தங்கத்துக்கு மரகதத்தின் முகத்தைப் பார்க்கவே பயமாக இருந்தது. கவியோ உடல் நடுங்க வீட்டின் ஒரு மூலையில் முடங்கினாள். இதுவரை அவள் பாத்தறியாத தாயை அன்று பார்த்தாள்.
“என் பிள்ளையின் வாழ்க்கையில் விளையாடிவிட்டு அவன் நிம்மதியாக இருப்பானா? இவள் வாழ்க்கைக்கு ஒரு வழி காணாமல் நான் ஓயமாட்டேன்! அவனையும் விடமாட்டேன்..” என்றவரின் முகத்தில், கோபமும் உறுதியும் கொஞ்சமும் குறையவில்லை.
“கட்டாயம் அவனைச் சும்மா விடக்கூடாது அக்கா. கவிக்கு நியாயம் கிடைத்தே ஆகவேண்டும்….” என்றாள் தங்கமும் கோபமாக.
தாயும் தங்கமும் கதைப்பதைக் கேட்டு அழுதுகொண்டே படுத்திருந்த கவி அப்படியே தூங்கிப்போனாள்.
பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்காமல் உறங்கிவிட்ட மகளைப் பார்க்கையில் இரத்தக் கண்ணீர் வடிந்தது மரகதத்துக்கு. இதுவரை மனதில் இருந்த கோபம் ஒருபக்கமாக ஒதுங்க, அந்த இடத்தை வேதனை வந்து கவ்விக்கொண்டது. மகளின் அருகே சென்று அவளின் தலையை தன் மடியில் தாங்கியவர், இமைக்கவும் மறந்து மகளின் முகத்தையே பாத்திருந்தார்.
இன்னும் குழந்தைத் தனம் மாறாத அந்தப் பால் முகத்தைப் பார்க்கையில் வலித்தது அவருக்கு! உனக்கே ஒரு குழந்தையா? எப்படித் தாங்கப் போகிறாய்?
என் குழந்தையை இப்படி தண்டித்துவிட்டாயே? சிட்டுகுருவி போல் பறந்து திரிந்தாளே! மொத்தமாய் அவளின் சிறகை ஒடித்துக் கூண்டுக்குள் அடைத்துவிட்டாயே! எவ்வளவு அவமானங்களைச் சுமக்கவேண்டும்.. எவ்வளவு கஷ்டங்களைப் படவேண்டும்… எனக்கு நடந்தவைகள் என் குழந்தைக்கு நடக்கக்கூடாது என்று தவித்தேனே என்று கண்ணுக்குத் தெரியாத அந்தக் கடவுளோடு சண்டை இட்டது அந்தத் தாயுள்ளம்!
இல்லை! என் பிள்ளை கஷ்டப்பட நான் விடமாட்டேன். உனக்கு அம்மா நான் இருக்கிறேன் கவி. உன்னைக் கண்ணுக்குள் வைத்து நான் பார்த்துக்கொள்வேன்! அம்மா உயிருடன் இருக்கும் வரை உன்னைக் கஷ்டப்பட விடமாட்டேன் என்று உறுதி கொண்டது அவர் மனது!
என் மகளை இப்படி அழவைத்துவிட்டு நீ சந்தோசமாக இருக்கிறாயா? சின்னப் பிள்ளையை சீரழித்துவிட்டாயேடா என்று குமுறி ரவியைத் திட்டித் தீர்த்தார்.
அவரின் ஸ்பரிசத்தில் கண் விழித்த கவி, தாயை நிமிர்ந்து பார்த்தாள். அவரின் கலங்கியிருந்த விழிகளைப் பார்க்க அவளுக்கும் அழுகை வந்தது.
“அம்மா…” அழுகையுடன் தாயின் இடுப்பைக் கட்டியணைத்தவள், “நான் வேண்டாம் என்றுதான்மா சொன்னேன்… அவன்தான் விடவில்லை… எனக்கு காய்ச்சல் கூட வந்தது தெரியுமா….” என்று, விம்மி விம்மித் தாயிடம் அனைத்தையும் ஒப்பித்தவளின் உடல் அழுகையில்
குலுங்கியது.
மரகதத்துக்கோ நெஞ்சம் முழுதும் வலித்தது. மகள் அந்த நொடியில் அனுபவித்த வேதனைகளை மனக்கண்ணில் கண்டவரின் மேனி நடுங்கியது. என் மகளை நாசமாக்கிவிட்டாயே பாவி…. நீ நல்லாவே இருக்கமாட்டாய் என்று ரவியை மனதால் சபித்தார்.
தாயின் மடியில் கிடந்து அழுதழுது ஓய்ந்தவளுக்கு மனதின் பாரம் குறைந்திருந்தது. இதுவரை அவரிடம் எல்லாவற்றையும் சொல்லாததில் மனதில் அழுத்திய சுமை இப்போது குறைந்திருக்க, அந்தச் சுமை அப்படியே மரகதத்தின் நெஞ்சில் ஏறி அமர்ந்திருந்தது.
எங்கேயோ வெறித்தபடி இருந்த மரகதத்தை நிமிர்ந்து பார்த்த கவி, “அம்மா, பசிக்குதும்மா……” என்றாள் மெல்ல.
“என்னம்மா..? பசிக்கிறதா…” கனிவோடு கேட்டு மகளின் தலை முடிகளைப் பாசத்துடன் ஒதுக்கிய மரகதத்துக்கு, மகள் வாயும் வயிறுமாக இருக்கிறாள் என்பது நினைவுக்கு வந்தது. “எழுந்துவருகிறாயா கவி.. அல்லது இங்கேயே கொண்டுவரவா சாப்பாட்டை…” என்று மிருதுவான குரலில் கேட்டார்.
