அத்தியாயம் 54
உடனேயே மாதவனோடு பேசினார்கள். அவனுக்குத் திகைப்பு. அப்போதுதான் அவள் காட்டிய திடீர் தடுமாற்றத்திற்கான பொருள் பிடிபட்டது.
ஆனால் இன்னொரு திருமணம்? மனைவி கண் முன்னே வந்து நின்று அவன் துக்கத்தைப் பெரிதாக்கினாள். பேசிச் செய்து வைத்த திருமணம்தான். மிகுந்த அந்நியோன்யமாக வாழ்ந்தார்கள். இன்று அவளைத் தாண்டி இன்னொரு உறவுக்குள் போவதை நினைக்க வலித்தது.
அதே நேரத்தில் நாளாந்த வாழ்க்கை மெய்யாகவே அவனை மிரட்டியது. அன்னை சுகதேகியாக இருந்திருந்தால் கூடச் சமாளித்திருப்பான். அவரும் இன்னொரு திருமணத்தைப் பற்றி அவனிடம் பேசினார்தான். அவன்தான் இருக்கிற பிரச்சனைகள் போதாது என்று புதிதாக ஒரு தலைவலியைக் கொண்டு வராதீர்கள் என்று சீறி அவரை அடக்கியிருந்தான்.
அதுவே இளந்திரையன் வீடு தேடி வந்து பேசியபோது பதில் சொல்லத் தெரியாமல் நின்றான்.
கேதகி கொழும்பு புறப்பட்டுப் போயிருந்தாள். போகுமுன் அவன் கைப்பேசி இலக்கத்தை வாங்கியிருந்தாள். பெரிதாக ஈர்ப்பு, ஆவல் என்று இல்லாதபோதும் இனி அவன்தான் என்கிற முடிவு அவள் மனத்தில் ஆழமாக விழுந்திருந்தது.
அதைவிட எல்லாளன் குடும்பம், காண்டீபன் குடும்பம், அகரன் குடும்பங்களை, அவர்களுக்கிடையிலான அந்நியோன்யத்தை, அன்பை எல்லாம் கவனிக்கையில் நல்ல மனிதர்களும் இந்த உலகத்தில் உண்டு என்கிற நம்பிக்கையும் தெளிவும் உண்டாயின. அதே போலொரு குடும்ப அமைப்புத் தனக்கும் கிடைக்காதா என்கிற ஏக்கமும்.
இவையெல்லாம் சேர்ந்து அவள் முடிவை இன்னுமே உறுதிப்படுத்தின.
அதில் முடிந்தவரை இரண்டு நாள்களுக்கு ஒருமுறை எடுத்து குழந்தையைப் பற்றி, அவன் அன்னையைப் பற்றி விசாரித்துவிட்டு வைப்பாள். பேசப்படும் திருமணத்திற்கான பதில் என்ன என்று மட்டும் கேட்கமாட்டாள்.
அவள் சம்மதித்துவிட்டது இவனுக்கும், இவன் இன்னும் எந்தப் பதிலும் சொல்லாமல் இருக்கிறான் என்பது அவளுக்கும் தெரியாமல் இல்லை. ஆனாலும் இருவரும் தாமாக அதைப் பற்றிப் பேசிக்கொள்ளவில்லை. தமக்குத் தெரியும் என்பதுபோல் காட்டிக்கொள்ளவும் இல்லை.
அவனுக்கு அவள் அழைப்பைத் தவிர்க்க முடிவதில்லை. இயல்பாக ஏற்கவும் முடிவதில்லை. பொறுத்து பொறுத்துப் பார்த்த கேதகி, “கலியாணம் வேண்டாமா, இல்லை நான் வேண்டாமா?” என்று நேரடியாகவே கேட்டிருந்தாள்.
இப்படி நேரடியாகக் கேட்பாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவள் தைரியம் கண்டு திகைப்பும் ஆச்சரியமும் ஒருங்கே உண்டாயின. ஒரு நொடி மௌனம் காத்துவிட்டு, “இல்ல… அது நான் உங்களுக்கு வேண்டாமே…” என்று சொன்னான்.
அவளை யோசித்துத் தயங்கியிருக்கிறான். இதை விட வேறு என்ன வேண்டும் அவளுக்கு?
