எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு 22 – 1

அத்தியாயம்-22

 

 

“ரவி….? இங்கே பாருங்கள். ஏன் இப்படிச் சிலைபோல் நிற்கிறீர்கள்…?”

திகைத்து நின்றவனின் கைகளைப் பிடித்து உலுக்கினாள் தாரிகா.

 

“ஆ… என்ன, என்னது?” திகைத்து விழித்தான் ரவி.

 

குழப்பத்துடன் சாந்தியைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “என்ன ரவி… என்னைக் கேட்கிறீர்கள் என்னெவென்று? உங்களுக்கு என்ன நடந்தது? வாருங்கள் வெளியே போகலாம். அங்கே, கீழே நந்தன் அண்ணா காத்திருக்கிறார்…” என்றாள் தாரிகா.

 

அவளிடம் எதுவும் சொல்லாது வேகமாகக் கீழே இறங்கிய ரவி தன் காரை நோக்கிச் செல்லவும், “டேய்… நான் இங்கே நிற்கிறேன். ஒரு காரிலேயே போகலாம். நாம் நால்வர் தானே.. இங்கே வா…” என்றான் நந்தன்.

 

அவன் சொன்னதைச் சட்டை செய்யாது தன் காரில் ஏறிப் பறந்தான் ரவி.

 

ரவியின் பின்னால் வந்த பெண்கள் இருவரும், ஒருவரை ஒருவர் பார்த்துத் திகைத்து நின்றனர். தாரிகாவின் முகம் கலங்கிக் கண்களில் கண்ணீர் மல்கியது.

 

அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது சாந்திக்கு. நந்தனை முறைத்தாள்.

 

“என்னை எதற்கு முறைக்கிறாய்? நானா அவனை இப்படி விட்டுவிட்டு போகச்சொன்னேன்? அங்கே மேலே என்ன நடந்தது? அவன் எங்கே ஓடுகிறான்…” என்று மெல்லிய சிடுசிடுப்போடு கேட்டான் நந்தன்.

 

“ஒன்றுமே நடக்கவில்லை. சாதரணமாகப் பேசிக்கொண்டுதான் இருந்தோம். திடீரென்று பார்த்தால் வேகமாக வெளியே வந்தார். நாங்களும் அவர் பின்னாடி வந்தால் அவர் போய்விட்டார்…” என்ற சாந்தியின் குரலிலும் மெல்லிய எரிச்சல் கலந்திருந்தது.

 

முகம் வாட அமைதியாக நின்ற தாரிகாவைப் பார்த்து, “அவன் அப்படித்தான்மா… நீ கவலைப்படாதே. நீ கூப்பிட்டதும் வெளியே வருவதற்கு அவன் சம்மதித்ததே பெரிய விஷயம். இதே மற்றவர்கள் என்றால் முகத்துக்கு நேரே முடியாது என்று மறுத்துவிடுவான்.” என்றான் ஆறுதலாக நந்தன்.

 

“இப்படிச் செய்வதற்கு முதலே மறுத்திருக்கலாம் அவர்…” என்றாள் தாரிகா தழுதழுத்த குரலில்.

 

“ஏதும் முக்கியமான வேலை என்று நினைக்கிறேன் தாரிகா. அதனால்தான் போயிருப்பான்.. நானெல்லாம் உழைப்பை ஒரு தொழிலாக மட்டுமே பார்ப்பவன், அதே அவன் உழைப்பையே தன் மூச்சாக நினைப்பவன். அதற்காக உன் மேல் அன்பு இல்லை என்று நினைத்துவிடாதே…” நண்பனின் மேல் கோபம் இருந்தாலும், அவனை விட்டுக்கொடுக்காது சொன்னான் நந்தன்.

 

“ச்சு! விடுங்கண்ணா…. எனக்கு தலை வலிக்கிறது. என்னை வீட்டில் விட்டுவிட்டு நீங்கள் இருவரும் எங்காவது போய்வாருங்கள். இல்லை என்றால் ஏதாவது ஆட்…டோவில்… என்…னை…” நந்தனும் சாந்தியும் முறைக்கவும், குரல் தேய்ந்து நின்றுபோனது தாரிகாவுக்கு.

