எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு 25 – 1

அத்தியாயம்-25

 

 

 

சமையலறையில் நின்று தங்கள் சிறு குடும்பத்துக்கான காலை உணவை தயாரித்துக்கொண்டு இருந்தாள் நிரஞ்சினி.

 

கைகள் தன் பாட்டுக்கு வேலைகளைச் செய்தாலும், ‘ரவியண்ணா இன்று வருவதாகச் சொன்னாரே, ஆனால் எப்போது என்று சொல்லவில்லையே…’ என்று சிந்தனை ஓடியது அவளுக்கு.

 

“நிரு, சாப்பாடு தயாரா?” என்று கேட்டுக்கொண்டே, வெளியே செல்லத் தயாராகி வந்தான் ராஜ்.

 

“ஆமாம் மகாராஜா! அனைத்துமே தயார். நீங்கள் வந்து அதை விழுங்குவது ஒன்றுதான் பாக்கி!” என்று அவனை வம்புக்கு இழுத்தாள் அவன் மனைவி.

 

“உன் ஆசைப்படியே விழுங்குகிறேன் மகாராணி. ஆனால் எதை என்றும் சொன்னாயானால் வசதியாக இருக்கும்.” என்றவனின் விழிகள், கண்ணுக்குக் குளிர்ச்சியாக நின்ற மனைவியை விழுங்கியது.

 

அவன் பார்வையில் கன்னங்களில் செம்மை பூத்தபோதும், “விட்டால் இந்த வீட்டையே விழுங்கி விடுவீர்கள். இப்போது சாப்பாட்டை விழுங்குங்கள்..” என்றாள், அவன் விழிகள் பேசிய பாஷை புரிந்தும், புரியாதது போல் நடித்துக்கொண்டே.

 

அவளைப் பார்த்து அவன் கேலியாகப் புருவங்களை உயர்த்தவும், அதைப் பார்த்தவளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

 

“அத்தான், வந்து சாப்பிடுங்கள்…” இளநகை அரும்ப அவன் கையைப் பிடித்து இழுத்துவந்து கதிரையில் அமர்த்தி, தட்டில் உணவை இட்டாள்.

 

“ரவி வருவதாகச் சொன்னான். ஆனால் எத்தனை மணிக்கு என்று அவனும் சொல்லவில்லை. நானும் கேட்க மறந்துபோனேன்…” என்றான் ராஜ், உணவை வாயில் வைத்தபடி.

 

ரவி மீது இருந்த கோபம் மறையாத போதும், அவன் வரவை எதிர்பாத்துக் காத்திருந்தது ராஜின் மனம். அவன் மூலம் மலரப்போவது கவியின் வாழ்க்கை அல்லவா!

 

“இப்போது நானும் அதையே தான் நினைத்தேன் அத்தான். பார்த்தீர்களா, நாம் இருவருமே ஒரே மாதிரியே யோசிக்கிறோம்…” என்றாள் முகம் மலர.

 

வெளியே கார் ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

 

‘யார்..?’ என்கிற கேள்வி தொக்க கணவனைப் பார்த்துவிட்டு, வாசலை எட்டிப் பார்த்தாள் நிரு.

 

“நான் நினைப்பது சரியானால் வருவது ரவி…” என்று ராஜ் சொல்லி முடிப்பதற்கும், ரவி அவர்கள் வீட்டுக்குள் காலை வைப்பதற்கும் சரியாக இருந்தது.

 

அவனை அவர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தாலும், இவ்வளவு காலையில் எதிர்பார்க்கவில்லை!

 

ராஜ் ஊகித்ததையும், ரவியின் ஆவலையும் எண்ணிக் கலகலத்துச் சிரித்தாள் நிரு.

 

ரவியின் முகத்திலும், காரணம் தெரியாத போதும் புன்னகை அரும்பியது. “என்னம்மா.. ஏன் சிரிக்கிறாய்..?” என்று கேட்டான்.

