எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு 29 – 1

அத்தியாயம்-29

 

சமையலறையில் வேலையாக நின்ற கவி, “பாவை, வந்து சாப்பிட்டுவிட்டு வெளிக்கிடு. பிறகு நேரம் போய்விட்டது என்று சொல்லிவிட்டுச் சாப்பிடாமல் .ஓடிவிடுவாய்.” என்று மகளை அழைத்தபடி ஹாலுக்கு வந்தாள்.

 

அந்த மகளோ உடை கூட மாற்றாது வீட்டுவாசலுக்கும் உள்ளுக்கும் நடை பழகிக்கொண்டு இருந்தாள்.

.

தாயைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “அப்பாவை இன்னும் காணவில்லையே அம்மா….” என்றவளின் விழிகள் மீண்டும் வாசலை எட்டிப் பார்த்தது.

 

இந்தப் பெண்ணுக்கு அப்பா பைத்தியம் நன்றாகப் பிடித்துவிட்டது என்று மனதில் நினைத்தவள், “அப்பா வருவார் பாவை. அவர் வரும்வரை இப்படியே நிற்பாயா? முதலில் நீ வெளிக்கிடு. நேரமாகிறது.” என்று அதட்டி மகளை உள்ளே அனுப்பிவிட்டு,அவளுக்கான மதியச் சாப்பாட்டினை எடுத்துவைக்க மீண்டும் சமையல் அறைக்குள் சென்றாள் கவி.

 

அவளின் கைகள் வேலைகளைச் செய்தபோதும், இன்று காலை எழுந்ததில் இருந்து இதோடு எத்தனை தடவை தகப்பனைக் கேட்டுவிட்டாள் இவள் என்று ஓடியது அவள் எண்ணம். இரவு தானாகக் கண்ணயரும் வரை, அவனைப் பற்றி மட்டும்தானே பேசினாள். அப்படி என்ன மந்திரத்தை மகளிடம் ஓதினானோ தெரியாது. கனவில் கூட அப்பா… அப்பாதான்!

 

மகளின் மலர்ச்சியை நினைக்கையில் மகிழ்ச்சியாக இருந்தபோதும், மனதின் ஓரத்தில் கவிக்குப் பயமாகவும் இருந்தது. மறுபடியும் அவன் எங்களை கைவிட்டுவிட்டால் அதை இந்தக் குழந்தை தாங்கிக்கொள்வாளா? அப்படி எதையும் அவன் செய்துவிடக்கூடாது என்று கடவுளையும் வேண்டிக்கொண்டாள்.

 

மகளை ஒரே நாளிலேயே தன் மீது பைத்தியமாக்கி வைத்திருக்கிறானே, செய்வதை எல்லாம் செய்துவிட்டு மனைவி பிள்ளை என்று உறவு கொண்டாட எப்படி முடிகிறது அவனால்? என்னால் முடியவில்லையே! ஆண்கள் எல்லோருமே இப்படித்தானோ என்று அவளின் மனதில் அவனை பற்றிய சிந்தனை ஓடிக்கொண்டு இருக்க,

 

“என்னம்மா, இன்னும் அப்பா வரவில்லையே. என்னைப் பள்ளிக்கூடத்துக்குக் கூட்டிக்கொண்டு போக கட்டாயம் வருவதாகச் சொன்னாரே…” என்ற மகளின் குரல், அறைக்குள் இருந்து மீண்டும் கேட்க, ரவியின் மேல் கோபம் வந்தது அவளுக்கு.

 

இப்படிப் பிள்ளையைத் தவிக்க விடுகிறானே என்கிற எரிச்சலில், “அவனாவது சொன்னதைச் செய்வதாவது…” என்று வாய்க்குள் முணுமுணுத்தாள் கவி.

 

“உன் நம்பிக்கைக்கு நன்றி!” முதுகுக்கு பின்னால் கேட்ட ரவியின் குரலில் திடுக்கிட்டுத் துள்ளித் திரும்பினாள் கவி.

 

மகளின் காதில் விழுந்தாலே அவள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாது என்று அவள் வாய்க்குள் முணுமுணுக்க, அது போயும் போயும் இவன் காதிலா விழவேண்டும். இவன் வருவான் என்று தெரிந்தும் வாயை விட்ட தன் முட்டாள் தனத்தில் உண்டான கோபத்தில் அவனை முறைத்தாள் கவி.

 

திரும்பிச் செல்வதற்கு வசதியாகக் காரை வீதி ஓரத்திலேயே நிறுத்தியதில் அவர்களுக்கு ரவியின் கார் வந்த சத்தம் கேட்கவில்லை. மகளின் கேள்வியைக் கேட்டுக்கொண்டே வீட்டுக்குள் வந்தவனுக்கு, மனைவி என்ன பதிலைச் சொல்கிறாள் என்று கேட்கும் ஆர்வம் உண்டானது.

 

அதோடு அவளின் முகத்தைக் காலையிலேயே தரிசிக்கவும் ஆசைப்பட்டவன் மனைவியைத் தேடி சமையலறைக்கே வந்துவிட்டான். அப்படி வந்தவனின் காதில் அவளின் முணுமுணுப்பு மிக நன்றாகவே விழுந்தது.

