எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு 25 – 3

“நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும்! அதனால் தேவை இல்லாததுகளைப் பேசாதே! நீங்கள் இருவரும் என் சொத்து. அதனால் எதற்காகவும் உங்களை என்னால் இழக்க முடியாது! பாவை என் மகள். உனக்கு அவள் மீது எவ்வளவு உரிமை உண்டோ அதேயளவு உரிமை எனக்கும் உண்டு! அதனால் என்னோடு வாழும் வழியைப் பார்!” என்றான் ரவி அதட்டலாக.

 

“நாங்கள் உங்கள் சொத்தா? எத்தனை நாட்களாய்? இந்தப் பன்னிரண்டு வருடமும் இல்லாத உரிமை இன்று எங்கிருந்து பொத்துக்கொண்டு வந்தது?” அவனின் உரிமைப் பேச்சில் பொங்கி எழுந்துவிட்டாள் கவி.

 

“இவ்வளவு காலமும் நீங்கள் இருவரும் என் சொத்து என்று தெரியாது மூடனாய் வாழ்ந்துவிட்டேன். அதேபோல மகள் இருக்கிறாள் என்றும் தெரியாது. தெரிந்திருக்க அப்போதே வந்திருப்பேன்!” என்றான் ரவியும் அமர்த்தலாக.

 

“நன்றாக நடிக்கிறீர்கள்! ஆனால் பாருங்கள், அதை நம்புவதற்கு இங்கே யாரும் இல்லை!” என்றாள் கவி ஏளனமாக உதடு வளைத்து.

 

“என்னை நம்பு கவி. நான் எதற்காக நடிக்கவேண்டும் சொல்? என்னை நீ வார்த்தைகளால் குத்திக் குதறினாலும் பரவாயில்லை. என்னையும் உங்களோடு சேர்த்துக்கொள். நீ எப்படி அவள் மேல் உயிரை வைத்திருக்கிறாயோ அப்படித்தான் நானும். அவள் என் மகள் என்று அறிந்ததில் இருந்து நான் படும் பாடு இருக்கே… அதை என்னால் சொல்லக்கூட முடியவில்லை கவி.” என்றான் நிஜமான ஏக்கத்தோடு.

 

“இதுவரை காலமும் என் அம்மாதான் என் உயிர். அவர்களின் பேச்சை நான் தட்டியதே இல்லை. இன்று அவர்களைக் கூட மதியாது வந்து, நீயும் பாவையும் வேண்டும் என்று உன்னிடம் கெஞ்சுகிறேன். ப்ளீஸ் கவி. எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடு. ஆனால் என்னை என் மகளிடம் இருந்து பிரிக்க நினைக்காதே.” என்று வெட்கம் பாராது கெஞ்சினான் ரவி.

 

அப்போதும் அவள் அசையாமல் நிற்கவே, ரவியின் நிலை மிகப் பரிதாபமாக இருந்தது. எப்படிப் பேசினாலும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறாளே என்று தவிப்பாக இருந்ததில், பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி,

 

“நீ என்ன சொன்னாலும் சரிதான் கவி. எனக்கு நீயும் நம் மகளும் வேண்டும். நீங்கள் இருவரும் இல்லாமல் நான் இந்த வீட்டை விட்டு வெளியே போகமாட்டேன்! இனியும் உங்களைப் பிரிந்து போவேன் என்று கனவிலும் நினையாதே!” என்றான் உறுதியாக.

 

அவனை நன்றாக நிமிர்ந்து பார்த்து, “அதையும் பார்க்கலாம்….” என்று ஆக்ரோசமாக ஆரம்பித்தவளை,

 

“போதும் கவி!” என்ற ராஜின் அதட்டல் அதிரவைத்தது.

 

அதிர்ந்து விழித்தாள் கவி.

 

ராஜ் அண்ணாவா?

 

அவளை அதட்டுவதா?

 

கண்கள் கலங்கத் தன்னைப் பார்த்தவளைப் பார்க்க வேதனையாக இருந்தபோதும், “செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பவர்களை மன்னிப்பதுதான் மனிதர்களுக்கு அழகு!” என்றான் ராஜ், கவியை அழுத்தமாகப் பார்த்து.

 

“மன்னிக்கும் படியான செயலை அவன் செய்யவில்லை அண்ணா….” என்றாள் கவி.