 

“இப்போது நீங்கள் எதற்காகச் சிரித்தீர்கள் அண்ணா…?” என்று அவனைத் திருப்பிக் கேட்டாள் நிரு.

 

“உன்னைப் பார்த்ததும் எனக்கும் சிரிப்பு வந்துவிட்டது. ஆனால் நீ ஏன் என்னைக் கண்டதும் சிரித்தாய்…?” அப்போதும் மறையாத புன்னகையுடன் கேட்டான் ரவி.

 

அவன் உற்சாகமாக இருப்பது அவன் முகத்திலேயே தெரிந்தது.

 

“அதுவா அண்ணா.. கார் சத்தம் கேட்கவும் இந்தக் காலையில் யாராக இருக்கும் என்று நான் யோசித்ததுக்கு, அது நீங்களாக இருக்கும் என்று உங்கள் நண்பர் சொன்னார். பார்த்தால் நீங்களே வந்து நிற்கிறீர்கள். அதுதான் எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது…” என்றாள் அப்போதும் மறையாத புன்னகையோடு.

 

ராஜைத் தன் நண்பன் என்று நிரு சொன்னது மனதுக்கு இதமாக இருந்தபோதும், “ஓ… உங்கள் இனிய காலைப் பொழுதைக் கெடுத்து விட்டேனா.. நான் வேண்டுமானால் போய்விட்டுப் பிறகு வரட்டுமா..?” என்று சிறு சங்கடத்துடன் கேட்டான் ரவி.

 

அவனுக்கு நேற்றைய இரவுப்பொழுதைக் கழிப்பதே பெரும் சிரமமாக இருந்தது. ஒரு பொட்டுத் தூக்கம் வரவில்லை. எப்போது விடியும், எப்போது ராஜோடு சென்று கவியிடம் பேசலாம் என்று தவித்துக் கொண்டிருந்தான்.

 

தூக்கமில்லா இரவை ஓட்டுவதற்கு உதவியது, அவன் கைபேசியில் இருந்த மகளின் போட்டோக்கள் தான்.

 

மனதோடு மகளிடம் பேசியவாறே, அவளின் உருவத்தைக் காட்டிய கைபேசியை நெஞ்சோடு அணைத்தபடி விழித்தே கிடந்தவன், சூரியன் உதயமாகவும் எழுந்து தயாராகிவிட்டான்.

 

இன்றும் தாயின் முகத்தை நிமிர்ந்தும் பார்க்காது வெளியேறியவன், வந்து நின்ற இடம் வவுனியா பஸ் தரிப்பு நிலையம்.

 

பஸ்ஸில் பள்ளிக்கு வந்திறங்கிய மகளைக் கண்கள் நிறையப் பார்த்துவிட்டு, அப்படியே நேரே ராஜ் வீட்டுக்கு வந்தவன் நேரத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை.

 

மகளையும் மனைவியையும் தாண்டி அவனால் வேறு சிந்திக்கவும் முடியவில்லை. வேறு சிந்தனைகள் வரவும் இல்லை.

 

“அச்சோ அண்ணா. அப்படி எதுவும் இல்லை. நீங்கள் வாருங்கள். நான் சும்மா கேலிக்குச் சொன்னேன்…” என்றாள் நிரு அன்போடு.

 

ரவி அப்போதும் சிறு தயக்கத்துடன் ராஜைப் பார்க்க, இதுவரை அவன் முகத்தையே பாத்திருந்த ராஜ் பார்வையைத் திருப்பிக்கொண்டான்.

 

“அவனுக்கும் சாப்பாட்டைப் போடு நிரு…” என்றான் ராஜ் நிருவைப் பார்த்து.

 

“இல்லை… நான் சாப்பிட்டுவிட்டேன்…”

 

“சும்மா அலட்டாமல் வந்து சாப்பிடு!” என்றான் ராஜ் அதட்டலாக.

