அத்தியாயம்-21
அடுத்த நாள் காலை, எழுந்து குளித்து வெளியே செல்லத் தயாரானான் ரவி. கைத் தொலைபேசியை எடுத்தப் பார்க்க, அது பல அழைப்புக்கள் வந்திருப்பதைக் காட்டியது. அதுவும் தாரிகா பல தடவைகள் அழைத்திருந்தாள். போதாததுக்கு நந்தன், சகுந்தலா என்று எல்லோரும் அழைத்திருக்கிறார்கள்.
நேற்று உடைகள் எடுக்கவென்று எல்லோரும் கடைக்குச் சென்றதும், ராஜைக் கண்டுவிட்டுத் தான் இடையிலேயே அவர்களை விட்டுவிட்டு பூங்காவுக்குச் சென்றதும், இரவு நந்தன் வீட்டுக்கு வந்தவனைப் பார்த்து கோபத்துடன் முறைத்துவிட்டு அறைக்குள் புகுந்துகொண்ட தாரிகாவும் என்று அனைத்தும் அப்போதுதான் நினைவுக்கு வந்தது அவனுக்கு.
கையிலிருந்த கைத் தொலைபேசியினாலேயே தன் மண்டையில் தட்டிக்கொண்டான். “ஊப்ஸ்! எப்படியாவது அவளைச் சமாளிடா…” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தவன், தாரிகாவைத் தேடினான்.
விறாந்தையில் சாந்தியுடன் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தாள் தாரிகா.
“தாரிகா…..” என்று அழைத்துக்கொண்டே அங்கே சென்றான்.
அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள் அவள். ரவியையும் அவளையும் பார்த்த சாந்திக்குச் சிரிப்பு வந்தது.
“மிகவும் கோபமாக இருக்கிறாள். நன்றாக வேண்டிக்கட்டுங்கள்….” என்று, குறும்போடு ரவிக்கு மட்டும் கேட்கும்படியாகச் சொல்லிவிட்டு, அவர்களுக்கு தனிமை கொடுத்து விலகிச்சென்றாள் சாந்தி.
ரவி எவ்வளவு சொல்லியும் தாரிகா சமாதானம் ஆகவில்லை.
கடைசியாக, “என்ன தாரிகா இது. நான் இவ்வளவு சொல்கிறேன்.. நீ இப்படிக் கோபமாகவே இருந்தால் எப்படி?” என்றான் ரவி மனத்தாங்கலுடன்.
அவனையே பார்த்தவளின் விழிகளில் சிறு கலக்கம்.
“எப்போதும் உங்களைப் பற்றி மட்டுமேதான் நினைப்பீர்களா ரவி? நேற்று எவ்வளவு ஆசையாக வந்தேன் தெரியுமா? நீங்கள் எனக்கு முதன் முதலாக வாங்கித்தரப்போகும் ஆடைகளை என் வாழ்வின் கடைசிவரை பக்குவமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்றெல்லாம் நினைத்திருந்தேன்..” என்றவளின் விழிகள் மெல்ல கலங்கியது. அதை அவனுக்குக் கட்டப் பிடிக்காமல் முகத்ததித் திருப்பிக்கொண்டாள்.
ரவிக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. அதுவும் அவள் கண் கலங்கியது….
“இதுக்கெல்லாமா கலங்குவார்கள்.. என்ன தாரிகா இது? நேற்று நீ வாங்கிய ஆடைகளுக்கு நான் கொடுத்த பணத்தைத்தான் நந்தன் கடையில் கொடுத்தான். அதனால் அதுவும் நான் வாங்கித் தந்தவைகள்தான்.” என்று இலகுவாகப் பதில் சொன்னவனை முறைத்தாள் அவள்.
“யோசியாமல் பேசாதீர்கள் ரவி. இங்கே பணமா பிரச்சினை? என்னிடமே போதுமான அளவு பணம் இருக்கிறது. இல்லாவிட்டாலும் நான் கேட்டவுடன் கணக்குப் பாராமல் தருவதற்கு அப்பா இருக்கிறார். ஆனால் நான் ஆசைப்பட்டது உங்கள் கையால் உங்களுக்குப் பிடித்த உடை வாங்குவதற்கு. அதைப் புரிந்துகொள்ளுங்கள் முதலில்! என் உணர்வுகள் புரியாமல் இன்னுமின்னும் என்னை நோகடிக்காதீர்கள்…” என்றவளின் குரலில், எதிர்பார்த்து ஏமாந்த வலி இருந்தது.
“இது என்ன சின்னப்பிள்ளைத் தனமாக இருக்கிறது தாரிகா..” என்றவனுக்கு அவளின் உணர்வுகள் புரியவே இல்லை.
