அத்தியாயம்-27
வவுனியா நகர்ப்பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரவியின் காரில் அமர்ந்திருந்த பவை, கார் கதவின் கண்ணாடியை இறக்கி வெளியே எட்டிப்பார்த்தாள்.
காற்று முகத்தில் வந்து மோதியது. முகத்தைச் சுற்றிப் பறந்த முடிக்கற்றைகளைக் காதுப்பக்கமாக ஒதுக்கிவிட்டவளின் விழிகளில் ஒருவித சந்தோஷ மின்னல். அவளுக்குக் கார்ப் பயணம் புதிதல்ல! ராஜுடனும் பலதடவைகள் சென்றிருக்கிறாள் தான். ஆனால், நிருவுடனோ அல்லது கவியுடனோ சேர்ந்து பின்னால் அமர்ந்து சென்றிருக்கிறாள்.
அதேபோல, இன்றும் ரவியின் காரில் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தவளைப் பார்த்து, “முன்னால் வந்து ஏறு ஓவி..” என்று ரவி சொன்னதும், முகத்தில் சட்டென்று பரவிய ஆர்வத்தோடும் ஆசையோடும் அவனைப் பார்த்தாள்.
“வாம்மா, வந்து ஏறு…” அவள் முகத்தில் வந்துபோன உணர்வுகளை வைத்தே அவளின் ஆசையைப் புரிந்துகொண்ட ரவி கனிவுடன் அழைத்தான்.
வேகமாக வந்து முன்னால் ஏறிக்கொண்ட பாவையின் மனதில் குதூகலம். அதுவே அவனை அவளுக்குப் பிடித்துப் போவதற்கு முதல் படியாக அமைந்தது. குழந்தைகளுக்கு தந்தைகளிடம் மட்டுமே கிடைக்கும் சலுகைகளில் இதுவும் ஒன்றல்லவா!
வெளியே பராக்குப் பார்த்துக்கொண்டு வந்தவள் சிறிது நேரத்தில் தந்தையைத் திரும்பிப் பார்த்தாள்.
அவளின் பார்வையை உணர்ந்து, “என்னம்மா? அப்பாவிடம் ஏதாவது சொல்ல அல்லது கேட்க வேண்டுமா…?” என்று அவன் கேட்க, வேகமாக இல்லை என்று தலையை அசைத்தவள் திரும்பவும் பார்வையை வெளிப்புறமாகத் திருப்பிக்கொண்டாள்.
ஆனால், அவனிடம் கேட்பதற்கு அவளுக்குப் பல கேள்விகள் இருந்தது. அவற்றைக் கேட்க விடாமல் தயக்கம் தடுத்தது.
அவன் வருகிறாயா என்று கேட்டதும் தயாராகி வந்துவிட்டவளுக்கு எங்கே போகிறோம் என்று அறிந்துகொள்ள ஆர்வமாக இருந்தாலும், பேசாமல் இருந்தாள்.
மகளின் தயக்கத்தை உணர்ந்து, “அப்பாவும் பிள்ளையும் ஒவிக்குட்டிக்கு உடுப்பு எடுக்கப் போகிறோம்..” என்றான் ரவி மகளிடம்.
“என்னிடம்தான் நிறைய உடுப்பு இருக்கிறதே… அம்மா வாங்கித் தந்திருக்கிறார்…” என்றாள் பாவை மெல்ல.
“அது எல்லாம் பிள்ளைக்கு அம்மா வாங்கித் தந்தவைகள். இன்று அப்பாவும் வாங்கித் தருகிறேனே. ஏன், அப்பா வாங்கித்தந்தால் போடமாட்டாயா?”
“இல்..லை.. போடுவேன்..”
அவளின் தயக்கத்தை உணர்ந்து, “ஏன் ஓவி, உனக்கு அப்பாவைப் பிடிக்கவில்லையா..?” என்று கவலையோடு கேட்டான் ரவி.
எப்போதும் வாய் ஓயாமல் வாயாடும் மகள், இன்று அவன்தான் தன் தந்தை என்று தெரிந்த பிறகும் அமைதியாகவே இருப்பது அவனுக்கு வேதனையாக இருந்தது. மகளுக்குத் தன்னைப் பிடிக்கவில்லையோ… அல்லது அவளால் தன்னை அப்பாவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லையோ… தனக்கு மகளும் மனைவியும் வேண்டும் என்பதில் அவசரப்பட்டு அந்தச் சின்ன மனதை நோகடித்துவிட்டோமோ என்று பல யோசனைகள் அவன் மனதை வாட்டியது.
பாவையோ பதில் சொல்லத் தெரியாமல் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
இதுவே அவள் சிறு குழந்தை என்றால், ‘ஹை எனக்கும் அப்பா வந்தாச்சு…’ என்று துள்ளி குதித்ததோடு, என் அப்பா என்று உரிமை கொண்டாடி இருப்பாள். அதுவே வளர்ந்த பெண்ணாக இருந்திருக்க உண்மையை அறிந்து ‘இவர் என் அப்பா’ என்று ஏற்றுக்கொண்டிருப்பாள்.
இது பெரியபெண் என்றும் இல்லாமல் சின்னக் குழந்தை என்றும் இல்லாமல் இரண்டும் கெட்டான் வயதில், திடீரென்று முளைத்த அப்பாவை ஏற்றுக்கொள்ளவும் தெரியாமல் ஒதுக்கவும் முடியாமல் தடுமாறும் அவளின் மனநிலை அவனுக்குப் புரியத்தான் செய்தது.