 

“இல்லைடா….

 

“அண்ணா! இப்போது சாப்பிட வருகிறீர்களா இல்லையா?” என்றாள் நிரு மிரட்டலாக.

 

அவளின் மிரட்டலுக்குப் பணிந்து வந்து அமர்ந்தான் ரவி.

 

“எங்கே ரதிக் குட்டியைக் காணோம். இன்னும் எழவில்லையா அவள்..” என்று கேட்டவன், தன் கையில் இருந்த பையை நிருவிடம் நீட்டினான்.

 

“தூங்குகிறாள். என்னண்ணா இது..?” என்று கேட்டவளிடம்,

 

“நேற்று நான் இருந்த மனநிலையில் குட்டிக்கு ஒன்றுமே வாங்கிவரவில்லை. அதுதான் கொஞ்சம் இனிப்புக்கள் வாங்கி வந்தேன்…” என்றான் ரவி புன்னகைத்து.

 

“எதற்கண்ணா இதெல்லாம்…” என்றபடி வாங்கிக்கொண்டாள் நிரு.

 

ரவிக்குத் தட்டில் உணவை இட்ட நிரு, கணவனுக்கும் பார்த்துப் பார்த்துப் பரிமாறினாள். அவர்களுக்குள் இருக்கும் அன்னியோன்யத்தைப் பார்க்கவே அழகாய் இருந்தது.

 

நானும் என் கவியும் கூட இப்படி ஒரு அழகான வாழ்க்கையை வாழவேண்டும் என்று நினைத்துக்கொண்டான் ரவி.

 

கவி என்னோடு இணைந்து வாழ்வாளா? நான் அவளுக்குச் செய்த காரியங்கள் அவளை என்னோடு வாழவைக்குமா என்று நினைத்தவனுக்கு ஏக்கமாக இருந்தது.

 

“என்ன அண்ணா, இவ்வளவு சோகமாக இருக்கிறீர்கள்? அந்தளவுக்குக் கொடுமையாகவா இருக்கிறது என்னுடைய இடியப்பமும் சொதியும்..?” என்று கேட்டாள் நிரு.

 

“உணவு மிகவும் ருசியாக இருக்கிறது நிரு…” என்றவனின் பேச்சில் இருந்தே, அவன் சிந்தனை வேறு எங்கேயோ இருக்கிறது என்பது புரிந்தது.

 

அவனைப் பார்த்து, “உன் அம்மா என்ன சொன்னார்கள்..? சம்மதித்துவிட்டார்களா?” என்று கேட்டான் ராஜ்.

 

ரவி இங்கு வந்ததிலேயே அவன் தாயைச் சமாளித்துவிட்டான் என்று புரிந்தபோதும் அவன் மூலமே தெரிந்து கொள்வதற்காகக் கேட்டான் ராஜ்.

 

“என் மனைவி பிள்ளையுடன் நான் சேர்வதற்கு அவர்கள் என்ன சொல்வது? என்ன சம்மதிப்பது?” என்று கோபத்தோடு கேட்டவன்,

 

“நிச்சயித்திருந்த திருமணம் நடக்காது என்றும் எனக்கு மனைவியும் பிள்ளையும் இருக்கிறார்கள் என்றும் அம்மாவிடமும் சொல்லிவிட்டேன். தாரிகா குடும்பத்திடமும் சொல்லிவிட்டேன், ” என்றான் ரவி தெளிவாக.

 

அவன் குரலில் ஒரு உறுதி அப்போதும் தெரிந்தது.

 

சகுந்தலா இதற்குச் சம்மதிக்க மாட்டார் என்பது ராஜ்க்கு தெரியும். அப்படி இருந்தும் ரவி அவரிடம் சொல்லிவிட்டான் என்றால், சகுந்தலாவின் இப்போதைய நிலையை யோசித்தவனுக்கு மனதுக்குத் திருப்தியாகவே இருந்தது.