 

“முதலில் அவனுக்கு மரியாதை கொடுத்துக் கதைக்கப் பழகு! அவன் உன் கணவன்!” என்று மீண்டும் அதட்டினான் ராஜ்.

 

அவன் என் கணவனே இல்லை என்கிறேன். பிறகு எங்கே கணவன் என்கிற மரியாதையைக் கொடுப்பது….

 

“அவனோடு சேர்வதில் உனக்கு என்ன பிரச்சினை..?” என்று கேட்டான் ராஜ்.

 

“என்ன அண்ணா, எதுவுமே தெரியாதவர் போல் கேட்கிறீர்கள்? இவனும்…” என்று ஆரம்பித்தவள் ராஜின் முறைப்பில்,

 

“இவரும், இவரின் அம்மாவும் செய்தவைகளை மறந்துவிட்டீர்களா….?” என்றவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

 

அதைப் பார்த்த அங்கிருந்த மூவருக்குமே வலித்தது.

 

அவள் மேல் பாசம் வைத்தவர்கள் அவளுக்காகத்தான் போராடுகிறார்கள் என்பதை உணரமுடியாமல் நின்றாள் கவி.

 

“நான் எதையுமே மறக்கவில்லை கவி. அதற்காக அதையே பிடித்துக்கொண்டு எவ்வளவு நாட்களுக்கு தொங்குவாய்? அவன்தான் தான் செய்தவைகள் பிழை என்று உணர்ந்து மன்னிப்புக் கேட்கிறானே, பிறகு என்ன வேண்டும் உனக்கு?”

 

“மன்னிப்புக் கேட்டால் எல்லாம் முடிந்ததா அண்ணா? ஒருவரை கொலை செய்துவிட்டு, மன்னித்துவிடு என்று சொன்னால் அந்தப் பிணம் எழுந்து வந்துவிடுமா…?”

 

கவியின் கேள்வியில் ரவியின் முகம் இறுகியது. அன்று ராஜும் அவனைக் கொலைகாரப்பாவி என்று சொன்னான். இன்று கவி..

 

ராஜுக்கு அவன் நிலை புரிந்தது.

 

“கவி போதும்! ஒரே விஷயத்தைத் திரும்பத்திரும்பப் பேசுவதில் அர்த்தம் கிடையாது! நான் கேட்கிறேன், உன்னால் அவனைத் திருமணம் செய்துகொள்ள முடியுமா முடியாதா?”

 

ரவியிடம் எடுத்தெறிந்து பேசியவளால் ராஜிடம் அப்படிப் பேசமுடியவில்லை.

 

“அண்ணா, நான் சொல்வதை கேளுங்களேன். என்னால் இவனுடன் வாழ முடியாது. இவனைப் பார்த்தாலே நான் பட்டவைகள்தான் நினைவில் வருகிறது. என்னை என் பாட்டுக்கு நிம்மதியாக இருக்க விடுங்களேன்…” என்றவள், வேதனை தாங்கமுடியாது கைகளால் முகத்தை மூடிக்கொண்டு கதறினாள்.

 

பாத்திருந்த நிருவின் கண்களும் கலங்கியது. அவள் கவியின் புறமாக ஓரடி எடுத்து வைக்கவும், ராஜின் பார்வை அவளை அதட்டியது.

 

“நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை கவி!”

 

கவிக்கு வலித்தது. ராஜ் அண்ணா கூட மாறிவிட்டாரே….. பதில் சொல்ல முடியாமல் தவித்தாள்.

 

“ஆக, என் வார்த்தைகளுக்கு உன்னிடம் இவ்வளவுதான் மதிப்பு இல்லையா?” என்றான் வறண்ட குரலில் ராஜ்.

 

“ஐயோ அண்ணா… அப்படிச் சொல்லாதீர்கள். என்னைச் சாகச் சொல்லுங்கள். இந்த நொடியே செத்துவிடுகிறேன். ஆனால் அவனோடு வாழச் சொல்லாதீர்கள்..” என்றாள் அப்போதும் அழுகையோடு….

 

அவளின் பேச்சுக்கள் அத்தனையும் ரவிக்குப் பெரும் சாட்டை அடியாக இருந்தது. தாங்க முடியவில்லை அவனால். இந்த அளவுக்கா தன்னை வெறுக்கிறாள்…

 

“ராஜ்…” என்றவனை, பொறு என்பதாகக் கைகாட்டி அவன் பேச்சை நிறுத்திவிட்டு,

 

“பிழை செய்தவர்கள் திருந்தவே மாட்டார்களா கவி?” என்று கவியிடம் கேட்ட ராஜ், அவள் ஏதோ சொல்ல வரவும்,

 

“பொறு! வெளியே நின்று நீங்கள் பேசிய எல்லாவற்றையும் நானும் கேட்டுக்கொண்டுதான் நின்றேன். அவன் மேல் உனக்கு நம்பிக்கை இல்லை. அப்படித்தானே?” என்று கேட்டவன் தொடர்ந்தான்.

