எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு 23 – 3

சாப்பாடு எடுத்துவருகிறேன்…” என்றாள் நிரு.

 

“எதுக்கு உனக்கு.. சாரி உங்களுக்கு சிரமம்…” என்று சங்கடத்தோடு சொன்னவனைப் பார்த்து,

 

“அவள் உன்னை விடச் சிறியவள் தான். நீ என்றே சொல்.” என்று ரவியிடம் சொன்னான் ராஜ்.

 

மனைவியிடம் திரும்பி, “நீ அவனுக்குச் சாப்பாட்டைக் கொண்டுவா…” என்று ஏவினான்.

 

அவள் உள்ளே சென்றபிறகு, “உன்னிடம் சிலது கேட்கவேண்டுமே ராஜ்…” என்ற ரவி, அன்று தான் மலையகத்தில் இருந்து கொழும்புக்குச் சென்றபிறகு நடந்தவைகளைக் கேட்டான்.

 

அவன் கொழும்புக்குச் செல்ல முதலும் சகுந்தலா கவிக்குச் சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்டது முதல் அவள் வெளியேற்றப்பட்ட விதம் வரை அனைத்தையும் முகம் இறுகச் சொன்ன ராஜ், “இந்த நிமிடம் வரை உன் மீதும் உன் அம்மா மீதும் எனக்கு நம்பிக்கை என்பது சிறிதும் இல்லை. ஆனாலும், பாவைக்காகக் கவியோடு கதைக்கச் சம்மதிக்கிறேன்..” என்றான் இறுகிய குரலில்.

 

அதைக் கேட்ட அரவிக்கு, ராஜின் பேச்சு நியாயமாகத்தான் பட்டது. ஆனால், அப்படியெல்லாம் நடந்துகொண்டது என் அம்மாவா என்றிருந்தது அவனுக்கு. என் மேல் உயிரையே வைத்திருக்கும் அவரால் எப்படி இப்படியெல்லாம் நடந்துகொள்ள முடிந்தது.

 

அவனால் நம்பவே முடியவில்லை. ஆனால் ராஜும் பொய் சொல்பவன் அல்லவே!

 

“அங்கே.. எனல் வீட்டுக்கு நீ வந்து கவியைக் கூட்டிச் செல்லவில்லையா…?” தாய்தான் அவளைத் துரத்தி இருக்கிறார் என்பதை நம்ப முடியாமல் திரும்பவும் கேட்டான் ரவி.

 

“அன்று நீ என்னை வீட்டுக்கு வெளியே போகச்சொன்ன பிறகு நான் உன் வீட்டுக்கு வரவே இல்லை…” என்றவனின் முகம் அன்றைய நினைவில் இன்றும் கன்றியது. உயிர் நண்பன் என்று பழகியவன் செய்தவைகள் பன்னிரண்டு வருடம் கழித்தும் வலித்தது ராஜ்க்கு.

 

“சாரிடா.. அன்று நான் செய்தவைகள் எல்லாமே முட்டாள் தனமானவை..” என்று உணர்ந்து சொன்னான் ரவி.

 

பரவாயில்லை விட்டுவிடு என்று சொல்லமுடியவில்லை ராஜால். மௌனமாகவே இருந்தான்.

 

நிரு உணவைக் கொண்டுவரவும் உண்டவன், “சரிம்மா, நான் கிளம்புகிறேன். மிக்க நன்றி.. சாப்பாட்டுக்கு மட்டும் இல்லை. எனக்காக நீ பேசியதற்கும் சேர்த்துச் சொல்கிறேன்…” என்று நிருவிடம் சொன்னான்.

 

“குட்டிமா, மாமா பாய். வருகிறேன் ராஜ். நாளை கவி வீட்டுக்கு போகலாம்தானேடா…” என்று பரிதவிப்போடு கேட்டவன் செல்வதற்காக எழுந்தான்.

 

“ம்.. போகலாம்..” என்றபடி தானும் எழுந்துகொண்ட ராஜ், “நீ ஒரு விடயத்தை நன்றாக நினைவில் வைத்துக்கொள் ரவி. கூடப்பிறக்காவிட்டாலும் கவி என் தங்கைதான். அவளுக்காக எதுவும் செய்யத் தயாராக அண்ணன் என்று ஒருவன் இருக்கிறேன்.

 

“அதேபோல உள்ளதைச் சொல்வதானால், உன்னோடு கவியை இணைப்பதிலோ அல்லது உனக்காக கவியிடம் பேசுவதிலோ சற்றும் எனக்கு விருப்பம் இல்லை. நீயும் உன் அம்மாவும் செய்தவைகள் அப்படி! எனக்கு பிடிக்காவிட்டாலும் கூட கவியிடம் பேசுவதற்கு நான் ஒப்புக்கொண்டதற்குக் காரணம் பாவை! அவளின் வாழ்க்கையாவது நன்றாக இருக்கட்டும். அதேபோல எந்தப் பிழையும் செய்யாமலே கஷ்டப்பட்டவள் கவி. இனியாவது அவளும் நன்றாக இருக்கவேண்டுமே என்கிற ஆசை. அதனால்தான் எனக்குப் பிடிக்காதபோதும் இதைச் செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறேன்.” என்றவன் அழுத்தமான குரலில் தொடர்ந்தான்.

 

“இனி உன்னாலோ அல்லது உன் அம்மாவாலோ அவர்கள் இருவருக்கும் ஏதாவது சிறு கஷ்டம் வந்தாலும் கூட நீயும் உன் அம்மாவும் தொலைந்தீர்கள்.

மற்றும்படி உன் முகத்தில் விழிக்கக்கூட எனக்கு விருப்பம் இல்லை.” என்றான் ராஜ் தெளிவாகவும் உறுதியாகவும்.

 

இதுவரை மனதில் இருந்த கோபத்தையும் வேதனைகளையும் வார்த்தைகளிலேயே கொட்டினான் ராஜ்.

 

பலமாக வலித்தது ரவிக்கு. அதுவும் கடைசியாக ராஜ் சொன்ன வரி… ஆனாலும் அவன் சொன்னவைகளில் எந்த தவறும் இல்லையே!

 

நிமிர்ந்து ராஜைப் பார்த்து, புரிகிறது என்பதாக தலையை அசைத்தவன், “வருகிறேன்…” என்று எல்லோருக்கும் பொதுவாகச் சொல்லிவிட்டு வெளியேறினான்.

 

error: Alert: Content selection is disabled!!