திகைப்புடன் நிமிர்ந்து அவனை பார்த்தவளிடம், “இல்லை, அங்கே பார்த்துப் பதில் சொன்னாய். அதுதான் நான் இங்கே அமர்ந்திருப்பது உனக்குத் தெரியவில்லையோ என்று….” என்று இழுத்தவனை இப்போது நேரடியாகவே முறைத்தாள் கவி.
அவள் சம்மதிப்பது கடினம் என்றபோதும், தானும் பிடிவாதக்காரன் தான் என்கிற எண்ணம் இருந்தது ரவிக்கு. அதோடு கவியோடு சேர்வதற்குப் பிரச்சினையாக இருந்த தடைகளை நேற்றே நீக்கிவிட்டதில் மனம் லேசாகி இருந்தது.
அதனால் இலகுவாகவே கதைக்க முடிந்தது அவனால்.
இவன் கேலி பேசியதும் நான் ஈ என்று பல்லைக் காட்டவேண்டுமோ என்று கொதித்தவள், “கண்டவரோடும் நான் கதைப்பதில்லை!” என்று ஆத்திரத்தோடு சொன்னாள்.
“நல்ல பழக்கம். ஆனால் நீ என்னுடன் தாராளமாகக் கதைக்கலாம். ஏனெனில் நான் உன் கணவன்!” என்றான் ரவியும் அழுத்தமாக.
“கணவனா? கணவன் என்பதன் பொருள் தெரியுமா? கட்டியவளைக் கடைசிவரை கைவிடாமல் காப்பாற்றுபவன் தான் கணவன்! தாலியைக் கட்டியதலாயே ஒருவன் கணவன் ஆக முடியாது!” அடக்கமுடியாத ஆத்திரத்தோடு சொன்னாள் கவி.
ரவிக்கு முகம் கன்றியது. “நான் செய்தவை எல்லாம் பிழைதான். ஆனால் அன்று பிழை என்று உணர்ந்து செய்யவில்லை… என்னை மன்னித்துவிடு! மன்னித்து என்னை மணந்துகொள்!” என்றான் தணிவாக கவியைப் பார்த்து.
“மணப்பதா? மறுபடியும் தாலி என்கிற பெயரில் ஒன்றைக் கட்டிவிட்டு இன்னும் என்னை என்ன செய்யப் போகிறீர்கள்? ஏன், இந்தப் பன்னிரண்டு வருடத்தில் என்னைப் போல் ஏமாறுவதற்கு ஒருத்தி கூடவா கிடைக்கவில்லை? அதுதான் மறுபடியும் இங்கே வந்தீர்களா? ஆனால் பாருங்கள், இன்னும் நான் பதினைந்து வயது முட்டாள் இல்லை! உங்களை நம்புவதற்கு!” கோபத்தில் தன்னை மறந்து கத்தினாள் கவி.
அவள் கத்தியதில் திடுக்கிட்டுப் பயந்த ரதீசா அழத் தொடங்கவும், அவளைத் தூக்கிக்கொண்டு எழுந்த நிரு, கணவனுக்கும் வெளியே வரும்படி கண்ணைக் காட்டினாள்.
ராஜுக்கு வெளியே போக விருப்பம் இல்லாத போதும், அவர்களின் தனிப்பட்ட விஷயத்தை அவர்கள் மட்டுமே கதைப்பது நல்லது என்றும் தோன்றியது. குடும்பம் என்று வருகையில் பெற்ற தாய் கூட வேறு அல்லவா….
தேவைப்பட்டால் உள்ளே வரலாம் என்று நினைத்து வெளியே சென்றவன் அவர்கள் பேச்சுக் காதில் விழும் தூரத்தில் நின்றுகொண்டான்.
அவர்கள் வெளியே செல்வதை ரவி உணர்ந்தபோதும், அதைக் கவனிக்கும் நிலையில் கவி இல்லை.
கோபத்தில் முகம் சிவக்க நின்றவளிடம், “அன்று எனக்கும் சின்ன வயதுதானே. என்ன, உன்னை விட மூன்று வயது பெரியவன். தாலி கட்டியதும் நீ என் மனைவிதானே, எனக்கில்லாத உரிமையா என்றுதான் நினைத்தேன். அதனால் உண்டாகும் விளைவுகளை நான் யோசிக்கவும் இல்லை…..” என்றவனை இடைவெட்டியது அவள் பேச்சு.
