எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு 19 – 1

அத்தியாயம்-19

 

 

அழுதழுது ஓய்ந்து, பித்துபிடித்துப்போய் இருந்தார் அன்னம். தந்தையின் இழப்பு ராஜைப் பெரிதாகப் பாதித்தது. ஆலமரமாய் நின்று காத்தவரை இழந்ததில் குடும்பப்பொறுப்பு அவன் தலையில் விழுந்தது மாத்திரம் அல்லாமல், அவன் நேசித்த படிப்பைக் கூட இழந்து நின்றான்.

 

சுய நினைவு இல்லாது எங்கேயோ வெறித்துக்கொண்டு இருந்த தாயைப் பார்ப்பதா அல்லது வேலைக்குப் போவதா என்று அவன் தவித்தபோது, அன்னத்தைக் கவனிக்கும் பொறுப்பை மரகதம் ஏற்றுக்கொண்டார்.

 

ராஜ் வேலைக்குச் சென்றதும் அன்னத்தைத் தன் வீட்டுக்கு அழைத்துவந்து தானே பார்த்துக்கொண்டார் மரகதம். மாலையில் வேலை முடிந்துவரும் ராஜ் தங்கள் வீட்டுக்கு அவரை அழைத்துச் செல்வான். இப்படியே இரண்டு மாதங்கள் கழிய, கணவன் இனி இல்லை என்கிற நிஜத்தை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளப் பழகியிருந்தார் அன்னம்.

 

அன்று சனிக்கிழமை. அன்னத்தை அழைத்துவர மரகதம் ராஜ் வீட்டுக்குச் சென்றிருந்தார்.

இரவு நேரத்துக்குத் தூங்கியும் காலையில் எழமுடியாமல் சோம்பலாக இருந்தது கவிக்கு.

 

கொஞ்ச நாட்களாக இப்படியே தான் இருக்கிறது என்று சலித்தவளுக்கு, தன் உடல் நிலையைத் தாயிடம் சொல்லவும் விருப்பம் இல்லாமல் இருந்தது. சும்மாவே ஓய்ந்துபோய் இருக்கும் அம்மாவை இன்னும் கஷ்டபடுத்தக் கூடாது என்று நினைத்து, தானாகவே அது சரியாகிவிடும் என்று அலட்சியப் படுத்திவிட்டாள்.

 

இன்றோ தலை சுற்றலும் சோர்வும் அதிகமாக இருக்க, ஏதும் பொல்லாத வியாதியோ என்று பயந்துபோனாள் கவி. இது மாறாமல் இருந்தால் இனி அம்மாவிடம் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டே வீட்டின் பின்பக்கம் முகம் கழுவச் சென்றாள்.

 

முற்றம் கூட்டிக்கொண்டு நின்ற தங்கம் கவியைக் கண்டுவிட்டு, “எழுந்துவிட்டாயா கவி?” என்று கேட்டாள்.

 

“ஆமாம் அக்கா..” என்றுகொண்டே பற்பொடியை விரலில் ஏந்தி வாயில் வைத்துப் பல்லைத் தீட்ட ஆரம்பிக்கவுமே, வயிற்றைப் பிரட்டிக்கொண்டு சத்தி(வாந்தி) வந்தது கவிக்கு. அதைப் பார்த்துப் பதறிய தங்கம் வேலியை சுற்றிக்கொண்டு ஓடி வந்து அவளின் நெற்றியைப் பிடித்துக்கொண்டாள்.

 

“என்ன கவி? என்ன நடந்தது? இரவு ஏதும் பழையதைச் சாப்பிட்டாயா?”

 

வாந்தி எடுத்து ஓய்ந்தவளுக்கு வாய் கொப்பளிக்கத் தண்ணீர் கொடுத்துக்கொண்டே கேட்டாள் தங்கம்.

 

“இல்லையே அக்கா. இரவு அம்மா அவித்த பிட்டுத் தான் சாப்பிட்டேன். ஆனால் எனக்கு இரண்டு மூன்று நாட்களாகவே சத்தி வருகிறது. போதாததுக்கு தலைச் சுற்றலும் சோர்வாகவும் இருக்கிறது…” என்றவளுக்கு, அழுகை வந்தது.

 

தங்கத்துக்கோ அதிர்ச்சியாகவும் சந்தேகமாகவும் இருந்தது. இவள் சொல்லும் அறிகுறிகள் அனைத்தும் சொல்லும் சேதி வேறவே என்று யோசித்தவர், “ஏன் கவி… அங்கே… விடுதியில் நீயும் ரவியும் ஒன்றாகத்தான் தூங்கினீர்களா?” என்று கேட்டார் மறைமுகமாக.

 

இதைவிடத் தெளிவாகக் கேட்கவும் தயக்கமாக இருந்தது. அவரின் எண்ணம் தப்பாக இருந்துவிட்டால்….

 

கவி ஆம் என்பதாக தலையைச் சோர்வுடன் அசைக்கவும், தங்கத்தின் இதயம் பலமகாத் துடிக்கத் தொடங்கியது.

