டுக்குக் கீழதான் இருக்கு. அதால எதையும் தட்டிக் கேக்கிற நிலைல நான் இல்ல சேர்.” என்றான் அவன்.
ஆதினி முகத்தில் விரிந்த முறுவல். அவனுக்கும் பிரசாதத் தட்டை நீட்டினாள். வேகமாக அணிந்திருந்த ஷூக்களைக் கழற்றிவிட்டு எடுத்து நெற்றியில் தீட்டிக்கொண்டான் அவன்.
“என்ன மேம் விசேசம்?”
“என்ர சந்தோசம் எல்லாம் துலஞ்சுபோன நாள் கதிரவன்.”
“கலியாண நாளா மேம்?” என்று சட்டென்று பிடித்தான் அவன்.
“டேய்!” என்று கொதித்துவிட்டான் எல்லாளன்.
“சொறி சேர்! எப்பவும் நேர்மையா இருக்கச் சொல்லி எனக்குப் பிடிச்ச எல்லாளன் சேர் சொல்லியிருக்கிறார்.” என்றதும் கணவன் மனைவி இருவருக்குமே சிரிப்பரும்பிப் போயிற்று.
“ஒரு நிமிசம் சேர்!” என்றுவிட்டு மின்னலென வெளியே போனவன் அடுத்த பத்தாவது நிமிடம் இருவருக்குமான காலை உணவைக் கொண்டுவந்து வைத்தான். கூடவே ஒரு பூ பொக்கேயுடன் திருமண நாள் வாழ்த்தை இருவருக்கும் சேர்த்துச் சொல்லிவிட்டு கதவைச் சாற்றிக்கொண்டு வெளியேறினான்.
நல்ல நாள் என்பதில் இனிப்புப் பலகாரம் ஒன்றை எடுத்துக் கணவனுக்கு ஊட்டிவிட்டுக் கண்ணைச் சிமிட்டினாள் ஆதினி.
“ஆதிம்மா, இப்பிடி ஒவ்வொரு முறையும் நான் மறக்கிறது குறையாடி உனக்கு?”
சின்ன முறுவல் ஒன்றோடு, “மறக்காம எல்லாத்தையும் செய்ய நான் இருக்கிறன்தானே. விடுங்க.” என்றாள் அவள்.
“அப்பிடி நீ எல்லாத்தையும் பாத்து பாத்துச் செய்றதாலதான் நான் இப்பிடி இருக்கிறன் போல.”
உண்மை அதுதான் என்று அவளுக்கும் தெரியும். அன்னை தந்தை இல்லாமல் போனதிலிருந்து அவனே அவர்கள் இடத்தில் இருந்து அவனுக்கும் சியாமளாவுக்கும் எல்லாவற்றையும் செய்யவேண்டிய பொறுப்பில் இருக்கிறான் என்று ஒரு முறை பேச்சுவாக்கில் அவன் சொன்னது அவள் இதயத்தைத் தொட்டிருந்தது. அன்றிலிருந்து அவனிடம் சொன்னதில்லையே தவிர அவனுக்கு அன்னையாகவும் அவள் ஆகிப்போயிருந்தாள்.
அதில் கணவனின் இடக்கையை எடுத்து அதில் தன் உதடுகளை ஒற்றி எடுத்துவிட்டு, “அது எனக்குச் சந்தோசம்தான் விடுங்க. ஏலுமா இருந்தா பின்னேரம் நேரத்துக்கு வாங்க. இரவுக்கு எல்லாருமா சேர்ந்து வெளில சாப்பிடப் போவம்.” என்று சொன்னாள்.
உடனேயே ஒத்துக்கொண்டான் அவன். இரவும் அவள் சொன்னது போன்று காண்டீபன் குடும்பம், மாதவன் குடும்பம், அவள் வீடு மொத்தமும் என்று பெரிய உணவகம் ஒன்றுக்குச் சென்று சிரிப்பும் கும்மாளமுமாக உணவை முடித்தார்கள்.
காண்டீபன், அகரன், கதிரவன், மாதவன் என்று எல்லோருடனும் சேர்ந்து தன்னை மறந்து சிரித்துக் கதைத்த கணவனையே இமைக்க மறந்து பார்த்திருந்தாள் ஆதினி.
