எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு 24 – 3

“எதை இழந்தாலும் என்னால் உங்களை இழக்க முடியாது ரவி. நீங்கள் வேண்டும் எனக்கு..” என்றாள் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து.

 

அதைக் கேட்டவனின் மனதில் வெறுப்பு மூண்டது. எல்லோருமே பணத்தை வைத்துத்தான் வாழ்க்கையை அளப்பார்களா? அம்மா கூட பணத்தை அடிப்படையாக வைத்துத்தானே எல்லாவற்றையும் செய்தார்கள். இன்று இவளும்! கோபம் வந்தது.

 

மனைவி பிள்ளைகளுடன் சேர்வதற்குத் தடையாக உள்ள தடையை நீக்க அவன் வந்தால், அவர்களை அவனிடம் இருந்து பிரிப்பதற்கு அல்லவா இவள் வழி சொல்கிறாள்.

 

இவர்கள் எல்லோரும் மிக முக்கியமாக நினைக்கும் அந்தப் பணத்துக்காகக்கூட அவர்கள் இருவரும் அவனை இதுவரை நாடியது இல்லையே!

 

ஏன், அவர்களுக்கு அவன் தேவையே இல்லை!

 

அவன் தானே இன்று அவர்களின் உறவை நாடி நிற்கிறான்!

 

அவர்களிடமான தன்னுடைய உறவுக்கு, அவன் உயிர்கொடுக்கப் போராடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தாரிகாவின் பேச்சு அவனுக்குக் கடுப்பை உண்டாக்கியது.

 

சினம் வந்தபோதும் அதை அடக்கிக்கொண்டான்!

 

அவளுடன் அவனுக்கு நிச்சயம் நடந்துவிட்டதே! அதனால் அவளின் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் அவனுக்கு இருக்கிறது!

 

அதோடு, நாளை கவியின் வீட்டுக்குப் போகையில் அவளின் கணவனாக, பாவையின் அப்பாவாக, எந்தத் தடைகளும் இல்லாத சுதந்திர மனிதனாக மட்டுமே போக விரும்பினான்.

 

எனவே பறக்கப் பார்த்த பொறுமையை இழுத்துபிடித்தபடி, “வெளி நாட்டிலேயே வளர்ந்தபடியால் பல விஷயங்கள் உனக்கு விளங்கவில்லை என்று நினைக்கிறேன் தாரிகா. நீ சொல்வதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராத விடயங்கள். அதோடு அப்பா நான் உயிருடன் இருக்கையில், எதற்காக என் மகள் அப்பா இல்லாமல் வாழவேண்டும்?” என்றான் அழுத்தமாக.

 

அப்போதும் அவள் கண்களில் தெரிந்த கெஞ்சலைப் பார்த்துவிட்டு, “தாரிகா, உனக்கு வயதும் இளமையும் இன்னும் இருக்கிறது. என்னை விட மிக மிக நல்லவன் ஒருவன் உனக்குக் கணவனாகக் கிடைப்பான். உனக்கு என்ன குறை? அழகில்லையா? அறிவில்லையா? வசதி இல்லையா…” என்றவனை இடைமறித்தது அவளின் பேச்சு.

 

“இதெல்லாம் இருந்தும் கூட உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லையே ரவி…” என்றவளின் குரல் தழுதழுத்தது.

 

கண்களில் வழிந்த கண்ணீருடன், “ஏன் ரவி, உண்மையைச் சொல்லுங்கள். உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லையா…?” என்று அவனைப் பார்த்துக் கேட்டாள் தாரிகா.

 

“உன்னை எனக்குப் பிடிக்கும் தாரிகா. ஒரு தோழியாக மட்டுமே பிடிக்கும். திருமண நிச்சயம் நடந்தபிறகும் கூட என்னால் உன்னுடன் வருங்காலக் கணவன் என்கிற உரிமையுடன் பழக முடிந்ததேயில்லை. இதை நீ புரிந்துகொள்ளவேண்டும்…” என்றவனின் பேச்சால், அவன் மேல் காதல் கொண்ட அவளின் மனம் அடிவாங்கியது.

 

தோழியாக மட்டுமே பிடிக்குமா உனக்கு? எனக்கு உன்னை மட்டும் தானே பிடிக்கும்? உண்மைக் காதல் தோற்காது என்பார்களே, அப்படியானால் என் அன்பு உண்மையானது இல்லையா? என் நேசம் பொய்யா? இதயம் விண்டுவிடும்போல் வலிக்கிறதே, இந்த வலி கூடப் பொய்யா? அகன்ற விழிகளால் அவனையே பார்த்தவளின் முகம், அவள் வாயால் கேட்காத பல கேள்விகளைக் கேட்டது.

 

அவளைப் பார்க்கமுடியாமல் பார்வையை விலக்கிக்கொண்டான் ரவி.

 

தாரிகாவுக்கு, எந்தக் காரணத்துக்காகவும் கவியையும் பாவையையும் அவன் விட்டுகொடுக்க மாட்டான் என்று, அவன் பேச்சே உணர்த்தியது.

 

கன்னத்தில் வழிந்த கண்ணீரைக் கூட உணராமல் அவனையே பார்த்தவளின் இதழ்களில் ஒரு விரக்தியான புன்னகை.

 

“ஆமாம். நீங்கள் சொல்வது சரிதான். என்னிடம் நீங்கள் அப்படி உரிமை எடுத்துப் பழகியதே இல்லைதான். நானும் பலமுறை ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று யோசித்து இருக்கிறேன். ஆனால் அதற்கான காரணம் இப்படி இருக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை….” என்றவள், தன் உள்ளங்கைகளினால் கண்ணீரில் நனைந்திருந்த கன்னங்களை அழுந்தத் துடைத்தாள்.

