அதுவும் அவன் அவரைக் குற்றவாளிக் கூண்டில் நிற்க வைத்துக் கேள்வி கேட்டது… சகுந்தலா மனதளவில் மடிந்தே போனார்.
அவரைத் திரும்பியும் பாராது உள்ளே சென்றவன், சிறிது நேரத்தில் மறுபடியும் வெளியே வந்தான். சகுந்தலா நின்ற இடத்திலேயே சமைந்து நின்றபோதும் அவரை லட்சியம் செய்யாது, வெளியே செல்கிறேன் என்று கூடிச் சொல்லாது வெளியேறிய மகனைப் பார்க்கையில் அவர் கண்களில் கண்ணீர் உருண்டோடியது. அவனின் அந்த அலட்சியம்.. அதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை அவரால்.
மகனுக்காக மகனின் நல்லதுக்காக என்று அவர் செய்தவைகளே மகனை அவரிடம் இருந்து பிரித்துவிட்டது.
கொடுப்பதைத்தான் திருப்பிப் பெறமுடியும்! வாழ்க்கையும் அப்படித்தான். நம் வாழ்வில் நாம் எதை மற்றவர்களுக்குக் கொடுக்கிறோமோ அதுதான் நமக்கும் திரும்பி வரும்!
தன் வீட்டில் இருந்து புறப்பட்ட ரவி நேரே சென்றது நந்தன் வீட்டுக்கு. அங்கே, விறாந்தையில் அமர்ந்து நந்தனின் பெற்றோரும் தாரிகாவின் பெற்றோரும் கதைத்துக்கொண்டு இருந்தார்கள்.
அவனைக் கண்டு முகத்தைத் திருப்பிக்கொண்டார் தாரிகாவின் அம்மா வைதேகி. அவர் ஏதாவது சொல்வதற்கு முதல் தானே முந்திக்கொண்டு, “வேலையும் முக்கியம்தான் ரவி. ஆனால் குடும்பம் அதைவிட முக்கியம். குடும்பத்தவர்களுக்கு என்றும் நேரத்தை ஒதுக்கி வேலைகளைப் பார்க்கப் பழகு!” என்றார் நந்தனின் அப்பா கனகேந்திரம்.
அவன் அமைதியாக நிற்க, “அங்கே தாரிகா கோபமாக இருக்கிறாள். போ.. போய் அவளைச் சமாதானப்படுத்து…” என்றார் தொடர்ந்து.
ரவியைத் தாரிகா வீட்டினரிடம் விட்டுக்கொடுக்க விரும்பாத கணவனின் எண்ணம் புரிந்த காஞ்சனாவும், “தாரிகா அவளின் அறையில் இருக்கிறாள். போய்ப்பார்…” என்று அவனை அனுப்பி வைத்தார்.
அவர்கள் எல்லோரையும் சிறு சங்கடத்துடன் பார்த்துவிட்டு, “உங்கள் எல்லோரிடமும் முக்கியமான விஷயம் ஒன்று கதைக்கவேண்டும். ஆனால் அதற்கு முதலில் நான் தாரிகாவுடன் கதைத்துவிட்டு வருகிறேன்…” என்று எல்லோருக்கும் பொதுவாகச் சொல்லிவிட்டு தாரிகாவின் அறைக்குச் சென்றான் ரவி.
அங்கே ஜன்னலோரம் கதிரையைப்(நாற்காலி) போட்டு அமர்ந்து இருந்தவளின் பார்வை தோட்டத்தை வெறித்துக்கொண்டு இருந்தது.
கண்கள் சிவந்து, வீங்கியிருந்த முகம் அவள் அழுதிருப்பதைக் காட்டிக்கொடுத்தது. ரவியை ஒரு பார்வை பார்த்தவள் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
அவளைப் பார்த்தவனுக்கு, எப்படித் தன் நிலையை அவளுக்குப் புரியவைக்கப் போகிறோம் என்று யோசனையாக இருந்தது.