“ஓ… விளைவு என்ன என்று தெரிந்திருந்தால் அப்படி நடந்திருக்க மாட்டீர்களா?” உதடுகள் ஏளனமாக வளையக் கேட்டாள்.
அவனால் பதில் சொல்ல முடியவில்லை. அன்று அவனுக்கு அவளும் தேவை பட்டால் தானே….
அவளின் கேள்விக்குப் பதிலைச் சொல்லாமல், “ஆனால் உன்னைக் கைவிடும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை. நீ வீட்டை விட்டுப் போகாமல் இருந்திருந்தால் நான் உன்னை விட்டிருக்கவே மாட்டேன்…” என்று தன்னை விளக்க முயன்றான்.
“என் மீதே பிழையைத் சுமத்தியாகிறதா? நன்றாக இருக்கிறது உங்கள் நியாயம்! அந்த வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்திருக்க, பட்டினி கிடந்தே செத்திருப்பேன். அல்லது அது நடக்கவில்லை என்பதுதான் உங்கள் கவலையா…?”என்று இகழ்ச்சியோடு கேட்டாள்.
வலித்தது ரவிக்கு. “வார்த்தைகளைப் பார்த்துப் பேசு கவி..” என்றான் கெஞ்சலாக.
அவனை முறைத்துவிட்டு அவள் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.
“நான் சொல்வதைக் கேள்! நடந்தது எதையும் சரி என்றோ நான் செய்தவைகள் நியாயம் என்றோ நான் சொல்லவில்லையே… செய்தது எல்லாம் பிழைதான்! அதை மன்னித்துவிடு என்றுதானே கேட்கிறேன்..” என்றான் தன்மையாக.
மன்னிப்பதா என்று கொதித்தது அவள் மனது. மன்னித்துவிடு என்று ஒரு வார்த்தை சொன்னால் நான் பட்டவைகள் எல்லாம் இல்லை என்று ஆகிவிடுமா? பட்டது பட்டதுதானே! ஆத்திரத்தில் அழுகை கூட வரும்போல் இருந்தது கவிக்கு.
“அம்மா உன்னைப் பட்டினி போட்டார் என்றால் நீ என்னிடம் சொல்லி இருக்கலாமே. அவர் செய்தவைகள் எதுவும் எனக்குத் தெரியாதே. நீ வீட்டை விட்டு வெளியேறிய அன்று, நான் வீட்டுக்கு வந்தபோது மேசையில் தாலி இருந்தது. நீ தாலியைக் கழட்டி வைத்துவிட்டு ராஜுடன் போய்விட்டதாக அம்மா சொன்னார். நான் அவ்வளவு சொல்லியும் கேளாமல், தாலியைக் கழட்டிவிட்டு இன்னொருவனைப் பெரிதாக நினைத்துப் போனவளைத் தேடிவர எனக்கு தன்மானம் இடம் கொடுக்கவில்லை…” என்றவனை பார்வையில் அனல் பறக்க முறைத்தாள் கவி.
“இல்லாவிட்டால் என்னைத் தேடி வந்திருப்பீர்களோ?” என்றுகேட்டாள் ஏளனமாக.
“உன்னிடம் பொய் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை. அன்று உடனேயே உன்னைத் தேடி வந்திருக்க மாட்டேன்தான். நீ ராஜுடன் போய்விட்டாய் என்பது கோபத்தைக் கொடுத்தபோதும், நீ போய்விட்டாய் என்பது ஏதோ ஒரு விடுதலை மாதிரித்தான் அப்போது தோன்றியது…” என்றவனை, இளக்காரமாக அவள் பார்க்க ஒரு நிமிடம் தலை குனிந்தான் ரவி.
“அன்று அப்படி நினைத்திருந்தாலும், பிறகு நிச்சயம் உன்னைத் தேடி வந்திருப்பேன். இதை நீ நம்ப வேண்டும். என்னைத் தடுத்தது, என்னை அவமதித்து நீ அவனுடன் போனாய் என்பதுதான்…” என்றான் அவளையே பார்த்துத் தன்மையாக.
அவள் முறைக்கவும், “இது என் அன்றைய எண்ணம். இன்று உன்னையும் ராஜையும் நான் தவறாக நினைக்கவே இல்லை..” என்றான் அப்போதும் தணிவாக.
அவளின் கண்களையே நேராகப் பார்த்து, “நான் செய்தவைகள் அனைத்தும் மகா பிழைதான். இப்போது அதைப் புரிந்துகொண்டேன். அன்று நடந்தவைகளை, புரியாமல் செய்த தவறுகள் என்று எண்ணி என்னை மன்னிக்கக் கூடாதா..?” என்று கிட்டத்தட்ட மன்றாடினான் ரவி.
