எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு 30 – 1

அத்தியாயம்-30

 

வவுனியா அம்மன் கோவில் வளாகத்தில், அலுவலக அறைக்குப் பக்கத்தில் இருந்த சிறிய அறையில் அமர்ந்திருந்தாள் கவி. மணப்பெண்ணாக!

 

மனதிலோ கரணம் புரியாத பதட்டம்.

 

‘இந்த வயதில் அதுவும் பன்னிரண்டு வயதுப் பிள்ளையை வைத்துக்கொண்டு, இந்த அலங்காரம் எல்லாம் தேவையா… இந்தச் சாந்தியும் நிருவும் செய்திருக்கும் வேலைகள்….’ என்று நினைத்தபடி தன்னையே குனிந்து பார்த்துக்கொண்ட கவிக்குச் சங்கடமாக இருந்தது. அந்தளவுக்கு ஒரு புது மணப்பெண்ணுக்கு உரிய அத்தனை அலங்காரங்களையும் செய்திருந்தார்கள் அவர்கள்.

 

‘இதெல்லாம் எதற்கு. சாதரணமாக இருந்தால் போதாதா….’ என்று நினைத்தவளுக்கு, எல்லோருக்கும் முன் இந்த அலங்காரத்துடன் போகவே கூச்சமாக இருந்தது.

 

கவி ‘போதும்’, ‘வேண்டாம்..’ என்று சொன்னதைக் காதிலேயே வாங்காமல், ‘உன்னை மிக அழகாக அலங்கரிக்க வேண்டும் என்பது ரவியண்ணாவின் உத்தரவு…’ என்று சொல்லி அவளின் வாயை அடைத்துவிட்டார்கள்.

 

பாவை உள்ளே வருவதும், “அம்மா…. வடிவா (அழகா) இருக்கிறீர்கள்…” என்று தாயைக் கொஞ்சுவதும், வெளியே ஓடுவதுமாக இருந்தாள்.

 

கவிக்கு சிந்திக்கவே சந்தர்ப்பம் கொடாது அனைத்தையும் மிக வேகமாக நடத்தி முடித்து, இன்று திருமணம் என்கிற அளவில் கொண்டு வந்து நிறுத்தி இருந்தான் ரவி. நடப்பவைகள் அனைத்தும் கனவோ என்றுகூடத் தோன்றியது கவிக்கு.

 

அன்று ஹோட்டலில் வைத்து, எனக்கு உன்னைப் பிடிக்கும். எனக்கு நீ வேண்டும். உன்னை உனக்காகவே திருமணம் செய்கிறேன் என்று தன் நிலையை விளக்கியவன், அதன் பிறகு அவளைச் சங்கடப்படும் விதமாக நெருங்கவில்லை. அதற்காக தள்ளி நிற்கவும் இல்லை.

 

காலையில் மகளுடன், மதியம் மனைவியுடன், இரவு தாயுடன் என்று தன்னுடைய உணவுவேளைகளை மூவருடனும் பகிர்ந்துகொண்டான். ஆரம்பத்தில் மதிய உணவுக்காக, மகளும் இல்லாத நேரத்தில் அமைந்த அவனின் வருகை பிடிக்காமல் இருந்தபோதும், அடுத்தடுத்த நாட்களில் பழகிப்போனது கவிக்கு.

 

இந்த நாட்களில் அவனோடு உயிராக ஒட்டிக்கொண்டது அவன் மகள் மட்டுமே!

முன்னைப் போன்று எடுத்தெரிந்த பேச்சுக்கள் இல்லாதபோதும் ஒட்டி உறவாடவில்லை கவி. சகுந்தலாவோ வெளிப்படையாகவே அவனுக்குப் பாராமுகத்தைக் காட்டினார்.

 

இதுவரை பாவையைப் பற்றி சகுந்தலா விசாரிக்காததில் அவருடன் பேசுவதற்கு அவனும் முயலவில்லை.

 

கவி மீதோ அல்லது அவன் மீதோ அவர் கோபம் கொண்டால் அதில் ஓர் அர்த்தம் இருக்கலாம். ஆனால் பாவையை அவர் ஒதுக்குவதில் என்ன நியாயம் இருக்கமுடியும் என்று அவனுக்கு புரியவில்லை.

