முகம் முழுதும் நிறைந்த சிரிப்போடு வந்த மகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனாள் கவி. அவளின் மகள் எப்போதும் மலர்ச்சியோடு இருப்பவள்தான். ஆனால் இந்தளவு மலர்ச்சியை, அந்த கண்களில் மின்னும் இந்த மின்னலை அவள் இவ்வளவு நாளும் கண்டதே இல்லை.
தாயைக் கண்டுவிட்டு, “அம்மா, இங்கே பாருங்கள். அப்பா எவ்வளவு வாங்கிவிட்டார் என்று…” என்று காட்டிய பாவையைப் பார்த்துத் திகைத்தாள் கவி.
‘அப்பாவா…’ அதற்கிடையில் மகளையும் வளைத்துவிட்டானா? ஒருவித பொறாமை உணர்வு அவளுக்குள் தலை தூக்கியது. மகள் முன்னால் அதைக் காட்ட முடியாமல்,
“ஆமாம்டா… ஆனால் பணம் இருக்கிறது என்பதற்காக இப்படிக் கணக்கில்லாமல் செலவழிப்பது பொறுப்பான குணம் இல்லையே குட்டிம்மா…” என்று கணவனை மறைமுகமாகக் குத்திவிட்டு, “உள்ளே கொண்டு வைம்மா….” என்றாள் கவி.
“இனி என்ன செய்வதானாலும், ஏன் காருக்கு பெட்ரோல் நிரப்புவதாக இருந்தாலும் கூட உன் அம்மாவிடம் கேட்டுவிட்டே அப்பா செய்கிறேன் ஓவி..” என்று மனைவியின் குத்தல் புரிந்து மகளிடம் பதில் சொன்னான் ரவி.
“காருக்குள் இருக்கும் மீதிப் பைகளையும் உள்ளே எடுத்து வைடா…” என்று மகளை அனுப்பிவிட்டு, “இந்தா. இது உனக்கு வாங்கியது.” என்றபடி தன் கையிலிருந்த நகைகள் அடங்கிய பையை மனைவியிடம் நீட்டினான் ரவி.
அவனை ஒரு வெட்டும் பார்வை பார்த்துவிட்டு, “என்னிடம் எல்லாமே தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. அதனால் உங்களுடைய எதுவும் எனக்கு தேவைப்படாது…” என்றாள் கவி அலட்சியமாக.
பைகளை உள்ளே எடுத்துச் செல்லும் மகளைக் குறிப்பாக பார்த்து, “என்னுடைய எதுவுமே உனக்கு வேண்டாமா..?” என்று, அந்த ‘எதுவுமே’யில் அழுத்தம் கொடுத்துக் கேட்டான் ரவி.
அந்தக் கேள்வி புரியாமல் அவனைப் பார்த்தவளின் முகம், அவன் விழிகள் மகளிடம் பாய்ந்து மீண்டதைக் கண்டதும் சிவந்துபோனது.
அவனுக்குப் பதில் சொல்ல முடியாமல் ஊமையாக நின்றவளிடம், “இதையும் பிடி..” என்று அவளின் கையைப் பிடித்து கொடுத்தான் ரவி.
அவனிடம் இருந்து உதறித் தன்கையை விடுவித்துக்கொண்டவள், “இந்த கையைத் தொடுவது, மு.. முத்தமிடுவது போன்ற வேலைகளை வேறு யாரிடமாவது வைத்துக்கொள்ளுங்கள்! என்னிடம் வேண்டாம்.” என்றாள் முகத்தில் அடித்தது போல்.
பாவையைக் காட்டி அவன் அவளை மடக்கியதில் உண்டான கோபத்தை இதில் காட்டினாள்.
மகள் அருகில் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அவளை நெருங்கி, பின்னால் நகரப்போனவளை நகரவிடாமல் பிடித்து, “இங்கே பார். நீ இல்லாமல் வாழ்ந்த இவ்வளவு நாட்களுமே எதற்கும் நான் எவளையும் நாடியது இல்லை. இனியும் அப்படித்தான்.” என்று அழுத்தம் திருத்தமாக அவள் விழிகளைப் பார்த்துச் சொன்னவன்,
“இந்த முத்தமிடுவது தொட்டுப் பேசுவது எல்லாவற்றையும் மனைவியிடம்தான் அதாவது உன்னிடம்தான் வைத்துக்கொள்வேன். அதையெல்லாம் உன்னிடம் வைத்துக்கொள்ளத்தான் ஆசையாகவும் இருக்கிறது..” என்றான் உல்லாசமான குரலில்.
பதில் சொல்லமுடியாமல் உதடுகள் துடிக்க அவனை முறைத்தவளின் இதழ்களைத் தன் கட்டை விரலால் அளந்தபடி, “பார். துடிக்கும் இந்தத் தேன்இதழ்களைச் சிறைப் பிடிக்கத்தான் என் மனம் ஏங்குகிறது. ஆனாலும் உனக்காக என் ஆசைகளை அடக்கிக்கொண்டு நிற்கிறேன். அப்படி இருந்தும் சிலநேரங்களில் என்னை மீறி நடக்கும் செயல்களுக்கு நான் பொறுப்பல்ல.” என்றவனின் விழிகள் அவள் இதழ்களிலேயே தாகத்தோடு தங்கியது.
அவன் பேச்சில் திகைத்து விழித்தவள், அதைவிட அவன் பார்வையில் தடுமாறியவள் வேகமாக அவனிடமிருந்து விலகினாள்.