தாயிடம் கவியைப் பற்றி நிமிர்ந்து நின்று சொன்னவனால் தாரிகவிடம் அப்படிச் சொல்ல முடியவில்லை. இந்தத் திருமணம் நிற்பதால் அதிகமாகப் பாதிக்கப்படப்போகும் ஜீவன் அல்லவா அவள்.
பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி விட்டு, “சாரி தாரிகா…” என்றான் மெல்ல.
இவனைத் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் திரும்பிக் கொண்டாள் தாரிகா.
“இன்று நடந்ததற்கு மட்டும் அல்ல, இப்போது நான் சொல்லப் போகும் விசயத்துக்கும் சேர்த்துத்தான் இந்த சாரி…” என்றான் ரவி.
அவனைத் திரும்பிப் பார்த்தவளின் புருவங்கள் இரண்டும் சுருங்க, விழிகள் கேள்வியாக அவனைப் பார்த்தது.
அவளிடம் இருந்து பார்வையை விலக்கியவன், “நமக்கு நிச்சயமான திருமணம் நடக்காது தாரிகா…” என்றான் ரவி.
சுருங்கி இருந்த புருவங்கள் இரண்டும் விரிய அதோடு சேர்ந்து விரிந்த அவளின் விழிகள் அதிர்ச்சியைக் காட்டியது.
அவனோடு வெளியே செல்லமுடியவில்லை என்பதையே அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இவனானால் திருமணமே நடக்காது என்கிறானே….
“ஏ…ஏன்?” வேதனையோடு கேட்டவளின் விழிகள் மறுபடியும் கலங்கியது.
அவளின் அந்தக் கலங்கிய தோற்றம் குற்ற உணர்ச்சியைக் கொடுத்தாலும், “எனக்கு ஒரு மகள் இருக்கிறாள் தாரிகா….” என்றான் நேரடியாக.
தாரிகாவுக்கு மீண்டும் அதிர்ச்சியாக இருந்தது.
மகள் இருக்கிறாளா?
அப்படியானால் மனைவி?
பிறகு எதற்கு என்னுடன் நிச்சயம் எல்லாம் நடந்தது? முதல் மனைவிக்கு என்ன ஆனது? குழப்பமாக இருந்தது அவளுக்கு.
அவளின் எண்ணப் போக்கைப் புரிந்துகொண்டவன், “எனக்கு இன்றுதான் தெரியும்…” என்றான். தாய்க்கு முதலே தெரியும் என்பதைச் சொல்லவில்லை.
தாய் மேல் பெரும் கோபமே இருந்தாலும் அடுத்தவரிடம் அவரை அவனால் விட்டுக்கொடுக்க முடியவில்லை.
இன்றுதான் தெரியுமா.. திடீர் என்று இவனுக்கே தெரியாமல் எங்கிருந்து ஒரு மகள் வந்திருப்பாள்….. வானத்தில் இருந்து குதித்தா….
“அது…எப்படி…?” குழப்பத்தோடு கேட்டாள் தாரிகா.
நடந்தவைகளை அப்படியே சொல்லாமல், சிறுவயதில் விளையாட்டுத் தனமாக தாலி கட்டியதாகவும், பின்னர் பிரிந்துவிட்டதாகவும், இன்று மகள் இருப்பது தெரிந்ததால் அவளையே திருமணம் முடிக்க நினைப்பதாகவும் சொன்னான் ரவி.
உண்மையை மறைக்க நினைக்காதபோதும், எல்லாவற்றையும் அவன் சொல்ல அதை வைத்து யாராவது கவியைத் தரக்குறைவாக நினைப்பதை, அவன் மனம் விரும்பவில்லை இப்போது.
மக்களுக்காக அவளை மனைவியாக்க நினைத்திருந்தாலும், இன்று இனம் புரியாத நேசவலை ஒன்று அவள் மீது அவனுக்கு உண்டானது.
தனது மகளைப் பெற்றெடுத்தவள் என்பதலா?
அல்லது மகளைக் கஷ்டப்பட்டு நன்றாக வளர்த்திருக்கிறாள் என்பதாலா? அவனே அறியான்!
ஆனால், அவனுக்கு அவள் வேண்டும்! அது மட்டும் நன்றாகப் புரிந்தது.