 

இந்த ஐந்தாறு நாட்களும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாகக் கழிய, திருமண நாளாக இன்றைய நாளும் விடிந்திருந்தது.

 

பெண்ணை அழைத்துவரும் படி ஐயர் சொல்லவும், சாந்தியும் நிருவும் கவியை அழைக்க அவளின் அறைக்கு வந்தனர். அவர்களைக் கண்டதும் கவிக்கு இன்னும் பதட்டம் அதிகரித்தது.

 

அவளின் முகத்தில் அரும்பிய வியர்வையைத் துளிகளைப் பார்த்து, “எதற்கு இந்தப் பதட்டம் கவி? உன்னை யாரும் பிடித்துத் தின்றுவிட மாட்டார்கள். அதற்கு ரவியண்ணா விடவும் மாட்டார்…” என்று கேலி செய்தாள் நிரு.

 

“அதானே… கோழி, குஞ்சைக் காப்பதுபோல அல்லவா கவியைக் காவல் காக்கிறார் ரவியண்ணா…..” என்று நிருவுக்கு பின்பாட்டுப் பாடினாள் சாந்தி.

 

அது என்னவோ உண்மைதான் என்று தோன்றியது கவிக்கு. இந்த இடைப்பட்ட நாட்களில் அவளை அவன் எங்கேயும் தனியாக விட்டதே இல்லை. எங்கானாலும் அவனே அழைத்துச் சென்றான். யார் கேட்டாலும் அவள் கணவன் என்று முகத்தில் முறுவலோடு தன்னைத் தானே அறிமுகப் படுத்திக் கொண்டான். ஒரு ராணியைப் போலல்லவா உணரவைத்தான் என்று நினைத்தவளின் இதழ்களில் அவளையும் மீறி அழகிய புன்னகை ஒன்று உதயமானது.

 

அவனின் அந்த அக்கறை, கவனிப்பு எல்லாம் அவளுக்கு மிக மிகப் பிடித்தது. ஏன், சிலநேரங்களில் அவன் விழிகளில் தெரியும் அழைப்பும் எதிர்பார்ப்பும் கூட அவளுக்குப் பிடித்துத்தான் இருந்தது. உள்ளதைச் சொல்லப்போனால் மனதுக்குள் அவற்றை எல்லாம் மிக மிக ரசித்தாள்.

 

எனக்கு எல்லாமே நீதான் என்று ஒவ்வொரு செயலிலும் அவன் நிரூபிக்கவும், இந்த இருபத்தியேழு வருடங்களும் அப்படி ஒரு கவனிப்பை யாரிடமும் பெற்றிராதவளுக்கு, அந்தக் கவனிப்பு இன்னும் இன்னும் வேண்டும் என்றே தோன்றியது.

 

தான் ஒருவனுக்கு மிக மிக முக்கியமாகப் படுகிறோம் என்பது அவளை ஒரு ராணியைப் போன்று உணரவைத்தது. ஆனால், இது எதையும் அவள் அவனிடம் காட்டிக்கொள்ளவே இல்லை.

 

அவள் முகம் தெளிந்துவிட்டதைக் கவனித்துவிட்டு, “வா கவி. நேரமாகிறது..” என்ற சாந்தி, கவியை அழைத்துக்கொண்டு நிருவோடு கோவில் மண்டபத்துக்குள் சென்றாள்.

 

உள்ளே நுழைகையில் சற்றே தலையை உயர்த்தி மண்டபத்தைப் பார்த்தவள் திகைத்து நின்றுவிட்டாள். ‘கோவிலில் வைத்துத் திருமணம்’ என்பதை இவ்வளவு சிறப்பாகச் செய்யமுடியுமா என்று தோன்றியது அவளுக்கு.

 

மணவரை அமைக்கப்பட்டு, பூக்களால் மிக அழகாக சோடிக்கப்பட்டு, பிரமாண்டம் என்று இல்லாதபோதும் மிகச் சிறப்பாகவே காட்சியளித்தது அந்த மண்டபம்.

 

போதாக்குறைக்கு, கோவில் மண்டபம் முழுவதும் மக்களால் நிறைந்திருந்ததைப் பார்க்கையில், அவளின் அவன் மீதான நம்பிக்கையின்மை பெரும் ஆட்டம் கண்டது.

