எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு 22 – 2

போதாக்குறைக்கு அவளின் கையைப் பிடித்து விறாந்தைக்கு இழுத்துச் சேன்றவனின் கோபம் பெரும் திகைப்பைக் கொடுத்தது.

 

அவன் பிடித்து இழுத்த இடம் வலியைக் கொடுக்க, “கையை விடு..ங்கள்…” என்றாள், வலியில் உண்டான முகச் சுளிப்போடு.

 

“என் மகளை எதற்காக என்னிடம் இருந்து மறைத்தாய்…?” அவள் கையை விடாது உறுமினான் ரவி.

 

இப்போது அவன் முகத்தை நன்றாக நிமிர்ந்து பார்த்து, “கையை விடுங்கள்…” என்றாள் இப்போது நிதானமாக.

 

அவளின் அந்த நிதானம் அவனுக்கு இன்னும் கோபத்தைக் கிளப்பியது. “முதலில் நான் கேட்ட கேள்விக்குப் பதிலைச் சொல்லு?” என்று அதட்டினான்.

 

பதட்டம் சிறிதுமின்றி அவனை அண்ணாந்து பார்த்தாள் கவி!

 

அவளையே உறுத்தவனின் விழிகளை நேராகப் பார்த்து, “அதைத் தெரிந்து என்ன செய்யப் போகிறீர்கள்…?” என்று கேட்டாள்.

 

அவளின் அந்த அலட்சியமான கேள்வியில் சினம் கொண்டவனின் விழிகள் விரிந்தது. அப்படியானால் பாவை அவன் மகளே தான்!

 

முதலே அவனுக்கு உறுதியானபோதும், அவள் வாய் வழி வந்துவிட்டதில் மனம் துள்ளிக்குதித்தது. ஆனாலும் அவளின் திமிரான பேச்சும் மகள் இருப்பதை அவள் மறைத்ததும் கோபத்தைக் கொடுத்தது.

 

“ஏய்! என்னடி திமிரா? பிள்ளையைப் பற்றித் தகப்பனிடம் சொல்லமால் மறைத்ததும் இல்லாமல் திமிராகக் கேள்வி வேறு கேட்கிறாயா?” என்று சீறினான்.

 

அவன் மறுபடியும் மறுபடியும் மறைத்தாய் என்று சொன்னதில் சினம் கொண்டு, “நான் மறைத்தேனா அல்லது நீங்கள் மறைந்து, ஒழிந்து ஓடினீர்களா?” என்று கேட்டாள் குத்தலாக.

 

ஒரு நொடி முகம் கன்றியது அவனுக்கு.

 

“என்ன? புத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைப்போ?” அவனும் விடுவதாக இல்லை!

 

“உள்ளதைப் பேசுவதாக நினைக்கிறேன்…”

 

“ஆமாமாம்! நீ பெரிய உண்மை விளம்பி!” என்றான் அவன் ஏளனமாக.

 

“ஆமாம்! நான் நிச்சயமாக உண்மை விளம்பித்தான். உங்களைப் போல் ஏமாற்றுக் காரி இல்லை..” என்றாள் அவனைத் துச்சமாகப் பார்த்து.

 

ஒரு நொடி முகம் கன்றியபோதும், “தேவை இல்லாததுகளைப் பேசாதே. என் மகள் எனக்கு வேண்டும்!” என்றான் அவன் அறிவிப்பாக.

 

திகைத்து விழித்தாள் கவி. பத்துமாதம் சுமந்து, பெற்று, கஷ்டப்பட்டு அவள் வளர்க்க, எங்கிருந்தோ வந்து என் மகள் என்று சொந்தம் கொண்டாடுவானா அவன்?

 

“என்னது? உங்கள் மகளா? ஒரு குழந்தை உருவாவதற்குக் காரணாமாக இருப்பதாலேயே ஒருவன் அப்பா ஆகிவிட முடியாது! கற்பழித்தவனை எந்தப் பெண்ணும் தன் பிள்ளைக்கு அப்பன் என்று அறிமுகப்படுத்த மாட்டாள்! அவனிடம் போய் இது உன் பிள்ளை என்று சொல்லவும் மாட்டாள்!” என்று அவனை மிகக் கடுமையாகக் குத்தினாள் அவள்!