 

“ஒன்றை யோசி, தன் அம்மாவிடம் போய் தனக்கொரு மகள் இருக்கிறாள் என்பதையும் உன்னையே திருமணம் செய்யப் போகிறேன் என்றும் சொல்லிவிட்டு வந்திருக்கிறான். போதாக்குறைக்கு தாரிகா வீட்டினரிடமும் சொல்லி, நடக்க இருந்த திருமணத்தை நிறுத்திவிட்டான். உன்னை ஏமாற்ற நினைப்பவன் இதை எல்லாம் செய்வானா?” என்று கேட்டான் ராஜ்.

 

“இதெல்லாம் எதற்கு அண்ணா? வாழ்க்கை கொடு என்று நான் கேட்டேனா? எனக்கு கணவன் என்று ஒருவன் வேண்டவே வேண்டாம். கணவன் என்று சொல்லி அவன் செய்தது எல்லாம் போதும்!” என்றவளை ராஜின் பேச்சு இடைமறித்தது.

 

“உனக்கு கணவன் வேண்டாம். சரி! ஆனால் பாவைக்கு அப்பா வேண்டாம் என்று நீ சொல்ல முடியுமா? அவளின் அம்மா என்பதற்காக அவளின் உரிமையைப் பறிக்க உனக்கு அதிகாரம் இல்லை கவி! அதேபோல இன்னும் ஒன்றை நீ யோசிக்க வேண்டும். இன்றுவரை நீ படும் கஷ்டத்துக்கு எது அடி என்று யோசித்தாயா? அப்பா இல்லாத உன் நிலைதான் காரணம்! இதே நிலை இன்னும் எட்டோ ஒன்பதோ வருடத்தில் உன் மகளுக்குத் திருமணம் என்று வருகையில் வராது என்று உன்னால் சொல்ல முடியுமா?” என்று அவன் கேட்டபோது வாயடைத்து நின்றாள் கவி.

 

“அப்பா இறந்துவிட்டார் என்று நீ சொன்னாலும், கல்யாணம் செய்ய வருபவர்கள் உன் ஒருத்தியின் பேச்சை நம்பி எதையும் செய்யப்போவது இல்லை. அடி முதல் நுனி வரை விசாரிப்பார்கள். அப்போது அனைத்துக் குட்டுமே வெளியே வரும். அப்பது பாவையின் நிலை என்ன? இதை எல்லாம் அறிந்துகொள்ளும் பாவை, அப்போது என்ன முடிவை எடுப்பாள் என்று உன்னால் உறுதியாகக் கூற முடியுமா…?” ராஜின் பேச்சில் மூச்சற்று நின்றாள் கவி.

 

நான் பட்ட கஷ்டங்கள் என் மகள் படுவதா? நினைக்கவே உயிரின் ஆழம் வரை ஒரு நடுக்கம் ஓடியது கவிக்கு.

 

அவளின் வாழ்க்கையே மகளுக்காக என்று ஆனபிறகு, அந்த மகளுக்கு ஒரு துன்பம் என்றால் அதைத் தாங்கும் சக்தி அவளுக்கு உண்டா?

 

திகைத்து நின்றவளைப் பார்த்த ராஜுக்கும் வலித்தது.

 

“உனக்கு நினைவு இருக்கிறதோ இல்லையோ எனக்குத் தெரியாது. உன் அம்மா ஒரு தடவை சொன்னார்கள். உன் அப்பா அண்ணா எல்லாமே நான்தான் என்று. நீ என்னை எப்படி நினைக்கிறாய் என்று எனக்குத் தெரியாது. ஆனால்,நான் உன்னை என் மகளுக்குச் சமமாகத்தான் நினைக்கிறேன். நான் சொன்னால் கவி கேட்பாள் என்கிற அசையாத நம்பிக்கையோடுதான் ரவியையும் கூட்டிக்கொண்டு இங்கே வந்தேன். என் நம்பிக்கைக்கு நல்ல பதிலைச் சொல்லிவிட்டாய் கவி..” என்று அவன் சொல்லி முடிக்க முதலே,

 

“நான் இந்தக் கல்யாணத்துக்கு சமதிக்கிறேன் அண்ணா..” என்றாள் வேகமாக.