 

தன்னை முறைத்தவளையே அவன் கூர்ந்து பார்க்க, நேற்று இதே சமையல் அறையில் வைத்து அவன் முத்தமிட்டது நினைவு வந்தது கவிக்கு.

 

நான் சொன்னது வேறு இவன் காதில் விழுந்துவிட்டது. இன்றும் ஏதாவது செய்துவிடுவானோ என்று உதறலாக இருந்தது அவளுக்கு. அவன் கொடுத்த முத்தத்தை ரசிக்காத போதும் அதை மறக்கவும் முடியவில்லை அவளால். அப்படி இருக்க இன்றும் அப்படி ஏதும் நடந்தால் அதைத் தாங்கிக்கொள்ள முடியும் என்று அவளுக்குத் தோன்றவில்லை.

 

பன்னிரண்டு வயதுக் குழந்தைக்கு அம்மாவாக இருந்தபோதும், இப்படியான உணர்வுகளை அவள் இதுவரை உணர்ந்தது இல்லையே! நடப்பது என்ன என்று உணர முதலே அனைத்தும் நடந்து முடிந்திருந்தது அவள் வாழ்வில். பிறகு எங்கே உணர்வதும் அதை உள்வாங்கிக்கொள்வதும்…?

 

நடந்து முடிந்துவிட்ட பிசகுகளின் பிறகு ரவி திரும்ப வருவான் என்றோ மகளைச் சொந்தம் கொண்டாடுவான் என்றோ இப்படி ஒரு திருமணத்திற்குத் தன்னைச் சம்மதிக்க வைப்பான் என்றோ அவள் கனவில் கூட நினைத்துப் பார்த்தது இல்லையே.

 

அவள் எதிர்பாராதது எல்லாம் நடந்து கொண்டிருக்க இனி வரப்போகும் திருமண வாழ்க்கையை நினைக்கவே கலக்கமாக இருந்தது கவிக்கு. மகளுக்காகத்தான் இந்தத் திருமணம் என்றாலும், அவளும் உணர்வுகள் உள்ள பெண் தானே. அவன் நெற்றியில் முத்தமிட்டதையே அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையே…. மீதியை?

 

இரவு முழுவதும் அவளை ஆட்டிப்படைத்த குழப்பமான உணர்வுகள் அத்தனையும் அவனைப் பார்த்ததும் மறுபடியும் நினைவில் வந்து அவளைப் புரட்டிப்போட்டது.

 

மனதின் போராட்டத்தை தன் முகம் காட்டிக்கொடுத்துவிடுமோ என்று பயந்து அவனுக்கு முகத்தைக் காட்டாது திரும்பி வேலைகளைப் பார்த்தாள் கவி.

 

அவனுக்கு முதுகுகாட்டித் திரும்பிக்கொண்ட மனைவியைப் பார்ப்பதற்கு வசதியாக சமையல் கட்டில் சாய்ந்துகொண்டவன், அவளின் வீங்கி இருந்த முகத்தைப் பார்த்து, “அழுதாயா..?” என்று கேட்டான்.

 

அவள் பதில் சொல்லாமல் வேலையைத் தொடரவும், “நேற்று உன்னைக் கொஞ்சம் அதிகமாகவே படுத்திவிட்டேன் இல்லையா? உனக்கும் எதிர்பாராமல் என்னை ஏற்றுக்கொள்வது சற்று… சற்று என்ன மிகவுமே சிரமமாகத்தான் இருக்கும். புரிகிறது! ஆனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு உன்னை என்னவளாகக் கண்டதில் நானும் கொஞ்சம் தடுமாறித்தான் போனேன். அதனால்தான் அப்படி…. நடந்துகொண்டேன் என்று நினைக்கிறன்… ” என்றான் சமாதானமாக.

 

எதுவும் சொல்லாது குனிந்த தலையோடு வேலை செய்யும் மனைவியையே கைகளைக் கட்டிக்கொண்டு பார்த்தவனுக்கு பெருமூச்சொன்று வெளியேறியது.

 

அவள் மனதை வெல்லும் வழி தெரியவில்லை அவனுக்கு. அந்தச் சின்ன வயதில் வாய் ஓயாது பேசியே அவனைப் பாதித்தாள் என்றால் இன்று வாய் மூடி நின்று அவனை வதைத்தாள்.

 

அவர்களுக்குள் எதுவுமே இன்னும் சுமூகமாகவில்லை என்பது புரிந்தாலும் அவன் மனது மனைவியுடனான இயல்பான வாழ்வுக்கு ஏங்கியது.

 

“அம்மா, எங்கேம்மா இன்னும் அப்பாவைக் காண…” என்றபடி வந்த பாவை, ரவியைக் கண்டதும், “அப்பா வந்துவிட்டீர்களா..?” என்று துள்ளோடு கேட்டாள்.