 

“வா எல்லோரும் வீட்டுக்கே போகலாம்…” என்ற சாந்தி, தாரிகாவையும் அழைத்துக்கொண்டு காருக்குள் ஏறினாள்.

 

இவன் ஏன் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறான். நல்லமாதிரி பேசிக்கொண்டு இருக்கிறான். பிறகு திடீரென்று மாறிவிடுகிறானே என்று தனக்குள் சிந்தித்தபடி காரை எடுத்தான் நந்தன்.

 

 

காரைப் புயலென கிளப்பிக்கொண்டு வந்த ரவி அதை நிறுத்திய இடம் பாவையின் பள்ளிக்கூட வாசல்!

 

அவன் மனம் முழுவதும் இருந்த எண்ணம்… என் மகளைப் பார்க்கவேண்டும்… பாவையைப் பார்க்கவேண்டும் என்பது மட்டுமே!

 

காரை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கியவனுக்கு, பாவையைப் பார்க்கும் வழி தெரியவில்லை. பள்ளிக்கூடத்தைச் சுற்றி எழுப்பப் பட்டிருந்த மதில் சுவர் பள்ளி வளாகத்தை மறைத்தது.

 

உள்ளேயே சென்று பார்க்கலாம் என்று வேகமாகக் கேட்டின் அருகே சென்றவனுக்கு, எதைச் சொல்லி பாவையைப் பார்க்க அனுமதி வேண்டுவது என்கிற கேள்வி எழுந்தது. அப்படியே அவளைப் பார்த்தாலும் அவளிடம் எதற்கு வந்தேன் என்று சொல்வது… அப்பா நான்தான் என்று இப்போதே சொல்லமுடியுமா? உறுதியாகத் தெரிய முதல் அவளிடம் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளவும் விரும்பவில்லை அவன். எனவே உள்ளே செல்லும் எண்ணத்தைக் கைவிட்டான்.

 

ஆனால் பாவையைப் பார்த்தே ஆகவேண்டும் என்று துடித்தது மனது.

 

என்ன செய்யலாம் என்று யோசித்தபடியே வீதியின் இருமருங்கிலும் பார்வையை ஒட்டியவன், எங்காவது மதில் இல்லாது வெறும் வேலி இருந்தால் அதன் வழியே பாவை தெரிகிறாளா என்று பார்க்கும் ஆவலில், அப்படியே பள்ளியைச் சுற்றி நடந்தான்.

 

ஏமாற்றம் தான் மிஞ்சியது!

 

‘ச்சே…’ என்று காலால் நிலத்தில் எட்டி உதைத்தான். மதில் சுவரில் கைகளை ஊன்றி ஏறி, தலையை மட்டும் உயர்த்தி உள்ளே எட்டியும் பார்த்தான். பாவையைக் காணமுடியவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பியவனுக்கு தான் செய்த செயல் அப்போதுதான் புரிந்தது.

 

பின் தலையில் தட்டி, “சரியான மக்குடா நீ… இப்படி நீ எட்டிப் பார்த்ததை யாராவது கண்டிருந்தால், பாவையின் அப்பா இப்படி செய்தார் என்று பாவைக்கு அல்லவா அவமானம். உன் பிள்ளையை நீயே தலை குனிய வைக்காதே….’ என்று தனக்குத்தானே எச்சரித்துக்கொண்டான்.

 

கையில் கட்டியிருந்த மணிக்கூடு நேரம் பதினொன்று முப்பது என்று காட்டியது. பள்ளிக்கூடம் முடிய இன்னும் நேரமிருக்கிறதே என்று எண்ணம் ஓட, என்ன ஆனாலும் சரி அவளைப் பார்க்காமல் போவதில்லை என முடிவெடுத்து காரில் ஏறி அமர்ந்தான். அவன் மனதில் பெரும் சுமை ஒன்று குடியேறி இருந்தது. அதன் பாரம் தாங்காமல் ஸ்டேரிங் மேலேயே தலை சாய்த்தவனுக்குப் பல சிந்தனைகள்…..