“கட்ட முதலே எனக்காக யோசிக்கிற நீங்க கட்டின பிறகு என்னை விட்டுடப் போறேல்ல. எனக்கு அது போதும். நீங்க உங்களுக்கு நான் ஓகேயா எண்டு யோசிச்சிட்டுப் பதில் சொல்லுங்க.” என்றுவிட்டு வைத்துவிட்டாள்.
அதன் பிறகு அழைக்கவில்லை. ஒரு வாரம் கடந்தது. அழைப்பாள் அழைப்பாள் என்று காத்திருந்து ஏமாந்துபோன மாதவன், அடுத்த வாரம் முடியும் தருவாயில் அவளுக்கு அழைத்தான்.
“சொல்லுங்க.”
நடுவில் எதுவுமே நடவாதது போன்று இயல்பாக குழந்தையைப் பற்றியும் அன்னையையும் பற்றியும் கேட்டுவிட்டு வினவியவளைக் கண்டு இலேசாக வியந்தான் மாதவன்.
“அது… என்னைக் கட்டினா இஞ்சயே வாற மாதிரி இருக்கும். வேலைக்கு இப்போதைக்குப் போகேலாது. அதைவிட எனக்குக் கொஞ்சம் டைம் வேணும்.”
தயங்கி தயங்கிச் சொன்னவனிடம், “பயப்பிடாதீங்க. பாஞ்சிட மாட்டன்!” என்று சொன்னாள் அவள்.
ஒரு நொடி அதிர்ந்து நின்றுவிட்டான் மாதவன். உதட்டோரம் இலேசாய் முறுவல் அரும்பிற்று. என்ன பெண் இவள் என்று அவன் யோசித்துக்கொண்டிருக்கையில், “என்ன, சத்தத்தக் காணேல்ல?” என்று இடையிட்டாள் அவள்.
“இல்ல. பாயமாட்டீங்க எண்டுற நம்பிக்கையோட ஓம் எண்டு சொல்லுறன்.” என்றவனின் பதிலில் இப்போது அவள் முகத்திலும் மெல்லிய முறுவல்.
அவன் மனைவி இறந்து இன்னுமே ஒரு வருடம் முடியாத காரணத்தினால் தாலி கட்டவில்லை. அதனை ஒரு வருடம் கழித்துச் செய்யலாம் என்று முடிவு செய்து, இப்போது பதிவுத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார்கள்.
இதற்கிடையில் சிவநாதர் இறந்துவிட்டதாகக் காண்டீபனின் நண்பர்களிடமிருந்து தகவல் வந்தது. நண்பர்கள் இருவரும் போய்ப் பார்த்தார்கள். குறைந்தது இரண்டு நாள்களுக்கு முதல் இறந்திருக்கலாம் என்று தோன்றிற்று. இவர்தான் சிவநாதரா என்று கண்டுபிடிக்க முடியாத அளவில் உடல் மாறியிருந்தது.
அவரின் இரண்டாவது மகனுக்குத் தூக்குத் தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாகக் குறைக்கும்படி கேட்டு அவரும் அவர் மனைவியும் கொடுத்த மனு தள்ளுபடியாகியிருந்தது. அது போதாது என்று கஜனுக்கு ஒன்பது வருடச் சிறைத் தண்டனை கிடைக்கும் என்கிற அளவில் உறுதியாகியிருந்தது. வேந்தனும் தப்ப முடியாது. அவர் கட்சியும் ஆளாளுக்குத் தலைமைக்குப் போட்டியிட்டு நூலறுந்த பட்டம் போன்று ஒன்றுக்கும் உதவாமல் நின்றது.
இது அத்தனையையும் ஒரு வாரத்துக்கு முதல் வந்து அவரிடம் சொல்லிச் சிரித்துவிட்டு வந்திருந்தார்கள். அதுவே அவர் உயிரை மொத்தமாகப் பறித்திருக்கும்.
அந்த உடலைத் தூக்கிக் கடலில் போட்டார்கள். கரை ஒதுங்கினாலும் ஒன்றுதான், கடல் உயிரினங்களுக்கு உணவானாலும் ஒன்றுதான்.
