அத்தியாயம்-26
ரவியும் ராஜும் பாவையின் பள்ளிக்கூட வாசலில் அவளை வீட்டுக்குக் கூட்டிச் செல்வதற்காகக் காத்திருந்தனர். பள்ளிக்கூடம் முடிந்து வெளியே வந்த பாவை ராஜைக் கண்டதும், “ராஜ் மாமா…!” என்று ஆவலோடு கூப்பிட்டபடி ஓடிவந்தாள்.
ராஜின் அருகே நின்ற ரவியை ஒரு வெட்டும் பார்வை பார்த்துவிட்டு, ராஜிடம் பார்வையைத் திருப்பி, “மாமா, என்னைக் கூட்டிக்கொண்டு போகவா வந்தீர்கள்? மாமியும் ரதியும் வந்திருக்கிறார்களா?” என்று ஆர்வத்தோடு கேட்டாள் பாவை. கேட்கையிலே அவள் விழிகள் காருக்குள் அவர்களைத் தேடியது.
ரவிக்கோ, அவளின் வெட்டும் பார்வை, விழிகள் பளிச்சிட அவள் கதைக்கும் விதம், அவளிடம் தெரியும் துடினம் அனைத்துமே அவளின் அன்னையின் சிறுவயதை அவனுக்கு நினைவு படுத்தியது.
புன்னகையோடு மகளையே பார்த்திருந்த ரவியைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “அவர்களும் வந்திருக்கிறார்கள். அங்கே உன் வீட்டில்தான் இருக்கிறார்கள். வா வீட்டுக்குப் போகலாம்…” என்று சொல்லியபடி காரை நோக்கி நடந்தான் ராஜ்.
அவனைச் சட்டை செய்யாது ராஜின் பின்னால் நடந்தவளிடம், “பள்ளிக்கூட பாக் பெரிதாக இருக்கிறதே. என்னிடம் தா. நான் கொண்டுவருகிறேன்…” என்றபடி கையை நீட்டினான் ரவி.
முகத்தில் குழப்பம் தெரிய அவனைப் பார்த்துவிட்டு, “இல்லை.. நானே கொண்டுவருகிறேன்…” என்றவள், வேகமாக நடந்து ராஜை எட்டிப் பிடித்தாள். “ராஜ் மாமா, இந்த அங்கிள் எதற்கு உங்களோடு வந்திருக்கிறார்..?” என்று அவன் காதைக் கடித்தாள்.
ரவியைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “அவன் என் நண்பன் பாவை. ஆனால் உனக்கு அவன் அங்கிள் இல்லை.” என்றான் ராஜ்.
மீண்டும் குழப்பத்தோடு ரவியைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “அங்கிள் இல்லையா… பின்னே யார்?” என்று ராஜைப் பார்த்து கேள்வியாக அவள் இழுக்க, “வீட்டுக்கு வா. மாமா எல்லாம் சொல்கிறேன். இப்போது காரில் ஏறு.” என்ற ராஜ், ஓட்டுனர் இருக்கையில் தான் அமர்ந்துகொண்டான்.
மகள் ரகசியமாக ராஜுடன் கதைத்தபோதும், அது ரவியின் காதிலும் விழுந்தது. மகள் தன்னை ‘அங்கிள்’ என்று சொன்னாளே என்று கவலைப்படுவதா இல்லை ராஜ் தன்னை ‘நண்பன்’ என்று சொன்னானே என்று சந்தோஷப்படுவதா என்று தவிப்பாக இருந்தது அவனுக்கு.
வரும்போது முன்னிருக்கையில் ராஜுக்கு அருகே அமர்ந்துவந்த ரவி இப்போது பாவையின் அருகில் பின்னிருக்கையில் அமர்ந்துகொண்டான்.
மகளின் அருகாமையை விரும்பும் அவன் மனநிலை புரிய எதுவும் சொல்லாது காரை இயக்கினான் ராஜ். பாவைக்கு மறுபடியும் குழப்பமாக இருந்தது.
‘இந்த அங்கிளுக்கு என்னைப் பிடிக்காதே. எப்போதும் என்னோடு சண்டைதானே போடுவார்…’ என்று மனதில் எண்ணம் ஓட, அவனை அவள் விழிகள் ஆராய்ந்தது.
அவளின் அந்த ஆராயும் பார்வை ரவியின் முகத்தில் ஒரு புன்னகையைத் தோற்றுவித்தது.
அதைப் பார்த்தவள் தன் பக்கக் கதவின் புறமாக இன்னும் ஒதுங்கி அமர்ந்தாள்.
அதைக் கவனித்தும் கவனியாதவன் போல், “எத்தனையாம் வகுப்புப் படிக்கிறாய்?” என்று பேச்சு கொடுத்தான் ரவி.
“ஏழாம் வகுப்பு..”
சுருக்கமாகப் பதில் சொன்னாலும் ‘நான் ஏழாம் வகுப்பு படிக்கிறேனாக்கும்’ என்கிற பெருமையும் அவளின் குரலில் எட்டி பார்த்தது.