உதட்டால் மட்டுமே சிறு சிரிப்பைச் சிந்தியவள், “பெண்கள், மனதுக்குப் பிடித்தவனிடம் பல விடயங்களில் சிறு பிள்ளைத்தனமாகத்தான் நடந்துகொள்வார்கள். அவர்களின் மனதளவிலான ஏக்கம் எதிர்பார்ப்பு அது! அசட்டுத்தனம் என்று தெரிந்தாலும் அதையே விரும்புவதுதான் எங்கள் இயல்பு ரவி. அதெல்லாம் எங்கே உங்களுக்குப் புரியப்போகிறது? புரிந்திருக்க நேற்று இடையில் விட்டுவிட்டு ஓடியிருப்பீர்களா?” என்று கேட்டாள் கசப்புடன்….
“இப்போ என்ன பிரச்சினை உனக்கு? நான் என் கையால் உடை எடுத்துத்தரவில்லை. அவ்வளவுதானே! வா.. இப்போதே போய் வாங்கிவரலாம்…” என்று எழுந்தான் ரவி.
“ஏன்? இன்றும் நேற்றுப்போல் என்னைக் கடையிலேயே விட்டுவிட்டு எங்காவது ஓடுவதற்கா…..?” என்றவளை என்ன சொல்லிச் சமாளிப்பது என்றே தெரியவில்லை அவனுக்கு.
அவள் முகத்தை நீட்டியதில், சகுந்தலா முதல் காஞ்சனாவில் இருந்து நந்தன் வரை யாருமே அவனிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. சாந்தி மட்டுமே கொஞ்சம் சிரித்துப் பேசினாள்.
தாரிகாவை சமாளித்தாள் தான் மற்றவர்கள் சமாதானம் ஆவார்கள் என்று உணர்ந்தவன், தாரிகாவின் கையைப் பிடித்து எழுப்பிக்கொண்டே, “அம்மா, நானும் தாரிகாவும் வெளியே போய்வருகிறோம்…” என்று உள்ளே பார்த்து உரக்கச் சொல்லிவிட்டு அவளை இழுத்துக்கொண்டு காருக்குச் சென்றான்.
அன்று முழுவதுமே கடை கடையாக ஏறியிறங்கி அவளுக்குப் பிடித்தவைகள் எல்லாவற்றையும், அவள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லச் சொல்ல வாங்கித் தள்ளினான்.
மனதின் சஞ்சலங்கள் அப்படியே இருந்தபோதும், நேற்றைய தன்னுடைய செயல் அவளைக் காயப்படுத்தி இருப்பதை அறிந்ததில் அவனுக்கு அதுவேறு சங்கடமாக இருந்தது. அதனாலேயே நேற்றைய அவளின் மனச்சுணக்கத்தைப் போக்கும் வகையில் இன்று அவளுடனேயே இருந்தான்.
இருவரும் முகத்தில் சிரிப்போடு உள்ளே வருவதைப் பார்த்த சகுந்தலாவுக்கு மனம் நிறைந்து இருந்தது.
தாயின் முகம் மலர்ந்திருப்பதைப் பார்த்த ரவிக்கு ‘அப்பாடி…’ என்று இருந்தது.
இனி எல்லோரும் சமாதானம் ஆகிவிடுவார்கள் என்று நினைத்துக்கொண்டான்.
அவள் கண் கலங்கியது அவனுக்குக் கஷ்டமாக இருந்தபோதும், வருங்ககாலக் கணவன் என்கிற உரிமையுடன் அவனால் ஏனோ அவளுடன் முற்றிலுமாக ஒன்றமுடியவில்லை. ஏதோ ஒன்று உள்ளே இருந்து அவனை ஆட்டிப்படைத்தது.
தாரிகா குடும்பத்தினர் நந்தன் வீட்டில் தங்கி இருந்ததால் அந்த இரண்டு நாட்களும் சகுந்தலாவும் ரவியுடன் அங்கேயே இருந்தார். அருகில் இருந்தால் மகன் தாரிகாவுடன் நெருக்கமாகிவிடுவான் என்பது அவர் மனக்கணக்காக இருந்தது. அதன்படி இன்று அவர்கள் இருவரினதும் மலர்ந்த முகமுமே அவர் நினைத்தது சரிதான் என்பதைச் சொல்ல சந்தோசமாக உணர்ந்தார்.
அன்று இரவு நாம் நம் வீட்டுக்குப் போகலாம் அம்மா என்று ரவி கூப்பிடவும், மகிழ்ச்சியுடனேயே தலையசைத்தவர், தாரிகா மற்றும் நந்தன் குடும்பத்தவர்களை தங்கள் வீட்டுக்கு விருந்துக்கும் அழைத்தார்.
