பாவை பிறந்து மூன்று மாதங்கள் மின்னல் என ஓடிவிட, ஊர்மக்களும் ஓரளவுக்குக் கவியை ஏற்றிருந்தனர். பாவையோ தன் குண்டுக் கன்னங்களாலும், பெரிய கருமணி விழிகளாலும், மலர் சிரிப்பாலும் அனைவரையும் கவர்ந்திருந்தாள்.
ராஜுக்கு அடுத்த பிரச்சினை வருமானம் என்றானது. தினக்கூலியில் வரும் பணம் மட்டுமட்டாகவே இருந்ததில், பாவைக்கு வேண்டிய உணவுகளை வாங்குவது பெரும் சிரமமாகவே இருந்தது.
இங்கேயே இருந்தால் காலம் முழுமைக்கும் கூலி வேலை செய்தே காலத்தை ஓட்ட வேண்டும் என்று நினைத்தவன் மனதில், தானும் வசதியில் உயர்ந்துகாட்ட வேண்டும் என்கிற வெறி இருந்தது. தந்தையின் ஆசையையும் நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணியவன், தாங்கள் இருந்த காணியை விற்றுக் காசாக்கிக்கொண்டு அன்னம், கவி, பாவை என்று எல்லோரையும் கூட்டிக்கொண்டு வவுனியாவுக்கு வந்துசேர்ந்தான்.
வவுனியாவில் வாடகை வீட்டில் இருந்துகொண்டு, மின்சாதனப் பொருட்கள் விற்கும் கடை ஒன்றில் மாதச்சம்பளத்துக்கு சேர்ந்தான் ராஜ்.
அப்படியே நாட்கள் நகர, பாவைக்கும் இரண்டு வயதானது. ராஜுக்கு சுமையாகத் தானும் மகளும் இருக்கிறோமே என்று வேதனை கொண்டவள், தன்னாலான உதவி என்று நினைத்து, வீட்டு வேளைகளில் இருந்து அன்னத்துக்கு ஓய்வைக் கொடுத்துவிட்டு தானே பொறுப்பை எடுத்துக்கொண்டாள் கவி.
இப்படியே எத்தனை நாட்களைச் சும்மாவே கழிப்பது என்று எண்ணியவளுக்கு தாயின் சமையல் வேலையையே தானும் ஆரம்பித்தால் என்ன என்று தோன்றியது. உடனேயே ராஜிடம் அனுமதி கேட்டாள்.
“ஏன் கவி? என் மேல் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதா உனக்கு? உங்கள் இருவருக்கும் சாப்பாடு போடமுடியாத அளவுக்கு என்னைக் கையாலாகாதவன் என்று நினைத்துவிட்டாயா?” என்று வேதனையுடனும் கோபத்துடனும் கேட்டான் ராஜ்.
“என்ன அண்ணா…. இப்படிச் சொல்கிறீர்கள்? நீங்கள் இல்லாவிட்டால் நானும் என் பெண்ணும் என்ன ஆகி இருப்போம் என்று நினைக்கவே பயமாக இருக்கிறது. உங்களை நம்பால் வேறு யாரை நம்பப் போகிறேன் நான்? நீங்களும் பெரியம்மாவும் தான் அண்ணா என்னுடைய தெய்வங்கள். இப்படியெல்லாம் பேசாதீர்கள். எனக்கு வலிக்கிறது…” என்றாள் கண்கள் கலங்க.
தொடர்ந்து, “எனக்கும் பதினெட்டு வயதாகப்போகிறது அண்ணா. எத்தனை நாட்களுக்கு சும்மாவே இருப்பது சொல்லுங்கள்? அதுதான் ஒரு வேலை என்று ஆரம்பித்தால் என் பொழுதும் ஓடிவிடுமே..” என்று கெஞ்சினாள்.
“அவள் சொல்வதும் சரிதான் ராஜ். அவளும் இந்த உலகத்தை அறிந்துகொள்ள வேண்டும். அதையும் தாண்டி சொந்தக்காலில் நிற்கப் பழகவேண்டும். அதனால் அவள் வேலை செய்யட்டும். வீட்டிலேயே இருந்தபடியேதானே.. செய்யட்டும் விடு!” என்று அன்னமும் சொல்ல, முழுமனதாக இல்லாதபோதும் சம்மதித்தான் ராஜ்.
ராஜ் வேலை செய்யும் கடையில் உள்ளவர்களுக்கே சமைத்துக்கொடுத்து, முதன்முதலில் தன் தொழிலை ஆரம்பித்தாள் கவி. அன்றிலிருந்து அவளின் தொழில் மிக மெதுவாக ஏறுமுகத்தை மட்டுமே காட்டியது.