அதை புரிந்துகொண்டதற்கு அடையாளமாக ரவியின் புன்னகை அகன்றது.
“ஓ, அப்படியானால் நீ பெரிய பெண்தான்.” என்றவன்,
“உனக்கு என்ன பாடம் பிடிக்கும்..?” என்று தொடர்ந்து கேட்டான்.
“கணிதம்…”
ராஜ் தன்னுடைய நண்பன் என்று அவனை அறிமுகப் படுத்தியதாலும், கோபத்தைப் பிடித்து வைத்திருக்கும் இயல்பு அவளுக்கு இல்லாததாலும் ரவி கேட்ட கேள்விகளுக்குப் பதிலைச் சொல்லத் தவறவில்லை பாவை. ஆனால், அவளின் பேச்சில் ஒருவித ஒதுக்கம் இருந்தது.
வீடு வந்ததும் அனைத்தையும் மறந்து, “ரதிக்குட்டி…” என்று கூப்பிட்டபடியே காரில் இருந்து குதிக்காத குறையாகப் பாய்ந்து ஓடினாள் பாவை.
“பார்த்து பார்த்து, கார் நின்றதும் இறங்கு…” என்ற ரவியின் பதட்டமான குரல் அவளின் செவிகளை எட்டவே இல்லை.
“அவள் அப்படித்தான். ரதிசாவைக் கண்டுவிட்டால் அனைத்தையும் மறந்துவிடுவாள். நீ வா….” என்றபடி கவியின் வீட்டுக்குள் ராஜ் நுழைய, அவனோடு சேர்ந்து மகளின் ‘பாக்’கை தூக்கிக்கொண்டு ரவியும் சென்றான்.
அப்போது ‘பாக்’கை அவனிடம் கொடுக்க மறுத்தவள் இப்போது அதை மறந்து சென்றிருந்தாள்.
சிறிது நேரத்துக்கு அங்கே பாவையின் குதூகலம் நிறைந்த பேச்சும், ரதீசாவின் ‘பாவக்கா…. பாவக்கா…’ என்ற மழலைச் சத்தமும் தான் கேட்டது.
அது ஓரளவுக்கு ஓயவும், “அண்ணா, பாவைதான் வந்துவிட்டாளே. இனியாவது சாப்பாடு எடுத்துவைக்கவா…” என்று கேட்டாள் கவி.
மதியச் சமையலைப் பெண்கள் முதலே முடித்திருந்த போதும், ரவிக்கு மகளோடு சேர்ந்து சாப்பிட ஆவல் இருந்ததில், அவன் அவள் வரட்டும் என்றுவிட, மற்றவர்களும் பாவைக்காகச் சாப்பிடாமல் காத்திருந்தனர்.
“சரிம்மா, எடுத்துவை.” என்ற ராஜ் பாவையை அழைத்தான்.
ரதீசாவுடன் எதையோ விளையாடிக் கொண்டிருந்தவள், “என்ன மாமா…” என்று அவன் அருகில் வர, அவளைத் தன் பக்கத்தில் அமர்த்திக்கொண்டான்.
“வீட்டுக்கு வந்ததும் அவனைப் பற்றிச் சொல்வதாகச் சொன்னேனே பாவை…” என்று ரவியைக் காட்டிச் சொன்னான் ராஜ்.
ரவியின் முகம் பதட்டத்திலும் பயத்திலும்.. ஆம் பயத்திலும் இறுகியது. கவி சம்மதிக்க மாட்டாள் என்று தெரிந்தபோதும் கூட அவன் பயப்படவில்லை. எப்படியும் சம்மதிக்க வைத்துவிடலாம் என்கிற உறுதி இருந்தது.
உடல் மொத்தமும் இறுக, மனதின் நடுக்கத்தை முகத்தில் காட்டாமல் மறைக்க முயன்றபடி மகளையே பாத்திருந்தான் ரவி.
உணவைச் சாப்பாட்டு மேசையில் வைத்துக் கொண்டிருந்த கவி, கைகால்கள் நடுங்கத் தொடங்க அப்படியே மேசையையே பிடித்துக்கொண்டு நின்றாள்.
“ஆமாம் மாமா. அவர் எனக்கு அங்கிள் இல்லை என்று சொன்னீர்கள்..” என்றவளின் பதிலில், ‘அவரை நான் எப்படி அழைக்கவேண்டும்’ என்கிற கேள்வி தொக்கி நின்றது.
அங்கிருந்த எல்லோரின் முகத்தையும் பார்வையால் வலம் வந்த ராஜ், பாவையின் முகத்தில் தன் பார்வையை நிலைநிறுத்தி, “அவன் உன் அப்பா…” என்றான் மிக மிக நிதானமாக.
அவள் முகத்தில் முதலில் குழப்பமும் பின் மெல்ல மெல்ல அதிர்ச்சியும் குடியேறியது.
புரியாத தன்மையோடு ரவியைப் பார்வையால் அளந்தபடி, “அப்பாவா…. இவரா.. ஆனால் மாமா என் அப்பாதான் இறந்துவிட்டாரே….” என்றவளின் பார்வை இப்போது தாயை, ‘அப்படித்தானேம்மா..’ என்று கேட்டது.
அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லமுடியாமல் கவி தலையைக் குனிந்துகொண்டாள்.
ரவி பேச்சு மூச்சற்று சிதைந்த சிலையாக இருந்த இடத்திலேயே சமைந்துபோனான்.
அவன் முன்னாலேயே அவன் மகள் அவன் இறந்துவிட்டதாகச் சொன்னது…. இதைக் கேட்பதற்குப் பதிலாக உண்மையாகவே இறந்துபோயிருக்கலாம் என்று தோன்றியது அவனுக்கு. நெஞ்சில் ஓரிடம் விடாமல் யாரோ ஊசியால் குத்தியதுபோல் வலித்தது.
ரவியின் மனம் படும் பாட்டை இறுகியிருந்த அவன் முகம் காட்ட, அதை உணர்ந்துகொண்ட ராஜ், “பாவை. அன்று நந்தன் மாமா வீட்டில் வைத்து இவனைப் பார்த்தோம் இல்லையா. அன்றுதான் உன் அப்பா இறக்கவில்லை. உயிருடன்தான் இருந்திருக்கிறான் என்று எங்களுக்கும் தெரியவந்தது. அதனால்தான் இப்போது மாமா உன்னிடம் சொல்கிறேன். உன் அப்பா உன்னிடம் வந்துவிட்டான். பார்த்தாயா….” இலகுக் குரலில் இலகுவாகவே இந்த விஷயத்தை அவளுக்குப் புரியவைக்க முயன்றான் ராஜ்.
ஒன்றுமே புரியாமல் குழப்பமாக அவனைப் பார்த்துவிட்டு, தாயைப் பார்த்தவளின் விழிகளில் கேள்வி இருந்தது.
குற்ற உணர்ச்சியோடும் தவிப்போடும் கவி மகளைப் பார்க்க, அவளிடம் ஓடிச்சென்ற பாவை கவியின் இடுப்பைப் கட்டிக்கொண்டு, “அவர்… அவர் என் அப்பாவா அம்மா…?” என்றாள் கேள்வியாக.
ராஜ் மாமா பொய்சொல்ல மாட்டார் என்று தெரிந்திருந்தபோதும், தாயின் வாய்மொழியாக உறுதிசெய்யத் துடித்தது அந்தச் சின்ன உள்ளம்.
கவி பதில் சொல்ல எடுத்துக்கொண்ட அந்தச் சிலநொடிகளில் பாவையின் பார்வை ரவியையும் கேள்வியோடு பார்த்தது.
‘சொல்’ என்கிற ராஜின் பார்வையையும் ‘சொல்லிவிடேன்’ என்கிற ரவியின் துடிப்பையும் கண் வழியே கருத்தில் பதித்துக்கொண்ட கவி, தன்னையே அண்ணாந்து பாத்திருந்த மகளின் கன்னங்கள் இரண்டையும் கைகளில் தாங்கி, “அவர்.. அவர் உன் அப்பாதான்டா குட்டி…” என்றாள் கரகரத்த குரலில்.
“ஓ…” என்று தாய் சொன்னதை உள்வாங்கிக்கொண்டவளின் விழிகள் இப்போது சிறு ஆர்வத்துடன் ரவியை அளந்தது.
“அப்படியானால் ஏன் அவர் இவ்வளவு நாளும் என்னைத் தேடி வரவில்லை..?” வாய் தாயிடம் கேள்வி கேட்டாலும், அவள் விழிகள் ரவியிடம் அதே கேள்வியைக் கேட்டது.
அவளையே பாத்திருந்த ரவி குரலைச் செருமிச் சரி செய்துகொண்டு, “இங்கே வா…” என்று கையை நீட்டி அவளை அழைத்தான்.
சிறு அதிர்வோடு அவள் தாயின் புறமாகத் திரும்ப, ‘போ…’ என்பதாக உதடுகளை அசைத்து, ரவியின் புறமாகப் பாவையைத் திருப்பிவிட்டாள் கவி.
சிறு தயக்கத்தோடு தாயைப் பார்த்துவிட்டு, நடையிலும் அந்தத் தயக்கம் தெரிய மெல்லத் தன்னருகில் வந்தவளைத் தன் மடியில் அமர்த்திக்கொண்டான் ரவி.
அப்போதும் தயக்கத்தோடு அமர்ந்தவளை ஒரு கையால் மிக மெதுவாக அணைத்து, “தேவதை போல் எனக்கொரு மகள் இருக்கிறாள் என்று இதுநாள் வரை எனக்குத் தெரியாமல் போய்விட்டது கண்ணம்மா. தெரிந்திருக்க உடனேயே அப்பா உன்னைத் தேடி ஓடிவந்திருப்பேன்.” என்றவனின் கைகள், மகளின் கன்னத்தைப் பாசத்தோடு தடவ அவன் கண்களில் மெல்லிய நீர்படலம்.