வீடு வந்த ரவிக்கு, கவி பற்றிய விசயங்களை எப்படி அறிந்துகொள்வது என்று யோசனையாக இருந்தது. அவளின் கணவன் யார், அவன் எப்படி இறந்தான். இதை எல்லாம் அறிந்தே ஆகவேண்டும் என்று மனம் அடம்பிடித்தது.
எதற்கு உனக்கு இந்தத் தவிப்பு என்று கேட்ட மனசாட்சியை, உண்மையைத் தெரிந்துகொண்டால் இன்னுமே மனதுக்கு நிம்மதியாக இருக்கும் என்று அடக்கினான்.
அடுத்தநாள் காலை எழுந்து தன் வேலைகளைப் பார்க்கக் கிளம்பினான். வீதியில் பள்ளிமாணவர்கள் சைக்கிளில், பஸ்ஸில் என்று செல்வதைப் பார்க்க, பாவையின் நினைவு அவனையும் மீறி வந்தது. அவளைத் தொடர்ந்து கவியின் நினைவுகளும்.. பெருமூச்சொன்று தன்னாலே வெளியேறியது அவனுக்கு.
தனியாக நின்று ஒரு குழந்தையை எவ்வளவு அழகாக வளர்த்திருக்கிறாள். அவளும் தாயைப்போலவே துணிச்சல்காரி என்று நினைத்தவனின் கண்கள் விரிந்தது.
‘அங்கே.. அது பாவை போலவே..’ அவர்களை முந்திச்சென்றவன், தன் காரின் வேகத்தைக் குறைத்தான்.
அருகில் வேகமாக வந்த கார் தன் வேகத்தைக் குறைக்கவும், இமைகளைச் சுருக்கி அந்தக் காரைத் திரும்பிப் பார்த்துவிட்டு ஸ்கூட்டியைச் செலுத்தினாள் கவி.
காரின் கண்ணாடிகள் கறுப்பாக இருந்ததில் உள்ளே இருப்பவர் யார் என்பதைக் கவியால் காணமுடியவில்லை.
கவியையும் பாவையையும் கண்டுகொண்ட ரவிக்கு பரபரப்புக் காரணமின்றித் தொத்திக்கொண்டது. செய்யவேண்டிய வேலைகளை மறந்து கவியின் ஸ்கூட்டியைப் பின்தொடர்ந்தான்.
பாவையைப் பள்ளியில் இறக்கிவிட்ட கவி, அப்படியே அருகில் இருந்த வவுனியா கச்சேரிக்குச் சென்றாள். உள்ளே செல்லாமல் அவள் போவதையே காருக்குள் இருந்து பார்த்திருந்தான் ரவி.
அவளின் ஒவ்வொரு செயலிலும், நடையிலும் இருந்த நிமிர்வு ரவியின் கண்களுக்கு விருந்தாக இருந்தது. நன்றாக மெலிந்து இன்னும் பெண்ணாகப் பூத்திருந்தாள்.
முன்னே எல்லாம் எப்படி இருப்பாள். நான் கூட பூசணி என்று கேலி செய்திருக்கிறேனே என்று எண்ணம் ஓடியது அவனுக்கு.
அன்று, சிறு பெண்ணாக எதற்கெடுத்தாலும் கோபம் கொண்டு, முகத்தில் அப்படியே உணர்ச்சிகளைக் கொட்டி, கண்கள் சுழன்றடிக்கப் பேசும் கவி இன்று சாந்தமான முகத்தோடு, அந்தப் பெரிய விழிகளில் அமைதி தெரிய, உதடுகளில் வாடாமல் இருந்த மெல்லிய புன்னகையோடு, அமைதியான நீரோடை போல் அவன் கண்களுக்குக் குளிர்ச்சியைக் கொடுத்தாள்.
ஆனாலும் வெறுமையாக இருந்த அவள் நெற்றி அவன் மனதைக் கசக்கியது. அன்று கோவிலில் வைத்துத் தாலியைக் கட்டி அவள் வாழ்க்கையில் அவன் விளையாடியது போதாது என்று விதியும் விளையாடி விட்டதா என்று எண்ணிக் கலங்கினான் ரவி.
அவளின் இந்த மாற்றத்துக்கு தானும் ஒரு காரணம் என்று நினைக்கவே வலித்தது அவனுக்கு.
தானும் ‘ஒரு காரணம்’ என்று நினைததே வருந்துபவன் இந்த மாற்றத்துக்கு தான் மட்டுமே காரணம் என்று அறிகையில்…?