 

ஒருவரின் கஷ்டத்தில் நாம் மகிழ்வது தப்பு என்பது தெரிந்தாலும், அவனுக்கு அந்த உணர்வு உண்டாவதைத் தவிர்க்க முடியவில்லை.

 

நடந்தவைகளை ரவியிடம் கேட்டுத் தெரிந்துகொண்டான்.

 

தாரிகா பாவம் என்று தோன்றியபோதும், ரவியின் இந்த முடிவே அவளுக்கும் நல்லது என்று நினைத்ததில் அவன் மனம் சமாதானம் ஆனது.

 

 

 

அன்று வெளிவேலைகள் எதுவும் இல்லாததில், மகள் பள்ளிக்கூடம் சென்றபிறகு வீட்டு வேலைகளை அவசரமின்றிச் செய்துகொண்டிருந்தாள் கவி.

 

“பாவக்கா.. அட்ட.. பாவக்கா….” என்ற ரதீசாவின் மழலைக் குரல் கேட்டு இனிதாக அதிர்ந்தாள் கவி.

 

ரதிக்குட்டி வந்திருக்கிறாள் போலவே என்று நினைத்தபடி வாசலுக்கு விரைந்தவளின் காலை ஓடிவந்து கட்டிக்கொண்டு, “அட்ட, தூக்கு… தூக்கு…” என்று ஆர்ப்பரித்தாள் ரதீசா.

 

“அத்தையைத் தேடி என் குட்டி வந்தாளா…? இதோ, என் செல்லத்தை அத்தை தூக்கிவிட்டேனே…” வாஞ்சையோடு குழந்தையைத் தூக்கி முத்தமிட்டு, “வாங்க அண்ணி… வாங்கண்ணா…” என்று மலர்ச்சியோடு வரவேற்றவளின் முகம், அவர்களின் பின்னே வந்த ரவியைக் கண்டதும் கோபத்தில் கனன்றது.

 

ராஜை அவள் கேள்வியோடு முறைக்க, “வீட்டுக்கு வந்தவர்களை வரவேற்க வேண்டும் கவி?” என்றான் ராஜ்.

 

‘இவனை நான் வரவேற்க வேண்டுமா..?’ என்கிற கேள்வியைத் தாங்கி ராஜைப் பார்த்தவள், அவன் கண்களில் தெரிந்த அழுத்தத்தில், “எல்லோரும் வாருங்கள்..” என்றாள் பொதுவாக.

 

ரதீசாவைத் தூக்குகையில் பாசத்தைக் கொட்டிய கவியின் முகம், ராஜையும் நிரஞ்சியையும் கண்டதும் மலர்ந்ததையும், தன்னைக் கண்டவுடன் சுருங்கியதையும் பார்த்த ரவிக்கு வலித்தது.

 

தான் பிழை செய்தவன், அதுவும் அவளுக்குப் பெரும் பாவத்தை இழைத்தவன் என்பது தெரிந்தபோதும், அவளின் வரவேற்பு இப்படித்தான் இருக்கும் என்பதை ஏற்கனவே ஊகித்திருந்தபோதும், அவளின் செயல் அவனைக் காயப்படுத்தியது.

 

இந்த ஒரு சம்பவமே, தான் பேச வந்த விசயத்துக்கு அவளின் பதில் என்னவாக இருக்கும் என்பதை உணர்த்தியது.

 

ஆனாலும், என்ன ஆனாலும் சரி திருமணத்திற்குச் சம்மதம் வாங்காமல் நானும் இந்த வீட்டை விட்டு வெளியேற மாட்டேன் என்கிற உறுதியுடன் தானும் உள்ளே நுழைந்தான் ரவி.

 

“அமருங்கள்…” என்றாள் அப்போதும் பொதுவாகவே கவி.