ராஜின் கடைக்கு கொள்முதல் செய்ய வந்த நந்தனின் நட்புக் கிடைக்கவும், மலையகத்தில் காணி விற்ற பணத்தைத் தன் முதலீடாகக் கொடுத்து அவனுடன் நான்கில் ஒரு பங்கு வருமானம் தனக்கு என்று தொழிலை ஆரம்பித்த ராஜ், இன்று சரிபாதி பங்குதாரனாக உயர்ந்து நிற்கிறான்.
பாவைக்கு ஐந்து வயது பூர்த்தியாகி, முதலாம் வகுப்புக்கு அவள் காலடி எடுத்துவைத்தபோது, அன்னம் நோய்வாய்ப்பட்டார்.
“நானும் போய்விட்டால் ராஜுக்கு யார் திருமணம் செய்து வைப்பது. அவன் வாழ்க்கை இப்படியே தனிமரமாக கழிந்துவிடுமோ…” என்று அவர் நோயின் பிடியில் தன்னை மறந்து அரற்றியதைக் கேட்ட கவிக்கு குற்ற உணர்ச்சி தாக்கியது.
அவள் இதுவரை ராஜைப் பற்றி யோசித்ததே இல்லை. என்னைத் தன் கண்ணுக்குள் வைத்துக் காக்கும் அண்ணாவைப் பற்றி யோசிக்காமல் சுயநலமாக இருந்துவிட்டேனே என்று மருகியவள், அன்றே திருமணம் செய்துகொள்ளும்படி ராஜிடம் பேசினாள்.
“எனக்கு விருப்பம் இல்லை…”
“ஏன் அண்ணா? பெரியம்மா கவலைப்படுவது உங்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லையா?” என்று அவள் கோபம் காட்டியபோது, ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக இருந்தான் ராஜ்.
வருபவள் கவியை உதாசீனம் செய்துவிட்டால் அவனால் தாங்கமுடியாதே. அதோடு அவள் கணவன் இன்றி வாழ, தான் மட்டும் மனைவி பிள்ளை என்று வாழ்வதா என்கிற எண்ணமே அவனைத் திருமணத்திற்கு சம்மதிக்க விடாமல் தடுத்தது.
“நீங்கள் திருமணத்திற்குச் சம்மதிக்காவிட்டால் நான் இந்த வீட்டை விட்டு வெளியேறிவிடுவேன்…” என்றாள் கவி பிடிவாதமாக.
“உளறாதே கவி…!” என்று அதட்டினான் ராஜ்.
“நிச்சயமாகச் செய்வேன் அண்ணா. என்னை நினைத்துத்தானே நீங்கள் மறுக்கிறீர்கள்..” என்று அவனின் சிந்தனை ஓட்டத்தைச் சரியாகப் பிடித்தாள் கவி.
“என்னால் முடியாது கவி. புரிந்துகொள்….”
“அப்படியானால் சரி. என்னாலும் இனி இந்த வீட்டில் இருக்கமுடியாது! நானும் பாவையும் எங்கேயாவது போகிறோம்…” என்றவளை முறைத்தான் ராஜ்.
அவளும் பிடிவாதமாகவே அவனைப் பார்த்துக்கொண்டு நின்றாள்.
சற்றுப் பொறுத்து, “நான் செய்வதாக இருந்தால் நீயும் திருமணம் செய்ய சம்மதிக்கவேண்டும்…!” என்று கொஞ்சம் இறங்கி வந்தான் ராஜ்.
அவனைச் சிலநொடிகள் வெறித்தாள் கவி. நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவள் விழிகள் கலங்கியது.
“அண்ணா, இதுதான் நீங்கள் இப்படிப் பேசுவது கடைசியாக இருக்கவேண்டும். எனக்குத் திருமணம் நடந்தது. குழந்தையும் இருக்கிறாள். அவ்வளவுதான் என் வாழ்க்கை! என் வாழ்க்கைக்கும் உங்கள் வாழ்க்கைக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை! நீங்கள் குடும்பமாக வாழவேண்டும்… அதை நான் பார்க்கவேண்டும். அதற்குச் சம்மதம் என்றால் சொல்லுங்கள். இல்லையானால் நாங்கள் வெளியே போகிறோம்..” என்றாள் கலங்கிய குரலிலும் உறுதியாக…
தாயின் பார்வையும் ஆர்வத்துடன் அவனைக் கெஞ்சியது.
அதைத் தாங்கமுடியாதவன், “என்னவாவது செய்து தொலையுங்கள். ஆனால் எனக்கு மனைவியாக வருபவள் உன்னையோ பாவையையோ ஏதாவது சொன்னாள் என்றால் தொலைந்தாள் சொல்லிவிட்டேன்! முடிந்தவரை சொந்தம் யாரும் இல்லாத பெண்ணாகப் பாருங்கள்..” என்றான்.