“நீங்கள் புரிந்து செய்தாலும் புரியாமல் செய்தாலும் தண்டனையை அனுபவித்தவள் நான். அந்த வலியும் வேதனையும் எனக்குத்தான் தெரியும்….” ஆத்திரம் பொங்கச் சொன்னவளின் விழிகளில் நீர் நிறைந்தது.
அதைப் பார்த்த ரவிக்குத் தவிப்பாக இருந்தது. அவளை அணைத்து ஆறுதல் சொல்லவேண்டும் போல் மனம் துடித்தபோதும், அப்படிச் செய்தால் இருக்கும் கோபத்தில் தன்னைக் குதறிவிடுவாள் என்கிற பயத்தில் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அமர்ந்திருந்தான்.
அவளோ தன் உள்ளத்து வேதனைகள் அனைத்தையும் கோபமாக வெளியே கொட்டிக்கொண்டிருந்தாள். “நீங்கள் செய்த செயலால் நான் இழந்தவைகள் எத்தனை? அதை எல்லாம் உங்களால் இன்று திருப்பித்தர முடியுமா? என் அம்மாவை இழந்தேன். என் படிப்பைப் பறிகொடுத்தேன். போதாக்குறைக்கு தகப்பன் இல்லாமல் வயிற்றில் குழந்தையோடு நின்றவளை குத்திக் குதறியவர்கள் முன்னால் கூனிக்குறுகி நின்றேனே… இதெல்லாம் யாரால்? உங்களால்!
“இதையெல்லாம் அனுபவிக்கும் வயதா அப்போது? அல்லது இதையெல்லாம் அனுபவிக்கும் அளவுக்கு என்ன தப்புச் செய்தேன் நான்?” என்று அவள் கேட்டபோது, வேதனை நிறைந்த விழிகளால் அவளைப் பார்க்க மட்டுமே முடிந்தது அவனால்.
“அப்போதெலாம் நான் உங்களைத் திட்டியது கூட இல்லை. ஏன் தெரியுமா? உங்களால் தான் நான் இந்த நிலையில் இருக்கிறேன் என்று கூட எனக்குத் தெரியாது. ஏன் எனக்கு இப்படி எல்லாம் நடக்கிறது என்று புரியாது எத்தனை நாட்கள் தவித்திருப்பேன் தெரியுமா? நான் உன் கணவன் என்று சொன்ன நீங்கள் என்னைத் தேடி வரவில்லையே என்று கூட நினைத்திருக்கிறேன் என்றால் பாருங்கள், எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன் என்று…” என்றவளின், பேச்சைக் கேட்டு ரவிக்கு ஐயோ என்று இருந்தது.
“ராஜ் அண்ணா இல்லாவிட்டால் அந்த ஊர் மக்கள் குத்திக்குத்திப் பேசியே என்னைக் கொன்று போட்டிருப்பார்கள். அப்போதெல்லாம் உங்கள் வாழ்க்கை உங்கள் படிப்பு என்று நிம்மதியாக இருந்துவிட்டு இன்று வந்து மன்னித்துவிடு என்றால் நான் மனித்துவிட வேண்டுமோ…? உங்களை மன்னிக்கவும் முடியாது. மணக்கவும் முடியாது. அதனால் வெளியே போகிறீர்களா…?” என்றாள் முகத்தில் அடித்தது போல்.
அவளின் பேச்சு வேதனையைக் கொடுத்தபோதும், அவள் அனுபவித்த கஷ்டத்துக்கு முன்னால் தான் அவளிடம் திட்டு வாங்குவது எல்லாம் ஒன்றுமே இல்லை என்று தோன்றியது அவனுக்கு.
இதுவரை மகளுக்காக என்று நினைத்தவனின் மனதில், இனி என் மனைவியையும் தங்கத் தட்டில் வைத்துத் தாங்க வேண்டும் என்கிற உறுதியும் உண்டானது.
எப்படியாவது அவளைத் தனது சொந்தமாக்கி, சொர்க்கத்திலேயே அவளை மூழ்கடிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
அதற்கு முதலில் அவளுடன் சேரவேண்டுமே…. எனவே மகளை முன்னிறுத்தித் தனது பேச்சைத் தொடங்கினான் ரவி.