 

அதைக் கேட்டவனுக்கு அவமானத்தில் முகம் கன்றிக்கருத்தது!

 

“தாலியைக் கட்டித்தானே உன்னைத் தொட்டேன். சும்மா உன் பாட்டுக்கு எதையும் உளறாதே!” என்றான் ஆத்திரத்தோடு.

 

“ஓ..! கடைசிவரை என்னை வைத்துக் காப்பாற்றும் எண்ணத்தோடுதான் தாலியைக் கட்டினீர்கள் போல?” என்று கேட்டவளின் கேள்விக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை.

 

அப்படியான எண்ணம் எதுவும் அன்று அவனுக்கு இருந்ததில்லையே! ஏன், நடந்த அசம்பாவிதங்களைக் கூட நடத்தவேண்டும் என்றும் அவன் நினைத்ததில்லையே என்று ஓடிய அவன் சிந்தனையை அவள் பேச்சுத் தடுத்தது.

 

“கடைசிவரை கைவிடாமல் குடும்பம் நடத்தவா தாலியைக் கட்டினீர்கள்? இல்லையே! உங்கள் உடம்புத்தேவைக்கு ஒருத்தி தேவை. அதற்கு நான் மாட்டினேன். உங்கள் தேவை முடிந்ததும் காலில் இருக்கும் செருப்பைக் கழட்டி எறிவதுபோல் தூக்கி எறிந்துவிட்டு, இப்போது வந்து நியாயம் பேச வெட்கமாயில்லை?” அவனைக் குதறிவிடும் வேகம் இருந்தது அவள் வார்த்தைகளில்!

 

அவள் பேச்சில் ஆத்திரம் அளவை மீற, “வார்த்தைகளை அளந்து பேசு!” என்று கை நீட்டிச் சீறினான் ரவி.

 

அவள் சொல்வதுபோல் உடல் தேவைக்காக மட்டுமே அவன் தாலியைக் கட்டாதபோதும், அன்று அவனுக்கு அதுவும் தேவைப்பட்டது என்பது உண்மைதானே. அதோடு அவனும் காதலில் கசிந்துருகித் தாலியைக் கட்டவில்லையே…. அவள் கேட்பதில் நியாயம் இருந்தபோதும், ஆண்மனமல்லவா இறங்கிப்போக மறுத்தது அவன் மனம்.

 

தன்னை அவள் மட்டம் தட்டுவதைப் பொறுக்கமுடியாமல், கோபத்தோடு அவளை உறுத்துப் பார்த்தவனை, அச்சம் என்பது சிறிதும் இன்றி நேராகப் பார்த்தாள் கவி.

 

அவன்தான் தன்னுடைய பார்வையை விலக்கிக்கொண்டான்.

 

அவளுக்கு முதுகு காட்டித் திரும்பிக் கொண்டவன், “எனக்கு என் மகள் வேண்டும்?” என்றான் முடிவாக.

 

“எதற்கு? அவள் வாழ்க்கையையும் நாசமாக்கவா?” அவனை நோகடிக்க வேண்டும் என்கிற வேகத்தில் வந்தது அவள் வார்த்தைகள்.

 

“வாயை மூடு! அவளைப் பெற்றவள் மாதிரியா இருக்கிறது உன் பேச்சு!” என்று அதட்டியவனின் முகம், மகளின் நினைவில் கனிய, “என் வீட்டு இளவரசி அவள்! அவளின் வாழ்க்கை எதற்கு நாசமாகவேண்டும். தங்கத்தட்டில் வைத்துத் தாங்கப்போகிறேன் என்பிள்ளையை..” என்றான் கண்களில் கனவுமின்ன.