 

“ஆனால் சில நிபந்தனைகளுடன்…” என்பதையும் சேர்த்துச் சொன்னாள்.

 

“நிபந்தனைகளா? என்ன நிபந்தனை..?” அவள் சம்மதம் சொன்னது சந்தோசமாக இருந்தபோதும், அவளின் நிபந்தனைகளை அறிந்துகொள்ளக் கேட்டான் ராஜ்.

 

ரவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “இந்தக் கல்யாணம் அவரின் சொந்தங்கள் எல்லோருக்கும் சொல்லி, அவர்களின் முன்னிலையில் நடக்கவேண்டும். அடுத்ததாக திருமணத்திற்குப் பிறகும் நான் இங்கேதான் இருப்பேன். அவரின் வீட்டுக்கு எந்தக் காரணத்துக்காகவும் நான் போகமாட்டேன்.” என்றாள் கவி உறுதியாக.

 

“எல்லோர் முன்னிலையிலும் கல்யாணம் நடப்பதில் தவறு இல்லைதான். ஆனால் கவி, நீ பாவையை ப் ற்றியும் யோசிக்கவேண்டும். திருமணத்தைப் பெரிதாகச் செய்வது அவள் மனதைப் பாதிக்கலாம். அடுத்தது..அதெப்படி நீ அவன் வீட்டில் தானே கவி இருக்க வேண்டும். அதுதானே முறை..” என்றான் ராஜ்.

 

“இங்கே எல்லாம் முறையாகவா அண்ணா நடக்கிறது? முறைகள் பற்றி நான் யோசிக்க?” என்றவள் தொடர்ந்தாள்.

 

“சொந்தபந்தங்கள் வேண்டும் என்று நான் சொல்வதற்குக் காரணம், இவரின் அம்மா சமையல் காரியின் மகளை, அதுவும் அப்பன் இல்லாதவளை மருமகளாக ஏற்க முடியாது என்று சொன்னார் அல்லவா. இன்று அதே அப்பன் இல்லாதவள், போதாததுக்கு ஒரு சமையல் காரியே அவரின் மருமகள் என்பதை அவரின் சொந்தபந்தம் அனைவரும் அறியவேண்டும்!” எனறாள் கவி ஒருவிதத் திருப்தியோடு.

 

“அதோடு, என் வீட்டில் என்னை வெளியே போ என்று யாரும் சொல்ல முடியாதில்லையா? அதனால்தான் என் வீட்டை விட்டுப் போகமாட்டேன் என்று சொன்னேன்.” என்றாள் கவி விளக்கமாக.

 

“அதெப்படி கவி…?” என்று தயங்கினான் ராஜ்.

 

“உங்களுக்காகவும் என் மகளுக்காகவும் தான் இந்தத் திருமணத்திற்குச் சம்மதம் சொன்னேன் அண்ணா. என் நிபந்தனைகளை ஏற்று நடப்பதாக இருந்தால் இந்தக் கல்யாணம் நடக்கட்டும். இல்லையானால் என்னால் முடியாது…” என்று முடிவாக அவள் ராஜிடம் சொன்னாலும், அந்தப் பதில் ரவிக்கு உரியதாக இருந்தது.

 

அவள் இட்ட நிபந்தனைகள் எதுவும் பெரிதாகத் தெரியவில்லை ரவிக்கு. ஆனால், தான் அவ்வளவு கெஞ்சியும் மனம் மாறாதவள் ராஜ் சொன்னதும் சம்மதித்தது வலித்தது.

 

ஆனாலும் பரவாயில்லை. இன்று ராஜுக்காகச் சம்மதித்தவள் இனி வரும் நாட்களில் என் அன்பால் மாறுவாள். மாற்றிக்காட்டுகிறேன் என்று மனதில் உறுதி பூண்டான்.

 

“அவள் சொல்லும் நிபந்தனைகளை நான் ஏற்றுக்கொள்கிறேன் ராஜ்.” என்றான் ரவி தெளிவாக.

 

“அது எப்படிடா…. உன் அம்மா?”

 

“நான் பார்த்துக்கொள்கிறேன் ராஜ்…” என்றான் ரவி உறுதியாக.

 

 

 

error: Alert: Content selection is disabled!!