 

“அவன்.. அவன், அக்கா… என்னை அங்கே இங்கே எல்லாம் தொட்டான். அங்கே விடுதியில் ஒரு நாள், அவனின் வீட்டில் ஒரு நாள்…” என்றாள் தயங்கித் தயங்கி.

 

அதைக் கேட்டு, என்ன அநியாயம் என்று துடித்தது தங்கத்தின் மனது.

 

“இது அவனின் அம்மாவுக்குத் தெரியுமா?”

 

“எனக்குத் தெரியாதுக்கா….” என்றவளைப் பார்க்கக் கோபமாக இருந்தது தங்கத்துக்கு.

 

“ஊரையே விற்கும் அளவுக்கு வாய் காட்டுவாய். ஒரு ஆண்பிள்ளையை நம்மைத் தொட அனுமதிக்கலாமா கவி?” என்று கோபத்தில் அதட்டினார் தங்கம்.

 

அவரின் திடீர் அதட்டலில் அழுகை வந்தது கவிக்கு.

 

“நான் விடவில்லை அக்கா. ஆனால்… அவன்தான் என்னை விடவில்லை. கணவன் அப்படித்தான் தொடுவான் என்றும் சொன்னான்…” என்று அழுதவளைப் பார்க்கப் பெரும் பாவமாக இருந்தது தங்கத்துக்கு.

 

இது என்ன புது வேதனை என்று தவித்தவரின் கண்களில் அன்னத்தை அழைத்துக்கொண்டு வந்த மரகதம் பட்டார். அவரை வீட்டின் பின்பக்கம் அழைத்துச் சென்ற தங்கம் விஷயத்தைச் சொல்ல, இதுவரை மனதுக்குள் குமுறிக்கொண்டு இருந்த மரகதத்துக்கு கண்மண் தெரியாத கோபம் வந்தது.

 

பெண்பிள்ளையாக அமைதியாக இருக்கப்பழகு என்று மரகதம் எப்போதும் சொல்வதுதான். அப்போதெல்லாம் கேட்காத கவி இப்போதெல்லாம் மிகவும் அமைதியாகிவிட்டதைப் பார்த்து மனதுக்குள் நொந்துகொண்டுதான் இருந்தார் மரகதம். தான் நினைத்தபடி மகள் மாறிவிட்டபோதும், அதற்குக் காரணம் அவளுக்கு நடந்த கசப்பான சம்பவங்கள் என்றுதான் நினைத்திருந்தார்.

 

ஆனால், அதுவல்ல காரணம், அவளையே பறிகொடுத்ததுதான் என்று அறிந்தபோது, இரத்தம் கொதித்தது அவருக்கு!

 

அங்கே அருகிலேயே கிடந்த விறகுக் கட்டையை எடுத்துக்கொண்டு வீட்டின் உள்ளே விரைந்தார். அங்கே தலை சுற்றலால் ஓய்ந்து சிவரோடு சாய்ந்து அமர்ந்திருந்தாள் கவி.

 

“நீயெல்லாம் ஒரு பெண் பிள்ளையா? உனக்கு எத்தனை தடவை சொல்லி இருப்பேன். கண்டவனுக்கும் வாய் காட்டாதே என்று… இன்று வயிற்றில் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறாயே…. இதற்குத்தானா உன்னைக் கஷ்டப்பட்டு வளர்த்தேன்.. நீ என் வயிற்றில் பிறக்காமலேயே இருந்திருக்கலாம்…” என்று, கோபத்தில் என்ன பேசுகிறோம் என்பதை மறந்து வார்த்தைகளாலும் விறகுக் கட்டையாளும் அடித்துத்தள்ளிவிட்டார்.

 

முதலில் தாயின் கோபத்துக்குக் காரணம் தெரியாமல் மலங்க மலங்க முழித்து, அடியினால் உண்டான வலியில் துடித்து, “அம்மா அடிக்காதிங்கம்மா… வலிக்குதும்மா. அடிக்காதீங்கம்மா…” என்று கதறினாள்.

 

வலி மிகுதியானதில் தாங்கமுடியாமல், “நீங்கள் இப்படி அடிப்பதால் தான்மா அவனோடு போனேன். அடித்தால் மிகவும் வலிக்குதும்மா. இப்படி நீங்கள் அடிக்காவிட்டால் நான் போயிருக்க மாட்டேன்மா. இப்போவும் அடிக்கிறீர்களே..” என்றாள் அழுதுகொண்டே.

 

அதைக் கேட்ட மரகதத்தின் ஓங்கிய கை ஓங்கியபடியே நிற்க, அதிர்ச்சியோடு மகளை வெறித்தார்.

 

உடல் தொய்ய விறகுக் கட்டையைக் கீழே போட்டவர், தானும் பொத்தென்று நிலத்தில் அமர்ந்துகொண்டார்.

 

அவளையே வெறித்தவர் திடீரென்று, “நீ நன்றாக இருக்கவேண்டும் என்றுதானே உன்னை அடித்து வளர்த்தேன். நான் செய்த தப்பை நீ செய்துவிடக்கூடாது என்று நினைத்தேனே. தவறான வழியில் பிறந்தவளும் கெட்டுப்போனாள் என்று ஊர் சொல்லிவிடக்கூடாது என்று கண்டித்தேனே….இப்படி என் தலையில் மண்ணை அள்ளி போட்டுவிட்டாயே…இனி என்ன செய்வேன் நான்…?” என்று தன் கட்டுப்பாட்டை இழந்து தலையில் அடித்துக்கதறினார்.