அவன் சொன்னவற்றைக் கேட்ட தாரிகாவுக்கு அவற்றை ஜீரணிக்க நேரம் தேவைப் பட்டது.
நிச்சயமும் நடந்து இன்னும் சில நாட்களில் திருமணம் என்று கனவுகளுடன் இருந்தவளிடம் வந்து, இந்தக் கல்யாணம் நடக்காது என்றால்… விளையாடுகிறானா இவன்?
அவனைப் பிரிய முடியுமா அவளால்?
அவனுக்குக் குழந்தை இருக்கிறது என்று அவனே தன் வாயால் சொன்னபோதும் அவள் மனது இன்னும் அவன் வேண்டும் என்றுதானே நினைக்கிறது.
செய்வது அறியாமல் மனதின் அழுத்தத்தையும் தாங்க முடியாமல் தவித்தவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“நீ..ங்கள் அவளை.. அந்தக் கவியைக் காதலிக்கிறீர்களா…?” கேட்கத் தயக்கமாக இருந்தபோதும், காதல் கொண்ட மனது அவனை இழக்க முடியாமல் தவித்ததில், வெட்கத்தை விட்டுக் கேட்டாள்!
உடனேயே பதில் சொல்லவில்லை ரவி.
அவனே அவன் மனதிடம் அந்தக் கேள்வியைக் கேட்டானோ? “தெரியவில்லை தாரிகா. அவளைக் காதலிக்கிறேனா என்கிற கேள்விக்கு என்னிடம் இப்போதைக்குப் பதில் இல்லை. ஆனால், எனக்கு என் மகள் வேண்டும்! எந்தக் காரணத்துக்காகவும் அவளை என்னால் விடமுடியாது…!” கடைசி வரிகளை வைரத்தின் உறுதியோடு சொன்னான்.
மகளுக்காகத் திருமணமே வேண்டாம் என்கிறானே என்று வலித்தபோதும், கவியை அவன் காதலிப்பதாகச் சொல்லாததில் ஒருவித ஆறுதலும் உண்டானது அவளுக்கு.
“மகள் வேண்டும் என்றால் அதற்காகத் திருமணம் தான் முடிக்கவேண்டுமா ரவி…? பாவை நம்முடனேயே இருக்கட்டும். என் பெண்ணாக நானே அவளை வளர்க்கிறேன். நான் வளர்ந்த நாட்டில் இதெல்லாம் சகஜம். அவளை நாமே மிக மிக நன்றாக வளர்க்கலாம்….” என்று பேசிக்கொண்டே போனவள், ரவியின் மறுப்பான தலையசைப்பில் பேச்சை நிறுத்திக் கேள்வியாக அவனைப் பார்த்தாள்.
“மகள் மட்டும் அல்ல தாரிகா, எனக்கு என் மனைவியும் வேண்டும்! அவர்கள் இருவரும் என் மனைவியும் மகளும். அவர்களையும் பிரிக்க முடியாது. இனி அவர்களை விட்டு என்னாலும் பிரியமுடியாது!” என்றான் அழுத்தமாக.
“ஏன் ரவி இப்படி எல்லாம் சொல்கிறீர்கள்? நமக்கும் நிச்சயம் வரை நடந்ததே! நிச்சயம், பாதித் திருமணத்திற்குச் சமம் என்பார்களே. அப்படிப் பார்த்தால் நானும்தான் உங்களுக்குப் பாதி மனைவி.” என்று படபடத்தவள் தொடர்ந்து,
“அவர்களுக்கு வேண்டியதை நாமே செய்யலாம் ரவி. எனக்கு சுவிசில் சொந்தமாக வீடு இருக்கிறது. அதை அவர்களின் பெயருக்கே எழுதிக் கொடுக்கிறேன். பாங்க்கில் பணம் இருக்கிறது. அதையும் தருகிறேன். எவ்வளவு என்றே தெரியாத அளவுக்கு நகைகள் இருக்கிறது. அதைக்கூட கொடுத்துவிடுகிறேன்… ” என்று அடுக்கிவிட்டு,