 

“ஆமாம்டா செல்லம். பார்த்தாயா அப்பா சொன்னதுபோல் வந்துவிட்டேனே….” என்றவன், மகளின் நெற்றியில் ஆதுரத்துடன் உதடுகளை ஒற்றி எடுத்தான்.

 

“அப்பா, இங்கே பாருங்கள். நேற்று நீங்கள் வாங்கித்தந்த மணிக்கூடு. நன்றாக இருக்கிறதா…? நான் இன்று பள்ளிக்கூடத்துக்குக் கட்டிக்கொண்டு போகப்போறேன்…” என்றபடி கையை நீட்டிக் காட்டினாள்.

 

“அடடா… எவ்வளவு அழகாக இருக்கிறது. என் செல்லத்தின் கைக்கென்றே செய்திருப்பார்கள் போலவே. அவ்வளவு அழகாக இருக்கிறதுடா..” என்றான் அவனும் சந்தோசமாக.

 

“பாவை. இன்னும் நீ தேநீரும் குடிக்கவில்லை. சாப்பிடவும் இல்லை. விரைவாக வா. நேரமாகிறது..” என்று மகளைச் சாப்பாட்டு மேசைக்கு அழைத்தாள் கவி.

 

“வரேன்மா….” என்று தாயிடம் சொல்லிவிட்டு, “வாங்கப்பா..”என்று தந்தையையும் அழைத்துக்கொண்டு சென்றாள் பாவை.

 

அங்கே இரண்டு கப்பில் தேநீர் வீற்றிருக்க, இரண்டு தட்டுக்கள் வைக்கப்பட்டு கவி சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்தாள். ரவியின் மனம் இனிதாக அதிர்ந்தது. ஆனாலும் அது தனக்குத்தானா என்கிற சந்தேகம் தோன்றவும் பேசாமல் பார்த்துக்கொண்டு நின்றான்.

 

ஒரு கதிரையில் தான் அமர்ந்துகொண்ட பாவை, “வாங்கப்பா. நீங்களும் வந்து சாப்பிடுங்கள்..” என்று அழைத்தாள்.

 

ஒற்றைப் புருவத்தை உயர்த்திக் கேள்வியாக மனைவியைப் பார்த்தான் ரவி.

 

‘இவர் பெரிய துறை. இவருக்கு நான் வெற்றிலை பாக்கு வைத்து விருந்துக்கு அழைக்க வேண்டுமாக்கும்….’ என்று உள்ளே பொருமினாலும் “சா…சாப்பிடுங்கள்..” என்றாள் மெல்ல.

 

முகம் மலர மகளின் அருகில் அமர்ந்து, “நீயும் எங்களுடனேயே சாப்பிடு கவி. ஓவியைப் பள்ளியில் விட்டுவிட்டு நாம் வெளியே போய்வரலாம்..” என்றான் சாப்பிட்டுக்கொண்டே.

 

‘வெளியே போகவேண்டும் என்று முதலே சொல்லவில்லை. போவோமா என்று அனுமதியும் கேட்கவில்லை. திடீரென்று போவோம் வா என்றால்… என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறான் இவன் என்னைப்பற்றி….’ என்று நினைத்தவள் அவனைப் பார்த்து முறைத்தாள். மகள் முன்னிலையில் அவளால் அதை மட்டும்தானே செய்யமுடியும்.

 

“என்னை எதற்காக முறைக்கிறாய் கவி…?” என்று ஏதும் அறியாதவன் போல் அவன் கேட்கவும், பாவை தாயை நிமிர்ந்து பார்க்க அவசரமாகப் பார்வையை ரவியிடமிருந்து திருப்பிக்கொண்டாள் கவி.

 

“வா. வந்து சாப்பிட்டுவிட்டு வேகமாகத் தயாராகு. ஓவிக்கு பள்ளிக்கு நேரமாகிறது..” என்றான் அவளுக்கு மறுக்க சந்தர்ப்பம் கொடாது.

 

“எங்கேப்பா போகிறீர்கள்?” என்று பாவை கேட்கவும், “நேற்று உனக்கு உடைகள் வாங்கினோம் இல்லையா. இன்று அம்மாவுக்கு வாங்கப் போகிறோம். அதுதான் அம்மாவையும் கூப்பிடுகிறேன்…” என்றான் அவளுக்குப் புரியும் விதமாக.

 

“உங்களுக்கு? உங்களுக்கும் வாங்குங்கள் அப்பா.” என்ற மகளின் பேச்சில் அவன் நெஞ்சம் நெகிழ்ந்தது. “எனக்கு உன் அம்மாதான் வாங்கித்தரவேண்டும். எங்கே, உன் அம்மாதான் வாயே திறக்கிறாள் இல்லையே…” என்றவனின் சீண்டலில், கவி தன்னிடம் வாயைத் திறந்து கதைப்பதில்லை என்று மறைமுகமாகச் சுட்டிக் காட்டினான்.

 

‘உன்னோடு கதைக்காதது ஒன்றுதான் குறை… அன்று கதைத்து நான் பட்டது போதாதா…’ என்று ஓடியது அவள் எண்ணம்.

error: Alert: Content selection is disabled!!