 

“அட்ட… பாவக்கா எங்க… பாவக்கா….” கவியின் கன்னங்கள் இரண்டையும் பிடித்துத் தன் பக்கமாகத் திருப்பிக் கேட்டாள் ரதீசா.

 

“பாவக்காவா… அவள் பள்ளிக்கூடம் போய்விட்டாளே….” என்று ரதீசாவிடம் சொல்லிக்கொண்டிருந்த கவியின் மேல் ரவியின் பார்வை படிந்தது.

 

அன்று குண்டூஸ் ஆக இருந்தவள் இன்று கொடி போன்ற மேனியுடன், அழகாய், இளமை ஊஞ்சல் ஆடப் பேரழகியாய்த் தெரிந்தாள் அவன் கண்களுக்கு.

 

அதுவும் அவள் ரதீசாவைக் கொஞ்சும் அழகு….. நொடிக்கு அதிகமாகவே அவளில் வீழ்ந்து மீண்டது அவன் பார்வை!

 

அந்த நொடியில் ஒன்றை உணர்ந்தான் ரவி. ஒரு பெண்ணைப் பெண்ணாகப் பார்க்கும் பார்வையை அவனால் அவளிடம் மட்டுமே பார்க்க முடிந்தது, அன்றும் இன்றும்!

 

“என்ன சாப்பிடுகிறீர்கள் அண்ணா…?” பாவையின் பொம்மை ஒன்றைக் கண்ட ரதீசா கவியிடம் இருந்து நழுவி அதன் அருகே செல்லவும், ராஜைப் பார்த்துக் கேட்டாள் கவி.

 

“காலைச் சாப்பாடு முடிந்துவிட்டது கவி. குடிக்க ஏதாவது கொண்டுவா…” என்றான் ராஜ்.

 

சமையலறை சென்று, தேநீரைத் தயாரித்து அதைக் கப்புக்களில் ஊற்றிக்கொண்டிருந்தவளின் மண்டைக்குள் ‘அண்ணா எதற்கு இவனோடு வந்திருக்கிறார்..’ என்கிற கேள்வி குடைந்துகொண்டே இருந்தது. ராஜிடமும் நிருவிடமும் தேநீர் இருந்த நீட்டிவிட்டு பிடிக்காதபோதும் ரவியின் புறமும் நீட்டினாள் கவி.

 

அவளையே பார்த்தபடி கப்பை மிக மிக மெதுவாகவே எடுத்தான் ரவி.

 

மனைவி அவனுக்கு முதன் முதலில் பரிமாறிய தேநீர் அல்லவா… அதை ரசித்து ருசித்துப் பருகினான்.

 

தேநீரை அருந்திவிட்டுக் கப்பை மேசையில் வைத்த ராஜ், “ரவி உன்னுடன் பேசுவதற்காக வந்திருக்கிறான் கவி..” என்று ஆரம்பித்தான்.

 

அவள் நினைத்தது சரிதான்! அன்று தான் மறுத்ததும் இன்று அண்ணாவைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறான். இந்த அண்ணாவும் அவனின் நடிப்பை நம்பி வந்திருக்கிறார் என்று கவிக்கு ஆத்திரம் வந்தது. பின்னே ராஜையே வளைத்து விட்டானே…

 

“என்னிடம் கதைக்க என்ன இருக்கிறதுஅண்ணா?” மனதின் கொதிப்பைக் காட்டாது ராஜைப் பார்த்துக் கேட்டாள்.

 

“ஏதோ இருக்கப்போய்த்தானே வந்திருக்கிறேன்…” என்றான் ரவி கவியைப் பார்த்து.

 

“எதையும் கேட்கவோ அவரோடு கதைக்கவோ எனக்கு விருப்பம் இல்லை அண்ணா!” ராஜிடமே பதிலைச் சொன்னாள்.

 

“நான் இங்கே இருக்கிறேன்.” என்றான் ரவி.

error: Alert: Content selection is disabled!!