ஆனாலும்….
மூளைக்குப் புரியும் பலவிசயங்களை மனம் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் அல்லவா… அந்த நிலையில் இருந்தான் ரவி.
மகளோடு புடவைக் கடைக்குச் சென்றவன், அவளுக்கு அழகாக இருக்கும் என்று தோன்றிய அனைத்தையும் வாங்கிக் குவித்தான். உடைகள், அதற்கு தோதாக காலணிகள், இவை போதாது என்று மகளுக்கும் மனைவிக்கும் அழகழகான நகைகள் என்று அங்கே இருந்த கடைகள் எல்லாவற்றிற்கும் புகுந்து பாவையிடம் இது வேண்டுமா அது வேண்டுமா என்று கேட்டுக்கேட்டு வாங்கினான்.
தயக்கத்தை உடைத்து, “காணும்”, “போதும்..” என்று அவள் சொன்னதை எல்லாம் அவன் காதிலேயே விழுத்தவில்லை.
கடைசியாக கைபேசிகள் விற்கும் கடையை கண்டுவிட்டு, “உன்னிடம் கைபேசி இருக்கிறதா ஓவி?” என்று கேட்டான் ரவி.
இல்லை என்பதாக தலையை அவள் அசைக்க, “வா ஒன்று வாங்கலாம்..” என்று அந்தக் கடைக்குள் நுழையப்போனவனின் கையைப் பிடித்து நிறுத்தினாள் பாவை.
“என்னம்மா….?”
“எனக்கு வேண்டாம்ப்பா..” என்றாள் தயக்கத்தோடு.
அதைக் கேட்டவனின் மனதில் பரவசம். உள்ளத்தில் உற்சாகம் பெருகியது. உடம்பெல்லாம் சிலிர்த்தது அவனுக்கு. “இப்போது என்ன சொன்னாய்?” என்று குரலில் பரவசத்தோடு கேட்டான்.
அவன் முகத்திலும் குரலிலும் தெரிந்த திடீர் மாற்றத்தில், “கை.. கைபேசி வே…வேண்டாம் என்றேன்…” என்று திக்கினாள் பாவை.
“அதை எப்படிம்மா சொன்னாய்…?” என்றவனின் குரலில் தவிப்பு அப்பட்டமாகத் தெரிந்தது.
அவனை பார்த்து, “வேண்டாம்ப்பா என்றேன்…”என்றாள் பாவை, அப்போதும் அவன் ஏன் கேட்கிறான் என்று புரியாமல்.
வீதியில் நிற்கிறோம் என்பதையும் மறந்து, மகளை அள்ளி அணைத்தவன், தன் வயிற்றில் புதைந்திருந்த அவளின் முகத்தை நிமிர்த்தி, “அப்பாவுக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா ஓவிம்மா.. இவ்வளவு நேரமும் என்னை நீ அப்பா என்று கூப்பிடவே இல்லையேடா… இனிமேல் என்னை அப்பா என்றுதான் கூப்பிடவேண்டும். சரிதானா..?” என்றான் கண்கள் பனிக்க.
தகப்பனின் பாசம் கொஞ்சும் விழிகளில் எதைக் கண்டாளோ, “சரிப்பா….” என்றாள் அவன் முகத்தை பார்த்து.
முகம் மலர, “ஏன் கைபேசி வேண்டாம் என்று சொன்னாய்…?” என்று கேட்டான் ரவி.
“அது.. நான் இன்னும் சின்னப் பிள்ளை என்பதால் இப்போதைக்கு கைபேசி வேண்டாம் என்று அம்மா சொன்னார்கள்….”
மனைவியின் வளர்ப்பை எண்ணி மனதில் பெருமை கொண்டவனின் விழிகள் மகளைக் குறும்போடு பார்த்தது.
அதில் பொத்துக்கொண்டு வந்த ரோசத்தோடு, “நான் பெரிய பெண்தான். ஆனால் கைபேசி வைத்திருக்கும் அளவுக்கு இன்னும் வளரவில்லை அப்பா…” என்று தன்னை மறந்து சிணுங்கினாள் பாவை.
அதைக்கேட்டு உரக்கச் சிரித்தவனின் ரவியின் மனம் முழுவதும் இனிய பரவசமே நிறைந்திருந்தது.
“அப்பா! சிரிக்காதீர்கள்!” என்று அதட்டிய அவன் மகளுக்கும் சிரிப்பு வந்துவிடவே, கலீரெனச் சிரித்தாள் பாவை.
அந்த நிமிடத்தில் இருந்து தகப்பனுக்கும் மகளுக்கும் இடையில் இருந்த மெல்லிய நூலிடையிலான விலகல் விலகிச்சென்றது.
மகளின் சிரிப்பை வாஞ்சையோடு ரசித்தவன், “என் சின்னக்கண்ணம்மா சொன்னால் அதற்கு மறுப்பே கிடையாது. அதனால் கைபேசி வேண்டாம் சரிதானா…” என்றவன் சுற்றுப்புறத்தைப் பார்த்துவிட்டு,
“ஓ அதற்குள் இருட்டிவிட்டதே. நாளைக்கு உனக்கு பள்ளிக்கூடம் வேறு இருக்கிறதே. இல்லையானால் இன்னும் கொஞ்ச நேரம் வேறு கடைகளுக்கும் போய்விட்டு போகலாம். ஆனால்… வா வீட்டுக்கு போகலாம்..” என்றவனுக்கு போக மனமில்லாதபோதும் மகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றான்.

