எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு 29 – 3

அவனோ வெகு சாதரணமாக, அவளுக்குப் பிடித்த உணவைக் கேட்டு இருவருக்குமாக ஆடர் கொடுத்துவிட்டு, அவள் புறம் திரும்பினான்.

 

அவன் தன்னைப் பார்க்கிறான் என்று உணர்ந்தபோதும் கவனியாதவள் போல் அந்த ஹோட்டலைச் சுற்றிப் பார்வையைச் சுழற்றினாள் கவி.

 

மேசையில் இருந்த அவள் கையை ரவி பற்றிக் கொள்ளவும், பாவனைகள் அனைத்தும் பறக்க, திகைப்போடு அவனைத் திரும்பிப் பார்த்தாள் கவி.

 

“என்ன இது? பொது இடங்களில் எப்போது பார்த்தாலும் அநாகரிகமாக நடந்துகொள்கிறீர்கள்.” என்றாள் சூடாக.

 

“என் மனைவியின் கையைப் பிடிப்பதில் எந்த அநாகரீகமும் இல்லை!” என்று அழுத்திச் சொன்னவன்,

 

“அதுசரி, என்னைத் திட்டுவதற்கு மட்டும்தான் வாயைத் திறப்பேன் என்று உறுதி ஏதும் எடுத்திருக்கிறாயா..?” என்று கேட்டான்.

 

அப்படியா நடந்துகொள்கிறேன் என்று யோசனை ஓடினாலும், “கையை விடுங்கள். யாரும் பார்த்தால் என்ன நினைப்பார்கள்..” என்றாள் கவி.

 

அவளின் கையோடு சேர்த்துத் தன் கையையும் மேசைக்குக் கீழே கொண்டுவந்து அவளின் விரல்களோடு தன் விரல்களை இறுக்கமாக கோரத்துக்கொண்டவன், பிணைந்திருந்த கைகளைத் தன் மடிக்கு இடம் மாற்றி தன்னுடைய மறு கையால் அவற்றைத் தாங்கிக்கொண்டான்.

 

அவன் செயல் கவிக்குப் பெரும் சங்கடமாக இருந்தது.

 

“என்ன இது…?” என்று சினத்தோடு ஆரம்பித்தவளின் கண்களை நேராகப் பார்த்து, “ஏன் கவி, என்னை உனக்குப் பிடிக்கவில்லையா…?” என்று ஆழ்ந்த குரலில் கேட்டான் ரவி.

 

பேச்சு மறந்து அவனையே பார்த்தாள். அவனை அவளுக்குப் பிடிக்குமா பிடிக்காதா என்கிற கோணத்தில் அவள் சிந்தித்ததே இல்லையே. அவனைத் திட்டுவதற்கே அவளுக்கு நேரம் போதவில்லை. இதில் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் என்ன பதிலைச் சொல்வது?

 

அவளிடம் இருந்து பதில் இல்லாமல் போகவே, “சொல்லேன் கவி…” என்று ஊக்கினான் ரவி.

 

சட்டென்று மூண்ட சினத்தோடு, “ஏதோ மிக நல்லவன் போன்று எதற்கு இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்? எனக்கு உங்களைப் பிடிக்கவில்லை என்று சொன்னால் இந்தத் திருமணத்தை நிறுத்திவிடுவீர்களா?”என்று எரிச்சலும் ஏளனமுமாகக் கேட்டாள்.

 

அதைக் கேட்டவனின் முகம் உணர்ச்சிகளைத் துறக்க, அவளைப் பற்றியிருந்த அவன் கை இறுகியது. அந்த இறுக்கத்தில் அவள் அவனைத் திரும்பிப் பார்க்க, அதுவரை இணைந்திருந்த அவர்களின் கைகளிலேயே பார்வையைப் பதித்திருந்தவனும் அவள் முகம் பார்த்தான்.

 

அவன் விழிகளில் தெரிந்த வலியைக் கண்டவளுக்கு மனதுக்குள் பிசைந்தது. அவனைப் பார்க்க முடியாமல் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

 

இது என்ன புதுவிதமான அவஸ்தை என்று தோன்றியது அவளுக்கு. மனம் நிறைய அவன் மீது கோபம் இருந்தது. ஆனாலும், அவன் விழிகளில் தெரிந்த வலியைக் கண்டதும் அவளுக்கு என்னவோ செய்தது.

 

அவள் கையில் சிறு அழுத்தத்தைக் கொடுத்து, “எதற்காகவும் இந்தத் திருமணத்தை நிறுத்தமாட்டேன் கவி. அது நடந்தே தீரும்!” என்று உறுதியான குரலில் சொன்னவன், “ஆனால்.. உனக்கு.. நிஜமாகவே என்னைப் பிடிக்கவில்லையா..?” என்று கேட்டவனின் குரலில் வேதனை நிறைந்து கிடந்தது.