 

அதைக் கேட்டவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அவள் மட்டும் என்ன, பாவையைப் பித்தளைத் தட்டில் வைத்தா தாங்குகிறாள். அவளும்தான் மகளை உள்ளங்கையில் வைத்துத் தாங்குகிறாள். இவ்வளவு கஷ்டப்பட்டு அவள் உழைப்பது யாருக்காக?

 

பன்னிரண்டு வருடங்களாக ஒற்றை ஆளாக நின்று மகளை வளர்த்தவளுக்கு இனி வளர்க்கத் தெரியாதா?

 

‘உன் வீட்டு இளவரசிதான் அவள். ஆனால் என் உலகமே அவள்தான்டா முட்டாள்..’ என்று எரிமலையாகக் குமுறியது அவள் உள்ளம்.

 

“ஓ… உன் மகள் என்றதும் அவளைத் தங்கத்தட்டில் தாங்குவாய். அதுவே ஒரு சமையல் காரியின் மகள் என்றால் அவள் வாழ்க்கையே சீரளிப்பாயா?” எள்ளலோடு நிதானமாக வந்தது அவள் கேள்வி!

 

“சீச்சீ! என்ன தாய் நீ? நம் மகளோடு எதை எதையோ இணைத்துப் பேச உனக்கு நாக்கூசவில்லை….” அவன் கண்களில் அப்பட்டமான வெறுப்புத் தெரிந்தது.

 

அவள்தான் ஏதோ தப்புச் செய்தது போலவும், அவன் அவளைக் கண்டிப்பது போலவும் அவன் பேச்சு இருக்க, அதுவரை அவள் காத்த அமைதி பறந்தது.

அதோடு ‘நம் மகள்’ என்று அவன் சொந்தம் கொண்டாடியது வேறு எரிச்சலைக் கொடுத்தது.

 

“எதை எதையோடு இணைக்க வேண்டாம் என்கிறாய்? கோவில் கும்பிட வந்தவளை வளைத்துப்பிடித்துத் தாலியைக் காட்டினாயே அதைச் சொல்கிறாயா? அல்லது அதைக் கட்டியதால் நீ என் மனைவி என்று சொல்லி நீ செய்த கேவலமான செயலைச் சொல்கிறாயா?”

 

“அம்மாவும் மகனுமாகச் சேர்ந்து பதினைந்து வயதுப்பெண்ணை வீட்டை விட்டுத் துரத்தினீர்களே, அதைச் சொல்கிறாயா? அல்லது வீட்டை விட்டுப் போனவள் என்ன ஆனாள் என்று தேடாது, விட்டது சனி என்று நிம்மதியாக இருந்தாயே அதைச் சொல்கிறாயா?” கண்களில் ஆவேசம் மின்ன, பெண்புலியாக நின்று கேள்வி கேட்டவளுக்குப் பதில் சொல்லமுடியாமல் தலை குனிந்தான் ரவி.

 

அவள் கேட்ட கேள்விகள் அத்தனையும் அவனைக் குன்ற வைத்தது!

 

“நான் செய்தது தவறுதான்! அதற்காக என் மகளை விட்டுவிட்டு இருக்க இனி என்னால் முடியாது!” என்றான் இறங்கிய குரலில்.

 

“உங்களோடு என் மகளை அனுப்ப என்னாலும் முடியாது!” என்றாள் கவியும் உறுதியாக.

 

“என்னால் அவள் இல்லாமல் இனி ஒரு நொடி கூட இருக்கமுடியாது. என் மகள் எனக்கு வேண்டும்!” என்றவன், ஏளனத்தில் கீழுதடு வளைய அவனைப் பார்த்துக்கொண்டிருந்தவளை சிலநொடிகள் கூர்ந்து பார்த்துவிட்டு, “அவள் மட்டும் அல்ல! நீயும் வேண்டும் எனக்கு!” என்றான் அழுத்தமாக.

 

“என்னது?” என்று திகைத்தவளின் கண்களில் மீண்டும் சீற்றம் வந்தது.

error: Alert: Content selection is disabled!!