சிறு சிரிப்புடன், “இந்தா…” என்று மறுபடியும் பையை நீட்டினான்.
எதுவுமே சொல்லாது வாங்கிக்கொண்டாள் கவி. பின்னே அவனின் இடக்குமுடக்கான பேச்சுக்களைக் கேட்பதற்கு இது எவ்வளவோ மேல் அல்லவா.
“இதை முதலே செய்திருக்கலாம்..” என்றவனின் குரலில் கேலி இழையோடியது.
பைகளை உள்ளே எடுத்துவைத்துவிட்டு, வீட்டு உடையை மாற்றிக்கொண்டு வந்த பாவை, “அம்மா… பசிக்குதும்மா…” எனவும்,
“அப்பாவுக்கும் உன் அம்மா சாப்பாடு தருவாளா ஓவி?” என்று கேட்டான் ரவி.
தகப்பன் தாயைக் கேலி செய்வதாக நினைத்து கிளுக்கிச் சிரித்தவள், “போங்கப்பா, ஏன் தரமாட்டார்கள். நீங்களும் வாங்கப்பா சாப்பிடலாம்..” என்று அவனையும் அழைத்தாள்.
ஒற்றைப் புருவத்தை உயர்த்தி, மனைவியைக் கேள்வியாகப் பார்த்தவனின் விழிகள் சிரித்தது.
இனி மகளின் முன்னிலையில் அவன் தன்னோடு மறைமுகமாக விளையாடப் போகிறான் என்பது கவிக்கு நன்றாக புரிந்தது.
எனவே, “வா…வாருங்கள்…” என்று அவன் முகம் பாராது சொல்லிவிட்டு, உணவை எடுத்து வைப்பதற்காக சமையல் அறைக்குள் சென்றாள்.
தகப்பனும் மகளும் மேசையில் அமர்ந்திருக்க, கவி உணவைப் பரிமாறினாள்.
“வாங்கம்மா நாங்கள் மூவரும் ஒன்றாகச் சாப்பிடுவோம். இதுவரை நானும் நீங்களும் மட்டும்தானே சாப்பிட்டு இருக்கிறோம்….” என்ற மகளின் ஏக்கம் புரிந்த தாய் தந்தையரின் விழிகள் ஒருநொடி சந்தித்து மீண்டது.
மறுக்காமல் கவியும் அமர்ந்துகொள்ள, மிக அழகாகக் கழிந்தது அவர்கள் வீட்டு இரவு உணவுவேளை.
சாப்பிட்டு முடித்த ரவி, தன் வீட்டுக்குக் கிளம்பவும், “போகப் போகிறீர்களா அப்பா..?” என்ற பாவையின் குரலில் அப்பட்டமாக ஏக்கம் நிறைந்து வழிந்தது.
அப்பா என்கிற உறவு இதுவரை அவள் அறியாதது. இன்று அறிந்துகொண்ட பிறகோ அவளால் அவனை விட்டுப் பிரியமுடியவில்லை.
ரவிக்கும் மனம் உருகிவிட்டது. இதை விட அவனுக்கும் வேறு என்ன வேண்டும்? அவனுக்கும் மகளை விட்டுப் போக விருப்பம் துளியும் இல்லைதான். ஆனால், அங்கே அவனின் அம்மா இருக்கிறாரே.
கவியைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “இன்னும் இரண்டு மூன்று நாட்கள் பொறுத்துக்கொள் ஒவிம்மா. பிறகு எப்போதும் அப்பா என் செல்லத்துடனேயே இருப்பேன் சரிதானா. இப்போதும் இரவுக்கு மட்டும்தான் அப்பா அங்கே அப்பம்மாவிடம் போகப் போகிறேன். உன்னைப் பள்ளிக்கூடம் கொண்டுபோய் விட நாளைக்குக் காலையிலேயே வந்துவிடுவேன். சரிதானா…” என்றவனிடம்,
“சரிப்பா. அப்படியானால் நாளைக்கு மணியும் நம்முடன் காரில் பள்ளிக்கு வரலாமா அப்பா?” என்று ஆர்வத்தோடு கேட்டாள் பாவை.
மகளின் நெற்றியில் வாஞ்சையுடன் முத்தமிட்டு, “ஓ. கண்டிப்பாடா செல்லம். இப்போது போய்த் தூங்கு.” என்று அவளை உள்ளே அனுப்பிவைத்தான்.
மனைவியிடம் திரும்பி, “முடிந்தவரை விரைவாக நம் திருமணம் நடக்கவேண்டும் கவி….” என்றான்.
மகள் அவனோடு நன்றாகவே ஒட்டிக்கொண்டதில் பொறாமையாக இருந்தாலும், அவளின் அப்பா பாசம் கவியின் வாயைக் கட்டிப் போட்டது.
எனவே எதுவும் சொல்லாது அமைதியாக நின்று தன் சம்மதத்தைச் சொன்னாள்.
அவனோ ஒருவித எதிர்பார்ப்புடன் அவள் முகத்தையே பார்த்தான்.
அவளிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லாமல் போகவே, “கதவைக் கவனமாகப் பூட்டிக்கொள். நான் வருகிறேன்.” என்றான் தன் ஏமாற்றத்தை மறைத்தபடி.
அவள் உட்புறமாகக் கதவைப் பூட்டும்வரை பாத்திருந்துவிட்டு, தன் வீட்டுக்குச் சென்றவனின் முகத்தில் பலமான யோசனை. தாயிடம் எதை எப்படிச் சொல்லி என்னவென்று புரியவைப்பது என்று..