 

இப்போது ஏனோ அவளால் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை. அதற்காக அவனைத் தன் மனதுக்குப் பிடித்திருப்பதாகவும் அவளுக்குத் தோன்றவில்லை.

 

அதோடு, மகளுக்காகத் திருமணத்தை நடத்தும் அவனுக்கு அந்தக் கேள்விக்கான பதில் தேவை இல்லை என்றும் அலட்சியமாக எண்ணியது அவள் மனம்.

 

பாவையின் அம்மாவாக இந்தத் திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடிந்தவளால் ஒரு பெண்ணாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 

இதுவே பாவை இல்லாவிட்டால், அவளை அவன் மனைவி என்று சொல்லியிருக்கப் போவதில்லையே! இந்த அக்கறை அனுசரணை எல்லாம் அவளுக்குக் கிடைத்திருக்கப் போவதில்லையே! ஆக அவனுக்கு அவள் தேவைப்படவில்லை! பிறகு எதற்கு இந்தக் கேள்வி என்று ஆத்திரம் வந்தது.

 

“உன்னை எனக்கு மிக மிகப் பிடிக்கும் கவி…..” என்றான் ரவி ஆழ்ந்த குரலில்.

 

இதென்ன புதுக்கதை என்று எண்ணியவளின் இதழ்கள் ஏளனமாக வளைந்தது.

 

“என்னைப் பிடிக்குமா உங்களுக்கு? எத்தனை நாட்களாக?” அந்த ஏளனம் குரலில் தொக்கக் கேட்டாள்.

 

“நாட்களாக அல்ல. பல வருடங்களாக உன்னைப் பிடிக்கும். ஆனால் என்ன, உன்னை எனக்குப் பிடிக்கும் என்பதை இப்போதுதான் நானே அறிந்துகொண்டேன்.” என்றான் தன்மையாக.

 

“ஓ…! உண்மையாகவா? பிறகு?” இமைகளை உச்சிமேட்டுக்கே கொண்டுசென்று பொய்யாக வியந்தாள் கவி.

 

“என்னாலும் ஏளனமாகக் கதைக்கமுடியும் கவி. ஆனால் இது அதற்கான நேரம் இல்லை என்று நினைக்கிறேன். அதனால் நான் சொல்வதைக் கொஞ்சம் பொறுமையாகக் கேட்கிறாயா…?” என்றான் ரவி.

 

என்ன பெரிதாகச் சொல்லிவிடப்போகிறான் என்கிற அலட்சியத்துடன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் கவி.

 

“மகளுக்காக உன்னைத் திருமணம் செய்வதாகத் தானே நினைக்கிறாய்?” அவளின் மனதைப் படம் பிடித்துப் பார்த்தவன்போல் அவன் கேள்வி இருக்கவும், சட்டென்று திரும்பிப் பார்த்தவளின் விழிகளில் மெல்லிய அதிர்வு தெரிந்தது.

 

அவளைப் புரிந்துகொண்டதற்கு அடையாளமாக சின்னப் புன்னகை ஒன்றைச் சிந்திவிட்டு, “ஓவியைப் பற்றித் தெரிந்ததும்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அவள் இல்லாவிட்டாலும் உன்னைத்தான் திருமணம் செய்திருப்பேன் கவி.” என்றான், அவனுக்கே சொந்தமான ஆழ்ந்த குரலில்.

 

அவளின் விழிகளில் நம்பிக்கையின்மை தெரியவும், “என் மேல் இருக்கும் வெறுப்பைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு இதை நீ கேட்கவேண்டும் கவி.” என்று ஆரம்பித்தான் அவன்.

 

“அங்கே மலையகத்தில் நம் திருமணம் பற்றித் தெரிந்ததும் பள்ளிக்கூடத்தாலும் நிறுத்திவிட்டார்கள். நண்பர்களும் என்னை ஒதுக்கிவிட்டார்கள். வெளியே செல்லவே வெட்கி வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடந்த என்னை காஞ்சனா ஆன்ட்டிதான் கொழும்புக்கு அனுப்பி வைத்தார்கள். படிப்பு முடிந்து தொழிலைப் பார்க்கத் தொடங்கியதில் இருந்து, கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லி அம்மா வற்புறுத்திக்கொண்டே இருந்தார்கள். என்னால் முடியவில்லை கவி. அதற்காக உன்னை நினைத்து வாழ்ந்தேன் என்று பொய் சொல்ல விரும்பவில்லை.