“ப்ளீஸ் கவி. புரிந்துகொள்! நமக்காக இல்லாவிட்டாலும் நம் மகளுக்காகவாவது நாம் சேரவேண்டும்.” என்றான்.
“தேவை இல்லை! தகப்பன் இல்லாத பிள்ளையாகவே அவள் வளர்ந்துவிட்டுப் போகட்டும்!” என்றாள் அப்போதும் அலட்சியமாக.
“அப்படிச் சொல்லாதே கவி. நான் உயிருடன் இருந்தும், அப்பாவின் பாசம் இல்லாது நம் குழந்தை வளர்வது… அவள் பாவம் கவி. உன் கோபத்துக்கு அவளின் வாழ்க்கையைப் பலியாக்காதே…”
என்னது? மகளே வாழ்க்கை என்று வாழும் நான், அவளின் வாழ்க்கையைப் பலியாக்குகிறேனா? அவளைப் பார்த்து அப்படிச் சொல்ல அவனுக்கு என்ன தைரியம் இருக்கவேண்டும்! கொதித்துவிட்டாள் கவி..
“வாயை மூடு! யாரிடம் வந்து என்ன பேசுகிறாய்? என் மகளே உலகம் என்று வாழ்பவள் நான்! உன்னைப் போல் பிள்ளையையும் கொடுத்துவிட்டு ஊரை விட்டு ஓடியவள் அல்ல! ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுத்துவிட்டு அடுத்த கல்யாணத்துக்கு புது மாப்பிள்ளை வேடம் போட்டவள் என்று என்னை நினைத்தாயா?” ஆக்ரோசமாகக் கத்தினாள் கவி.
“பெரிதாக மகள் மகள் என்கிறாயே, அந்த மகளையும் நீ ஏமாற்ற மாட்டாய் என்று எப்படி நம்புவது? அன்று நான் தான் உன் கணவன் என்று என்னிடம் அடித்துச் சொல்லிவிட்டு ஊரை விட்டே ஓடியவன் தானே நீ? இன்று மகளிடம் அப்பா என்று சொல்லி ஆசையைக் கட்டிவிட்டு மறுபடியும் ஒடமாட்டாய் என்பது என்ன நிச்சயம்?” பத்திரகாளியாய் மாறி அவனைக் குதறிவிடும் வேகம் இருந்தது அவளின் பேச்சில்.
வேதனையோடு கண்களை மூடித்திறந்தான் ரவி. அன்று செய்ததன் பலனை இன்று அனுபவிக்கிறேன் என்று நினைத்தவன்,
“என் மீது உனக்கு நம்பிக்கை வரவேண்டுமானால் நான் என்ன செய்யவேண்டும்?” என்று வலியோடு கேட்டான்.
“எதுவுமே செய்ய வேண்டாம். இதுவரை நீங்கள் எனக்குச் செய்ததே போதுமானது. வாழ்க்கை கொடு, பணம் கொடு அல்லது என் பிள்ளைக்கு அப்பாவாக இரு என்று உங்களிடம் கேட்டேனா? இல்லையே! நீங்களும் வேண்டாம் உங்களின் உறவும் வேண்டாம் என்றுதானே ஒதுங்கி இருக்கிறோம். பிறகு எதற்கு இந்த நாடகமெல்லாம் போடுகிறீர்கள்?” வலிமிகுந்த குரலில் கோபத்தோடு கேட்டாள் கவி.
மனைவிக்கும் மகளுக்கும் தன் துணை தேவைப்படவில்லை என்பது கணவனாக வாழ நினைக்கும் ஒரு ஆணுக்கு எவ்வளவு பெரிய அடி. வலித்தது ரவிக்கு!
“உங்களுக்கு நான் தேவைப்படாதபோதும் எனக்கு நீங்கள் இருவரும் வேண்டுமே! என் குடும்பம், என் மனைவி, என் பிள்ளை என்று வாழ ஆசைப்படுகிறேன்.” தணிவாகவே சொன்னான்.
“எனக்கு அந்த ஆசை எல்லாம் இல்லை. இவ்வளவு காலமும் உங்கள் துணை இல்லாமல் வாழ்ந்த எனக்கு இனியும் வாழத்தெரியும். அதனால் அந்த தாரிகாவையே கட்டி, மனைவி குழந்தைகள் என்று சந்தோசமாக வாழுங்கள். அதற்குத் தடையாக நானோ என் மகளோ என்றைக்குமே வரமாட்டோம்” என்றவளின் மீது கோபம் வந்தது ரவிக்கு.