“தலை சுத்துதும்மா…” என்றாள் கலக்கமாக கவி.
கண்கள் கரித்தது மரகதத்துக்கு. தொண்டையில் அடைத்ததை விழுங்கி, “நீ படுத்திரு. அம்மா சாப்பாடு போட்டு எடுத்துக்கொண்டு வருகிறேன்…” என்றுவிட்டு எழுந்து சென்றார்.
உணவுத் தட்டை எடுத்துவந்து மகளுக்குத் தன் கையாலேயே உணவை ஊட்டிவிட்டார். அவள் அதை வாங்கி உண்ட வேகத்தைப் பார்க்க அவரின் கண்களில் கண்ணீர் வடிந்தது. ஏற்கனவே முடியாமல் இருப்பவளை அடித்துவிட்டேனே என்று தன்ன்மேலேயே கோபமாகவும் இருந்தது.
அவளின் முன்னுச்சியில் விழுந்த முடிக்கற்றைகளை மற்றக்கையால் ஒதுக்கி விட்டவரின் மனமோ, ‘உன்னையும் உன் குழந்தையையும் யார் கைவிட்டாலும் கடைசிவரை கவனித்துக்கொள்ள நான் இருக்கிறேன்…’ என்று உறுதியுடன் நினைத்துக்கொண்டது.
அவளின் வாயையும் நீர் எடுத்துவந்து கழுவிவிட்டவர் மகளை மறுபடியும் மடியில் சாய்த்து தலையை வருடிக்கொடுத்தார்.
“நீங்க சாப்பிடவில்லையா அம்மா…?”
“நீ தூங்குடா…. நான் பிறகு சாப்பிடுகிறேன்..” என்றவரின் மனமோ, உன் வாழ்க்கைக்கு ஒரு முடிவு காணாமல் என் வாயில் பச்சைத் தண்ணீர் கூட இறங்காது என்று நினைத்துக்கொண்டது.
இருட்டியபிறகு ராஜ் வேலை முடிந்து வரவும், “ராஜ்… நாளை உன் நண்பன் வீட்டுக்கு போகவேண்டும். நீயும் வா!” என்றார் மரகதம்.
“வருகிறேன் ஆன்ட்டி . ஆனால் ஏன்?”
அழுது வீங்கிய அவர் முகம் ஏதோ பிரச்சினை என்பதை உணர்த்தியது. ஆனாலும் இவ்வளவு நாட்களின் பிறகு.. அப்போதே அங்கே போகாதவர் இப்போது ஏன்…? கேள்வியோடு அவரைப் பார்த்தான் அவன்.
“உன் நண்பனின் குழந்தை கவியின் வயிற்றில் இப்போது மூன்று மாதம்…” என்றார் எங்கோ பார்த்துக்கொண்டு.
“என்னது…?” பேரதிர்ச்சியாக இருந்தது அவனுக்கு. அவர் எதுவும் பிழையாகச் சொல்கிறாரா அல்லது நான் பிழையாக விளங்கிக் கொண்டேனா என்கிற சந்தேகத்தோடு அவன் அவரைப் பார்க்க, அவரோ ஒன்றும் சொல்லாது எங்கோ வெறித்தபடி நின்றார்.
மெல்ல மெல்ல நிஜம் புரியத்தொடங்க, “என்ன ஆன்ட்டி ? என்ன சொல்கிறீர்கள்?” என்று, கோபத்தில் முகம் இறுக நம்ப முடியாமல் கேட்டான் ராஜ்.
“ஆமாம்! அவன் என் பிள்ளையின் கழுத்தில் அறிவில்லாது தாலியை மட்டும்தான் கட்டினான் என்று நினைத்தேன். அதனால்தான் அப்போது பேசாமலும் இருந்தேன். ஆனால் படிக்கிற பிள்ளையைத் தொட்டு அவள் வாழ்க்கையை மொத்தமாக நாசமாக்கியும் விட்டான். தன் வேலையை முடித்துக்கொண்டு என் பிள்ளையை இப்படி நடுத்தெருவில் விட்டுவிட்டானே அந்தப் பாவி! அவனெல்லாம் ஒரு மனிதனா? என் பிள்ளையின் வாழ்க்கையைக் கெடுத்தவனை நான் சும்மா விடமாட்டேன். என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறான்…” ஆவேசத்துடன் கத்தியவரைப் பார்க்கவே முடியவில்லை அவனால்….
எவ்வளவு கஷ்டங்களையும் வேதனையையும் தான் ஒரு பெண் தாங்குவது. முகம் இறுகிக் கண்கள் சிவந்து ரவியை அடித்துநொறுக்க வேண்டும்போல் ஆத்திரம் வந்தது அவனுக்கு. மனிதனா அவன்? மிருகத்தை விட கேவலமான பிறவி….
இதற்கெல்லாம் தானும் ஒருவிதத்தில் காரணமாகிவிட்டோமோ என்று தோன்றியது அவனுக்கு. ஆரம்பத்திலேயே கடுமையாக அவனைக் கண்டித்து இருக்க இப்படி எதுவும் நடந்திருக்காதோ என்று நினைத்தவன், “கட்டாயம் போகலாம் ஆன்ட்டி ….” என்றான் உறுதியான குரலில்.
பிறகு, தாயை அழைத்துக்கொண்டு அவன் சென்றுவிடவும், அந்த வீடு மயான அமைதியுடன் இருந்தது.