 

“உன்னை விரும்பாத போதும் இன்னொரு பெண்ணோடு என்னால் வாழமுடியும் என்றும் தோன்றவில்லை எனக்கு. பிறகு, அம்மாவின் தொடர் நச்சரிப்பு தாங்கமுடியாமலும், நீ ராஜோடு அல்லது வேறு யாருடனுமோ….” என்று சொல்லிக்கொண்டிருந்தவன், சரேலென்று அவனைத் திரும்பிப் பார்த்த கவியின் விழிகளில் இருந்த அனலில் அவன் பார்வை இணைந்திருந்த அவர்களின் கைகளை நோக்கிக் குனிந்தது.

 

“உன்னைப் பற்றி அறிந்துகொள்ளும் வரை அப்படித்தான் நினைத்திருந்தேன்…” என்று இறங்கிய குரலில் சொன்னவனின் கை அவளின் கையை அழுத்தியது. அவளை நிமிர்ந்து பார்த்தவனின் விழிகள் ‘என்னைப் புரிந்துகொள்ளேன்..’ என்கிற வேண்டுதலை அவளிடம் முன் வைத்திருந்தது.

 

அவள் மீண்டும் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

 

“அப்படி நீ எங்கேயோ சந்தோசமாக இருக்க, நான் எதற்கு இப்படி இருப்பான் என்கிற கோபம்தான் தாரிகாவுடனான திருமணத்திற்குச் சம்மதம் சொல்ல வைத்தது. ஆனால் கவி, என்னால்…. எப்படிச் சொல்ல? அவளோடு… அவளை என் வருங்கால மனைவியாக என்னால் பார்க்கவே முடியவில்லை. ஆனால் உன்னை… எப்போதும் என் கையணைப்பிலேயே வைத்திருக்க வேண்டும் என்கிறம் வேகம் வருகிறது. ஒரு நிமிடம் கூட உன்னை விட்டுப் பிரியப் பிடிக்கவில்லை.

 

“நேற்றிரவு என்னால் அங்கே தூங்கவே முடியவில்லை. நான்… நான் சொல்லவருவது உனக்குப் புரிகிறதா கவி? என்னால்… என்னால் அங்கே தனித்திருக்க முடியவில்லை. நீ… உன் அருகாமை எனக்கு வேண்டும் என்று மனம் துடித்துக்கொண்டே இருந்தது…..” அவளின் விழிகளைப் பார்த்து ஆழ்ந்த குரலில் சொன்னவனை ஏனோ அவளால் பார்க்கமுடியவில்லை.

 

கன்னக் கதுப்புகளில் ஏறிய சிவப்பையும் அவளால் தடுக்க முடியவில்லை.

 

தலையைக் குனிந்தவளின் பார்வையில் அவன் கைகளுக்குள் பாதுகாப்பாக சிக்கிகொண்ட அவளின் கரம் விழுந்தது.

 

பாவையைப் பாதுகாக்க அவள் இருந்தாலும், அவளைப் பாதுகாக்க யாரும் இல்லையே என்று தனிமைத் துயரில் வாடியவளுக்கு அவன் பேச்சினால் மனதில் இதம் பரவுவதைத் தடுக்க முடியவில்லை.

 

“என் தேவை ஒரு பெண்ணாக இருந்தால் அதை மனைவியாக வரும் எவளிடமும் தீர்த்துக்கொள்ள முடியும். ஆனால் எந்தப் பெண்ணிடமும் தோன்றாத உணர்வுகள் உன்னிடம் மட்டும் தான் தோன்றுகிறது. அப்போதுதான் புரிந்தது என் தேவை ஒரு பெண்ணல்ல. நீ என்று!” என்றான் ரவி உள்ளத்தில் இருந்து.

 

அதுவரை இணைந்திருந்த கரங்களையே பாத்திருந்தவள் மெல்லிய அதிர்வோடு விழி விரிய அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவள் விழிகளோடு கலந்த அவன் விழிகள் ஒருவித எதிர்பார்ப்புடன் அவளையே பார்த்தது….

 

அவனின் விளக்கத்தைக் கேட்டபிறகு கோபம், குழப்பம் அல்லது கலக்கம் அனைத்தும் முற்றாகத் தீர்ந்துவிட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும், மனதில் ஒருவித அமைதி குடிகொள்வதை அவளால் உணரமுடிந்தது.

 

தங்களை மறந்து பார்வையால் கலந்து நின்றவர்களை மேசையில் வைக்கப்பட்ட உணவுத்தட்டுக்களின் சத்தம் கலைத்தது.

 

சட்டென்று பார்வையை அகற்றிக்கொண்ட கவி கையையும் இழுத்துக்கொண்டாள். அதன்பிறகு எந்தப் பேச்சுக்களும் இன்றி மதிய உணவை முடித்தவர்கள், மகளையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றனர்.

 

error: Alert: Content selection is disabled!!