 

இவ்வளவு பேரும் இவன் சொந்தமா. இவர்கள் முன்னிலையில் அவள் கழுத்திலும் தாலி ஏறப்போகிறது. இதெல்லாம் என் வாழ்வில் நடக்கவே நடக்காது என்று அவள் ஒதுக்கியிருந்த ஒன்று, இப்போது அரங்கேறிக்கொண்டு இருக்கிறது. அதை அரங்கேற்றுபவன் அவள் கணவன்!

 

முகத்தில் மலர்ச்சியும், பெருமிதமும் ஒருங்கே உண்டாக, அவளின் பார்வை அவளுக்காகக் காத்திருந்த கணவனை நோக்கி உயர்ந்தது.

 

இதுவரை அவள் முகத்தையே பாத்திருந்த ரவி, இதழ்களில் பூத்த புன்னகையோடு, விழிகளில் நேசம் மின்ன, ‘வா’ என்பதாகத் தலையை அசைக்க, மந்திரத்தால் கட்டுண்டவள் போல் அவனருகில் சென்று அமர்ந்துகொண்டாள் கவி.

 

அவனின் அருகாமை என்றும் இல்லாது இன்று தித்தித்தது அவளுக்கு. அவன் அருகில் அமரும் உரிமை அவளுக்கு மட்டும்தான் என்று நினைக்கையில் கர்வமாகக்கூட உணர்ந்தாள். அவன் அவளுக்கு மட்டுமே சொந்தமானவன்!

 

மனதில் உண்டான ஒருவித நிறைவோடு, திருமணச் சடங்குகளில் முழுமனதோடு தன்னை ஈடுபடுத்திக்கொண்டாள் கவி.

 

அங்கிருந்த சகுந்தலா, மண்டபத்துக்குள் நுழைந்த கவியைப் பார்த்ததும், ‘இது கவியா? இவள் இவ்வளவு அழகா…’ என்று திகைத்துப்போனார்.

 

அவளையே விழி அகற்றாது பார்த்துக் கொண்டிருந்தவர், “அட்சதை எடுத்துக்கொள்ளுங்கள் ஆன்ட்டி..” என்கிற நிருவின் குரலில் தன்னை மீட்டுக் கொண்டார்.

 

அனைவரும் அட்சதை தூவி ஆசிர்வதிக்க, இனிதாகவே மறுபடியும் கவியின் கழுத்தில் பொன்தாலியைப் பூட்டினான் அவள் கணவன்.

 

தலைகுனிந்து அதைத் தாங்கியவளின் விழிகளில் இருந்து உதிர்ந்த கண்ணீர்த் துளிகள், கன்னத்தில் உருண்டு அவள் மாங்கல்யத்தில் பட்டுச் சிதறியது.

 

அந்தநொடி…. அவளைத் தன் துணையாக ஊருக்கே அவன் கௌரவப்படுத்திய தருணம்! அந்த கௌரவத்தைக் கொடுத்தவன் அவள் கணவன்!

 

நெஞ்சம் நிறைய, கண்களும் ஆனந்தக் கண்ணீரால் நிறைய அவனை நிமிர்ந்து பார்த்தவளையே நேசம் பொங்கப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

 

தாலியின் மகத்துவம் அறியா வயதிலேயே அதைத் தாங்கி, மிக இலகுவாகக் கழட்டியும் விட்டாள். அதன் பிறகு தன் புத்தியற்ற செயலை எண்ணி எத்தனை தடவைகள் மனதால் அழுதிருப்பாள் என்பதை அவள் மட்டுமே அறிவாள்.

 

‘தாலியைக் கழட்டினால் உன்னைக் கொன்றே விடுவேன்’ என்று அன்று மிரட்டியவனை மதியாது அவள் கழட்டியபோதும், இன்று மறுபடியும் அவள் கழுத்தில் தாலியைக் கட்டி, அவளைத் தன் சொந்தமாக்கிக்கொண்ட அந்தப் பிடிவாதக்காரனை அவளுக்கு அந்தநொடி மிகவும் பிடித்துப்போனது.

 

என்னதான் அவளின் பிள்ளைக்கு அவன் தந்தையாக இருந்தாலும், அவனாக நினையாத பட்சத்தில் இந்தத் தாலி அவள் கழுத்தில் ஏறியிராதே!

 

error: Alert: Content selection is disabled!!