 

இதயம் விண்டு விண்டு வலித்தது அவருக்கு. மகளை நன்றாக வாழவைத்துப் பார்க்கவேண்டும் என்று அவர் கட்டிய கனவுக்கோட்டை, மொத்தமாக சரிந்துவிழுந்ததில் பலமாகக் காயப்பட்டுப் போனார் மரகதம்.

 

“அக்கா, மரகதமக்கா அழாதீர்கள்…” என்ற தங்கத்தின் கண்ணிலும் கண்ணீர் வழிந்தது.

 

சட்டென்று இருந்த இடத்தில் இருந்து வேகமாக எழுந்த மரகதம், முகத்தை சேலைத் தலைப்பால் துடைத்துக்கொண்டு, “தங்கம், நீ அன்னமக்காவைப் பார்த்துக்கொள். நான் இவளை வைத்தியரிடம் கூட்டிப்போய்க் காட்டிவிட்டு வருகிறேன்…” என்று சொல்லிவிட்டு, “வா…” என்றார் ஒற்றைச் சொல்லாகக் கவியைப் பார்த்து.

 

எழுந்துகொள்ளவே முடியாமல் உடம்பெல்லாம் வலித்தபோதும், தாயின் அடியினால் உண்டான பயத்தில் வேகமாக எழுந்தவள், நிற்க முடியாமல் தள்ளாடினாள். அவளை ஒற்றைக்கையில் பிடித்து இழுத்துக்கொண்டு வைத்தியரிடம் வேகநடையிலேயே சென்றார் மரகதம்.

 

அவர்களின் கிராமத்து முறைகளில் பரிசோதித்த அந்த முதிய பெண்மணியும் கவி கருவுற்றதை உறுதிபடுத்தினார். கவியின் வயதை அறிந்தவர், “குழந்தையை அழிக்கவா…?” என்று கேட்கவும், முதல் முறையாக உணர்வுகளைக் காட்டி அதிர்ந்தார் மரகதம்.

 

“இல்லை… வேண்டாம்…” என்று இயந்திரகதியில் பதில் சொல்லிவிட்டு, பணத்தையும் கொடுத்துவிட்டு மகளை அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.

 

இதுவரை கவியிடம் ஒரு வார்த்தைகூட மரகதம் கதைக்கவில்லை. கவியும் தாயுடன் பேசவில்லை. இனம் புரியா பயமும், என் வயிற்றில் ஒரு குட்டிப்பாப்பாவா என்கிற அதிர்ச்சியும் அவளை வாய் மூட வைத்திருந்தது. போதாதுக்கு தாயின் அடி மற்றும் இறுகிய நிலை கூட அவளைப் பயமுறுத்தியது.

 

“அந்த வைத்தியரம்மா கேட்ட மாதிரியே செய்திருக்கலாமே…?” என்று கேட்டாள் தங்கம்.

 

“என்ன சொல்கிறாய் தங்கம்? அவன் செய்த பாவத்தைத் தீர்க்க நாமும் பாவம் செய்வதா? கோவிலுக்குச் சென்றவளின் கழுத்தில் தாலியைக் கட்டி என் மகளின் வாழ்க்கையில் விளையாடியபோதே அவனை உண்டு இல்லை என்று ஆக்கியிருக்க வேண்டும். இந்தப் பிரச்சினையைப் பெரிதாக்கி என் மகளின் வாழ்க்கையை எல்லோர் முன்னாலும் கேலிக்கூத்தக்ககூடாது என்றுதான் பேசாமல் இருந்தேன். ஆனால் அதற்காக குழந்தையை அழிக்கலாமா?” கோபத்தில் நடுங்கியது அவர் உடல்.

 

“இனி என்னக்கா செய்வது?”

 

“எனக்கு நடந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க சொந்தம் என்று எனக்கு யாரும் இருக்கவில்லை. ஆனால் கவிக்கு? அவளின் அம்மா நான் உயிருடன் தானே இருக்கிறேன். அவளுக்காக நான் கேட்கிறேன் நியாயத்தை! எப்பாடு பட்டாவது, என் உயிரைக் கொடுத்தாவது என் மகளை அவனுடன் வாழ வைப்பேன்! கட்டாயம் இது நடக்கும் தங்கம். நான் நடத்திக்காட்டுவேன்! என் மகள் புருஷன் இல்லாமல் வாழ நான் விடமாட்டேன்! நாளைக்கே அவன் வீட்டுக்குப் போகப்போகிறேன். போய் கேட்கப்போகிறேன். இந்தக் குழந்தைக்குப் பதில் என்ன என்று?” உடல் நடுங்க, வேர்வை ஆறாக வழிய, தன்னை மறந்து ஆக்ரோசமாகக் கத்தினார் மரகதம்.

 

error: Alert: Content selection is disabled!!