அன்னத்தின் முகம் பிரகாசமானது. கவியைப் பார்த்துக் கைகூப்பியவரின் கண்களில் ஆனந்தக்கண்ணீர்…
ஓடிவந்து அவர் கைகளைப் பிடித்தவள், “பெரியம்மா… என்ன இது… இப்படி எல்லாம் செய்யாதீர்கள்..” என்றவளின் உதடுகள் சிரிக்க கண்கள் அழுதது.
ராஜ் சொன்னது போலவே, யாருமற்ற அனாதையான நிரஞ்சிக்கும் ராஜுக்கும் திருமணம் மிக எளிமையாக நடந்தது!
இலங்கையின் போரினால் உறவுகளை இழந்து அநாதையாக்கப்பட்டவர்கள் வாழும் ஆதரவற்றோர் இல்லத்துக்குச் சென்று, தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வது கவிக்குப் பிடித்தமான ஒன்று! அங்கிருப்பவர்களின் தன்னலமற்ற அன்புகூட அவள் அங்கு செல்வதற்கு ஒரு காரணம் . அப்படிச் சென்றபோதே நிரஞ்சியும் கவியும் தோழிகள் ஆயினர்.
அம்மா அப்பா அண்ணா என்று செல்லமாக, செழிப்பாக வாழ்ந்த நிரஞ்சியை , அவர்கள் வீட்டில் விழுந்த ஒரேயொரு குண்டு அனாதையாக்கிச் சென்றது!
தன் துயரை நினைத்து தனக்குள்ளேயே ஒடுங்கிக்கிடந்தவளைத் தனக்கு நடந்தவைகளைச் சொல்லியே தேற்றினாள் கவி.
கவியோடு ஒப்பிடுகையில் தன் வலி பெரிதில்லை என்று உணர்ந்தவள் மெல்ல மெல்லத் தெளிந்தாள்.
அன்றிலிருந்து நிரஞ்சியும் கவியும் நெருங்கிய தோழிகள். ராஜுக்குப் பெண் என்றதுமே கவியின் நினைவில் வந்தவள் நிரஞ்சியே!
சந்தோசம் என்பது இனி என் வாழ்வில் இல்லவே இல்லை என்றிருந்த நிரஞ்சிக்கு ராஜுடனான திருமணம், அதைவிட அன்னம் கவி பாவை என்று ஒரு குடும்பமே மீண்டும் சொந்தமாகக் கிடைத்தது வரமாகத் தெரிந்தது.
திருமணத்திற்கு முதலே, கவியையும் பாவையையும் கடைசிவரையும் தன்னால் கைவிட முடியாது என்பதை நிரஞ்சியிடம் உறுதியாகச் சொல்லிவிட்டான் ராஜ்.
“நீங்கள் விட்டால் கூட நான் அவர்களை விடமாட்டேன்..” என்றாள் அவள் அவனுக்கும் மேலே சென்று!
திருமணமான பின்னரும் அவளுடன் முழுமையாக இணையமுடியாமல் தவித்த ராஜை, நிரஞ்சியின் உண்மை அன்பு மாற்றியது.
அவர்கள் ஒன்றி ஒன்றாக வாழ்வதைக் கண்ணாரக் கண்ட அன்னமும் தன் வாழ்க்கையை இந்த உலகில் முடித்துக்கொண்டார். அப்போது பாவைக்கு வயது ஏழு.
அவரும் இறந்துவிட, ராஜுடன் பெரும் போராட்டம் ஒன்றை நடத்தி, அவர்களுக்குப் பக்கத்திலேயே வாடகைக்கு ஒரு வீட்டுக்குப் பாவையுடன் குடிவந்த கவி, தன் உழைப்பால் சொந்த வீடு ஒன்றையும் வாங்கிக்கொண்டாள்.
இன்று பாவைக்கு பன்னிரண்டு வயது. நாட்கள் எவ்வளவு வேகமாக நகர்கிறது என்று ஓடிய ராஜின் சிந்தனையை,
அவன் கையில் செல்லமாகத் தட்டி, “தூங்குங்கள் அத்தான்! சும்மா எதையாவது யோசியாதீர்கள்..” என்கிற நிருவின் அதட்டல் கலைத்தது.
அவன் வாழ்வின் வரமாய் வந்த மனைவியை நினைத்து மனம் நெகிழ்ந்தது. அவனுக்கு.
“தூக்கமா? அது வரவேமாட்டேன் என்று அடம்பிடிக்கிறது…” என்று ரகசியக் குரலில், குறும்புடன் சொன்னவனின் கைகள், அவள் மீதான அணைப்பை இறுக்கியது.
“ச்சு, என் தூக்கத்தையும் கெடுக்காமல், பேசாமல் தூங்குங்கள் அத்தான்…” என்று சிணுங்கியபோதும், அவன் அணைப்புக்குள் வாகாக அடங்கிப்போனாள் அவனின் நிரு.