 

பாவை என் மகள்தானா? வர்மா என்று எனக்கு மட்டும்தான் பெயரா…? அவள் என் பிள்ளை இல்லையென்றால்…

 

இல்லையில்லை! அவள் என் மகள்தான்!

 

இல்லை, அப்படியிருக்காது என்று நினைக்கவே விரும்பவில்லை அவன் மனது.

 

அவள் தன் மகள்தான் என்பதற்கான சான்றுகளைத் தேடியது அவனின் பரிதவித்த மனது

 

பாவைக்கு பன்னிரண்டு வயதாகிறது. கவியின் கழுத்தில் நான் தாலி கட்டியும் கிட்டத்தட்ட அவ்வளவு வருடங்கள் தான். பாவை வயிற்றில் இருக்கையிலேயே கணவன் இறந்துவிட்டான் என்றால், இந்தப் பன்னிரண்டு வருடங்களுக்குள் கவிக்கு ஒரு கல்யாணம் நடந்து, பிள்ளை பிறப்பது என்றால் அந்த பிள்ளைக்கு பன்னிரண்டு வயதாக இருக்கவே முடியாது!

 

ஆக, பாவை என் மகள்தான்! ஒரு நிமிடம் துள்ளிக்குதித்த அவன் மனது அடுத்த நொடியே கோபத்தில் வெகுண்டது!

 

என் பிள்ளையை… என் மகளை என்னிடம் இருந்து பிரித்துவிட்டாளே!

 

என் மகளுடனான என்னுடைய பன்னிரண்டு வருட வாழ்க்கையைக் களவாடியவள் அவள்!

 

அன்று ராஜ் அவன் மகளுடன் கொஞ்சியது கண் முன்னால் வந்து நின்றது. அப்படியான எத்தனை தருணங்களை அவன் இழந்துவிட்டான். இல்லையில்லை, அவள் இழக்க வைத்துவிட்டாள்!

 

நான் இங்கே குத்துக்கல்லாக உயிருடன் இருக்க, அப்பா இறந்துவிட்டார் என்று பொய்யைச் சொல்லி என் மகளை அப்பன் இல்லாப் பிள்ளை ஆக்கிவிட்டாளே..

 

உன் அப்பா இவர்தான் என்று பிள்ளைக்குச் சொல்லவேண்டியவள் தாய்! இங்கேயானால் என் மகள் இவள்தான் என்று நானே உறுதிப்படுத்த வேண்டிய நிலைக்கு என்னை ஆளாக்கிவிட்டாளே…

 

நெஞ்சு கொதித்தது அவனுக்கு! ராணி மாதிரி என் வீட்டில் வளர்ந்திருக்கவேண்டிய என் செல்வத்தை ஒன்றும் இல்லாதவளாய் வளர்த்திருக்கிறாள்.

 

அவளை! அவளின் முடியைக் கொத்தாகப் பிடித்து இழுத்து நான்கு அறை விடவேண்டும் என்று ஆவேசம் வந்தது!

 

கோபத்தில் முகம் இறுக, நெஞ்சு கொதிக்க காரை ஸ்டார்ட் செய்து கியரைப் போட்டு, அவன் எடுத்த வேகத்தில் வெறிகொண்ட வேங்கையைபோல் சீறிப்பாய்ந்தது கார்.

 

 

 

சமையல் கட்டில் நின்று சமைத்துக் கொண்டிருந்த கவி எதையோ எடுக்கத் திரும்ப, புயலென உள்ளே வந்த ரவியின் மீது மோதிக்கொண்டாள்.

 

திடீரென்று வீட்டுக்குள், அதுவும் சமையல் கட்டுக்குள் ஒருவனைக் கண்டதில் வெலவெலத்துப் போனாள். அப்படி வந்தவன் ரவி என்பதாலும், தான் அவன் மீது மோதியதாலும் அதிர்ந்து நின்றாள்.

error: Alert: Content selection is disabled!!