அங்கிருந்து புறப்படுகையில் நண்பர்கள் இருவர் மனத்திலும் அப்படி ஒரு நிறைவு. எல்லாளன் ஒருமுறை காண்டீபனை அணைத்து விடுவித்தான். எல்லாமே முடிந்து போயிற்று. இனி நிம்மதியான ஒரு வாழ்க்கை காண்டீபனுக்கு அமையும்.
மாதவன் சம்மதம் சொல்லிச் சரியாக ஒரு மாதம் கடந்த நிலையில் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணத்திற்கு ஏற்பாடாகியிருந்தது.
அன்று காலையிலேயே எழுந்து அப்பாவுக்கும் மகனுக்கும் ஒரே மாதிரி பட்டர் கலர் ஜீன்சுக்கு இளம் நீலத்தில் சேர்ட் எடுத்துக் கொடுத்திருந்தாள் மிதிலா. அதை அணிந்து வந்த காண்டீபன், மனைவியைக் கண்டுவிட்டு அப்படியே நின்றுவிட்டான்.
அவள் இயல்பிலேயே மிகுந்த அழகி. அவன் இல்லா நாள்களில் தூசு படிந்த ஓவியமாகியிருந்தாள். அவனைக் கண்டதிலேயே அவள் உயிர் மீண்டிருந்தது. திருமணம் நடந்து அவன் தாலி கட்டிய நாளில் இருந்து அவள் முகம் எப்போதுமே மங்களமாக ஜொலிக்கும். ஆனால் இன்று அதையும் தாண்டி அவன் உள்ளத்தையும் கண்களையும் பறித்தாள்.
அவனின் ஆவல் பார்வையில் கன்னங்கள் சூடானாலும் மகனைக் கண்ணால் காட்டி அவனை அடக்கினாள் மிதிலா. காண்டீபனும் கொஞ்சம் தடுமாறித்தான் போனான். அவளின் அங்க வளைவுகளை மிக நளினமான எடுத்துக் காட்டியபடி அவள் மீது படந்திருந்த சேலை, அவன் மனத்திடத்தைச் சோதித்தது. மகன் அறியாமல் அவளுக்கு உதடு குவித்து முத்தம் ஒன்றை அனுப்பி வைத்தான். இதை நம்ப முடியாமல் விழிகளை விரித்து வியந்தவள் ஏறிய முகச் சிவப்புடன் அவனை முறைத்தாள்.
மனைவியின் அந்த வெட்கத்தை அவன் ரசித்துச் சிரிக்க, “என்னப்பா?” என்றான் மகன் ஆர்வமாக.
“இல்லை செல்லம். அம்மா வடிவா இருக்கிறா எல்லா. அதான்.”
“அதுக்கு ஏன் சிரிச்சனீங்க?”
“நானும் நீங்களும் எப்பிடி இருக்கிறம் எண்டு உங்கட அம்மா சொல்லேல்லத்தானே. அதான்.”
“அதுக்கா சிரிச்சனீங்க?”
“ஓம். ஏன் ஒண்டும் சொல்லேல்ல எண்டு அம்மாட்டக் கேளுங்கோ.”
“அம்மா, அப்பாவும் நானும் எப்பிடி இருக்கிறம்?”
“ரெண்டு பேரும் கண்ணுக்கு நிறைவா இருக்கிறீங்கய்யா. வீட்டுக்கு வந்த பிறகு சுத்திப் போடுவம் சரியா?” என்று மகன் கேசத்தைக் கோதிவிட்டவளின் விழிகள் கணவனிடமும் பிரத்தியேகமாக அதனைப் பகிர்ந்தன.
உதட்டோரம் எழுந்த முறுவலுடன் மகன் ஒரு கைக்குள் இருக்க மனைவியை மறுகையால் அணைத்து, அவள் நெற்றியில் உதடு பதித்து எடுத்தான் அவன்.
அவள் திகைத்து மகனையும் அவனையும் பார்த்தாள். அணைத்திருந்த கையிலேயே அழுத்தம் கொடுத்து, அவளை அமைதிப்படுத்திவிட்டு இருவரையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டான்.
மாதவன் குடும்பத்தை கதிரவன் வந்து நேரத்திற்கே அழைத்துப்போயிருந்தான். கேதகியை எல்லாளன் வீட்டினர் அங்கிருந்தே அழைத்து வந்திருந்தனர்.