அந்தப் பார்வை அவனைச் சென்று சேரவும் சிறு சிரிப்புடன் திரும்பி என்னவென்று கண்ணாலேயே கேட்டான்.
சட்டென்று ஒற்றைக் கண்ணைச் சிமிட்டிச் சிரித்தாள் அவள். ஒருகணம் அதிர்ந்துபோனான் அவன். யாராவது பார்த்திருந்தால் இன்றைய நாளும் சேர அவனை ஓட்டித் தீர்த்திருப்பார்கள். சிரிப்பும் சிவப்பும் முகத்தை ஆக்கிரமிக்க அவனால் அவளிடமிருந்து பார்வையை அகற்ற முடியாது போயிற்று.
எதையாவது முடிக்கிறபோது, இருக்கிற இடத்திலிருந்து விடைபெறுகிறபோது, அல்லது அவனைச் சீண்டுவதற்கு அவள் செய்கிற சாடைதான் இந்தக் கண்ணடிப்பு!
இப்போது இது அவனுக்கான பிரத்தியேக அழைப்பிற்கான கண்ணடிப்பா? அல்லது, எப்போதும் போல் அவனைச் சீண்டுவதற்கான கண்ணடிப்பா?
இருக்கிற பிரச்சனைகள் போதாது என்று இவளுக்கென்றே தனியாக ஒரு எஃப்.ஐ.ஆர் போட்டு, குழு அமைத்து, இவளை ஆராய வேண்டும் போலவே.
ஆனால் ஒன்று! அந்தக் குழுவின் மொத்த உறுப்பினர்களாகவும் அவன் மட்டும்தான் இருப்பான்.
காவல்காரனின் மூளை மிகக் கன்றாவியாகத்தான் வேலை செய்தது. அவள் என்று வந்துவிட்டால் அவன் எப்போதுமே அப்படித்தான். இரண்டு பிள்ளைகளாகியும் அவளை அவன் இன்னும் ஆராய்ந்து முடிக்கவில்லை.
தினமும் புதிதாய்த் தெரிகிறவளை வைத்துக்கொண்டு அவனும் என்ன செய்ய? அதுவும் இடையில் விட்டிருந்த இடைவெளியால் உணர்வுகளும் அது தருகிற உத்வேகமும் உறவையும் அவர்களுக்கேயான அந்த உலகையும் புதிதாக்கி அவனை ஒருவிதக் கிறக்கத்திலேயே வைத்திருந்தன.
அந்த நினைவு தந்த தித்திப்புடன் கொடுப்புக்குள் சிரித்தபடி மீசையை நீவிவிட்டான். கற்பனைகள் கண்டபாட்டுக்கு எல்லைக் கோடுகளின்றி ஓடின.
அவன் பார்வையிலேயே அவள் அனைத்தையும் கண்டுகொண்டாள். கண்கள் முறைத்தாலும் உதடுகள் முறுவலில் நெளிய அடம்பிடித்தது.
வீட்டுக்கு வந்ததும், “போலீஸ் போலீஸ் வேலையப் பாக்கோணும். பொறுக்கி வேலை பாத்தா கேஸ் போட்டு ஜெயிலுக்க தள்ளுவன்!” என்று அவனை விரல் நீட்டி எச்சரித்தாள் அவள்.
அவனைப் போன்ற காவல்காரனின் முன்னே எவனும் நின்று பேசவே யோசிப்பான். ஆனால் அவள், நெற்றிப் பொட்டிலேயே துப்பாக்கியை வைத்தவளாயிற்றே.
அவளை இழுத்துத் தன் கைக்குள் நிறுத்தி, “பெயில்ல எடுக்க எனக்கு என்ர மனுசி வருவாள்.” என்றான் அந்த வெண்டைப் பிஞ்சு விரல்களுக்குள் தன் விரல்களை நுழைத்துக் கோத்தபடி.
“உள்ளுக்குப் போட்டதே அவள் எண்டா?”
“போடடி எண்டுதான் நானும் சொல்லுறன். ஆனா அந்த ஜெயில் நீயா இருக்கோணும்.” என்று டீல் பேசியவன் அவளுள் சிறையாகி அவளைச் சிறையெடுக்கும் முயற்சியில் இறங்கினான்.
தொடரும்…