 

வெட்கத்தை விட்டு நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று அவள் கெஞ்சியும், அவன் தன் முடிவில் இருந்து மாறவில்லை என்கையில் இனி அவளாலும் என்னதான் செய்ய முடியும்?

 

எனவே, “சரிதான் ரவி. உங்களுடைய இனிய திருமண வாழ்வுக்கு என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..!” என்றாள் புன்னகைத்து. அந்தப் புன்னகையில் மருந்துக்கும் உயிர்ப்பு இல்லை.

 

“தாரிகா, என்னைப் புரிந்துகொள்! உன்னைக் கஷ்டப்படுத்த வேண்டும் என்பது என் எண்ணம் அல்ல! ஆனால் என் நிலைமை அப்படி….” அவனால் அவளின் வாழ்த்துக்கு நன்றி சொல்ல முடியவில்லை.

 

அவளின் முகம் கசங்கியது. “இப்படிக் பிள்ளைக்காகத் திருமணம் செய்வீர்கள் என்று முதலே தெரிந்திருந்தால், உங்களுக்கு மயக்க மருந்தைத் தந்தாவது உங்கள் குழந்தைக்கு அம்மா ஆகியிருப்பேன்…” என்றாள் சிரிக்க முயன்றபடி.

 

அவள் சொன்னதன் அர்த்தம் புரிந்தபோது, விரசமாகத் தோன்றவில்லை அவனுக்கு. அவளின் அன்பின் ஆழத்தையே அது காட்டியது. எத்தனை பேரின் தூய்மையான அன்பை அவன் இழந்துவிட்டான்…..

 

ராஜின் அருமையான நட்பு, கவியின் தூய்மையான அன்பு, மகளின் பாசம்… இந்த வரிசையில் தாரிகாவின் தூய அன்பு…….

 

“உன்னைப் போன்ற நல்லவர்களின் அன்பைப் பெறுவதற்கான தகுதி எனக்கு இல்லைமா… ஆனால் தாரிகா, உன் மேல் உயிரை வைத்து, உன்னை மட்டுமே நேசிக்கும் ஒருவன் நிச்சயம் உனக்குக் கிடைப்பான்….” என்றான் உள்ளத்தில் இருந்து.

 

சோகம் கவிழ்ந்த முகத்தில், கலங்கிய கண்களோடு புன்னைக்க முயன்றாள் அவள்.

 

அதற்கு மேலும் அங்கிருக்க முடியாமல், “நான்… வருகிறேன் தாரிகா….” என்றான் ரவி.

 

உதட்டினை அழுந்தக் கடித்து வந்த அழுகையை அடக்கியபடி தலையை அசைத்தாள் தாரிகா.

 

வெளியே தனக்காகக் காத்திருந்தவர்களிடமும் தயக்கத்தோடு இந்தத் திருமணம் நடக்காது என்பதைச் சொன்னான் ரவி.

 

தாரிகாவின் அப்பா அவனை அடிக்கவே வந்துவிட்டார். கனகேந்திரம் தான் தடுத்து பிடித்தார்.

 

ஆனாலும் கண்டபடி திட்டித் தீர்த்துவிட்டார் தாரிகாவின் அப்பா. வைதேகி ஒரு புறம் புலம்பித் தள்ளிவிட்டார்.

 

ரவி எதுவும் பேசாது அமைதியாகவே நின்றான். பின்னே, உப்புத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தானே ஆகவேண்டும்.

 

நந்தனும் சாந்தியும், சாந்தியின் இன்னொரு தோழியின் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குப் போயிருந்தனர்.

 

நந்தனும் இல்லாததில் பிரச்சினை பெருத்தால் சமாளிப்பது கஷ்டமே என்று பயந்துகொண்டு இருந்தார் சகுந்தலா.

 

சத்தம் கேட்டதில் அறையில் இருந்து வெளியே வந்த தாரிகா, “அப்பா அம்மா, இப்போது எதற்காகக் கத்துகிறீர்கள்? மனைவி மகள் இருப்பதை மறைத்துவிட்டு அவர் என்னைத் திருமணம் செய்திருக்க வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா…?” என்று கேட்டாள் கோபத்தோடு.

 

“ஆனால் இனி உன் வாழ்க்கை…?” என்ற தாயின் கேள்வியில் வரப்பார்த்த அழுகையைப் பெரும் முயற்சி செய்து அடக்கி, தாய்க்குப் பதிலைச் சொல்லாமல்,

 

“நீங்கள் போங்கள். அவர்கள் கோபத்தில் பேசுவதைப் பெரிதாக எடுக்கவேண்டாம்…” என்றாள் ரவியை பார்த்து.

 

உள்ளே அவனிடம் அவ்வளவு கெஞ்சியவள், வெளியே அவனுக்காகப் பேசியதைக் கேட்டுக் குன்றிப்போனான் ரவி.

 

“எல்லோரும் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்!” என்றுவிட்டு வேகமாக வெளியேறினான்.

 

அங்கிருந்த எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “நாம் சுவிஸுக்கே போகலாம் அப்பா.. முடிந்தவரை விரைவாக..” என்றாள் தாரிகா தந்தையிடம்.

 

மகளைக் கூர்ந்தவர், அவள் விழிகளில் இருந்த கலக்கத்தைக் கண்டுவிட்டு, “போகலாம். இனி இங்கே இருந்தும் என்ன செய்வது..” என்றார்.

 

அவர்களுக்கு எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக நின்றார் கனகேந்திரம்.

error: Alert: Content selection is disabled!!